துணைத் தளபதி மார்க்கோசின் ‘எதிர்ப்பும் எழுத்தும்' நூல் விமர்சனக் கருத்தரங்கு, அக்டோபர் 9 அன்று ஈரோட்டில் உள்ள பெரியார் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. குமாரபாளையம் ‘சமர்ப்பா கலைக் குழு'வின் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கிய இக்கருத்தரங்கம், இடதுசாரி சிந்தனைகளை விவாதிக்கும் ஓர் மாநாடாகவே நடந்தேறியது. முன்னூறுக்கும் மேற்பட்டோர் காலை முதல் இரவு பத்து மணிவரை அரங்கை விட்டுச் செல்லாமல், இறுதியில் ஜபடிஸ்டா புரட்சி பற்றிய ஆவணத் திரைப்படத்தைப் பார்த்துவிட்டே கலைந்து சென்றனர்.
Va.Geetha

முதல் அமர்வின் இறுதியாகப் பேசிய எழுத்தாளர் வ. கீதா, "மார்க்சியத்திற்கு முன்பிருந்த நீதி, சமத்துவம் போன்ற சோசலிச மரபுகள் பற்றி மார்க்கோஸ் பேசுகிறார். தாம் ஒரு போராளியாக மாறியது பற்றி வருத்தமே என மார்க்கோஸ் குறிப்பிடுகிறார். இருப்பினும், மரணத்தைவிட வாழ்வதுதான் புரட்சி என்கிறார். புரட்சி என்பதை ஆக்கரீதியாக விதை - செடி - மரம் என்றே மார்க்கோஸ் குறிப்பிடுகிறார். மார்க்கோசின் கவித்துவம் குறிப்பிடத்தக்கதோர் கூறாகும். அது வெறும் நடை மட்டுமல்ல; அது ஒரு மனநிலை, ஓர் உலகப் பார்வை. அறவியலையும் அரசியலையும் மார்க்கோசின் கவிமனம் ஒன்றிணைக்கிறது. மேலும், காரணகாரிய நிலையிலிருந்து மட்டுமே அரசியலைப் பார்க்க வேண்டியதில்லை என்கிறார் மார்க்கோஸ். அது மட்டுமல்ல, புரட்சிக்கு ஒரு முறைதான் உண்டு; ஒரு வழிதான் உண்டு என்பதை மார்க்கோஸ் ஏற்கவில்லை.

புதிய தாராளவாதம் பற்றிப் பேசும் போது, மார்க்கோசின் மனநிலை மார்க்சின் மனநிலை போன்றே இருக்கிறது. ‘மூலதனத்தில்' பணம் உருவாக்கும் சீரழிவு குறித்து மார்க்ஸ் எழுதும் வாசகங்கள், ஒரு தீர்க்கதரிசியின் வாசகங்களைப் போன்றிருக்கும். மார்க்சின் அந்தச் சீற்றத்தை, மார்க்கோசிடம் காண முடிகிறது. மார்கோசின் அரசியல், அடையாள அரசியலாக இருந்தாலும், அடையாள அரசியலுக்குள் அவர் தன்னை கரைத்துக் கொள்ளவில்லை. உலகத்தையே தனது அடையாள அரசியலின் பிரதிபிம்பமாகவும் அவர் காணவில்லை. அவரவர் தன்னிலை பற்றிப் புரிந்து, மற்றவர்களிடம் பேச முன்வரவேண்டும் எனும் மார்க்கோசின் ஆக்க ரீதியான அணுகுமுறை குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் ஒரு கீறலை ஏற்படுத்த மட்டுமே விரும்புகிறேன் எனத் தன்னடக்கத்தோடு மார்க்கோஸ் குறிப்பிடுவதை நாம் ஒரு எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும்'' என்றார்.

பிற்பகலில் நடந்த இரண்டாம் அமர்விற்கு கண. குறிஞ்சி தலைமை வகித்து உரை நிகழ்த்தினார் : "பழங்குடியினத்தைச் சேர்ந்தவருக்கும் ஸ்பானியருக்கும் பிறந்த "மெஸ்டிசோ'வான மார்க்கோஸ், 1983 இல் சியாபாசுக்கு தேசிய விடுதலைப் படை வீரராக வந்து சேர்கிறார். பழங்குடியினரைத் திரட்டி, அவர்களை அரசியல்மயமாக்கி, ஜபடிஸ்டா விடுதலை இயக்கத்தைக் கட்டுகிறார். இக்கள அனுபவத்தின் அடிப்படையில், குறிப்பிடத்தக்க வித்தியாசமான படிப்பினைகளை அவர் விடுதலை இயக்கங்களுக்கு வழங்குகிறார். போராட்டத்தின் லட்சியங்களைப் போலவே, வழிமுறையும் முக்கியமானவை என மார்க்கோஸ் குறிப்பிடுகிறார். ‘லட்சியம், வழிமுறையை நியாயப்படுத்தும் என நாங்கள் கருதவில்லை. லட்சியங்களுக்கான வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்கும்போது, லட்சியங்களைக் கட்டமைக்கிறோம்' என்கிறார்.

