ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ளது கூடுதுறை. இங்குள்ள சங்கமேவரர் கோயில் பரிகாரங்களுக்குப் புகழ் பெற்றது. பார்ப்பனர், பார்ப்பனரல்லாதோர் என இரு இனத்தாருமே அங்கு பல வருடங்களாக பரிகாரங்களை செய்து வந்தனர். இந்நிலையில், பார்ப்பனர் தவிர வேறு யாரும் அங்கு பரிகாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று அப்பகுதி பார்ப்பனர்கள் அரசுக்கு (மாவட்ட ஆட்சித் தலைவர்) கோரிக்கை வைத்தனர். இதனை அலசி ஆராய்ந்த அரசு மிகச் சரியான, பாராட்டத்தக்க பின்வரும் முடிவை எடுத்தது.

5.5.2005 அன்று கோவை - பேரூரைச் சார்ந்த சிவசண்முக சுந்தர சிவாச்சாரியார் என்பவரை தேர்வாளராக நியமித்தது. கூடுதுறையிலுள்ள பார்ப்பனர் மற்றும் பார்ப்பனரல்லாத புரோகிதர்கள் அனைவருக்கும் புரோகித மந்திரத்தில் தேர்வை நடத்தியது. இதில் 49 பேர் கலந்து கொண்டனர். 33 பேர் தேர்வு பெற்றனர். இதில் 24 பேர் பார்ப்பனர். ஆனால், முதல் மதிப்பெண் பெற்றவர் பார்ப்பனரல்லாதவர். மேலும் தேர்வு எழுதிய 5 பார்ப்பனர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு பெற்றவர்களுக்கு, சாதிப் பாகுபாடின்றி அடையாள அட்டை கொடுத்து பரிகாரம் செய்ய அனுமதியளித்தது. இவ்வாறு அனைவருக்கும் பொதுவாக தேர்வு வைத்து அதில் தகுதியுள்ளோரைத் தேர்ந்தெடுத்த அரசின் செயல் பாராட்டத்தக்கது. இதே நடைமுறையை அனைத்து சாதியினரையும் கோயிலில் அர்ச்சகர் ஆக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பின்பற்ற வேண்டும். கோயிலில் அர்ச்சகர் ஆவதற்கு அதற்கு தொடர்புடையவற்றில் தேர்வு வைத்து, தேர்வு பெறும் கடவுள் நம்பிக்கையுடைய பார்ப்பனரல்லாதவர்களையும் நியமிக்க வேண்டும். இதன் மூலம், இந்துக்கள் என்று சொல்லப்படுகிற பார்ப்பனரல்லாத பெரும்பான்மை மக்களிடமிருந்தும் பிரதிநிதிகள் அர்ச்சகர்களாக முடியும். இதனால் கர்ப்ப கிரகத்துக்குள் நிலவும் தீண்டாமை ஒழியும்.

இப்படி செய்வதற்கு எந்தவித ஆகமங்களும் தடையாக இல்லை என்பதை நீதிபதி மகராஜன் குழு தெளிவுபடுத்தியுள்ளது.

கேரளாவில், ஈழவ சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் சில வருடங்களுக்கு முன் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், பார்ப்பனரல்லாத ஒருவரை அர்ச்சகராக நியமித்தது; இதை நீதிமன்றம் தடுக்க முடியாது என 2002 ஆம் ஆண்டு தீர்ப்பு கூறியது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, மதமாற்றத் தடைச் சட்டத்தைத் திரும்பப் பெற்றது. கொலைவெறி, பாலியல் வெறி, காஞ்சிமட சங்கராச்சாரிகளை கைது செய்தது, ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் தொழிற் கல்வியில் பங்கேற்கும் வகையில் நுழைவுத் தேர்வை நீக்கியது ஆகியவற்றில் துணிச்சலாக ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக முடிவை எடுத்த தமிழ்நாடு அரசு இதையும் செய்ய வேண்டும் என்பது நமது நியாயமான எதிர்பார்ப்பு.

Pin It