சாதியம் -இந்தியத் துணைக்கண்டத்தின் பல்லாயிரமாண்டு கால புனிதப்படுத்தப்பட்ட இனவெறி (Sanctified Racism). அதன் ஆணிவேர் இந்து மதத்தில் திளைத்துச் செழித்திருக்கிறது. இருப்பினும், இந்தியாவிற்கு வந்த அயல்நாட்டு மதங்களான கிறித்துவம், இஸ்லாம் போன்றவற்றையும் -இங்கிருந்த ஆதிக்க சாதியினர் தழுவிய பிறகு -அதன் அதிகார மய்யங்களைக் கைப்பற்றினர். அதனால் சாதியம், இஸ்லாம், கிறித்துவம் போன்ற பிற மதங்களின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானதாக இருந்த போதிலும், சாதியத்தின் பதியன்கள் அங்கே நடப்பட்டன. எனவேதான் இந்து மதத்தின் தீண்டாமைக் கொடுமைகள், மற்ற மதங்களைச் சேர்ந்த மனிதர்களின் எண்ணங்களில் வேரூன்றி உள்ளன.

Judge K.Ramasamy
‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்' என்று சாதியக் கொடுமைகள் காரணமாக இந்து மதத்தை மறுத்து, பிற மதங்களுக்குச் சென்ற தீண்டத்தகாதவர்களுக்கு -புதிய மதங்களைச் சேர்ந்த மனிதர்களிடம் கடைப்பிடிக்கப்பட்ட நவீன, நுண்ணிய தீண்டாமையின் வடிவங்கள் இன்று வரையிலும் தொடர்கின்றன. தலித் மக்களுக்கு மற்றெந்த விடுதலையைவிடவும் சமூக விடுதலையும், அதன் மூலம் கிடைக்கும் சமத்துவ உரிமையும்தான் இன்றியமையாதது என்று உரத்து முழங்கினார் அண்ணல் அம்பேத்கர். அவர் வடித்தெடுத்த அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமைக்கெதிரான உரிமையை, அடிப்படை உரிமைகள் பகுதியில் இணைத்தார். அதன் அடிப்படையில் இயற்றப்பட்ட தீண்டாமை (குற்றங்கள்) சட்டம் -1955, இம்முயற்சியில் ஒரு சிறு துளியே.

இச்சட்டம் 1955 இல் இயற்றப்பட்டிருப்பினும், இச்சட்டத்தின் அடிப்படையில் வந்த வழக்குகள் மிக மிகக் குறைவே. அதே போல இச்சட்டத்தின்படி தண்டனைக்குள்ளாக்கப்பட்ட நிகழ்வுகளும் மிகவும் அரிதே. காவல் துறை மற்றும் நீதிமன்றங்களின் சாதி ஆதிக்கச் சார்பு அணுகுமுறையினால், இச்சட்டம் தீண்டாமை ஒழிப்பில் எதிர்பார்க்கப்பட்ட பெரும் பங்கை ஆற்றவில்லை. பின்னர், 1976 இல் எல். இளையபெருமாள் தலைமையிலான குழு, இச்சட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, தீண்டாமை (குற்றங்கள்) சட்டம், ‘குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எனினும், இச்சட்டம் நடைமுறையில் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை.

இந்திய சட்டங்களானாலும் நீதிமன்றங்களானாலும், தலித் மக்களின் பிரச்சனைகளை அவை எந்த அளவிற்குப் புறக்கணிக்கின்றன என்பதை நீதிபதி கே. ராமசாமி, உச்ச நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பொன்றில் விரிவாகக் காணலாம் (கர்நாடக மாநிலம் -எதிர் -அப்பா பாலு இங்காலே / AIR 1993 குஇ 1126). இவ்வழக்கு, குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் -1955 இன் பிரிவுகள் 4 மற்றும் 7(1) (d) )இன்படி ஏற்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்ததாகும். பொதுக் கிணற்றில் தலித் மக்கள் தண்ணீர் எடுப்பதைத் தடுக்க துப்பாக்கியை நீட்டி, மீறி நீரெடுக்க முயன்றால் சுட்டு வீழ்த்திவிடுவதாக மிரட்டிய சாதியக் கொடூரம்தான் இவ்வழக்கின் சாரம். அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 42 ஆண்டுகள் கடந்த பின்னரே, முதல் முறையாக தீண்டாமைப் பிரச்சினை குறித்து உச்ச நீதிமன்றம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வாய்ப்பாக இவ்வழக்கு வந்ததாக, இத்தீர்ப்பில் நீதிபதி கே. ராமசாமி வேதனையுடன் குறிப்பிட்டிருப்பது ஒரு முக்கியப் பதிவாகும்.

