தோழர் பெரியார்தாசன் இவ்வாரம் வெளிவந்த இசுலாமிய இதழ்கள் அனைத்திலும் கதாநாயகனாகிவிட்டார்.  கடந்த மார்ச் 12 ஆம் தேதி அரபு நாடுகளில் ஒன்றான ரியாத்தில், அவர் இசுலாத்தைத் தழுவியதாக அறிவித்ததே இதற்குக் காரணம்.  பெரியார்தாசனின் இந்த முடிவுகள் எல்லாம், நமக்கு வியப்பை ஏற்படுத்தவில்லை. பெரியார் இயக்கத்தினர், தோழர் பெரியார்தாசனை நன்றாகவே புரிந்தவர்கள் தான். பெரியார் சிந்தனைப் பள்ளியைச் சார்ந்த அவருக்கு, தமிழகம் முழுதும் பெரியார் இயக்கத்துடன் பல ஆண்டுகளாகத் தொடர்பு உண்டு என்பதும், எல்லோரிடமும் இனிமையாகவும், தோழமையாகவும் பழகக் கூடியவர் என்பதும் எல்லோருக்குமே தெரியும். பகைமை பாராட்டாத நண்பர். மக்களிடம் பெரியார் கருத்துகளைப் பரப்புவதில் தன்னுடைய பேச்சுத் திறமையை வலிமையாகப் பயன்படுத்தியதால், பெரியார் இயக்கத் தோழர்கள் அவரை விரும்பி கூட்டங்களுக்கு அழைத்தார்கள். இப்போது பெரியார் சிந்தனைப் பள்ளியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, ஒரு மதவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதால், பெரியார் இயக்கத் தோழர்கள் சிலர் நம்முடைய பெரியார்தாசன், இப்படிப் போய்விட்டாரே என்று ஆதங்கப்பட்டார்கள். அவரது கடந்த கால வரலாறுகளை உன்னிப்பாகக் கவனித்தவர்களுக்கு, இதில் வியப்பு ஏதும் இருக்காது என்பது தான் நமது கருத்து.

அவர் எப்போது பெரியார்தாசன் ஆனார் என்ற கேள்விக்கு அவரே இப்போது ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் விளக்கமளித்துள்ளார். பச்சையப்பன் கல்லூரியில் அவர் மாணவராக இருந்த காலத்தில், பெரியார் பேச வந்தபோது, ஒரு கவிதையை எழுதிப் படிக்க விரும்பியிருக்கிறார். அப்போது அவரது உண்மைப் பெயர் சேஷாசலம். பட்டை சந்தனம், குங்குமப் பொட்டு என்று பக்தி பழமாகக் காட்சியளித்தவர். அந்தக் கவிதையை தனது பேராசிரியர் ஒருவரிடம் அவர் படித்துக் காட்டியபோது, பேராசிரியரோ மாணவர் பெயர் ‘சேஷாசலம்’ என்று இருக்கிறதே என்று தயங்கியிருக்கிறார். உடனே, அடுத்த விநாடியே, தன்னுடைய கவிதையை பெரியாருக்கு முன் படிக்க வேண்டும் என்ற துடிப்பில், பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டதாக அவரே குறிப்பிட்டுள்ளார்.

“அன்று பெரியார்தாசன் என்று பெயரிட்டபோது, என் தலையில் பட்டை, சந்தனம், குங்குமப் பொட்டு என்று பக்திப்பழம் போன்று காட்சி தந்தேன்” என்று அந்தப் பேட்டியில் (மக்கள் உரிமை, இதழ்,மார்ச். 19) அவர் கூறுகிறார். ஆக, பெரியார் கொள்கையை ஏற்காத காலத்திலே, தனது கவிதையை பெரியார் முன் படிக்கும் ஆர்வத்துக்காக ‘பெரியார்தாசனாக’ பெயர் மாற்றிக் கொண்டவர் தான் பெரியார்தாசன்.

சென்னை பெரியார் திடலில் 1980-களில் நடந்த பயிற்சி முகாமில் மாணவராக பங்கேற்று, திராவிடர் கழகத்தின் பிரச்சாரகராக மேடை ஏறிய பெரியார்தாசன், படிப்படியாக தனது பேச்சாற்றலை வளர்த்து, மக்கள் செல்வாக்கைப் பெற்ற நிலையில், திராவிடர் கழகத்துடன் கருத்து வேறுபாடு எழுந்தது. செஞ்சட்டை பஞ்சாட்சரம் நடத்தி வந்த பெரியார் சமதர்மம் இயக்கத்தில் இணைந்து செஞ்சட்டைப் போட்டு, ‘சமதர்மம்’ பேசலானார்.

