Srilankan Tamils

(ஈழத்தில் உள்ள வன்னியில் மக்கள் வாழும் பகுதியில் சிங்கள ராணுவம் தொடர்ந்து நடத்தும் குண்டுவீச்சு காரணமாக, இருப்பிடங்களை விட்டு வெளியேறும் மக்கள்)
குருவிகள் விளையாடிய படல்களையும்
குழந்தைகள் தவழ்ந்த வாயில்களையும்
பெயர்த்தெடுத்துக் கிளம்புகிறோம்

அக்கினித்துளிகளை கண்கள் உதிர்க்க
சாம்பலாகிப்போன மனதின் பாரத்தோடு
திரும்பி
திரும்பி
பார்த்துச் செல்கிறோம்

பேரினவாத துன்புறுத்தலில்
இழப்புகளையே இருப்புகளாக்கி
இருப்பனவற்றை ஒரு வண்டியிலேற்றி
புறப்படுகிறோம்

உழுத வயல்வெளிகளையும்
புரண்ட மண்வெளிகளையும்
வெறித்துப் பார்த்த
ஏக்கத்தின் பெருமூச்சுகள்
வெப்பமேற்ற வெளியே போகிறோம்

அழுத விழிகளோடு குழந்தைகள்
கட்டங்களில் விட்டுவந்த
ஓட்டுத்துண்டுகளை
நினைத்துக் கொண்டே
கடக்கிறோம்

எமது நீர்குடித்து வளர்ந்த
தெருவோர கொன்றை மரங்கள்
கன்றிய மஞ்சள் பூக்களைத்தர
குமைந்த உள்ளத்தோடு வெளியேறுகிறோம்

எங்கள் மண்
எங்கள் உயிர்
எல்லாவற்றையும் விட்டுவிட்டு
ஏகுகிறோம் கையில் கிடைத்த
தட்டுமுட்டுச் சாமான்களோடு

விடுதலை நாளொன்றில்
மீள வருவோம்
அப்போது பூத்திருக்கும்
எங்கள் தாவரங்கள்...
கன்றிப்போகா வாசனை மலர்களை

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.