1962 இல் விடுதலை இறையியல் எனும் கருத்தாக்கத்தின் அடிப்படையில், சாவேல் ரூபாஸ் என்ற கிறித்துவப் பாதிரியார், மெக்சிக்கோவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆயுதந்தாங்கிய போராட்டத்தைத் தொடங்கினார். அம்மக்களுக்குச் சில உரிமைகளையும் பெற்றுத் தந்தார். ஆனால், கிழக்கு அய்ரோப்பிய வீழ்ச்சிக்குப் பிறகு, ஆயுதப் போராட்டத்தின் மீது நம்பிக்கை இழந்து, அதைக் கைவிட்டு விடுகிறார். அச்சமயத்தில் மார்க்கோஸ் ஆயுதப் போராட்டத்தின் தேவை குறித்து வலியுறுத்தி, பழங்குடி மக்களிடையே நம்பிக்கையை விதைக்கிறார். ஆனால், அந்த ஆயுதப் போராட்டத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்துகிறார். ஆயுதக் குழுக்கள் ஜனநாயகப்படுத்தப்படாவிட்டால், அது பாசிசமாக மாறும் என எச்சரிக்கிறார். மாறிவரும் உலகச் சூழலில், ஊடகங்களுக்கெதிரான வீரிய மிக்கப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்கிறார் மார்க்கோஸ்.

பல்வேறு நாட்டுப் போராளிகட்குக் கடிதம் எழுதுகிறார். புரட்சிகர சக்திகளின் அய்க்கியத்தை வலியுறுத்திக் கையொப்பம் பெறுகிறார்; விடுதலைப் போராட்டங்களுக்குப் பழங்குடி மக்கள் சார்பாக உதவிகள் வழங்குகிறார். நிதி, உலகமயமாகிவிட்டதால் புரட்சியையும் உலகமயமாக்க வேண்டும் என்கிறார். இப்போரில் பழங்குடிப் பெண்களை நேரடியாகப் பங்கேற்க வைக்கிறார். சமகாலத்தில் அதிகார நீக்கம் பற்றிய விழிப்புணர்வோடு விடுதலை இயக்கங்கள் செயலாற்ற வேண்டியதன் தேவையை மார்க்கோஸ் வலியுறுத்துகிறார்.''

‘தலித் முரசு' ஆசிரியர் புனித பாண்டியன், "சேகுவேரா பிறந்த நாளில் இக்கருத்தரங்கு நடைபெறுகிறது. இன்று, சாதி அடக்குமுறைக்கு எதிராக வெகுண்டெழுந்த மாவீரன் இம்மானுவேல் சேகரன் பிறந்த நாளுமாகும். ‘விடியல்' பதிப்பகத்தின் இந்நூலை ‘தலித் முரசு' சிறப்பாக அறிமுகப்படுத்தியது. ஏனெனில், விடியல் பதிப்பகத்தின் இப்படிப்பட்ட நூல்கள் மாற்று அரசியலுக்கான, மக்கள் அரசியலுக்கானப் படைக்கலன்களாகத் திகழ்கின்றன. சியாபாஸ் பழங்குடி மக்களின் போராட்டம், நமக்கு என்னவிதமான படிப்பினைகளை வழங்கியுள்ளது எனப் பொருத்திப் பார்க்க வேண்டியது அவசியம். எப்படி கறுப்பர்கள் போராட்டம், தலித்துகளுக்கு உத்வேகம் தந்ததோ, அது போல் மெக்சிகப் போராட்டம் நமக்கு நம்பிக்கையைத் தருகிறது.

