இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு முஸ்லிம் மதவாத தலைவர்கள் மற்றும் வசதிபெற்றவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டனர். எனவே, சுதந்திரத்திற்குப் பிறகு முஸ்லிம் மதவாதம் என்று எதுவும் இருக்கவில்லை. பிரிவினைக்குப் பின்னர் நிகழ்ந்த மறுவாழ்வு தொடர்புடைய நடவடிக்கைகளின் போது, இந்து மதவாதிகள் பாரபட்சமான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்து மகாசபையின் உறுப்பினரான ‘ஸ்வயம் சேவக்' நாதுராம் கோட்சே, காந்தியாரை சுட்டுக் கொன்ற பிறகு, இந்து மதவாதிகளின் அன்றாட அரசியல் நடவடிக்கைகள் வலுவிழந்து விட்டன. ஆனாலும் ‘ஷாகா'க்களின் (ஆர்.எஸ்.எஸ். இந்தியா முழுவதும் நடத்திவரும் இந்து மத வெறியூட்டும் பயிற்சி) மூலம் ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து ‘இந்து ராஷ்ட்டிரம்' எனும் அதன் மதவாதத் திட்டத்துடன் செயல்படுகிறது.

அரசு எந்திரத்தின் பல தளங்களில் அவர்களது உறுப்பினர்கள் ஊடுறுவத் தொடங்கினர். அதன் விளைவாக, சமூகத்தில் மதவாதம் விதைக்கப்பட்டது. பிரிவினைக்குப் பின்னர் நடந்த ஜபல்பூர் கலவரங்கள், இவர்களின் செயல்பாட்டுக்கு தக்க சான்றாக விளங்குகிறது. அப்போது தான் பிரதமர் நேரு, தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவை ஏற்படுத்தினார். ஆனாலும் 1980க்குப்பிறகு மதக் கலவரங்கள் தீவிரமடைந்தன. இந்த கலவரங்கள் அனைத்தும் சிறுபான்மை சமூகங்களை குறிவைத்தே இயங்கின. இது, சிறுபான்மையினரை அந்நியப் படுத்தியது; தனிமைப்படுத்தியது.

1980 களுக்குப் பிறகு மதவாதத்தின் அரசியல் வெளிப்பாடுகள் மாற்றம் கண்டன. ரத யாத்திரையில் தொடங்கி பாபர் மசூதி இடிப்பிற்கு வழிகோலிய ராமன் கோயில் பிரச்சனை வரை அந்த காலகட்டத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தன. அவர்கள் குறித்த பல தவறான கருத்துகள் சமூகத்தில் விதைக்கப்பட்டன. இது, மனித உரிமை சார்ந்த இயக்கங்களுக்குப் பெரும் சறுக்கலாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து சிறுபான்மையினர் குறித்த மதிப்பீடுகள், மதசார்பின்மையின் விழுமியங்கள், தேசியம் எனப் பல தளங்களில் பெரும் நிலைப்பாட்டு மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த மதவாத மனநிலைகள் மெல்ல படிகங்களாக மாறி, ஆர்.எஸ்.எஸ்.க்கு பலத்தை ஏற்படுத்தின.

இந்த மதவாத செயல்கள் நிலைப்பெற, மறுபுறம் ஷா பானு வழக்கு நடைபெற்று வந்தது.பின்னர் பாபர் மசூதியின் கதவுகள் திறப்பு, ரத யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு, பம்பாய் இந்து -முஸ்லிம் கலவரம், சூரட் -போபால் கலவரங்கள் எனப் பெரும் சங்கிலித் தொடர் நிகழ்வுகளாகத் தொடர்ந்தது. கிறித்துவர்கள் குறித்த அவதூறுகளைப் பரப்பி, பின்னர் அவர்களைத் தாக்கும் கொடுமைகளும் நிகழ்ந்தன. பல இமாம்கள், உலமாக்கள் தாங்கள் தங்கள் மதத்திற்காகப் பேசுவதாகவும், அவர்கள்தான் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் என்றும் பறை சாற்றினர். இஸ்லாம் குறித்த பொழிப்புரைகள் சமூக, பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப மாறவும் செய்தன.