அதன் பிறகு, தலித் இயக்கங்களோடு நெருங்கி, அம்பேத்கரின் சாதி ஒழிப்பு, இந்து மத எதிர்ப்புக் கருத்துகளைப் பரப்புவதில் தீவிரம் காட்டினார். அதே காலகட்டத்தில் தன்னை புத்த மார்க்கத்தில் இணைத்துக் கொண்டு தனது பெயரை சித்தார்த்தன் என்று மாற்றிக் கொண்டார். சில காலம் சித்தார்த்தன் என்ற பெயரோடு கூட்டங்களில் பேசிய அவர், மீண்டும், தனது பெயரை பெரியார்தாசன் என்றே போடுமாறும், சித்தார்த்தனை தவிர்த்து விடுங்கள் என்று வேண்டுகோள் வைத்து, பெரியார்தாசன் ஆனார்.

பெரியார்தாசனை அழைத்துக் கூட்டங்களை நடத்துவதற்கு பெரியார் இயக்கத் தோழர்கள் மிகவும் விருப்பமாகவே இருந்தாலும், குறைந்த செலவில் பரப்புரை நடத்தும் தோழர்களின் பொதுக் கூட்ட வரவு செலவுகளுக்குள் பெரியார்தாசனை அடக்க முடியாத நிலை வந்ததால், அவரை வைத்து கூட்டங்கள் நடத்துவது குறைந்தது.

அது மட்டுமல்ல, அனைவரிடமும் அன்பு பாராட்டும் அவர், மறுக்காமல் ஒரே தேதியை ஒன்றுக்கு மேற்பட்ட ஊர்களுக்கு தந்துவிடும் போது, எந்த ஊருக்கு அவர் வரப்போகிறார் என்ற குழப்பத்திலும் தோழர்கள் தடுமாறும் நிலை வந்துவிட்டது. இந்த நிலையில் தமிழ்ச் சான்றோர் பேரவையில் தன்னை இணைத்துக் கொண்டு தமிழகம் முழுதும் ஒரு சுற்று வந்தார். அப்போது ஆதி சங்கரர் தத்துவம், மிகவும் முற்போக்கானது; புரட்சிகரமானது என்று ‘நந்தன்’  பத்திரிகையில் எழுதினார்.

ஒரு கட்டத்தில் பேரவைக் கூட்டங்களும் மெல்ல மெல்ல குறைந்த நிலையில் தன்னம்பிக்கைக்கான கருத்தரங்குகளை ஒரு வர்த்தக நிறுவனத்துக்காக பேசக் கிளம்பினார். தன்னம்பிக்கைப் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டினார். அப்படித் தன்னம்பிக்கையை விதைத்து வரும்போது, எந்த நிறம் கொண்ட ‘கல்லை’ நகைகள் வழியாக அணிந்தால், ‘ராசி’ கிடைக்கும் என்று தொலைக்காட்சியில் ‘ராசிக் கல்’ பரப்புரையில் இறங்கினார். பெரியார் தொண்டர்கள், “என்ன, இப்படி, நமது பெரியார் தாசனா?” என்று கேட்டார்கள். ராஜராஜன் என்ற தன்னுடைய நண்பர் ஒருவருக்காக, அப்படி தொலைக்காட்சியில் பேச நேரிட்டது என்றும், அதற்காக என்னை பெரியார் இயக்கம் புறக்கணிக்க வேண்டுமா? என்று வேதனைப்பட்டதோடு, சென்னையில் நடந்த ஒரு கூட்டத்திலும் இதை வெளிப்படையாகவே பேசினார்.

அதன் பிறகு, பெரியாரும், சிங்காரவேலரும் சேர்ந்து தொடங்கிய சுயமரியாதை - சமதர்ம இயக்கத்தை மீண்டும் தொடங்கிவிட்டதாகவும், தான் அதன் பொது  செயலாளர் என்றும் கூறி வந்தார். பதவி ஓய்வுக்குப் பிறகு மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான ஆலோசனை மய்யங்களைத் தொடங்கி நடத்தி வந்தவர், இப்போது இஸ்லாத்தைத் தழுவிவிட்டதாக அறிவித்திருக்கிறார். ஆக, சேஷாச்சலம் - பெரியார் தாசன் - கவுதமன் - மீண்டும் பெரியார் தாசன் - என்ற அவரது பரிணாம "வளர்ச்சி”, ‘அப்துல்லாஹ்’ என்ற கட்டத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. இப்போது இந்த முடிவுக்கு வந்ததற்கான காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார்.

