பசுமை மட்டுமே ஒற்றை நிறமாய் விசும்பு தொட்ட விரிதலைக் காடு
அசைந்து நடந்த ஆற்றின் ஓசை பறந்து பழகிய பறவைகள் ஓசை
ஓலை வேய்ந்த பர்ண சாலை
அரசகுமரர்க்கு ஆயுதக் கலையைப் போதித்திருந்தான் துரோணாச்சாரி
இளைஞன் ஒருவன் வேலிக்குள் வந்து ஆசான் காலில் வீழ்ந்து வணங்கினான்
யார் நீ என்று அதட்டினான் ஆசான்
ஏகலைவன் முன்னொரு ஆண்டில் கல்வி கேட்டு உம்மிடம் வந்தேன்
தாழ்ந்த சாதி உனக்கா கல்வி? போடா – என்று விரட்டி யடித்தீர்
உமைப்போல் ஒருசிலை வடித்துவைத்து நாளும் நானே பயிற்சி எடுத்தேன்
எய்யும் கல்வி கைவரப் பெற்றேன்
நன்றி உமக்கு நவின்று செல்லவே அடியேன் வந்தேன் வாழ்த்துகள் அய்யா
என்று கூறினான் தொலைநிலை மாணவன்
தாழ்ந்த சாதியான் கற்றுத் தேர்வதா? தாடி ஆசானை ஆட்டியது ஆத்திரம்
என்னை எண்ணி உன்னை வளர்த்ததால் காணிக்கை எனக்கு நீ செலுத்தல் கட்டாயம்.
தந்து செல் என்றான் இடியோசை ஆசான்.
கட்டணம் யாதோ கட்டளை செய்க – குனிந்து கேட்டான் பணிந்த மாணவன்.
வலதுகைக் கட்டைவிரல் வெட்டித்தா என்றான் ரத்தருசிகண்ட புத்தகாசிரியன்
கட்டை விரலை விட்டுக் கொடுத்தால் விற்கலை அனைத்தும் வீணாய்ப் போமே..
ஆயுதம் இலாது நம் வாழ்க்கை இயலுமா? – நிலையை இளைஞன் எடைபோட்டுப் பார்த்தான்.
அவ்வாறே செய்வேன் ஆச்சார்ய தேவரே! இறுதியாய் ஒரு முறை எய்துபார்க்கிறேன்
அப்புறம் தாங்கள் பெறுக தட்சணை – என்றான் ஏகலன்
சரிசரி விரைந்து செய் என்றான் துரோணன்
ஏகலைவன் இழுத்தான் நாணை
வளைந்த வில்லின் வாயிலிருந்து பாய்ந்தது அம்பு. சாய்ந்தான் துரோணன்.
தேர்நிலைக் கல்வி நீர் தராததனாலே குறிதவறிவிட்டது போலும் மன்னிப்பீர் என்றான் ஏகலன்.
இதற்குள் ஆசான் இறந்துபோயிருந்தான்
வருந்தாதீர்கள் மாணவர்காள்,
இனி நானே பயிற்றுவேன் அனைவர்க்கும் கல்வி –
என்றறிவித்தான் ஏகலன்.
சிறையிருந்த கல்வி விடுதலை பெற்றது.

– நன்றி : "தை' 2011
நீலமணி சிறப்பிதழ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.