இந்தியாவிலேயே ஜாதிய மோதல்கள் நடப்பதில் இரண்டாவது இடத்துக்கு தமிழகம் வந்து விட்டது. இது தமிழகத்துக்கே அவமானம். தேசிய குற்றப் பதிவு ஆவணம் (நேஷனல் கிரைம் ரெக்கார்ட்ஸ் பீரோ) 2015ஆம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி ஜாதிய மோதல்கள் நடப்பதில் முதலிடத்தில் உ.பி.யும், இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும், மூன்றாவது இடத்தில் பீகாரும், நான்காவது இடத்தில் ஜார்கண்ட் மாநிலமும் இடம் பிடித்துள்ளன. 2015இல் தமிழகத்தில் 426 ஜாதிய மோதல்கள் நடந்துள்ளன. உயிரிழந்தோர் 578 பேர். உ.பி.யில் நடந்த 724 மோதல்களில் உயிரிழந்தோர் 808;. பீகாரில் 258 மோதல்களில் உயிரிழந்தோர் 403; 2014ஆம் ஆண்டைவிட தமிழகத்தில் ஜாதிய மோதல் 100 மடங்கு அதிகரித்திருப்பதாக அறிக்கை கூறுகிறது. 2014இல் நடந்த 211 மோதல்களில் உயிரிழந்தோர் 257 பேர்.

தமிழர் சமூகத்தில் ஜாதிய வகுப்புவாத வெறியூட்டப்படுவது ஆபத்தானது என்று இது குறித்து ‘டிடி நெக்ஸ்ட்’ ஆங்கில நாளேடுக்கு அளித்த பேட்டியில், ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன், சமூக ஆய்வாளர் பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகியோர் கூறியுள்ளனர். காவல் துறையில் ஜாதியும், மதமும் ஊடுருவி நிற்கிறது. ஆதிக்க ஜாதியினர் நிறைந்த மாவட்டங்களில் அதே ஜாதியைச் சார்ந்தவர்கள், காவல்துறை அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் சொந்த ஜாதிக்காரர்கள் கலவரம் செய்யும்போது, வழக்குகளை பதிவு செய்வதில்லை என்று சில மூத்த காவல்துறை அதிகாரிகளே ஒப்புக் கொள்வதாக ‘டிடி நெக்ஸ்ட்’ நாளேடு கூறுகிறது. மாவட்டங்களில் ஜாதி ஆதிக்க பின்பலத்தோடு வலம் வரும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள் தங்கள் ஜாதிக்காரர்களையே காவல்துறை அதிகாரிகளாக நியமிக்க ஏற்பாடு செய்கிறார்கள் என்றும் காவல்துறை அதிகாரிகள் ஒப்புக் கொள்வதாகவும் அந்த ஏடு கூறுகிறது.

வேலை வாய்ப்பு இல்லாத நிலை, தொழில் வளர்ச்சி இல்லாமை போன்ற பொருளாதார காரணங்களை ஜாதியமைப்புகள் பயன்படுத்தி, தங்கள் ஜாதிவெறி வலைக்குள் வீழ்த்தி விடுகின்றன. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் தமிழ்நாட்டில், அரசுப் பணிகளில் 25,000 பணியிடங்கள் இன்றும் நிரப்பப்படவில்லை. இந்த இடங்களை தமிழக அரசு உடனே நிரப்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து, நான்கு வருடங்கள் ஓடிய பிறகும், எந்த முயற்சியும் எடுக்கப்பட வில்லை என்கிறார் புனித பாண்டியன். காவல்துறையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைந்து போனதும் கலவரத்துக்கு முக்கியக் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஜாதிக் கலவரத்துக்கு அடிப்படையாக இருப்பவை ஜாதியப் பெருமிதங்கள். இந்த கற்பனைகள் தகர்க்கப்பட்டு ஜாதியத்தின் மீதான வெறுப்பை சமூகத்தில் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

மாறாக, பார்ப்பனியத்துக்கு வலிமை சேர்க்க பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதியினரிடையே ‘இந்து’ மத அமைப்புகள் ஜாதி வெறியின் வழியாக இந்து மத வெறியூட்டி வருகின்றன. குறிப்பாக பிற மதத்தினர் மீதும் தலித் மக்கள் மீதும் வெறுப்பை உருவாக்கும் முயற்சிகள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. அரசும் காவல்துறையும் இதைத் தடுக்காமல் ஆதரவு காட்டி நிற்பதும் தமிழகம் இப்படி ஜாதி வெறி மண்ணாக மாறி நிற்பதற்கான காரணங்கள் என்று சமூக வியலாளர்கள் கூறுகிறார்கள். ஜாதியமைப்புக்கு எதிராக போராட வேண்டிய தலித் அமைப்புகள் ‘உட்ஜாதி குழுக்களின்’ நலன் சார்ந்து நிற்பதும் புரட்சியாளர் அம்பேத்கர் ஜாதிய இந்து மத ஒழிப்புக்காக விட்டுச் சென்ற புரட்சிகர சிந்தனைகளை முன்னெடுக்காமல் இருப்பதும் கூட இதற்குக் காரணம் என்று சமூகவியலாளர்கள் கூறுகிறார்கள்.

தமிழகத்தை சூழ்ந்து நிற்கும் இந்த ஆபத்திலிருந்து மக்களை வென்றெடுக்க முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட இயக்கங்கள் இனிமேலாவது களமாட முன்வர வேண்டும்.

Pin It