கோவையில் அண்ணாமலை அரங்கில் மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பு திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஃபாரூக் மதவெறியர்களால் படுகொலை செய்யப் பட்டார். இதைக் கண்டித்து மனிதநேய அமைப்புகள் மற்றும் திராவிட அமைப்புகள் பல்வேறு போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்தனர். ஃபாரூக் படுகொலையைக் கண்டித்து ஆண்டுதோறும் நினைவேந்தல் கூட்டங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது.
நிகழ்வின் தொடக்கத்தில் இணையதள பொறுப்பாளர் விஜய்குமார் சமூக ஊடகங்களில் மதவெறி பற்றியும், கழகப் பகுத்தறிவு பரப்புரைக்கு சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் டுவிட்டர் பயன்பாடு பற்றியும் பயிற்சி அளித்தார்.
இந்தக் கூட்டத்தில் ‘மதங்களை மறப்போம், மனிதத்தை விதைப்போம்' என தலைவர்கள் பேசினர். அதேபோல, மதங்களால் நடைபெறும் படு கொலைகள் தடுக்கப்படவேண்டும், மத அடிப்படை வாதங்கள் மாற வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது. திருப்பூர் முகில்ராசு, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, மேட்டுப்பாளையம் இராமச் சந்திரன் ஆகியோர் தொடக்கவுரை ஆற்றினர்.
சிறப்பு விருந்தினர்களாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் துணைத் தலைவர் சுந்தரவள்ளி, எழுத்தாளர் பீர் முஹம்மது, எழுத்தாளர் பாமரன் மற்றும் நிகழ்ச்சி பொறுப்பாளர் நேரு தாஸ் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.
எழுத்தாளர் பீர் முஹம்மது “இஸ்லாம் அறிவியல் மதமா?” என்ற தலைப்பில் அறிவியலுக்கு எதிரான இஸ்லாம் மதக் கோட்பாடுகளை குரான் வசனங்களை மேற்கோள்காட்டிப் பேசினார்.
தொடர்ந்து எழுத்தாளர் பாமரன் தனது உரையில் அனைத்து மதங்களும் மனித சமுதாய நாகரீக வாழ்வில் வன்முறையை மட்டுமே தருகிறது என்றும் மக்களின் அமைதி வாழ்விற்கு மதமற்ற வாழ்வே சிறந்தது என்பதையும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து கழகத் தோழர்கள் அனைவரும் தங்களது இறப்பில் எந்த மத மூடச் சடங்குகளும் நடத்தக் கூடாது என்ற மரண சாசனத்தை எழுதி அறிவித்தனர். மேடையில் முகம்மது அலி ஜின்னா தன்னுடைய மரண சாசனத்தை அறிவித்தார்.
கருத்தரங்க மேடையிலேயே சுயமரியாதை திருமணம் நடந்தது. இராவண கோபால் - கோமதி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவை கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்தி வைத்தார். இணையர்கள் வாழ்க்கை இணையேற்பு உறுதிமொழி எடுத்து மாலை மாற்றிக் கொண்டனர். தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் மணமக்களுக்கு பெரியார் படம் பரிசளிக்கப்பட்டது.
தொடர்ந்து பேராசிரியர் சுந்தரவள்ளி, “ஆர்.எஸ்.எஸ்.சின் தேசப்பக்தி மக்களுக்கானதா” என்ற தலைப்பில் உரையாற்றினார். பாசிசத்தின் பத்து கொள்கைகளை எடுத்துக்கூறி அதை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு எப்படியெல்லாம் பொருந்துகிறது என்பதை விளக்கினார்
இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி “ஏன் நாம் இவர்களைத் தோற்கடிக்க வேண்டும்?” என்று நிறைவுரையாற்றினார். தன்னுடைய நீண்ட உரையில் தந்தை பெரியார் யாருக்கு இஸ்லாம் மதத்தை பரிந்துரைத்தார் என்றும் அது சுயமரி யாதைகாரர்களுக்கு, கடவுள் மறுப்பாளர்களுக்கு, பெண்ணுரிமை போராளிகளுக்கு அல்ல என்றும் தெளிவுபடுத்தினார். மதப்பற்றை விட்டுவிடாமல் மத நம்பிக்கைகளோடு வாழ விரும்பும் மக்களுக்குத்தான் இன இழிவு நீங்க இஸ்லாம் இனிய மருந்து என்று பரிந்துரைத்தார் என்றும் ஃபாரூக் படுகொலைக்குப் பின் கழகத்தின் கொள்கையில் அனைத்து மதங் களையும் விமர்சிக்கும் மாற்றம் உருவாகியுள்ளதையும் எடுத்துரைத்தார்.
தொடர்ச்சியாக இந்த தேர்தலில் தமிழர் நலனுக்கெதிராய் உள்ள பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வீழ்த்தப்படவேண்டிய காரணங்களை விளக்கினார். கழகத்தின் தலைமைக்குழு தீர்மானங்களை விளக்கி யாரை ஆதரிக்க வேண்டும் என்பதைவிட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற பெரியாரிய தத்துவத்தை கடைப் பிடித்து திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டிய அவசியத்தை விளக்கினார். நிகழ்ச்சி நடந்த 23.03.2019 அன்று பகத்சிங், சுகதேவ், இராஜகுரு ஆகியோர் நினைவு நாளாகும். அவர்களின் தியாகங்களை எடுத்துக் கூறி அவர்களை ஏற்றுக் கொண்டுள்ள சி.பி.எம். கட்சியை கோவையில் வெற்றி பெறச் செய்யுமாறு வேண்டிக் கொண்டார்.
இறுதியாக வெங்கட் நன்றியுரை கூற நிகழ்ச்சி முடிவடைந்தது. நிகழ்வில் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஆனைமலை தோழர்கள் கலந்துகொண்டனர்.
ஃபாரூக் துணைவியார் குடும்பத்தினருக்கு கழகத் தலைவரின் அன்பு வேண்டுகோள்
இந்நிகழ்வில் அரியலூர் மாவட்டம் கவரபாளையம் சரோஜா-இராமகிருஷ்ணன் ஆகியோரின் மகன் இராவண கோபால் - ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலட்சுமி-நாச்சிமுத்து ஆகியோரின் மகள் கோமதி வாழ்க்கை இணையேற்பு விழா கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்தி வைத்தார். திருமணத்தை தலைமையேற்று நடத்திய கழகத் தலைவர் "இந்தத் திருமணத்தில் ஒருவர் கணவனை இழந்தவர், ஒருவர் மனைவியைப் பிரிந்தவர். வாழ்க்கை இணையேற்கும் இரண்டு திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார். மேலும் கோமதியின் மகன், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் பிரபாகரன்தான் இந்த மறுமணத்திற்கு முன் முயற்சியை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடைபெறும் இத்திருமணத்திற்கு வந்துள்ள ஹமீது (ஃபாரூக் தந்தை), இப்ராஹீம் (ரஷீதா தந்தை), ஷாஜகான் (ரஷீதா சகோதரர்) ஆகியோர் இந்தத் திருமணத்தை எண்ணிப் பார்த்து ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அரங்கமே கரவொலி எழுப்பி வரவேற்றது. ஃபாரூக் இணையர் ரஷீதா தனது இரு குழந்தைகளுடன் நிகழ்விற்கு வந்திருந்தார்.