இச்சட்டம் சரிவர பயன்படாததாலும், பயன்படுத்தப்பட்டாலும், பட்டியல் சமூகத்திற்கெதிரான வன்கொடுமைகள் பெருமளவில் அதிகரித்ததால், 1989 இல் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தலித் மக்களின் கல்வி, முன்னேற்றம், சமூக விழிப்புணர்வு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகிய காரணிகளால் இச்சட்டமே -பெரும்பான்மையான வன்கொடுமைகளுக்கு எதிராக தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினராகவோ (அ) பட்டியல் பழங்குடியினராகவோ இருக்க வேண்டியது அடிப்படை அவசியம். எனவே, பட்டியல் சாதியை சாராத ஆனால் வேறு மதத்திற்கு மாறினாலும் தாழ்த்தப்பட்டவர்களாகவே கருதப்பட்டு, தீண்டாமைக்குள்ளாக்கப்படுபவர்களின் நிலை மிகவும் அவலமானது.

இந்நிலையில்தான் சென்னை உயர் நீதிமன்றம் 21.8.2007 அன்று, செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள ‘அகில உலக டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டு இயக்கம்' தொடர்ந்திருந்த ஒரு ரிட் மனுவில் (நீதிப் பேராணை மனு எண். 28507/2005) நீதிபதிகள் எஸ்.ஜே. முகோபாத்தியா மற்றும் என். பால் வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1955 இன் பிரிவுகள் 3 மற்றும் 4 ஆகியவற்றிற்குப் பொருந்தக் கூடியதாக, பிரிவு 3 இல் ஒரு விளக்கம் இச்சட்டத்தில் தரப்பட்டுள்ளது. அது இதுதான் :

‘இந்தப் பிரிவின் நோக்கங்களுக்கும், அடுத்து வரும் 4ஆவது பிரிவின் நோக்கங்களுக்கும் புத்த, சீக்கிய, ஜைன சமயங்களைச் சேர்ந்தவர்களும் இந்துக்களாகவே கருதப்படுவார்கள். வீர சைவர்கள், லிங்காயத்துகள், ஆதிவாசிகள் ஆகியோரும் பிரம்ம சமாஜம், பிரார்த்தனா சமாஜம், ஆரிய சமாஜம், சுவாமி நாராயண சம்பிரதாயம் ஆகியவற்றைப் பின்பற்றுகிறவர்களும் -இதே போல் இந்து சமயத்தின் ஏனைய வடிவங்கள் அல்லது கிளைகளைச் சேர்ந்தவர்களும் இந்துக்களாகவே கருதப்படுவார்கள்.’

