“உங்க புத்தகம் படிச்சேன். கதைகள்ல சத்தம் அதிகமாக இருக்கிறதே!'' – இது அவருடைய "பம்பாய் கதை'களைப் படித்த ஒருவரின் விமர்சனம்.

“ஆமா எங்க வாழ்க்கை சத்தமாக இருக்கு. அதனால்தான் என் கதைகளும் அப்படியிருக்கு. உங்கள ஒரு ஊசியால குத்துனா, நீங்க ஆலாபனை பண்ணுவீங்களா, இல்ல கத்துவீங்களா? எங்கள் வாழ்க்கை குத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அதனால் எங்கள் எழுத்துகள் சத்தம் போட்டுக் கொண்டே இருக்கின்றன'' – இது, அந்த விமர்சனத்திற்கு அவர் அளித்த பதில்.

இந்த பதில்தான் ஒட்டுமொத்த தலித் இலக்கியத்தின் குரலாகவும் இருக்க முடியும். இந்த பதிலை இவ்வளவு அழகாக அனைவருக்கும் புரியும் வகையில் சொன்னவர் – கவிஞர், கதையாளர், சிறு பத்திரிகையாளர் எனப் பன்முகங்களைக் கொண்ட அன்பாதவன்!

அன்பாதவன் – தலித் இலக்கியச் சூழலில் முக்கியமானவர். அவருடைய கவிதைகளைப் போலவே, அவருடைய பணிகளும் தலித் விடுதலைக்கானவை. பத்தாம் வகுப்பு படிக்கிற காலத்திலேயே நூலகத்தைப் பயன்படுத்தும் பழக்கம் அவருக்கு இருந்தது. அதனால் எழுதும் உந்துதலைப் பெற்றார். புரிகிறதோ, இல்லையோ ஒருமுறை வாசிப்பது என்னும் முடிவோடு வாசித்திருக்கிறார்.

அப்போது விழுப்புரத்தில் பேராசிரியர்கள் கல்விமணி, பழமலய் போன்றவர்களால் நடத்தப்பட்ட "நெம்புகோல்' அமைப்பில் பங்கேற்று, விழி.பா.இதயவேந்தன் போன்றோருடன் நட்பு கொண்டு, தன் எழுத்துக்கு வலு சேர்த்திருக்கிறார். அவருடைய களப்பணிகளும் அதற்கு துணை புரிந்தன. அதனால் அவருடைய தொடக்ககால எழுத்து, மார்க்சியப் பின்னணி கொண்டதாக அமைந்திருந்தது.

"மன ஓசை', "புதிய மனிதன்', "செந்தாரகை' போன்ற இதழ்களில் அன்பாதவனின் கவிதைகள் இடம் பெறாமல் இருந்ததில்லை. சூரியதீபன், இன்குலாப் ஆகியோர் அன்பாதவனின் கவிதை மனதிற்கு உறுதுணையாக இருந்திருக்கின்றனர். இவருடைய காலத்தில்தான் தலித் இலக்கியத்தின் பல ஆளுமைகள் எழுத வந்தனர்.

கவிஞர் இந்திரன் கொண்டு வந்த 'அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்' என்ற கவிதைத் தொகுப்புதான் தமிழில் தலித் இலக்கியம் தோன்றுவதற்கான வாசலாக இருந்தது என்பது அன்பாதவனின் கருத்து. அதற்கு முன்பும் தமிழ் ஒளி போன்றவர்கள் இருந்தார்கள். ஆனால், அவர்களின் எழுத்து அக்காலங்களில் தலித் எழுத்தாக அறியப்படவில்லை. அது மட்டுமல்ல, 'அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்' தொகுப்பில் இருந்த கவிதைகள், இப்படிக் கூட எழுதலாமா என்று கேட்க வைத்தன.

"உங்கள் தோலையே உங்கள் விடுதலைக்கான பதாகைகளாக உயர்த்திப் பிடியுங்கள்' என்று கறுப்பர் இலக்கியம் பேசியபோது, இது ஏன் தலித்துகளுக்கும் பொருந்தாது என்னும் எண்ணம்தான் தமிழ் தலித் இலக்கியத்தின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது என்பது அவருடைய கருத்து.

