மதம் மாறினாலும், சாதி இந்துக்களின் மனம் மட்டும் மாறிவிடாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது தச்சூர். காஞ்சிபுரம் மாவட்டம் தச்சூர் கிராமத்தில் உள்ள தேவாலயத்தில், சாதிவெறி தலைவிரித்தாடுவது இன்றளவும் நின்றபாடில்லை ("தேவாலயத்தில் ஜாதி வெறி' "தலித் முரசு' சூன் 2005). அங்குள்ள கன்னியர் மடத்து (கான்வென்டு)க்குள்ளும் சாதிவெறித்தனம் அரங்கேறியுள்ளது. அங்கு கல்வி, மருத்துவப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது, புனித அன்னாள் சபையைச் சேர்ந்த மடம். பிப்ரவரி 18 அன்று மடத்துக்குச் சொந்தமான நிலத்தில், தச்சூரின் அருந்ததியர் பகுதியான பாளையத்தைச் சேர்ந்தவன் ஆடு மேய்ந்திருக்கிறது. அதனால், அதை மடத்தில் கட்டி வைத்துள்ளனர். ஆட்டுக்குச் சொந்தக்காரர் சேரிப் பகுதி பெரியவர்களைக் கூட்டிக் கொண்டு அன்று மாலை, மடத்தின் தலைமை சகோதரியிடம் பேசுவதற்காகச் சென்றுள்ளார்.

அப்போது, மடத்தில் இருந்த காணிக்கைமேரி என்ற கன்னியாஸ்திரி, தலைமை கன்னியாஸ்திரி சாப்பிடுவதால் சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறியிருக்கிறார். ஊர்க்காரர்கள் நீண்ட நேரம் காத்திருந்துவிட்டு, மீண்டும் கேட்கவும், தலைமை கன்னியாஸ்திரி சாப்பிட்டுவிட்டு தூங்கப் போய்விட்டதாக அதே கன்னியாஸ்திரி கூறியுள்ளார். அதைக் கேட்டவுடன், ஊர்க்காரர்கள் இதை முதலிலேயே சொல்ல வேண்டியதுதானே என்று கோபமாகப் பேசியிருக்கிறார்கள். மக்களை அனுப்பிவிட்டு அவர் திரும்பியபோது, அந்த மடத்திலேயே இருக்கும் ஜெசிந்தா என்ற தலித் கன்னியாஸ்திரியைப் பார்த்து ""உன்னுடைய சாதி என்பதால்தானே எதுவும் பேசாமல் இருக்கிறாய்'' என்று திட்டியுள்ளார். மேலும், "கையேந்தும் சாதி' என்று தலித் மக்களை இழிவுபடுத்தியுள்ளார். நடந்தது எதுவும் தெரியாத ஜெசிந்தா, சாதியைச் சொல்லி இழிவுபடுத்தியதால் கோபமடைந்து, என்னிடம் ஏன் பேசுகிறாய், மக்களிடம் பேசவேண்டியதுதானே என்று கூறியுள்ளார்.

ஜெசிந்தாவின் பதிலைப் பொறுத்துக்கொள்ள முடியாத காணிக்கை மேரி, ""நீ முதலில் வெளியே போடி'' என்று கூறி, ஜெசிந்தாவைத் தள்ளிக் கொண்டுபோய் வெளியில் விட்டு, கதவைப் பூட்டிக் கொண்டு உள்ளே போய்விட்டார். ஜெசிந்தா பலமுறை கதவைத் தட்டிப் பார்த்தும், காணிக்கைமேரியின் சாதிவெறி கதவைத் திறக்கவில்லை. வேறு வழியின்றி, ஜெசிந்தா வெளியிலேயே இருந்திருக்கிறார். ஊர் அடங்கிய அந்த இரவு நேரத்தில், அவரை வெளியில் பார்த்ததும் பதறிப் போய் விவரம் கேட்டுள்ளார், ஊர்ப் பெரியவர் பிலிப். பின்னர், செய்தி அறிந்து தலித் மக்கள் திரண்டுள்ளனர். அவர்கள் வந்து கேட்டும் கன்னியர் மடத்தின் சாதிவெறிக்கு காது கேட்கவில்லை. ஊர்ப் பெண்களுடன் இரவு முழுவதும் மடத்துக்கு வெளியிலேயே அறப்போர் நடத்தி இருக்கிறார் ஜெசிந்தா.

இதற்கிடையில், ஊர்க்காரர்கள் அன்னாள் சபையின் தலைமைக்குத் தகவல் அனுப்பினர். பிரச்சனையின் பரிமாணத்தைப் புரிந்து கொண்ட சபைத் தலைமை, அதை அப்படியே அமுக்கப் பார்த்தது. மறுநாள் சம்மந்தப்பட்ட மடத்தின் கன்னியாஸ்திரிகளை, சென்னையை அடுத்த பெருங்குடிக்கு வரவழைத்தது. அன்னாள் சபையின் தலைவி, சபையின் மாநிலத் தலைவி ஆகியோர் இருவரிடம் பேசி "சமாதானம்' செய்து அனுப்பினர். சாதி இழிவுக்குள்ளான கன்னியாஸ்திரி ஜெசிந்தாவும், கர்த்தரின் வழிகாட்டலில் அய்க்கியமாகிவிட்டார். அதன் பிறகு, காணிக்கைமேரியின் வடிவில் அவருக்கு இழைக்கப்பட்ட சாதிக் கொடுமையைப் பற்றி சிலர் விசாரித்தபோது, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று ஒரேயடியாக அடிக்கிறார் சகோதரி ஜெசிந்தா.

ஆனால், மடத்திலிருந்து ஜெசிந்தா வெளியேற்றப்பட்டவுடன் நடந்த நிகழ்வுகளை, தலித் இளைஞர்கள் குழு ஒன்று "வீடியோ' எடுத்துள்ளது. அதில், ""வேறு வேலையாகப் போய்விட்டு வந்து தங்கும் அறைப் பக்கம் சென்ற எனக்கு, ஊர்க்காரர்களுடன் காணிக்கைமேரி விவாதம் செய்த விவரம் தெரியாது. ஆனாலும், அவர் என்னை சாதிப் பெயரைச் சொல்லித் திட்டினார்; வெளியில் தள்ளி கதவைச் சாத்திக் கொண்டார். எனக்கு செத்துப் போகலாம் போல இருந்தது'' என்று ஜெசிந்தா பேட்டியளித்துள்ளார். அவர் இரவு நேரம் மடத்தின் வராண்டாவில் இருப்பதையும் புகைப்படம் எடுத்துள்ளனர்.

தலித் மக்கள் மதம் மாறினால், ஒப்பீட்டளவில் அவர்கள் மீதான வன்கொடுமைகளும் இழிவுகளும் குறைகிறது என்பது உண்மைதான். ஆனால், கிறித்துவ மதம் மட்டுமே மாறியுள்ள சாதி இந்துக்களின் மனம் மாறாதவரை, இங்கு தேவாலயங்கள் கிறித்துவத்தின் வழியாக "ஜாதி ஊழியம்' செய்பவையாக மட்டுமே இருக்கும்

-செங்கதிர்
Pin It