பத்தொன்பது முறை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் மற்றும் கொட்டக்காக்சியேந்தல் போன்ற தனி ஊராட்சிகளில் தேர்தல்களை நடத்தும் முயற்சியில் தோல்வியடைந்த அரசு, இம்முறை தேர்தலை நடத்திவிட்டது. இதற்காக தமிழக அரசின் சார்பில் சமத்துவப் பெருவிழா நடத்தப்பட்டு, தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு ‘சமத்துவப் பெரியார்' என்ற பட்டமும் விடுதலைச் சிறுத்தைகளால் வழங்கப்பட்டது. இக்கொண்டாட்டங்கள் நடைபெற்று 9 நாட்களே ஆன நிலையில், நக்கலமுத்தான்பட்டி பஞ்சாயத்து தலைவர் ப.ஜக்கையன் - சாதிவெறியர்களால் வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கிறார்.

Jakkaiyan
நெல்லை மாவட்டம், திருவேங்கிடம் சரகத்திற்கு உட்பட்டது நக்கலமுத்தான்பட்டி கிராமம். இங்கு 2000 நாயக்கர் குடியிருப்புகளும், 34 தலித் குடியிருப்புகளும் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக நக்கலமுத்தான்பட்டி நாயக்கர் சாதியைச் சேர்ந்த ரெஜினாமேரி, பஞ்சாயத்து தலைவராக இருந்தார். வழக்கமாகவே பெண்கள் பஞ்சாயத்து தலைவராக இருந்தாலும், அதிகாரம் மட்டும் கணவன் என்கிற ஆண் வர்க்கத்திடமே இருந்து வருகிறது. ரெஜினாமேரி பதவியேற்றவுடன் அவரது கணவர் திருப்பதிராஜு, முழுமையான அதிகாரத்தோடு 5 ஆண்டுகளும் ஆட்சி செய்திருக்கிறார். கடந்த ஆண்டுகளில் இவர்கள் தங்களுடைய பண பலத்தாலும், சாதி பலத்தாலும் கொள்ளையடித்து மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். மக்களுக்குச் சேரவேண்டிய நலத் திட்டங்கள் பற்றி கேட்டால், அவர்களை அடித்து துன்புறுத்துவது - அவர்கள் மீது பொய்வழக்குப் போட்டு அலைக்கழிப்பது போன்ற கொடுமைகளை இவ்விருவருமே செய்து வந்திருக்கின்றனர்.

உள்ளாட்சித் தேர்தல்களில் தலித்துகளுக்கான தனித் தொகுதிகளை அரசு அறிவித்தவுடன், தாங்கள் தொடர்ந்து செய்து வந்த அட்டூழியங்களுக்கு வழியில்லாமல் போய்விடுமோ என்று பயந்திருக்கிறது சாதிவெறிக் கும்பல். தற்பொழுது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இதே பகுதியை சேர்ந்த பள்ளர் சமூகத்தின் சுப்பையா என்பவரும், அருந்ததியர் சமூகத்தில் ஜெகநாதன் என்பவரும் போட்டியிட்டிருக்கின்றனர். இதனால் திருப்பதி ராஜு தன்னுடைய ஏமாற்று வேலைக்கு உடன்பட்டுப் போவதற்காக, அதே பகுதியைச் சார்ந்த அருந்ததியரான ஜக்கையன் (42) என்பவரை பஞ்சாயத்து தலைவராகப் போட்டியிட வைத்திருக்கிறார். திருப்பதிராஜு வார்டு உறுப்பினராகப் போட்டியிட்டு, இறுதியில் பஞ்சாயத்து தலைவராக ஜக்கையனும், வார்டு உறுப்பினராக திருப்பதிராஜுவும் வெற்றி பெற்றனர். ஜக்கையன் பஞ்சாயத்து தலைவராகப் பதவியேற்றவுடன், திருப்பதிராஜு துணை பஞ்சாயத்து தலைவராகப் பதவியேற்றிருக்கிறார்.

கடந்த ஆட்சியில் மக்களுக்குச் சேர வேண்டிய சலுகைகளையும், திட்டங்களையும் சரிவர செய்யாமலும், பஞ்சாயத்திற்குரிய பணத்தை கையாடல் செய்தும் வந்த கும்பல், அதே ஏமாற்று வேலையை ஜக்கையன் தலைமையில் செய்திட முடிவெடுத்திருக்கிறது. முதன் முறையாக திருப்பதிராஜு ஜக்கையனை அழைத்து, நிரப்பப்படாத காசோலையில் 70,000 ரூபாய் தொகையை நிரப்பி அதில் கையெழுத்திடுமாறு கேட்டுள்ளார். ஆனால், எந்தத் திட்டத்திற்காக இந்தப் பணத்தை செலவிடப் போகிறோம் என்று ஜக்கையன் கேள்வி எழுப்பியுள்ளார். கையெழுத்துப் போடுவது மட்டுமே உன் வேலை; கேள்வி எதுவும் கேட்காதே என்று திருப்பதிராஜு மிரட்டியிருக்கிறார். இந்த மிரட்டலுக்கு அஞ்சாத ஜக்கையன், எந்த காசோலையிலும் நான் கையெழுத்திட மாட்டேன் என்று உறுதிபடக் கூறியிருக்கிறார்.