விழுப்புரம் நகரவாசியாக இருந்தவர் அன்பாதவன். அதனால் அவருக்கு நேரடியான சாதிய தாக்குதல் எதுவும் இல்லை. கல்லூரிவரை அவர் விழுப்புரத்தில்தான் படித்தார். அனைத்து சாதிகளிலும் அவருக்கு நண்பர்கள் இருந்திருக்கின்றனர். பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்வரை, சாதிய சமூக அமைப்பை அறியாதவராகவே இருந்திருக்கிறார். 1978 இல் நடந்த விழுப்புரம் கலவரம்தான் அவருக்கு இந்த சமூகத்தில் ஊடாடும் சாதியின் கொடூர முகத்தை அறிந்து கொள்ள வைத்தது.

கலவரம் நடக்கும்போது, இரவு நேரங்களில், தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சேரிப்பகுதியிலிருந்து சென்று, தெற்கு ரயில்வே குடியிருப்பில் போய் பதுங்கிக் கொள்வார்களாம். ஏற்கனவே ஒன்பது பேரை சாதி இந்துக்கள் கொன்று போட்டிருந்தனர். அதனால் பயத்தில் இரவில் அங்கு சென்று தங்கி, காலையில் எழுந்து வந்திருக்கின்றனர்.

அதன் பிறகு தான் பணியாற்றும் இடத்தில் சாதியின் நகங்கள் மறைமுகமாக தன்னைப் பிராண்டி இருப்பதாக அவர் கூறுகிறார். பதவி உயர்வு போன்ற நிலைகளில் சாதி தன்னளவில் அதன் வேலையை மிகத் தீவிரமாக செய்வதாகக் கூறும் அன்பாதவன், அவருடைய எழுத்துகளில் அவற்றைப் பதிவு செய்திருக்கிறார்.

அவருடைய அம்மா ஒரு வங்கியில் தூய்மைப் பணியை செய்துகொண்டே அலுவலக உதவியாளராகவும் பணிபுரிந்தார். பம்பாயிலிருந்து ஊருக்கு வந்த ஒரு நாள், அவருடைய அம்மா அவரைத் தன்னுடைய வங்கி மேலாளரிடம் அறிமுகப்படுத்தினார். அந்த மேலாளர் அவரிடம் கேட்ட கேள்விகளும் சொன்ன பதில்களும் ஒரு கவிதையாக உருமாறின.

“என்ன செய்றீங்க'' என்று அந்த மேலாளர் கேட்க, இவர் பணியாற்றும் வங்கிப் பெயரைச் சொல்லி இருக்கிறார். “அங்க என்ன நீங்க அட்டெண்டரா?'' எனக் கேட்க, ஆங்கிலத்தில் பேசத் தொடங்கியிருக்கிறார் அன்பாதவன். தன்னுடைய தம்பி குறித்தும், தன் பணி குறித்தும் தகவல்களை சொன்ன பிறகு, “பரவாயில்லையே பெருக்குற வேலைய செய்துண்டே, உம்ம பசங்கள நன்னா படிக்க வச்சிருக்கியே'' என்று அந்த வங்கி மேலாளர் சொன்னதையும், அந்த உரையாடலையும் ஒரு சிறந்த கவிதையாக்கியுள்ளார் அன்பாதவன்.

அன்பாதவனின் முதல் தொகுப்பு "செம்பழுப்பாய்ச் சூரியன்' என்னும் கவிதைத் தொகுப்பு. அது, கையெழுத்துப் பிரதியாயிருக்கும்போதே விருதினை வென்றது. "கலை இலக்கியப் பெருமன்ற விருது', "சிற்பி விருது' போன்ற விருதுகளை அது பெற்றது. தலித் கவிதைகள் நிறைந்த அந்தத் தொகுப்பு, அன்பாதவனுக்கு சிறந்த அறிமுகத்தை அளித்தது.