ஆனால், இத்தகைய போராட்டங்களை அப்படியே பெயர்த்து இங்கு நட முடியாது. மண்ணுக்கேற்ற வகையில் அதில் மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியம். படிநிலைப்படுத்தப்பட்ட இந்தியச் சமுதாயத்தில், சாதி அமைப்பைத் தகர்க்காமல் எந்தப் புரட்சியையும் இங்கு ஏற்படுத்திவிட முடியாது. இடதுசாரி அமைப்புகளும் தலித் இயக்கங்களில் சிலவும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றன. சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பங்கேற்பது மட்டும் அரசியல் அதிகாரத்தைத் தந்துவிடாது. மக்களை, சமூகத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும் என அம்பேத்கர் குறிப்பிட்டார். ஆனால், சாதி அமைப்பு அதற்குத் தடையாக இருக்கிறது. அதைத் தகர்க்காமல், எந்த அதிகாரம் பெற்றும் பயனில்லை. அப்படிப்பட்ட போராட்டத்திற்கு, சிந்தனைப் புரட்சித் தேவை. அரசியல் அதிகாரம் என்பது ஒரு மாயை; சமூக ஜனநாயகம்தான் உடனடித் தேவை என அம்பேத்கர் வழிகாட்டினார். அதை அடிப்படையாகக் கொண்டு, உலகப் புரட்சிகர இயக்கங்களிலிருந்து படிப்பினைகளைப் பெற வேண்டும்'' என்றார்.

Thiyagu ‘தாமரை' இதழின் ஆசிரியர் சி. மகேந்திரன், "மெக்சிகோவிலுள்ள சியாபாஸ் மாநிலத்தில், பழங்குடி மக்களுக்கு நிலம் கிடைக்க வேண்டும் என மார்க்கோஸ் போராடினார். அதேபோல் இங்கு தலித்துகளும் நிலம் பெறுவதன் மூலமே, அவர்களது விடுதலை சாத்தியமாகும். சமத்துவத்திற்கான இயக்கங்கள் காலந்தோறும் மாறிவருகின்றன. ஒற்றைப் பாதை, ஒற்றைப் பார்வை போதாது. பன்முக அணுகுமுறை, இன்றைய காலத்தின் கட்டாயமாகும். அதேவேளை, மண்ணுக்கேற்ற முறையில் மார்க்சியம் வடித்தெடுக்கப்பட வேண்டும். உலகமயமாக்கலுக்கு எதிரான கலகக் குறியீடுதான் மார்க்கோஸ். கிராம்சியின் குடிமைச் சமூகம் எனும் கருத்தாக்கம், மார்க்கோசால் விரிவுபடுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. அவரது எழுத்துகள், போர்க்குணத்தை வளர்க்கிறது. மார்க்கோஸ் தனி மனிதரல்ல கூட்டு இதயம்'' என்றார்.

தமிழ் தமிழர் இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு: "மெக்சிகோவின் 17 மாநிலங்களில் சியாபாசும் ஒன்று. அங்கு 20 வகையான பழங்குடிகள் உள்ளனர். அவர்களது மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. இப்பழங்குடிகளைத்தான் அமைப்பாக்கி, மார்க்கோஸ் விடுதலைப் போரை முன்னெடுக்கிறார். சோசலிசம் செத்துவிட்டது என கொக்கரிக்கப்பட்ட காலகட்டத்தில், மார்க்கோஸ் சோசலிசப் பதாகையை உயர்த்திப் பிடித்தார். 1911 ஆம் ஆண்டில் சன்யாட்சென் வைத்த முழக்கங்களை, சீனப் புரட்சியின் போது மாவோ பயன்படுத்திக்கொண்டார். அதேபோல் ‘ஜபட்டா' எனும் பழங்குடித் தலைவனது முழக்கத்தை, மார்க்கோஸ் வழிமொழிந்து இயக்கங் கட்டினார்.

உலகில் எந்த இரண்டு புரட்சியும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொரு புரட்சியும் ஒவ்வொரு விதமாக இருக்கும். மார்க்கோஸ் அதைப் புரிந்து கொண்டு, உலகப் புரட்சிகர இயக்கங்களிலிருந்து படிப்பினைகளைக் கற்றார். வியட்நாம் மற்றும் தமிழீழப் போராட்டங்களில்தான் பெண்களின் பங்களிப்பு அதிகம். அதேபோல் மார்க்கோசின் ஜபடிஸ்டா விடுதலைப் படையிலும் பெண்களின் பங்களிப்பு அதிகம். இத்தகைய ராணுவம் சில சமயம் தோல்வி அடைகிறது. இந்த ராணுவத் தோல்வியைக் கூட, மார்க்கோஸ் அரசியல் வெற்றியாக மாற்றிக் காட்டுகிறார். அரசியலின் நீட்சிதான் போர் என்பதை அவர் புரிந்து வைத்திருக்கிறார். ஆயுதப் போராட்டம், வெகுமக்களின் எழுச்சி இரண்டின் சரியான - சமமான கலவைதான், மார்க்கோசின் போர் வழி. அதேசமயம் அரசியல் சட்டத்திலுள்ள உரிமைகளையும் பயன்படுத்திக் கொள்ளும் ராஜதந்திரம் மார்க்கோசிடம் காணப்படுகிறது.''

