தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ள இரு அரசு ஆணைகள், மிகுந்த வரவேற்புக்கும், பாராட்டுக்கும் உரியனவாக இருக்கின்றன. இரண்டு ஆணைகளுமே புத்தகங்கள் தொடர்பானவை. "அரசு விழாக்களில் கலந்து கொள்ளும் முக்கியப் பிரமுகர்களுக்கு மாலைகள், பொன்னாடைகளுக்குப் பதிலாக இனி புத்தகங்களை மட்டுமே வழங்க வேண்டும். இதனால், சிறந்த புத்தகங்களைக் கொடுக்கும் முறை கடைப்பிடிக்கப்படுவதுடன், புத்தகம் படிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்க வாய்ப்பாக இருக்கும்' என்று முதல் ஆணை சொல்கிறது (‘தினகரன்', டிசம்பர் 27). ‘தமிழகத்தில் உள்ள 220 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்குப் புதிதாக, தரமான புத்தகங்கள் வாங்கப்படுகின்றன' என்று இரண்டாவது ஆணை சொல்கிறது (‘தினமணி', டிசம்பர் 28).

Books
படிப்பு என்பது வெறுமனே வேலைவாய்ப்புகளை மய்யப்படுத்தியதும், தேவை கருதியதுமான ஒன்றாக மாறிவிட்ட சூழலில், திரைப்படம், சின்னத்திரை, கணினி உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாக சீர்கெட்ட பண்பாடு வேர் ஊன்றி கிளை பரப்பத் தொடங்கியிருக்கும் சூழலில், சுயசிந்தனையும், சுயசார்பும், சுயமரியாதையும் இல்லாத இளந்தலைமுறையினர் உருவாகி வரும் சூழலில் - இந்த இரு ஆணைகளும் புரட்சிகரமானவை என்றே சொல்லத் தோன்றுகிறது. மாலைகளுக்கு மாற்றாக, பொன்னாடைகளுக்கு மாற்றாக, பரிசுப் பொருட்களுக்கு மாற்றாக புத்தகங்கள் இடம் பெற வேண்டும் என்ற சிந்தனையின் பின்னால் இருக்கும் எண்ணத்தை, நாம் எளிதில் உணர்ந்து கொள்ளலாம். அறிவுசார்ந்த சமூகமாக, அறிவார்ந்த எண்ணங்களுடன் இயங்கும் சமூகமாக, இச்சமூகம் மாற வேண்டும் என்பதே அந்த எண்ணம்.

படிக்கும் பழக்கம் பெருகும்போது சிந்தனை வீச்சு உருவாகும். அறச்சார்பும், தன் ஒழுக்கமும் சீர்பெறும்; அல்லது இப்படியெல்லாம் நாம் நினைப்பது அதிகமாகக் கூடத் தோன்றலாம். ஆனால், நூல்கள் வழங்கப்படுவதன் மூலம் குறைந்தபட்சம் அரசு விழாக்களில் காணப்படும் துதிபாடல்கள், பொன்னாடை மற்றும் துண்டுகள் அணிவிப்பதில் வெளிப்படும் வேறுபாடுகள் - ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை மறையலாம். கூடவே அறிவார்ந்த தளங்களில் இயங்கிவரும் அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்களை அறிந்து வைத்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பு, அரசு நிர்வாக அதிகாரிகளுக்கு ஏற்படலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, புத்தகங்களும் பரிசுப் பொருட்களாக அளிக்கக் கூடியவைதான் என்ற எண்ணத்தை, பொதுபுத்தி சார்ந்து இயங்குகின்ற மனிதர்கள் இடையிலே உருவாக்குவதற்கு, அரசு செய்திருக்கும் முயற்சியாகவும் இதைப் பார்க்கலாம். நூல்களைப் படித்து, பரிசளித்து மகிழ்கின்றவர்களை ஏளனமாகப் பார்த்து - வெளிப்படையாகவோ, உள்ளூறவோ சிரித்துக் கொள்கின்றவர்களையும் இந்த ஆணை சரிப்படுத்தும் என்றே தோன்றுகிறது.