1970 கள் முதலே பல அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் நலன் கருதி உலமாக்களின் சில பகுதியினரை செல்லமாக வளர்த்தனர். 1977 ஜனதா கட்சியின் பிரதிநிதிகளான வி.பி.சிங் மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய், தில்லி ஜும்மா மசூதியில் ஷா கி இமாமை சந்தித்து, தங்கள் கட்சிக்கு ஆதரவாக ‘பத்வா' கொடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். இது போலவே பல அரசியல் கட்சிகளும் தங்கள் வசதிக்கு ஏற்ப விளையாடின. ஆனால் உலமாக்கள் இந்த சமூகத்தின் பிரதிநிதிகள் அல்லர். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே ஒரு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த இயலும்.

ஷா பானு வழக்கு

முஸ்லிம் பெண்களுக்கு விவாகரத்துக்குப் பிறகு பராமரிப்புக்குரிய தொகை வழங்க வேண்டும் என்கிற சட்டத்தீர்ப்பு தான் ஷா பானு வழக்கில் வழங்கப்பட்டது. இதற்கு முஸ்லிம் சமூகத்து அடிப்படைவாதிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாடாளுமன்றத்தில் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்கள். குறுகிய கால நலன்களை அடையும் நோக்கில், அரசு முஸ்லிம் அடிப்படைவாதிகளின் குரலுக்குப் பணிந்தது. முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மை உணர்வுகளை அரசு மதிக்கத் தவறியது. ஆனால் ஷா பானு விஷயத்தில் அரசுக்கு ஏற்பட்ட அவப்பெயரைப் போக்க, பாபர் மசூதியின் பூட்டுகள் உடைக்கப்பட்டன. இந்த செயலின் மூலம் இந்து மதவாதிகளை அரசு மனம் குளிரச் செய்தது.

மதவாதத்தின் குரல்கள் மேலோங்க, இந்திய தேசம் குறித்த கருத்தாக்கங்கள் உருமாறி, ‘எங்கள் நாடு இந்து நாடு' என்பது போன்ற முழக்கங்கள் முதலில் வலுப்பெற்றன. மதசார்பற்ற கொள்கையில் குழப்பங்களுடன் செயல்பட்ட அரசாங்கத்தின் செயல்கள், மெல்ல மதசார்பின்மை என்கிற சொல்லின் பொருளை மாற்றத்திற்கு உட்படுத்தியது. மதசார்பின்மை என்பது மேற்கத்திய கருத்தாக்கம். அது, இந்தியா போன்ற நாட்டுக்குப் பொருந்தாது என பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த கருத்தாக்கங்களின் விளைவாகத்தான் இந்திய நாடு சோர்வுற்றதாகக் கருதப்பட்டது.

சிறுபான்மையினரை மகிழ்விக்க, இந்துக்களின் நலன்கள் பறிக்கப்படுவதாகக் கூறப்பட்டது. சமூகத்தின் மய்ய இடத்தைப் பிடிப்பது தான் மதவாதிகளின் முக்கியத் திட்டம். சிறுபான்மையினர் குறித்த தவறான பரப்புரைகளுடன், அவர்களின் தேச பக்தியை கேள்விக்கு உட்படுத்துவது; அவர்கள் மீது தாக்குதலைத் தொடுப்பது என பல்வேறு தள செயல்பாடுகள் தொடர்ந்தன.

சமூகத்தை மதவாதமயமாக்குவது

சிறுபான்மையினரை கலவரக்காரர்களாக சித்தரிப்பது தொடர்ந்து நடைபெறுகிறது. முஸ்லிம்கள் தேச துரோகிகள், வன்முறையாளர்கள், அடிப்படைவாதிகள், அவர்கள் தங்களுக்கான தனி சட்டங்களை வைத்துள்ளனர் என்று ஒருபுறம் பிரச்சாரம் செய்து கொண்டே, மறுபுறம் ‘முஸ்லிம் தீவிரவாதி', ‘அல் -கொய்தா', ‘பின்லேடன்' என வேறு சித்தரிப்புகளிலும் ஈடுபட்டனர். இப்படியான அவதூறுகளை நாம் பெரும் பட்டியலாகவே வெளியிடலாம். ஆனால் அவை அனைத்தும் இங்குள்ள பெரும்பான்மை சமூகத்திற்கு ஏற்புடையதாகவே இருந்தது. இந்த வசதியான சூழலுடன் தான் மதவாதம் இந்தியத் தெருக்களில் களம் கண்டது.