அவரோடு 11வது வகுப்பு வரை படித்த பள்ளித் தோழர் சிராஜ்தீன் என்பவரை, 2000 ஆம் ஆண்டில் ஓர் இரவு அவர் சந்தித்துப் பேசினாராம். சிராஜ்தீன் எழுப்பிய கேள்விகள் அவரை அன்று இரவு முழுதும் தூக்கம் வராமல் செய்து விட்டது என்கிறார். அப்படி,பெரியார்தாசனை தூக்கம் வராமல் செய்துவிட்ட ‘பொருள் பொதிந்த’ கேள்வியையும் பெரியார் தாசன் கூறியிருக்கிறார்.  “நீ இறை மறுப்பாளனாக பிறக்கவில்லை. இறக்கும்போது இறை மறுப்பாளனாக இறக்கக் கூடாது” என்ற சிராஜ்தீன் சிந்தனைதான், பெரியார்தாசனின் தூக்கத்தைக் கலைத்து விட்டதாம். அந்த இரவு - அந்த கேள்விதான் அவரை இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கைக்குக் கொண்டு வந்த மகத்தான இரவு ஆகும். அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு முதல் கடவுள் மறுப்புப் பிரச்சாரத்தை முற்றாகத் தாம் நிறுத்திக் கொண்டுவிட்டதாக பெரியார் தாசன் கூறுகிறார். ஆனாலும் ஆறு ஆண்டுகள் கழித்து 2010 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி தான், அந்த ‘ரகசியத்தை’ நாட்டுக்கு வெளியிட்டிருக்கிறார். ஆக, பெரியாரிஸ்டாக இருந்து அவர் இசுலாமைத் தழுவவில்லை. அவர் கடவுள் மறுப்பை விட்டு 6 ஆண்டுகளாகிவிட்டது. கடவுள் நம்பிக்கையாளராக மாறிய பிறகே இசுலாத்தை தழுவியிருக்கிறார்.

“இழிவு ஒழிய இசுலாமே நன்மருந்து” என்று பெரியாரே கூறியிருப்பதாக ஒரு பேட்டியில் பெரியார் தாசன் கூறியிருப்பதால்,நாம், சில விளக்கங்களைக் கூற வேண்டியிருக்கிறது. இந்த விளக்கங்கள்கூட, பெரியார்தாசனுக்கு அல்ல. காரணம்,தீண்டாமையிலிருந்து விடுபடுவதற்கு மட்டுமே இசுலாத்திற்கு மாறலாம் என்று பெரியார் கூறியதும், அதுவும், அந்த ஆலோசனை சுயமரியாதை இயக்கத்தினருக்கு அல்ல. தீண்டாமையால் பாதிக்கப்படும் வெகுமக்களுக்குத் தான்  என்பதும், பெரியார் தாசன் அறிந்தவர் தான்! (பெரியாரின் அந்தக் கட்டுரை, இதே இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது) இறைவன் இருக்கிறான் என்ற முடிவுக்கு வந்துவிட்ட முன்னாள் பெரியார் தாசன், இனி டார்வின் பரிணாம வளர்ச்சி மற்றும் உயிரியல் கொள்கையை மறுக்க வேண்டும். மார்க்சின் பொருள் முதல்வாதக் கோட்பாட்டைப் பொய் என்று கூற வேண்டும். பெரியாரின் கடவுள் மறுப்பு அர்த்தமற்றது என்றெல்லாம் பேச வேண்டும்.

“1400 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு எழுத்து, ஒரு புள்ளி, ஒரு கமா கூட மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே வேதம், இறைவனால் நேரடியாக அருளப்பட்ட வேதம், திருக்குர்ரான் தான்” என்று அவர் பேட்டியில் கூறியுள்ளதை நியாயப்படுத்தி விளக்க வேண்டும்.

இப்படி எல்லாம் பேச வேண்டிய சுமையை நமது முன்னாள் தோழர் தமது தோள் மீது சுமக்க வந்திருக்கிறாரே என்ற கவலைதான், நமக்கு! 1400 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட ஒரு கருத்தை, அதை இறைவன், நேரடியாக சொல்லிய ஒரே காரணத்துக்காக 1400ஆண்டுகால இடைவெளியில் சமூகத்தில் நடந்த மாற்றங்கள், உலகில் நடந்த திருப்பங்கள், விஞ்ஞான வளர்ச்சி, அத்தனைகளையும் ஓரமாக தூக்கிக் கடாசி எறிந்து விட்டு, பெரியார் தாசன் எப்படித்தான், நியாயப்படுத்தப் போகிறாரோ தெரியவில்லை. ஆனாலும் அவர் சமாளிப்பார். இனி மேல் அவர் மதக் கூட்டங்களிலே மட்டும் தானே பேச வேண்டியிருக்கும்? அதனால் பிரச்சினையில்லை. அவர்களிடம் கைதட்டல் வாங்கும் திறமை அவருக்குத்தான் நன்றாக உண்டே! என்ன இருந்தாலும் நல்ல பேச்சாளர் அல்லவா?  ஆனாலும், நமக்கு ஒரு வருத்தம் உண்டு. தனது பிரச்சாரத்தால் பல்லாயிரக்கணக்கான மக்களை பெரியார் கொள்கைக்குத் திருப்பியதாக கூறும் பெரியார் தாசன், இப்போது பெரியார் கொள்கைக்கு விடைக் கொடுத்துத் திரும்பும்போது ‘ஒற்றை’ தனி மனிதராகத் தானே போக வேண்டியிருக்கிறது என்ற அந்த ஒரு வருத்தம் தான்! வேறு ஒன்றுமில்லை!

- பெரியாரிஸ்ட்

Pin It