நூல் மொழிபெயர்ப்பாளர் எஸ். பாலச்சந்திரன் ஏற்புரையாற்றினார்: "உலகப் புரட்சிகர மாற்றத்திற்கான கையேடு அல்ல இப்புத்தகம். இது ஒரு நடைமுறைச் சித்தரிப்பு மட்டுமே. எனவே, மரபான சூத்திரங்களை இதில் பொருத்திப் பார்ப்பது சரியானதல்ல. புறவயமான சூழலை புறவயமான ஆய்வின் வழி அணுகுவதுதான் மார்க்சியம். அவ்வகையில் சியாபாஸ் இயக்கம், நமக்கு நிறைய படிப்பினைகளைத் தருகிறது. மற்ற உலகப் புரட்சிகர இயக்கங்களிலுள்ள சில முக்கிய பலவீனங்கள், ஜபடிஸ்டா விடுதலை இயக்கத்திற்கு இல்லை என்பதுடன், போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தும் தீவிரமும் இருக்கிறது.''

கருத்தரங்கிற்குப் பிறகு, கோபி தாய்த் தமிழ்ப் பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மெக்சிகோவில் தற்பொழுது நடைபெற்று வரும் ஜபடிஸ்டா புரட்சி பற்றிய ஆவணப் படம் திரையிடப்பட்டது. இக்கருத்தரங்கையொட்டி, மதுரை முத்துக்கிருஷ்ணன் தொகுத்த சேகுவேரா பற்றிய ‘வாழ்வின் நிமிடங்கள்' எனும் நிழற்படக் காட்சியும் நடைபெற்றது. ஏராளமான பார்வையாளர்கள் கருத்தரங்கிலும், நிழற்படக் காட்சியிலும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


நூல்: எதிர்ப்பும் எழுத்தும்
ஆசிரியர் : துணைத் தளபதி மார்க்கோஸ்

தமிழில் :
எஸ். பாலச்சந்திரன்
வெளியீடு : விடியல்
11, பெரியார் நகர்,
மசக்காளி பாளையம்
வடக்கு, கோவை
பக்கம் : 880
விலை : ரூ. 350


"எதிர்ப்பும் எழுத்தும் நூலின் மொழி பெயர்ப்பாளர் எஸ். பாலச்சந்திரனின் முன்னுரை, மெக்சிகோ நாட்டு வரலாற்றைச் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது. மெக்சிகோவிலுள்ள சியாபாஸ் மாநிலத்தில் தொடங்கிய ஜபடிஸ்டா விடுதலை இயக்கம் ஜனநாயகம், சுதந்திரம், நீதி எனும் முழக்கங்களோடு அப்பகுதியிலுள்ள பழங்குடி மக்களின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடி வருகிறது. மெக்சிகோவில் நடக்கும் நிகழ்வுக்கும், நம் நாட்டில் நடக்கும் நிகழ்வுக்கும் பல பொதுத் தன்மைகள் உள்ளன. எனவே, இந்நூல் நமக்குப் பல்வேறு படிப்பினைகளை வழங்குகிறது'' என காலை அமர்விற்குத் தலைமை வகித்த ஓடை துரையரசன் குறிப்பிட்டார்.