படித்தல் என்பது ஓர் உயிர் செயல்பாடு. உண்ணுவதைப்போல, சுவாசிப்பதைப் போல. நூல்கள் - அறிஞர்களின் குரலையும், கலைஞர்களின் குரலையும் அழியாமல் வைத்துக் கொண்டு, பசித்து வரும் மகனுக்கு சோறிடக் காத்திருக்கும் அன்னையைப் போல, காத்துக் கொண்டிருக்கின்றன. இறுகி கெட்டித் தட்டிப் போயிருக்கும் அதிகார வர்க்கம் சற்றே இளகுவதற்கான முயற்சியாக, இந்த ஆணை இருக்கப் போகிறது. இந்த ஆணையை விரிவாக்கி கட்சி விழாக்களிலும் செயல்படுத்தினால் நல்லது என்று தோன்றுகிறது. நூல்களின் வழியாகவும், வாசகர் வட்டங்கள், படிப்பகங்கள், மொழிப்போராட்டம், நாடகம், திரைப்படம், பேச்சு ஆகியவற்றின் வழியாகவும் பெரும் சமூக மாற்றத்தை உருவாக்கியது திராவிட இயக்கம்.

திராவிட இயக்கம் மட்டுமல்லாது எல்லா அரசியல் இயக்கங்களைக் கருத்தில் கொண்டாலும், அந்த இயக்கங்களின் முதல் தலைமுறை தலைவர்களைப் போல, மெத்தப்படித்த அறிஞர்களாக இன்று பெரும்பகுதியினர் இல்லை. அவ்வியக்கங்களின் தொண்டர்களிடையே படிக்கும் பழக்கம் முற்றிலுமாகவே இல்லை என்று சொல்லிவிடும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. இந்த அம்சம் அரசியலின் முகத்தையே மாற்றியிருக்கிறது. இச்சூழலில் திராவிட இயக்கம் மீண்டும் ஒரு வாசிப்புப் புரட்சியை தம் தொண்டர்கள் இடையிலே உருவாக்குவதன் மூலம் முன்மாதிரியாகத் திகழ வாய்ப்பு இருக்கிறது.

‘என்றைக்குமே அழிந்து போய்விடாத சொத்துக்களாக இரண்டை நாம் நம்முடைய குழந்தைகளுக்குத் தரலாம். ஒன்று வேர்கள், மற்றொன்று சிறகுகள்' என்று எங்கோ படித்ததாக என் நினைவுக்கு வருகின்றது. வேர்களான பாரம்பரியம், கலை பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றையும்; சிறகுகளான சிந்தனை யையும் நூல்களால் அன்றி வேறு எவற்றாலும் சிறப்புடன் நமது குழந்தைகளுக்கு அளிக்க இயலாது.

நூல்களை மாணவப் பருவத்திலேயே அறிமுகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை இறங்கியிருப்பது பெரும் பாராட்டுக்குரியது ஆகும் (அண்டை மாநிலமான கேரளாவில் ‘வாசித்து வளர்வோம்' என்ற திட்டம், சில ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வருகிறது. இத்திட்டத்தின் வழியே எல்லா பள்ளிகளுக்கும் நூலகங்களை உருவாக்கி வருகிறார்கள் என்று செய்திகள் கிடைக்கின்றன).

