பகுத்தறிவை மக்களின் வாழ்வியல் நெறியாகப் பரப்பிய நற்செயலுக்காக, ஆயிரக்கணக்கான பவுத்தர்களை கழுவிலேற்றிக் கொன்ற நாடு இது. மகாராட்டிரத்தைச் சேர்ந்த நரேந்திர தபோல்கர் (20.08. 2013), கோவிந்த் பன்சாரே (20.02. 2015) மற்றும் கருநாடகத்தைச் சேர்ந்த எம்.எம். கல்புர்கி (30.08.2015) ஆகியோர் கொல்லப்பட்டதை இதன் தொடர்ச்சியாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

இவர்கள் அறிவியல் கண்டிபிடிப்புகளை மக்களிடையே விளக்கிய பகுத்தறிவாளர்கள் மட்டும் அல்லர்.இந்நாட்டின் பெரும்பான்மை மக்களிடையே அறிவியல் மனப்பான்மையும் அறிவியல் கண்ணோட்டமும் உருவாகாமல் போனதற்கு காரணமான இந்து மத மூடநம்பிக்கைகளை தோலுரித்துக் காட்டியவர்கள்.அதனால்தான் கொல்லப்பட்டனர். கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் ஜாதி அமைப்பை நியாயப்படுத்தும் சங்கராச்சாரிகளை தொடர்ச்சியாக விமர்சிப்பதால்தான் கே.எஸ். பகவான் போன்றவர்களுக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன.

 இந்து மதத்தில் இருந்து கொண்டு கடவுளை நிந்திக்கலாம்; இல்லையென்று சொல்லலாம்; தாழ்வில்லை. ஆனால், வேதங்களை மட்டும் இகழக்கூடாது. இம்மதத்தில் சமநிலைக்கு வாய்ப்பே இல்லை எனினும் நந்தனைப்போல உரிமை கோரலாம்.  ஆனால் மதத்தை விமர்சித்து வெளியேறினால் அவர்கள் மீது வன்கொடுமை பாயும். புதுப்புது (சிறு) தெய்வங்களை உருவாக்கிக் கொள்வதற்கும் இங்கு இடமுண்டு. ஆனால், "மிலேச்ச' தெய்வங்களுக்கு இடமில்லை. இம்மதத்திலிருந்து தப்பித்தவர்கள் தொடர்ந்து அச்சத்துடனேயே வாழ வேண்டும்; இல்லையெனில் தேவாலயங்களும் மசூதிகளும் இடிக்கப்படும். காதல்கூட இந்து சமூகத்திற்கு ஒரு பிரச்சனையல்ல.

ஒரே ஜாதியில் காதலிக்கலாம்; முடியாது எனினும் ஒரே வர்ணத்தில் உள்ளவர்கள் சாதி மீறி காதலிக்கலாம்; தாழ்வில்லை.ஆனால் வர்ண தர்மத்தை எதிர்க்கும் "அவர்ணர்'களைக் காதலித்தால் அது கடும் குற்றம். சைவம் மட்டுமே போற்றப்படும் என்றாலும் அசைவத்தை இந்து சமூகம் அனுமதிக்கிறது.மலத்தை உண்ணும் கோழியும் பன்றியும் கூட இந்துக்களுக்கு அருவருப்பானதல்ல; ஆனால் மாட்டை  உண்டால் மட்டும் மரண தண்டனை நிச்சயம்! 

மனிதர்களை மேலானவர்கள் X கீழானவர்கள்; பிராமணர்கள் X சூத்திரர்கள்; தீண்டத்தகுந்தவர்கள் X தகாதவர்கள் என்று பிரித்து அதற்கேற்ப இம்மக்கள் மீது திணித்த திட்டமிடப்பட்ட பாகுபாட்டை  நியாயப்படுத்தும் இந்து (மதம்) சமூகம் அதைக் கண்டிக்கும் பகுத்தறிவாளர்களைக் கொல்லத் தயங்காது.

 "சந்தாரா' என்று சொல்லப்படும் உயிர் துறத்தல் (தற்கொலை) சடங்கிற்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கக்கோரி ஜெயின் சமூகத்தினர் அண்மையில் நாடெங்கும் கண்டனப் போராட்டம் நிகழ்த்தினர். இச்செயல் தற்கொலைக்கு இணையானது என்பதால் இதை அனுமதிக்க முடியாது என்ற உயர் நீதிமன்றத்தின் முடிவு – தங்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்றும் தங்கள் மத விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுகிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டி – உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்றம்  இத்தடையை உடனே நீக்கியது. இதையடுத்து 41 நாட்கள்  பட்டினி கிடந்த பட்னிதேவி  5.09.2015 அன்று தற்கொலை ("சந்தாரா') செய்து கொண்டார். தற்கொலையைத் தடுப்பதற்காக நாடெங்கும் இயங்கும் அமைப்புகள் கூட இது

குறித்து கண்டனம் தெரிவிக்கவில்லை. மதத்தின் பெயரால் நிகழும் கொலைகள்/ தற்கொலைகளை கண்டிப்பதற்குக் கூட இங்குள்ள குடிமை மற்றும் மனித உரிமை அமைப்புகள் முன்வருவதில்லை.

பார்ப்பனர்கள் சாப்பிட்டு வீசியெறிந்த எச்சில் இலைகளின் மீது பார்ப்பனர் அல்லாதவர்கள் உருண்டால் தோல் நோய் குணமாகும் என்ற மூடநம்பிக்கை செயல்பாடுகளுக்கு கருநாடக அரசு தடைவிதித்த பிறகும் இத்தடைநீக்கக் கோரி பார்ப்பனர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடுகிறார்கள் என்பது அவர்களின் மேலாதிக்கத்தை நியாயப்படுத்தும் செயலன்றி வேறென்ன? இன்றைக்கும் வட மாநிலங்களில் ஆயிரக்கணக்கான சாமியார்கள் அம்மணமாக வலம் வருவதும் அவர்களிடம் ஆட்சியிலிருக்கும் தலைவர்கள் ஆசி பெறுவதும் எதைக்காட்டுகிறது?  திட்டமிடப்பட்ட பாகுபாடுகள் இந்நாட்டில் நிலைபெறுவதற்கு, இத்தகைய மூட நம்பிக்கைகள்தான் முதன்மைக் காரணமாக இருக்கின்றன. 

பகுத்தறிவாளர்கள் கொல்லப்பட்டதற்கு கசிந்துருகும் பொதுச் சமூகம் இன்றளவும் மூட நம்பிக்கைகளில்தான் உயிர் வாழ்கிறது. அலகு குத்துவது, சாமியாடுவது, தீ மிதிப்பது, தலையில் தேங்காய் உடைப்பது... எனப் புதுப்புது வகைகளில் செய்யப்படும் பகுத்தறிவுக்கு எதிரான மக்களின் நம்பிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டும்; தடுக்கப்பட வேண்டும். மாறாக, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம் என்றால் இறுதியில் அது தலையாய மூடநம்பிக்கையான ஜாதியையும் ஆதரிப்பதில்தான் முடியும்.     

Pin It