பொது சிவில் சட்டம், அனைத்து மதத்தினருக்குமான பொதுவான சட்டங்கள் என விவாதங்கள் தொடங்கி, அது பெண்களுக்கான சம உரிமைகள் வரை சென்றது. மெல்ல பெண்கள் குறித்த விவாதம் ஓரங்கட்டப்பட்டு, மொத்த விவாதத்திற்கும் மதச்சாயம் பூசப்பட்டது. பொது சட்டங்களை நாம் மிக எளிதாகக் கட்டுடைத்தாலே அவை அனைத்தும் ஆண் சார்பு சட்டங்களே என்பதை நிறுவிவிடலாம். இந்த அம்சத்தை நாம் அனைத்து சட்ட விவாதங்களின் பொழுதும் கவனப்படுத்த வேண்டும்.

மத்திய கால வரலாறு, அயோத்தி கோயில் எனப் பல விவாதங்கள் காலங்காலமாக நிலவி வந்த மத ஒற்றுமையின் குறியீடுகளைத் தகர்த்தன. பெரும்பான்மையினரையும் இங்குள்ள சிறுபான்மை சமூகங்களையும் அது இடைவெளியுடன் அணுகியது. வெள்ளையர் எழுதிய வரலாற்று நூல்கள் அனைத்தும் இந்திய வரலாற்றை மதக் கண்ணோட்டத்துடனேயே அணுகின. அவர்கள் விதைத்த மதவாத விதைகள் தான் முஸ்லிம் லீக், இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகள் உருவாகக் காரணமாக அமைந்தது. அவர்கள் விட்டுச் சென்ற பல கேடுகள் தான் இன்றும் நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. மதவாதிகளுக்குப் பெரும் தீனியாக அது இன்றும் விளங்குகிறது. இதற்கு ராமன் கோயில் சர்ச்சை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

மதவாத அரசியல் செயல்திட்டம்

சமூகத்தில் பலமற்றவர்களாகத் திகழும் தலித்துகள், பெண்கள், தொழிலாளர்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் என இவர்கள் தொடர்ந்து சுரண்டப்படுவது, மெல்ல முக்கியத்துவம் வாய்ந்த விவாதப் பொருளாக உருப்பெற்றது. இந்த சமூகத்தினர் அனைவர் மீதும் கடும் மனித உரிமை மீறல்கள் தொடுக்கப்பட்டன. ஆனால் அந்த மதக் கலவரங்களிலோ, மனித உரிமை மீறல்களிலோ -இது வரை உண்மைக் குற்றவாளிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை. இங்கு அமைக்கப்பட்ட பல விசாரணை ஆணையங்கள், கலவரங்களுக்கு காரணமானவர்களை அடையாளம் காட்டியது. ஆனால் அந்த நபர்கள் பெரும் செல்வாக்குப் பெற்றவர்கள். அவர்களை எளிதில் தண்டித்துவிட இயலாது. சட்டத்துறை, காவல் துறை கூட பல தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தியதில்லை.

பாரதிய ஜனதா கட்சி ஆளும் கட்சியாகிறது

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், பல மதவாத செயல்களுக்கு அரசு எந்திரம் பயன்படத் தொடங்கியது. என்.சி.ஈ.ஆர்.டி.இன் பாட நூல்களில் 70–80களில் எழுதப்பட்டிருந்த பல முற்போக்கான கருத்துக்கள் அனைத்தையும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் நீக்கிவிட்டது. மாறாக, மதவாத நஞ்சை பாட நூல்களில் திணித்தது. ஏற்கனவே சமூகத்தில் இது போன்ற பல நச்சுத்தன்மையுள்ள கருத்துக்கள் கடந்த பல பத்தாண்டுகளில் திணிக்கப்பட்டுள்ளன. அவை உருவாக்கியுள்ள மனநிலையுடன் அக்கருத்தாக்கங்களுடன் போராடுவதும், அவைகளைக் களைவதும் எளிதானதல்ல. இந்த திசைவழியில் பயணிக்கக் கூடிய எளிய தரவுகள் நம்மிடம் இல்லை.

