அன்பு, ஆசை, நட்பு என்பவற்றின் பொருளைத்தவிர, வேறு ஒரு பொருளைக் கொண்டதென்று சொல்லும்படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை, ஆண் - பெண் சம்மந்தத்தில் இல்லை என்பதை விவரிக்கவே இவ்வியாசம் எழுதப்படுவதாகும். ஏனெனில், உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி, அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து, மக்களுக்குள் புகுத்தி, அநாவசியமாய் ஆண் - பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மயங்கச் செய்து, காதலுக்காக என்று இன்பமில்லாமல், திருப்தி இல்லாமல், தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகின்றதை ஒழிக்க வேண்டுமென்பதற்காகவேயாகும்.

ஆனால் காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எதுவரையில் இருக்கின்றது? அது எந்த எந்த சமயத்தில் உண்டாவது? அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது? அப்படி மறைந்து போய் விடுவதற்கும் காரணம் என்ன? என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து, ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் - காதல் என்பதின் சத்தற்ற தன்மையும், பொருளற்ற தன்மையும், உண்மையற்ற தன்மையும், நித்தியமற்ற தன்மையும் அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத் தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.

ஆனால், அந்தப்படி யோசிப்பதற்கு முன்பே இந்தக் காதல் என்கின்ற வார்த்தையானது, இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது? உலக வழக்கில் அது எப்படி பயன்படுத்தப்பட்டு வருகின்றது? இவற்றிற்கு என்ன ஆதாரம் என்பவைகளைத் தெரிந்து, ஒரு முடிவு கட்டிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இன்றைய தினம் காதலைப் பற்றி பேசுகிறவர்கள் - ‘‘காதல் என்பது அன்பு அல்ல, ஆசை அல்ல, காமம் அல்ல; அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு; காதல் வேறு, நட்பு வேறு என்றும்; ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுவதாகும். அதுவும் இருவருக்கும் இயற்கையாய் உண்டாகக் கூடியதாகும். ‘‘அக்காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமில்லை'' என்றும்; ‘‘அது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும்; அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால், பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது'' என்றும், பிறகு வேறு ஒருவர் இடமும் அந்தக் காதல் ஏற்படாது.

‘‘அந்தப் படி மீறி அந்தப் பெண்ணுக்கோ, ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டுவிட்டால் அது காதலாயிருக்க முடியாது. அதை விபச்சாரம் என்றுதான் சொல்ல வேண்டுமேயொழிய, அது ஒருக்காலும் காதலாகாது'' என்றும்; ‘‘ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டுவிட்டால் பிறகு யாரிடமும் காமமோ, விரகமோ, மோகமோ என்றெல்லாம் ஏற்படாது'' என்று சொல்லப்படுகின்றது. மேலும், இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகின்றது.

ஆனால், இந்தப்படி சொல்லுகின்றவர்களை எல்லாம் உலக அனுபோகமும், மக்களின் அனுபவ ஞானமும் இல்லாதவர்கள் என்றோ அல்லது இயற்கையையும், உண்மையையும் அறியாதவர்கள் என்றோ அல்லது உண்மையை அறிந்தும் வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக வேண்டி வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றேதான் கருதவேண்டி இருக்கின்றது.

அன்றியும் இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி நாம் சொல்லும் மற்றொரு விஷயமென்னவென்றால் - ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப்பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ மற்ற மூன்றாமவர்கள் யாராவதோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்பந்திப்பதற்கோ - சிறிதுகூட உரிமையே கிடையாது என்றும் சொல்லுகிறோம்.

இன்னும் திறந்து வெளிப்படையாய் தைரியமாய் மனித இயற்கையையும், சுதந்திரத்தையும், சுபாவத்தையும், அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால், இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், சாமான் கடைகளில் சாமான் வாங்குவது போலவும் - அவனவனுடைய தனி இஷ்டத்தையும் மனோபாவத்தையும் திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப் பிரசங்கித்தனமும் அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகுமென்றும் சொல்ல வேண்டும்.

இப்படிச் சொல்லப்படுவது கூட, இவ்வளவு பெருமையையும் அணியையும் அலங்காரத்தையும் கொடுத்து பேசப்பட்ட காதல் என்பதை முன் குறிப்பிட்டபடி அது என்ன? அது எப்படி உண்டாகின்றது? என்பதை யோசித்துப் பார்த்தால் யாவருக்கும் சரி என்று விளங்கிவிடும்.

- தொடரும்

(‘குடிஅரசு' - 18.1.1931)

 

Pin It