‘கேரியரிசம்' என்று சொல்லப்படும் சுயநலம் மிக்க தன்முன்னேற்றச் சிந்தனை, மெல்ல மெல்ல எல்லா பள்ளிகளிலும் ஊடுருவியவுடன் பல சிறப்பு அம்சங்கள் அங்கிருந்து விடை பெற்றுக் கொண்டன. விளையாட்டு, இசை, ஓவியம், இலக்கியம் கைத்திறன் போன்றவைகளுக்கு இன்று பள்ளிகளில் இடமில்லை. எல்லா மாணவர்களையும் விடைகளைப் பிரதியெடுக்கும் எந்திரங்களாக - மதிப்பெண்களுக்காக மாரடிக்கும் உழைப்பாளிகளாக மாற்றிவிட்டது, இன்றைய போட்டித் தேர்வு சூழல். மனப்பாடம் செய்து வெளிப்படுத்தும் தலைமுறைதான் இன்றைய தலைமுறை. பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தம்மிடம் இருக்கும் எல்லா குழந்தைகளும் முதல் மதிப்பெண் பெற்றுவிட வேண்டும் என்ற பேராசை. மாணவன் படிக்கிறவனாக இருந்தால் போதும், சிந்திக்கத் தெரிந்தவனாகவோ, பிற துறைகளில் திறன் மிக்கவனாகவோ, ஆரோக்கியம் கொண்டவனாகவோ இருக்க வேண்டும் என்ற எண்ணம் இன்று பெரும்பாலானவர்களிடம் இல்லை.

இச்சூழலில் தான் பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கவும், நூல்கள் வாங்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. பல பள்ளிகளிலும் நூலகங்கள் இருந்து வருகின்றன. ஆனால், முறையாக அந்த நூலகங்கள் மாணவர்களால் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே, நூல்கள் எல்லாம் கரையான் அரித்து, நூலாம் படைகள் படிந்து, புழுதிப் புதையலில் இருக்கின்றன. நூலகத்துக்கென்று தனி அறைகளும், அலமாரிகளும் இல்லை. எனவே அரசு, நூல் பராமரிப்புக்கென உள்கட்டமைப்பு வசதிகளையும் பள்ளிகளுக்கு செய்து தர வேண்டிய சூழலில் இருக்கிறது.

இப்படி நல்ல எண்ணத்தில் வழங்கப்படுகின்ற நூல்களை மாணவர்கள் பயன்படுத்த அவர்களுக்கு பாடவேளை ஒதுக்கப்படுவதில்லை. ஓவியம், கைவினை, தனி இசை, விளையாட்டு ஆகிய பாடம் சாராத பிற திறன்களுக்கு பாடவேளைகள் ஒதுக்கப்படுவதைப் போல, நூல் வாசிப்புக்கு என பள்ளிகளில் தனிப்பாடவேளை ஒதுக்கப்பட வேண்டும். அப்படி ஒதுக்கப்பட்டால் நூல் வாசிப்பு, கற்றல் செயல்பாட்டின் பிரிக்க இயலாத அம்சமாக மாணவர்களிடையே மாறும்.

டிசம்பர் தொடங்கியதும் இசை விழாக்கள் தொடங்குகின்றன. திருவையாறு இசை விழாவுடன், சென்னையிலும் ஒரு திருவையாறு என்று சொல்லியே விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆங்காங்கே விளம்பரப் பலகைகள்; ‘இந்து', ‘எக்ஸ்பிரஸ்', ‘தினமலர்', ‘தினமணி' போன்ற நாளேடுகளில் தனிச் சிறப்பிதழ்கள்; விகடன், கல்கி போன்ற சில வார இதழ்களில் எழுதப்படும் தொடர் பக்கங்கள்; பல இசைத் தட்டு நிறுவனங்களின் நிதியுதவி; தொலைக்காட்சிகளிலும், வானொலியிலும் தனியாக நேரம் ஒதுக்கி சிறப்பு நிகழ்ச்சிகள்; இசை அரங்குகளின் கால அட்டவணை; உயர் பதவியில் இருப்போரும், தொழில் அதிபர்களும், உயர்ந்த ரசனையுடையவர் என்று தம்மைக் காட்டிக்கொள்ள முனைவோரும் நிறைந்த கூட்டம். மண்ணின் மரபார்ந்த கலைகளைப் புறக்கணிக்கிற, தமிழ்ப் பாடல்களைப் பாடாத இசை விழாக்களுக்குதான் தமிழ் நாட்டில் இத்தனை ஆர்ப்பாட்டமும், ஆதரவும், அல்லோலகல்லோலமும்!
Parai