கருத்துக்களின் அடர்த்தி நிலையை குறைக்காமல் அவற்றை எளிய வடிவங்களில் உருவாக்கும் பணியை பல குழுக்கள் கையில் எடுத்துள்ளன. கண்காட்சிகள், ஆவணபடுத்தப்பட்ட உரைகள், சீரிய பிரச்சாரங்கள் என பல்வேறு வடிவங்களாக அவை உருமாற்றப்பட்டுள்ளன. இன்று எளிமையான வடிவங்களையும் உருவாக்குவது காலத்தின் அவசியம். 1980களில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் தங்களின் அமைப்புகள் மூலம் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்தார்கள். ஆர்.எஸ்.எஸ். தனது நிறுவனங்களின் துணையுடன் மதக்கலவரங்களையும் இனப்படுகொலைகளையும் மிகத் துல்லியமாக செய்து முடித்தது. பல விசாரணைக் குழுவின் அறிக்கைகள் இக்கலவரங்களில் சங் பரிவார் கும்பல் திட்டமிட்டுள்ளதை எடுத்துரைக்கிறது.

இந்த கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவிகிதம் பேர் முஸ்லிம்களே. பிற 20 சதவிகிதத்தினர் இச்சமூகத்தின் விளிம்புநிலை மக்களாகவே உள்ளனர். அவர்களை தொடர்ந்து தனிமைப்படுத்துவதும், தாக்குவதும் நடைமுறையாக மாறியுள்ளது. இந்த வெறுப்புணர்வு அனைத்தும் ஆர்.எஸ்.எஸ்.சின் அவதூறுப் பிரச்சாரத்தின் விளைவாக, சமூகத்தின் பொதுப் புத்தியில் கச்சிதமாக அமர்ந்தது. முஸ்லிம்களே நாட்டுப் பிரிவினைக்குக் காரணம் எனவும், இங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு விசுவாசமானவர்கள் எனவும் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டது. ‘முஸ்லிம்கள் ஏராளமான கோயில்களை தரைமட்டம் ஆக்கினார்கள்'. ‘அவர்கள் தங்கள் மதத்தை வாளின் துணையுடன் வளர்ப்பவர்கள்', ‘முஸ்லிம்கள் இந்துக்களை துன்புறுத்தினார்கள்', ‘அவர்கள் பல பெண்களையும் திருமணம் செய்பவர்கள்', ‘முஸ்லிம் பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதில்லை' என இந்த தகவல்கள் அனைத்தும் இந்திய மனங்களில் குடிபுகுந்தது.

தொண்னூறுகளின் பத்தாண்டுகள்

1998 முதல் 2001 வரையிலான காலத்தில் ஆர்.எஸ்.எஸ். இன் செயல்பாடுகள் கிறித்துவர்களின் மீது குவிமய்யம் கொண்டது. தேவாலயங்கள் தாக்கப்பட்டன. விவிலியங்கள் எரிக்கப்பட்டன. மிஷினரிகள் தாக்கப்பட்டனர். தொழு நோயாளிகள் மத்தியில் பணியாற்றிய கிரகாம் ஸ்டெயின்ஸ், அவரது இரு குழந்தைகளுடன் எரிக்கப்பட்டார். தாக்குதலைத் தொடர்ந்து அவதூறு பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டன. கிறித்துவம் ஒரு வெளிநாட்டு மதம். கிறித்துவ மதத்தினர் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள்.

வடகிழக்கில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சிகளுக்கு கிறித்துவர்களே காரணம். இதே போக்கில் சென்றால் கிறித்துவர்களின் எண்ணிக்கை பெருகி, இந்தியாவை கிறித்துவ நாடாக அறிவித்துவிடுவார்கள். இதே போல் தான் பெண்களின் மீதும் பலவித வன்முறைகள் தொடர்ந்து நிகழ்த்தப்படுகின்றன. அதுவும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அது அதிகமாகவே நிகழ்கிறது.

இதே காலகட்டத்தில் தலித்துகள் மீதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதை நாம் காண்கிறோம். இதே போல் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் மீதும் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அவர்கள் வலுவிழந்து நிற்கிறார்கள். முறை சாரா தொழிலாளர்கள், சிறு தொழில்களில் பணிபுரிபவர்கள் மீது இது கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மண்டலுக்குப் பிறகு சமூக நீதி சார்ந்த சூழ்நிலையும் பெரும் சரிவைக் கண்டுள்ளது. மதப்பிரச்சாரங்களின் மூலம் பல விஷயங்களின் மீதான கவனம் திசை திருப்பப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் அனைத்தும் பா.ஜ.க., வி.எச்.பி., பஜ்ரங் தள் போன்ற பல்வேறு அமைப்புகளால் நடத்தப்பட்டன. சில குறிப்பிட்ட செயல்பாடுகளுக்காகவே தொடங்கப்பட்ட நிறுவனங்களான இந்து ஜாக்ரன் மஞ்ச், இந்து முன்னணி ஆகிய அமைப்புகளும் தாக்குதல்களை தொடுத்தன. ஒன்றோடு ஒன்று தொடர்பற்று காட்சியளிக்கும் இத்தகைய நிறுவனங்கள் அனைத்தையும் ஆர்.எஸ்.எஸ். ஒருங்கிணைக்கிறது. ஆர்.எஸ்.எஸ். தான் இந்து இயக்கங்களின் மய்ய அச்சு. அங்கிருந்து தான் பல்வேறு இயக்கங்களுக்கான ஆட்கள் பயிற்சியளிக்கப்பட்டு தயார் செய்யப்படுகிறார்கள்.

தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்.இன் ஷாகா பயிற்சியில் உற்பத்தி செய்யப்படும் பொய்கள், வதந்திகள் போல் நாடெங்கும் பரப்பப்படுகின்றன. கிறித்துவர்கள் நடத்தும் கல்விச் சாலைகள், மருத்துவமனைகள் அனைத்தும் மத மாற்றக் கூடங்களே என்பது போல் நாள்தோறும் அங்கு பொய்கள் உருவாக்கப்படுகின்றன.

மாநில கட்சிகளின் ஆதரவுடன் ஆர்.எஸ்.எஸ்.இன் அரசியல் பிரிவான பா.ஜ.க., 1996 முதல் 2006 வரை மத்தியில் ஆட்சிபுரிந்தது. இந்த காலத்தில் தான் குடிமைச் சமூகத்தை மதவாதப்படுத்தும் பல்வேறு செயல்கள் தீவிரப்படுத்தப்பட்டன. கோத்ரா கொடுமையைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. தாக்குதல்களின் புதிய எல்லைகளை அவர்கள் அடைந்திருப்பதை இது சுட்டிக்காட்டியது. சமூகத்தின் பெரும் பகுதி மக்கள், எப்படி ஆபத்தான மதவாதத்தில் களமிறங்கினர் என்பதை குஜராத் இனப்படுகொலைகள் நமக்கு உணர்த்துகின்றன.

மதராசாக்கள் : பத்வாக்கள்

இந்தியாவில் உள்ள மதராசாக்கள், தீவிரவாதத்தின் நாற்றங்காலாய் விளங்குவதாக தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக இந்திய -நேபாளம் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள மதராசாக்கள், பாகிஸ்தானின் அய்.எஸ்.அய்.யுடன் தொடர்புடையவை என்று கூறப்பட்டு வருகிறது. பல மதராசாக்கள் பழமையானவையே. அவர்கள் நவீன விஷயங்களை தங்கள் பாடத்திட்டங்களில் இணைக்க மறுக்கிறார்கள். இவை எதுவும் அவர்கள் தேசவிரோதிகள் என்பதற்கான அர்த்தமல்ல.

மதராசாக்கள் -பொதுவாக ஏழைகளின் குடும்பத் தேவைகளை நிறைவு செய்கிறது. இந்திய முஸ்லிம்களில் பெரும் பகுதியினர் நிலமற்ற விவசாயக் கூலிகள், சிறு குறு விவசாயிகள், கைவிøனஞர்கள் மற்றும் பெட்டிக்கடைக்காரர்களாகவே உள்ளனர். நகர்ப்புற முஸ்லிம்களை இந்துக்களுடன் ஒப்பிட்டால், 50 சதவிகிதத்திற்கும் மேல் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தான் வாழ்கிறார்கள். அதிகப்படியான முஸ்லிம்கள் சுயதொழில்களில் ஈடுபடுகிறார்கள். முஸ்லிம்களின் வாழ்க்கைச் சூழலால் சிலரால் மட்டுமே உயர் கல்வியைப் பெற முடிகிறது.