தமிழகக் குடியுரிமைப் பாதுகாப்பு நடுவத்தைச் சார்ந்த மா. செந்தில், "வறுமையினால் சாவு அதிகமானால், சாவுக்குப் பதிலாகக் கலகத்தை அறுவடை செய்'' என மார்க்கோஸ் குறிப்பிடுகிறார். மெக்சிகப் புரட்சியாளர் மார்க்கோஸ் தன் நாட்டின் வளங்கள் குறித்துத் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார். அந்நாட்டிலுள்ள மரம், மூலிகை, பட்டாம் பூச்சிஉட்பட அனைத்து இயற்கை வளங்களையும் பாதுகாப்பதற்கானப் போராட்டமாகத் தனது போராட்டத்தை மார்க்கோஸ் சித்தரிக்கிறார். இவரது எழுத்துகள், சேகுவேராவின் எழுத்துகளைவிட அடர்த்தி மிக்கவை'' என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் அமைப்பின் மய்யக்குழு உறுப்பினர் வீ. சங்கர், தனது கருத்துகளை ஒரு கட்டுரையாக எழுதி வந்து வாசித்தார்: "இந்நூல் தமிழகத்தில் ஒரு புதிய விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளது. சனவரி 1, 1994. வட அமெரிக்கத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மகிழ்ச்சியில் மெக்சிகோ ஆட்சியாளர்கள் திளைத்துக் கொண்டிருந்தபோது, மார்க்கோசின் ஜபடிஸ்டா விடுதலைப் படை சியாபாசின் முக்கிய நகரங்களைக் கைபற்றியது. மார்க்கோசைப் பற்றி அன்றுதான் உலகம் அறிந்து கொண்டது. லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்திலும் பொம்மை அரசுகளை நிறுவ முயன்ற அமெரிக்க வல்லரசு, மெக்சிகோவிலும் அதன் வல்லாண்மையை நிறுவியது. இதை எதிர்த்து மாவோவின் கெரில்லா போராட்ட முறை, சேகுவேராவின் சமூக மாற்றத்திற்கானப் போராட்டம் ஆகியவற்றால் புத்தெழுச்சிப் பெற்ற போராளிகளின் குழு, துணைத் தளபதி மார்க்கோசின் தலைமையில் மெக்சிகோவில் தனது போராட்டத்தைத் தொடர்கிறது. அரசு அதிகாரத்தைக் கைப்பற்றாமலேயேகூட, சமூகத்தை மாற்ற முடியும் எனும் மார்க்கோசின் கருத்து, அறிவியல் பூர்வமாக இல்லை.''

‘தமிழ் நேயம்' இதழாசிரியர் கோவை ஞானி, "மார்க்கோஸ், தன்னை ஒரு மார்க்சியவாதி என்று எங்கும் அழைத்துக் கொள்ளவில்லை. தம் மக்களுக்கு முகம் இல்லாததால், முகவரி இல்லாததால், தாம் முகமூடி அணிந்து கொண்டிருப்பதாகக் கூறுகிறார். இருப்பினும், மெக்சிகோவின் மய்ய அரசுக்கு எதிராக மார்க்கோஸ் எதுவும் சொல்லவில்லை. அதை எதிர்த்துப் போராடினார் என்றாலும், எல்லாரும் எல்லாம் பெற வேண்டும் என்பதே அவரது குறிக்கோளாக இருக்கிறது. இருப்பினும், மார்க்சிய சொல்லாடல்களை அவர் பயன்படுத்தவில்லை. இதனால் அவர் மார்க்சியர் அல்லர் என்றும் கூறிவிட முடியாது'' என்றார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மய்யக்குழு உறுப்பினர் கி. வெங்கட்ராமன், "மார்க்கோஸ், மாவோவைப் போல மரபான தொன்மங்களைத் தனது எழுத்தில் பெருமளவு பயன்படுத்துகிறார். பழங்குடி மக்களின் பெருமதிப்பு மிக்க வரலாற்றை மீட்டெடுக்க முயல்கிறார் அவர். தனது அமைப்பு ஒரு கட்சியல்ல என்கிறார். இருப்பினும், அவ்வமைப்பு கட்சியின் கூறுகள் பலவற்றைக் கொண்டிருக்கிறது. தாராளமயத்தை எதிர்த்து உலகெங்கும் நடைபெறும் போராட்டத்தை நான்காவது உலகப் போர் என்கிறார். சர்வதேசியம், தேசியத்தின் மூலம்தான் வெளிப்பட முடியும். மார்க்கோசிடம் அதை நாம் காண்கிறோம். மொழியை ஆயுதமாக வைத்து ஒரு புரட்சியை அவர் முன்னெடுக்கிறார்.

உலகமயத்திற்கு இன்றைக்கு முதல் பலியாவது தேசிய அரசுகள்தான். தற்போது முதலாளிகளே நேரடியாக அரசியலில் குதித்து விட்டார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் 22 உறுப்பினர்கள் முதலாளிகள். வரலாற்றில் வர்க்கக்கூறு, இனக்கூறு என இரண்டு கூறுகள் உள்ளன. இனக்கூறு என்பது குறித்து மார்க்சியர்கள் உரிய கவனம் செலுத்தவில்லை. வரலாற்றின் ஓட்டத்தில் இனக்கூறு என்பது, சில சமயம் வர்க்கக்கூறுக்கு இணையான அழுத்தத்தைக் கொண்டுள்ளது. அத்தருணங்களில் மொழி என்பது ஓர் உற்பத்தி சக்தியாகவே உருக்கொள்கிறது என்பதை மார்க்கோசிடம் காண்கிறோம். மார்க்கோசை மதிப்பிடுவதைவிட, அவரிடமிருந்து படிப்பினைகள் பெறுவதே முக்கியமானது'' என்றார்.
Pin It