அவருடைய அடுத்த தொகுப்பு "நெருப்பில் காய்ச்சிய பறை.' அதுவும் தலித் சூழலில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அவருடைய சிறுகதைத் தொகுப்பு "பம்பாய் கதைகள்'. மும்பையில் இருக்கும் போது, புதிய மாதவி போன்றோருடன் சேர்ந்து "அணி' என்னும் கவிதைக்கான சிற்றிதழை வெளியிட்டுள்ளார். தற்போது "அணி' இணைய இதழாக வருவதற்கு சாத்தியம் இருப்பதாகக் கூறும் அன்பாதவனுக்கு பல கேள்விகள் இருக்கின்றன. அந்தக் கேள்விகள் எல்லாம் அவருக்கானவை மட்டுமல்ல, நமக்கானவையும்கூட.

இன்றைய தலித் கவிதைகள் மட்டுமல்ல, தலித் சிறுகதைகளும் தேக்க நிலையை அடைந்திருக்கின்றன. தலித் அரசியல்வாதிகளை விட, தலித் இலக்கியவாதிகள், மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் சமரசங்களை செய்து கொள்வதைப் போல, இலக்கியவாதிகளுக்கு என்ன அவசியம் ஏற்பட்டது? தலித் எழுத்தாளர்கள் தலித் விடுதலைக்காக முழுமையாகப் பங்காற்றிவிட்டனரா? அல்லது இதற்கு மேல் அவர்களிடம் எதுவுமில்லை என்னும் நிலை ஏற்பட்டுவிட்டதா? என ஆதங்கப்படுகிறார் அன்பாதவன்.

தற்கால தலித் இலக்கியத்தின் தேக்க நிலையைத் தகர்க்க, தலித் எழுத்தாளர்கள் முன்வர வேண்டும். புதிதாக எழுதவரும் எழுத்தாளர்களை அடையாளம் காண வேண்டும். ரகசியன் போன்றவர்கள் அத்தகையவர்கள். அவர்களை ஊக்குவிக்கும் செயல்திட்டங்களை முன்மொழிய வேண்டும். "விடுதலைக்குயில்கள்' போன்ற அமைப்புகள் இன்னும் தீவிரமான பங்காற்ற வேண்டும்.

ஆக்கங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை தலித் எழுத்தாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய கொடும் நிகழ்வான பரமக்குடி துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்து, தலித் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து ஓர் அறிக்கையைக் கூட வெளியிடவில்லை. இதற்கான காரணத்தை நாம் ஆய்வு செய்ய வேண்டும் என்ற அவரது குரலில், சற்று கோபமும் ஏக்கமும் கலந்திருந்தது.

இதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற நம் கேள்விக்கு, அன்பாதவன் தன்னுடைய செயல்திட்டத்தைக் கூறினார். ஒரு தொகுப்பாசிரியராக இருந்து தலித் கவிதைகளின் தொகுப்பைக் கொண்டு வருவதன் மூலம் தற்போதைய நிலையை மாற்றலாம் என்பது அதில் ஒன்று. அதற்காக அனைத்து எழுத்தாளர்களுக்கும் கடிதம் எழுதி ஆக்கங்களைக் கேட்டிருப்பதாகவும், அவர்கள் அனுப்புகின்றவற்றில் சிறந்தவற்றைத் தேர்வு செய்து நூலாக வெளியிடும்போது, அது ஒரு புதிய வீச்சை ஏற்படுத்தும் என்கிறார். மேலும், தங்கள் ஆக்கங்களை வெளியிடும் தளமாக, தலித் இதழ்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்.

வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றும் அன்பாதவன், தன் கோபங்களையும் ஏக்கங்களையும் செயல்களாக்கும் தீவிரம் கொண்டுள்ளார். ஈரமாகியிருக்கும் பறையை நெருப்பில் காய்ச்சி வெப்பமேற்றி, சத்தம் பொங்க அடிப்பதைப் போல, அன்பாதவன், காய்ச்சிய பறையாய்த் தகிக்கிறார்.

அன்பாதவனை தொடர்பு கொள்ள : 94874 16446

– யாழன் ஆதி

Pin It