தொடர்ந்து பல ‘பத்வா'க்கள் குறித்த செய்திகள் நம்மை வந்தடைந்த வண்ணம் உள்ளன. பெண்கள் அவர்களது உடை, திருமணம், பலதார மணங்கள் குறித்த பத்வாக்கள் பற்றி தொடர்ந்து சமூகத்தில் சர்ச்சைகள் நிலவி வருகின்றன. குடியா மீதான பத்வா, பல நாட்கள் வரை தலைப்புச் செய்திகளிலிருந்து விலகாதிருந்தது. குடியாவின் கணவர் தொலைந்து விட்டார். அவர் மறுமணம் செய்து கர்ப்பமாக இருந்த சூழ்நிலையில்,
அவரது முதல் கணவர் ஆரிபா வந்து சேர்ந்தார். ஆரிப்பை பாகிஸ்தான் ராணுவம் பிடித்துச் சென்று விட்டது. ஆனால் அவர் இறந்துவிட்டதாகக் கருதி அவரை இங்கு தியாகியாக கொண்டாடி விட்டார்கள். ஆரிபா திரும்பி வந்த உடனே உள்ளூர் பஞ்சாயத்து அவரிடம் கருத்து கூட கேட்காமல் தனது தீர்ப்பை அறிவித்தது:

குடியா உடனே தனது முதல் கணவர் ஆரிப்புடன் தான் வாழ வேண்டும்; பிறக்கும் குழந்தையை இரண்டாவது கணவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இம்ரானா வழக்கில், அவரது மாமனார் அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார். உடனே அவர் தனது கணவரை கைவிட்டு மாமனாருடன் வாழும்படி கோரப்பட்டார். இம்ரானாவின் விருப்பத்தைப் பற்றி எவரும் அக்கறை கொள்ளவில்லை. இது தான் பத்வாவின் அதிகாரமான அறிவிப்பு. மற்றொரு சந்தர்ப்பத்தில் ஓர் அரபியரை இரு தங்கைகள் ஒரே திருமணத்தில் மணக்கலாம் என பத்வா வெளியிடப்பட்டது. பல இடங்களில் 18 வயதுக்கும் குறைவான பெண்களை திருமணம் செய்து கொள்ள பத்வாக்களின் மூலம்
அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பத்வாக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இவை எல்லாம் இஸ்லாத்தின் கொள்கையாகக் கருதப்பட்டாலும், வெவ்வேறு பள்ளிகள் வித்தியாசமான பத்வாக்களை வெளியிடுகிறார்கள். பொதுவாக, பத்வாக்கள் வெறும் கருத்துக்களே அன்றி அவற்றுக்கு எந்த சட்ட, சமூக அங்கீகாரமோ கிடையாது. அது பல முடிவுகளை கூடி எடுப்பதற்கான வழிமுறையே. காலங்கள் மாற பத்வாக்களின் தன்மையும் மாற்றம் பெற்று வருகிறது. சல்மான் ருஷ்டியின் இலக்கியப் படைப்பு இஸ்லாத்துக்கு எதிரானதாகக் கருதப்பட்டு, அவருக்கு எதிராக வழங்கப்பட்ட பத்வா உலகப் புகழ் பெற்றது. அது, அய்யத்துல்லா கோமெனியால் வழங்கப்பட்டது. ஆனால் டர்கி போன்ற இஸ்லாமிய நாட்டின் பத்வாக்களுக்கு எந்த மதிப்பும் கிடையாது. அங்கு பொதுவான மதசார்பற்ற சட்டங்களே நடைமுறையில் உள்ளன.

இஸ்லாமிய சமூகங்களுடன் தொடர்பற்று, இஸ்லாமிய மதப்பள்ளிகளில் வாழும் தாடி வளர்த்த மவுலானாக்கள் தான் பத்வாக்களை அறிவிக்கிறார்கள். பத்வாக்கள் பொதுவாக பெண்களை மிக மோசமான பிறவிகளாகக் கருதுகின்றது. பல படித்த தாராள சிந்தனை கொண்ட முஸ்லிம்கள், இந்த பத்வாக்கள் அர்த்தமற்றவை என்று குறிப்படுகிறார்கள். இந்த பத்வாக்களை எளிதில் கட்டுடைத்து, அதன் தாக்கத்தை தகர்த்து விடலாம் என அவர்கள் கருதுகிறார்கள்.