இசை என்பது ஒலி, சப்தம். அதற்கு மொழி முக்கியமல்ல என்று கூறி இங்கே வாதிடுகிறவர்கள் உண்டு. இசை என்பது ஒலிதான். மொழியே அதை உயிருள்ளதாக்குகிறது! மொழியெனும் உயிர் கிடைக்கிறபோதுதான் இசை மனிதர்களிடம் உறவாடுகிறது. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் இசை வடிவங்கள், அந்தந்த மண்ணுக்கேற்ற உயிரோட்டமுள்ள கூறுகளைக் கொண்டிருக்கின்றன. அம்மண்ணின் மொழியுடன் இணைந்தே வெளிப்படுகின்றன. இம்மண் தன்மையே அந்த இசையின் அடையாளமாகவும் இருக்கிறது. ஆனால், நம் நாட்டில்தான் மண் தன்மையற்ற இசை, இசையாக முதன்மைப் படுத்தப்படுகிறது. மண்ணின் தன்மையுடனும், மக்களின் தன்மையுடனும் வெளிப்படும் இசையும், அவர்களின் இசை மொழியும் இங்கே இரண்டாம் தரமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மண்ணில் மனிதர்கள் மட்டுமின்றி, அவர்களின் கலைகளும்கூட ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

மனிதனின் மகிழ்ச்சியிலும், துயரத்திலும் தோய்ந்து தன்னியல்பாய் உருவெடுக்கும் இசைக்கு - பக்தி சாயத்தையும், சாதியத் தன்மையையும் இங்கே ஏற்றியிருக்கிறார்கள். கர்நாடக இசை என்று அழைக்கப்படும் செவ்வியலிசை, சமூக கவுரவத்துக்குரிய ஒன்றாக, உயர் மதிப்புக்குகந்ததாக, ஆதிக்க சாதியினருக்கு சொந்தமானதாக மாற்றப்பட்டுவிட்டது. அந்த நிலையை கொஞ்சமும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்ற முனைப்புடனும், உத்திகளுடனுமே இசை விழாக்கள் திட்டமிடப்படுகின்றன.

சங்கீத சபாக்களின் பொறுப்பாளர்களின் தேர்தல்கள் பரபரப்பாகப் பேசப்படும் அளவுக்கு இன்று ஊடக கவனம் அளிக்கப்படுகிறது. அதன் விருதுகளும் உயர்வானவையாக சித்தரிக்கப்பட்ட செய்தியாக்கப்படுகின்றன. அரசுத் தொலைக்காட்சிக்கு செவ்வியல் இசைக் கலைஞர்களைத் தவிர, வேறு யாரையும் தெரிவதில்லை. அவர்களின் இசை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. வானொலி, செவ்வியல் இசை தொகுப்புகளைத் தனது களஞ்சியத்திலிருந்து எடுத்து மறுபதிவு செய்து விற்பனைக்கு வைக்கிறது. செவ்வியலிசை பயின்றவர்களே அங்கே நிலைய கலைஞர்களாக வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.