இதனால் கடும் கோபமுற்ற ஆதிக்க சாதி கும்பல், ஜக்கையனை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருப்பதிராஜும், சில சாதி இந்துக்களும் நக்கலமுத்தான்பட்டியில் இருந்து சிப்பிப்பாறைக்கு செல்லும் வழியில் ஜக்கையனை வழிமறித்து, ‘‘உன்னை ஜெயிக்க வைத்ததே நாங்கள்தான். எனவே நாங்கள் கையெழுத்துப் போடச் சொல்லும் இடத்தில் நீ கையெழுத்துப் போட வேண்டும். இல்லையெனில் உயிரோடு வாழ முடியாது'' என்று மிரட்டி கழுத்தை நெறித்து அடித்துள்ளனர். தினமும் இரவில் ஜக்கையனின் வீட்டுக் கதவைத் தட்டி மிரட்டியிருக்கிறது சாதிவெறிக்கும்பல். இதனால் தன் உயிருக்கு சாதி இந்துக்களால் ஆபத்து வரக்கூடும் என்று எண்ணி பாதுகாப்பு கேட்டு மனு எழுதியிருக்கிறார். இது, திருப்பதிராஜுவை மேலும் ஆத்திரம் கொள்ளச் செய்துள்ளது.

தன்னுடைய சாதி, பணம், அரசியல் ஆகியவற்றின் வலிமையால் திமிரோடு திரிந்த திருப்பதிராஜுவை முதன் முறையாக எதிர்த்த போராளி ஜக்கையனை, நேரடியாக எதிர்கொள்ள முடியாத திருப்பதிராஜு கும்பல், 22.11.06 அன்று அதிகாலை 5.45 மணிக்கு சைக்கிளில் தேநீர் கடைக்கு வந்து கொண்டிருந்த போது, மறைந்திருந்து களைவெட்டியைக் கொண்டு தாக்கிப் படுகொலை செய்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தமிழ் நாடு அருந்ததியர் ஜனநாயக முன்னணியினர், கொலை நடந்த இடத்திற்கு விரைந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருப்பதிராஜுவும், ரெஜினாமேரியும் உடனடியாகக் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இப்படுகொலையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகளும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளன. தலித்துகள் மீதான உரிமை மீறல்களுக்கு என்றைக்குமே செவிசாய்க்காத அரசு, இச்சம்பவத்திலும் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு மட்டும் வழங்கிவிட்டு, வழக்கம் போல் கண்டுகொள்ளாமலே இருக்கிறது.

மேலவளவில் சமூக ஜனநாயகத்தை நிலைநாட்டிய அறுவர் படுகொலை செய்யப்பட்டது, தமிழகத்தையே உலுக்கியது. மேலவளவு படுகொலையைக் கண்டித்து கிளர்ந்தெழுந்த தலித் இயக்கங்கள், அதே போன்றதொரு ஜனநாயகப் படுகொலை நிகழ்ந்திருப்பது குறித்து தமிழகம் தழுவிய போராட்டங்களை முன்னெடுக்காதது அதிர்ச்சியளிக்கிறது. மேலவளவு கொலையாளிகள் மேல்முறையீட்டுக்குச் சென்றுள்ளனர். ஆனால், சமத்துவப் பெருவிழா நடத்தும் தி.மு.க. அரசு, மேலவளவு வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல மறுக்கிறது. இந்நிலையில், நக்கலமுத்தான் பட்டிக்கு மீண்டும் தலைவராக வருபவருக்கு என்ன பாதுகாப்பு அளிக்கப் போகிறது என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்.

அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்து சட்டமன்றத்திற்குச் சென்று, ஆட்சி அதிகாரத்துடன் கூட்டணி அமைத்து, அது பலவீனமான அரசாகவும் இருந்தால், தலித்துகள் மீது வன்கொடுமைகள் நடைபெறாது; எனவே, தலித்துகள் அனைவரும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிட அணியமாக வேண்டும் என்று தலித் அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களை முடுக்கிவிடுகிறார்கள். ஆனால், எதார்த்தம் முற்றிலும் வேறாக இருப்பதையே நக்கலமுத்தான் பட்டி படுகொலை உணர்த்தியிருக்கிறது. சமூக ஜனநாயகம் நிலைநாட்டப்படாத வரை, அரசியல் ஜனநாயகமும் அரசியல் அதிகாரமும் போலியானதாகவே இருக்கும். ஜாதிநாயகத்தை அழித்தொழிக்க, நம் இன்னுயிரையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதே ஜக்கையன் நமக்கு விட்டுச் சென்றுள்ள பாடம்.
Pin It