ஒரு மக்கள் சமூகம், தான் தாக்கப்படுவதாக அச்ச உணர்வு கொள்ளும் நேரத்தில் தான் இன்னும் அதிகமான -இது போன்ற அடிப்படைவாத மதங்களின் பிடியில் போய் சிக்கிக் கொள்கிறது. இந்தியாவிலும் முஸ்லிம்களின் மீது அவதூறுகள் பொழியும் பிரச்சாரங்கள் அதிகரித்த பின்பு தான் இப்படியான பத்வாக்கள் வெளிவரத் தொடங்கின. இந்த பத்வாக்களை வைத்தே இந்து அமைப்புகள் முஸ்லிம்களை காட்டுமிராண்டிகள் எனப்பிரச்சாரம் செய்யத் தொடங்கின. ஆனால் நல்ல மாற்றம் என்னவெனில், பல படித்த முஸ்லிம்கள் இந்த பத்வாக்களுக்கு எதிராகப் பேசவும், அணி திரளவும் தொடங்கியுள்ளனர்.

ஏராளமான முஸ்லிம் பெண்கள் பத்வாக்களுக்கு எதிராக உரத்துப் பேசி வருகிறார்கள். பத்வாக்கள் வழங்கும் மவுலானாக்களின் பிடியிலிருந்து அச்சமூகம் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். மனித விழுமியங்கள், பெண்களின் உரிமைகள் எனப் பல போராட்டங்கள் தொடங்கி, அதன் உள்கட்டமைப்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தி சமூகப்பாதுகாப்பு உணர்வுடன் பரிணமிக்க வேண்டும்.

இன்றைய மதவாதம்

குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். தனது திட்டத்தை செயல்படுத்த, பல வழிகளிலும் முனைந்து வருகிறது. வந்தே மாதரம் பாடுவது, பாட புத்தகங்களை சிதைப்பது என இவர்களது செயல்கள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. வந்தேமாதரம் தேசிய கீதம் அல்ல; அது தேசியப்பாடல் மட்டுமே. இருப்பினும் அதைப்பற்றிய சர்ச்சை தொடர்கிறது. இந்த பாடலை சுதந்திரப் போராட்டங்களின் போது மதவாத சக்திகள் பயன்படுத்தியுள்ளன.

பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் இயற்றப்படும் சட்டங்கள், மத சிறுபான்மையினருக்கு எதிராகவே உள்ளன. கிறித்துவர்களின் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளன. நீதிமன்றங்கள் இத்தகைய வழக்குகளில் பெரிதாக எதையும் வழங்கிவிடவில்லை. வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசுகள் எந்த புனரமைப்புகளையும் செய்யவில்லை. மத்திய அரசு இது சார்ந்து எடுக்க வேண்டிய கொள்கைகளைக் கூட வகுக்கவில்லை.

இவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மதமாற்றத் தடை சட்டங்கள் பல வடிவங்களில் இயற்றப்பட்டுள்ளன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அதன் குடிமக்களுக்கு மதத்தைத் தேர்வு செய்யும் உரிமையை வழங்குகிறது. ஆனால் இவர்களின் சட்டங்கள், மதமாற்றத்திற்கு முன் அனுமதிகள் பெறப்பட வேண்டும் என கட்டளையிடுகிறது. மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என பல கிறித்துவர்கள் தாக்கப்படுகிறார்கள். ஆனால், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். ஒரு பண்பாட்டு அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டு, அதில் அரசு ஊழியர்கள் உறுப்பினராவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பு தான் இங்குள்ள ஜனநாயகத் தன்மைகளை அழித்து இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கத் துடிக்கிறது.

தெற்கே கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்த மறு நிமிடம், பாபா புதான்கிரி தர்கா விவகாரம் முன்னுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தர்காவில் பல நூற்றாண்டுகளாக இந்துக்களும் -முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் வழிபாடு நடத்தி வருகிறார்கள். இதனை ஓர் இந்து கோயில் என பா.ஜ.க. கருதுகிறது. அது தத்தா பீடம்; இது தான் தென்னகத்தின் அயோத்தி எனவும் பா.ஜ.க. அறிவித்துள்ளது. இந்த சர்ச்சை பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்ததும் அதிக கவனம் பெறுகிறது. வெள்ளையர்களை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டம் நடத்திய திப்பு சுல்தானையும் இவர்களது அவதூறுகள் விட்டுவைக்கவில்லை. பிரிட்டிசாருடன் போரிட்டு தனது உயிரை நீத்த திப்பு சுல்தான் தொடங்கி, இவர்கள் செய்யும் அவதூறு பிரச்சாரங்கள் தான் -நடுத்தர வர்க்கம் இவர்களுக்கு தேர்தலில் ஆதரவு கொடுத்து வெற்றி பெறச் செய்ததற்கு மூல காரணமாகும்.
Pin It