இசைப் பகுதிகளைப் படிப்பவர்கள் பத்துப் பேராக இருந்தாலும் நாளேடுகளுக்கும் - வார இதழ்களுக்கும் கவலை இல்லை! தமது சமூகக் கடமையாக அந்த பத்து பேருக் கென, பல பக்கங்களில் வண்ணப்படங்களுடன் கட்டுரைகளையும், செய்தித் தொகுப்புகளையும் வெளியிடுகின்றன. இப்படியாக கண்ணெதிரில், எல்லோராலும் ஏற்கப்பட்ட ஓர் ஒடுக்குமுறையின் அரசியல், கலையெனும் பெயரில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், நாட்டுப்புற இசைக்கலைஞர்களும், நிகழ்த்துக் கலைஞர்களும் கலைஞர்களாகவே இங்கு மதிக்கப்படுவதில்லை. குறைந்த எண்ணிக்கையிலான மனிதர்களின் கலைஞர்களுக் குப் பெரிய மரியாதை; பெரிய மக்கள் திரளை எட்டும் மக்கள் கலைஞர்களுக்கு குறைந்த மரியாதை. கர்நாடக இசைக் கச்சேரிகளில் தமிழ்ப்பாடல்களைப் பாடுவது குறித்து இங்கே எழுப்பப்பட்ட விவாதங்கள், விவாதங்கள் என்கிற அளவிலேயே நின்று விட்டன. தமிழ்ப் பாடல்களை செவ்வியல் இசைக் கலைஞர்கள் பாடுவது, இன்று ஒரு சடங்காகக் கருதப்படுகிறது. திரைப்படங்கள் வாயிலாக வும், இசை நிகழ்வுகளின் வாயிலாகவும் மண் சார்ந்த இசையையும், மொழியுணர்வையும் வெளிப்படுத்தும் கலைஞர்கள், பார்ப்பனியத்தால் உள்வாங்கி செறிக்கப்படுகிறார்கள் அல்லது ஒதுக்கப்படுகிறார்கள். இது ஒரு தொடர் நிகழ்வு.

மாற்று அரசியல் தளத்தில் இதற்கு எதிரான அணுகுமுறை என்ற அளவில் சில செயல்பாடுகள் ஓரளவிற்கான ஆதரவுடன் இங்கே நடைபெற்று வருகின்றன. தமிழ் இசை விழாக்கள், உழைக்கும் மக்கள் இசை விழா, தலித் கலை விழா, அருந்ததியர் கலை விழா, பழங்குடியினர் இசை விழா என்று இந்த மாற்றுச் செயல்பாடுகள் நீள்கின்றன. இச்செயல்பாடுகள் அரசியல் தளத்திலேயே அணுகப்படுவதும், செயல்படுத்தப்படுவதும் - மாற்று இசையின் பின்னடைவுக்கான காரணமாகவும் அமைந்து விடுகின்றன. அரசியல் தளத்தினின்று நம் எதிர்ப்புணர்வினை உணர்வு தளத்துக்கும், பயன்பாட்டுத் தளத்துக்கும் நாம் கடத்திச் செல்ல வேண்டியுள்ளது.

பெருவாரியான தமிழ் இசைப் பள்ளிகள், தமிழ்ப் பாடல்களுடனான செவ்வியல் இசை; தமிழகம் முழுவதும் பரவலாக்கப்பட்ட தமிழ் மக்கள் இசை விழாக்கள்; தலித் கலை விழாக்கள், எல்லார் வீடுகளிலும் மாற்று இசைத் தட்டுகள், ஒலி நாடாக்கள், தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் நிகழ்ச்சிகள், செய்திகள், கட்டுரைகள் என இன்னும் பல வகைகளில் நிலையானதும் உறுதியானதுமான மாற்று இசைப் பண்பாட்டை நாம் கட்டி எழுப்ப வேண்டியுள்ளது. நமது இசை, ஓவியம், இலக்கியம் போன்ற கலை வடிவங்களைப் பரவலாக்கவும், நிலைப்படுத்தவும் நாம் நமது முழு பலத்தையும் செலவிடவில்லை என்றே தோன்றுகிறது. ஒடுக்குமுறைகளை எதிர்ப்பதற்கான நமது போராட்டம், அரசியல் தளத்தோடு நின்றுவிட்டால் பயனில்லை. அது, பண்பாட்டுத் தளத்துக்கு மாற்றப்பட வேண்டும். அப்போதே அது முழுமை பெறும்.
Pin It