மேற்படி விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால், இப்பிரிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் தீண்டாமை தொடர்பான குற்றங்களில் பாதிக்கப்படுபவர்கள், இந்து மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே அப்பிரிவுகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்க இயலும் என்பது போல் இவ்விளக்கம் அமைந்துள்ளது. எனவே, இந்த விளக்கம் செல்லத்தக்கதல்ல என்றும், அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதாக அமைந்திருப்பதாகவும் அறிவித்து ஆணையிட வேண்டும் என்று, பொதுநல நோக்கில் இந்த நீதிப் பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இம்மனுவிற்கு பதில் தாக்கல் செய்த மத்திய அரசின் உள்துறையும் சமூக நீதி அமைச்சகமும், ‘இச்சட்டத்தின் பிரிவு 7(1)(d) தவிர மற்ற அனைத்து சட்டப் பிரிவுகளும், பாதிக்கப்பட்டோர் சார்ந்திருக்கக்கூடிய மதம் எதுவாக இருப்பினும், தீண்டாமையின் வடிவமாகக் கருதப்படக்கூடிய செயலைக் குற்றமாக அறிவித்திருக்கிறது என்றும், பிரிவு 7(1)(d) மட்டும் (பட்டியல் சாதியினரைச் சார்ந்தவரை தீண்டாமை அடிப்படையில் இழிவுபடுத்தினாலோ (அ) இழிவுபடுத்த முயன்றாலோ குற்றம் என்பது) பட்டியல் சாதியினரை சார்ந்தவராக இருக்கும் பாதிக்கப்பட்ட நபருக்குப் பொருந்தும் என்றும்; பிரிவு 3 இல் அமைந்துள்ள விளக்கம், இந்து மதத்தின் பல்வேறு பிரிவுகளின் உள்ளடக்கப் பட்டியலாக மட்டுமே கொள்ள இயலும் என்றும்; எனவே, இப்பிரிவுகள் (பிரிவு 7(1)(d) நீங்கலாக) அனைத்தும், கிறித்துவத்தைக் கடைப்பிடிக்கிறவர்களுக்கும், கிறித்துவத்திற்கு மாறிய பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் கூடப் பொருந்தும்’ என்றும் தமது பதில் மனுவில் கூறியிருந்தன.

இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தங்கள் ஆய்விலும் இச்சட்டத்தில் எந்தவொரு இடத்திலும் இச்சட்டம் இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியது என்ற அளவுக்கு வாசகங்களோ, சொற்றொடர்களோ இல்லை என்பதை சுட்டிக்காட்டி இறுதியில், ‘இச்சட்டம் மத வேறுபாடின்றி, தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் எந்த ஒரு மதத்திற்கும், அதன் பிரிவிற்கும் பொருந்தும். எனவே, பாதிக்கப்பட்ட ஒருவருடைய குற்ற முறையீட்டை எந்த அதிகார அமைப்பாவது ஏற்றுக் கொள்ள மறுத்தால், சட்டப்படியான விதிமுறைகளின்படி தீர்வு பெறலாம்’ எனத் தீர்ப்பளித்துள்ளனர். இப்படி ஒரு தீர்ப்பு இச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருப்பது, இந்திய நீதிமன்றங்களில் இதுவே முதல் முறையாகும் என்பதாலும் இத்தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்து மதம் தவிர, பிற மதங்களிலும் தலித் மக்களுக்கு எதிராகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தீண்டாமையின் பல்வேறு நுண்ணிய வடிவங்களை கேள்விக்குள்ளாக்கி, பாதிக்கப்பட்டோருக்கு உண்மையான சமூக நீதியும் சமத்துவ உரிமையும் பெற்றுத்தர நடத்தப்பட்டு வரும் போராட்டத்தின் ஒரு சிறிய அளவிலான வெற்றியே இத்தீர்ப்பு. தீர்ப்போடு நில்லாமல் இது நடைமுறைப்படுத்தப்படுமானால், அதுவே உண்மையான, முழுமையான வெற்றியாக இருக்கும்.

இத்தீர்ப்பில் குறிப்பிடப்படாமல் விடுபட்டுள்ள மிக முக்கியமான செய்தி ஒன்று உண்டு. இச்சட்டம் 1955 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்ட வரைவாக விவாதத்திற்கு வைக்கப்பட்டபோது, சட்டவரைவின் நோக்கங்கள் (Objects) பகுதியில், இச்சட்டத்தின் தனிப்பெரும் சிறப்பாக கூறப்பட்டுள்ள முதல் தகவல் : ‘இச்சட்டம் இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதல்ல.’

கட்டுரையாளர், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்
.
-சு.சத்தியச்சந்திரன்
Pin It