திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ''பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை'' தமிழகமெங்கும் நடத்த திட்டமிடப்பட்டு முதல் மாநாடு ஈரோடு, அடுத்ததாக சென்னையில் நடைபெற்றதைத் தொடர்ந்து சேலத்தில் நடத்த அறிவிக்கப்பட்டு கழகத் தோழர்களால் மாநாட்டு பணிகள் துவங்கப்பட்டன.
''மக்களைப் பிரிக்கும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கத்தில் தபோல்கர் - பன்சாரே - கல்புர்கி நினைவரங்கத்தில் 19.12.2015 சனிக்கிழமை காலை 9.30 மணி அளவில் துவங்கியது.
மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவினரின் ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவுப் பாடல்களுடன் மாநாடு ஆரம்ப மானது. குமரப்பா தபேலா வாசிக்க, சீனி தவிலும், காளியப்பன் உறுமியும் வாசித்தனர். கோவிந்தராசு, முத்துகுமார், இசைமதி, அருள்மொழி ஆகியோர் சாதி ஒழிப்பு, பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினர்.
மாநாட்டின் முதல் அமர்வாக கருத்தரங்கம் நடைபெற்றது.''தொடரும் பார்ப்பன வல்லாதிக்கம்'' எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கை தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் நெறிப்படுத்தினார்.
“தொடரும் பார்ப்பன வல்லாதிக்கம்'' ........
‘ஊடகத்தில்' எனும் தலைப்பில் கழக பொதுச் செயலாளர் விடுதலை க.இராசேந்திரன், ‘மதத்தில்' எனும் தலைப்பில் கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், ‘கலை இலக்கியத்தில்' எனும் தலைப்பில் பாவேந்தர் இலக்கியப் பேரவை தோழர் தமிழேந்தி, ‘அரசியலில்' எனும் தலைப்பில் ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர் வந்தியத்தேவன், ‘அறிவியலில்' எனும் தலைப்பில் அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் ஆகியோர் தங்கள் கருத்துரைகளை வழங்கினார்கள்.
நெறிப்படுத்திய தோழர் ச.தமிழ்ச்செல்வன் மதவாதத்துக்கு எதிராக நாம் கைக்கொள்ளவேண்டிய வியூகங்களைப் பற்றி விரிவாகப் பேசினார். கருத்தரங்கின் நிறைவில் ஏற்காடு திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் கார்த்திக் நன்றியுரை யாற்றினார்.
கருத்தரங்கம் நிறைவடைந்த பின் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. கலந்து கொண்ட தோழர்களுக்கு மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது. உணவு இடைவேளைக்குப் பிறகு கழகத் தோழர் இசைமதி பாடலுடன் நண்பகல் அமர்வு ஆரம்பமானது. திருச்சி ‘விரட்டு' வீதி நாடகக் குழுவினரின் வீதி நாடகம் நடைபெற்றது. வீதி நாடகம் முடிவுற்றபின் மாநாட்டின் இரண்டாம் அமர்வாக பட்டிமன்றம் ஆரம்பமாகியது.
“பா.ஜ.க. ஆட்சியில் பெரிதும் வளர்வது'', “பார்ப்பனீயமே! பெரு முதலாளிகளே!” எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத் திற்கு செந்தலை ந.கவுதமன் நடுவராக இருந்தார்.
‘பார்ப்பனீயமே' எனும் தலைப்பில் த.பெ.தி.க. பரப்புரை துணைச்செயலாளர் சீனி.விடுதலை அரசு, கழகத் தோழர் அ.கோகுலக் கண்ணன் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். ‘பெருமுதலாளிகளே’ எனும் தலைப்பில் முனைவர் பன்னீர் செல்வி, வழக்கறிஞர் இரா.திருமூர்த்தி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். வாதங்களை கேட்ட நடுவர் செந்தலை ந.கவுதமன் பட்டிமன்ற நிறைவாக “பா.ஜ.க. ஆட்சியில் பெரிதும் வளர்வது பார்ப்பனீயமே!'' என தீர்ப்பளித்தார்.
நடுவர் செந்தலை கவுதமன் மாநாடு நடக்கும் பிப்.19ஆம் நாள் பெரியார், தியாகராயர் நகரில் இறுதி சொற்பொழிவாற்றிய நாள் என்பதை நினைவுகூர்ந்து சேலம் நகரத்துக்கும் பெரியார் இயக்கத்துக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்புகளை பட்டியலிட்டு, பெரியார் இயக்கம் சமுதாய மாற்றத்துக்கு ஆற்றிய மகத்தான பங்களிப்புகளை வரலாற்றுபூர்வமாக எடுத்துரைத் தார்.
பட்டிமன்றத்தின் இடையிடையேயும், தோழர்களின் வாதங்களுக்கு நடுவிலும் செந்தலை நா.கவுதன், ஏராளமான திராவிடர் இயக்க வரலாற்றுச் செய்திகள், நிகழ்ச்சிகள், பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த தகவல்களை வழங்கினார். கூடியிருந்த பெருந்திரளான தோழர்களும், பொதுமக்களும் அந்த செய்திகளை கூர்ந்து கவனித்து உள் வாங்கும்படியாக தோழரின் கருத்துக்கள் சிறப்பாக விளங்கின. சேலம் இளம்பிள்ளை கழகத் தோழர் சி.தம்பிதுரை பட்டிமன்றத்தின் இறுதியில் நன்றியுரையாற்றினார்.
பட்டிமன்ற நிகழ்வுடன் நேரு கலையரங்கத்தில் தபோல்கர் - பன்சாரே - கல்புர்கி நினைவரங்கத்தில் காலை முதல் மாலை வரையில் நடைபெற்ற உள் அரங்கு மாநாடு நிறைவடைந்தது.
மாலை 5-30 மணிக்கு திறந்தவெளி பொது மாநாடு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள போ° மைதானத்தில் மதுரை 'வேர்கள்' கலைக் குழுவினரின் பறை முழக்கத்துடன் ஆரம்பமானது. நிகழ்சசி ஆரம்பிக்கும் நிலையிலேயே மாநாட்டு திடலில் மக்கள் கூட்டம் பெருமளவு சேரத் தொடங்கியது. மாலை 6 மணியளவில் இளவரசன் - கோகுல்ராஜ் நினைவரங்கில் பொது மாநாடு ஆரம்பமானது.
மாநாட்டிற்கு திராவிடர் விடுதலைக் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் தலைமை வகித்தார். கழகத்தின் சேலம் கிழக்கு மாவட்டப் பொருளாளர் அ.பெருமாள் வரவேற்புரை நிகழ்த்தினார். சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் இரா.டேவிட், சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சி.கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் கழக பொதுச்செயலாளர் விடுதலை க. இராசேந்திரன், தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் மீ.த.பாண்டியன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் இரா.அதியமான், மனித நேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினருமான ஏ. அஸ்லம்பாஷா ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாநாட்டு நிறைவுரை வழங்கினார். கழகத் தலைவரின் உரையுடன் முழுநாள் மாநாடு மிக சிறப்பாக நிறைவடைந்தது.