சூர்யாவுக்கு எதிராக ஜாதி வெறியை தூண்டி வன்னிய மக்களை அவருக்கு எதிராக நிறுத்த முயல்கிறார்கள் சனாதன சக்திகள்.

உண்மையில் இது பழங்குடியின மக்களின் வலிகளை சொல்லும் ஜெய் பீம் திரைப்படத்திற்கு ஆதரவாக நிற்கும் பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கு எதிராக வன்னிய மக்களை திருப்பிவிட வேண்டும் என்ற பூநூல்கள் பின்புலத்திலிருந்து இயக்கும் வேலை.

இதில் அன்புமணியும் தன் சுய நல அரசியலை செய்கிறார். நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் மூலம் தங்கள் கட்சிக்கு பெரும்பான்மை வன்னிய சமுதாய மக்களின் ஆதரவு இல்லை என்கிற உண்மை நிலையால் எதையாவது செய்து தன்னை அரசியலில் முன்னிலைப்படுத்த முனையும் தந்திர முயற்சியே இது.

தியேட்டரை கொளுத்துவேன் என்று சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் காடுவெட்டி குருவின் மருமகனுக்கு அக்னியில் பிறந்ததாக சொல்லப்படும் புராணக்கதை என்னவென்றுகூடத் தெரியவில்லை.

புரட்சியாளர் அம்பேத்கர் சொல்லுவார் “ஜாதி என்பது ஒரு மனநோய்”. இவர்கள் மனநோயால் பிடிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களை இயக்குவது பார்ப்பன சனாதன சக்திகள்தான் என்பதை அனைவரும் அறிவோம்.

சூர்யா அவர்களுக்கு, ஜெய் பீம் படத்திற்கு ஆதரவாகவும், அவருக்கு ஜாதி வெறியர்கள் விடுக்கும் மிரட்டல்களுக்கு எதிராக அவருக்கு பாதுகாப்பாகவும் நிற்க வேண்டியது நம் கடமை.

பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு உரிமையை RSS பாஜக அரசு முற்றிலுமாக பறித்தபோது - தியேட்டரை கொளுத்துவேன், சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் பரிசு என அறிவிக்கும் இந்த ஜாதி மக்களின் பாதுகாவலர்கள்(?) எல்லாம் எங்கு போனார்கள்? ஏன் கூட்டணி தர்மம் தடுத்ததா?

இது ஒரு திரைப்படம் குறித்த சர்ச்சை அல்ல. பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக அரசு இயந்திரங்களின் ஒடுக்குமுறை குறித்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்திற்கு எதிரானதுதான் இந்த சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கும் ஜாதி வெறியர்களின் அறிவிப்புகள்.

மக்கள் ஆதரவோடு சமூக நீதி களத்தில் பெரும் முற்போக்கு மாற்றங்களை செய்துவரும் திமுக அரசிற்கும் இதன் மூலம் சிக்கலை உருவாக்குவதும் இவர்களின் நோக்கம்.

இவர்கள் சர்ச்சையாக்கிய அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்கி விட்ட பின்பும் மீண்டும் மீண்டும் இவர்கள் இதனை ஒரு பேசு பொருளாக ஆக்கி கொண்டிருப்பது இவர்கள் உள்நோக்கத்துடன் வேறு திட்டத்துடன் செயல்படுகிறார்கள் என்பதை நம்மால் எளிதாக புரிந்துகொள்ள முடியும்.

சூர்யா ஜாதியை மறுத்து, மதத்தை மறுத்து திருமணம் செய்தவர். கல்விக்காக அறக்கட்டளை நடத்தி வருபவர். அதன் மூலம் ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்க உதவிகளை செய்து வருபவர். நீட், புதிய கல்வி கொள்கைகளின் தீமைகளை மக்களிடம் பேசியவர். இவை அனைத்தும் முழுக்க முழுக்க காவிகளின் மனுவிய செயல் திட்டத்திற்கு எதிரானவை.

அதனால் அவர்கள் நேரம் காலம் பார்த்து காத்திருந்து ஒரு திரைப்படத்தின் காட்சியை பயன்படுத்தி வன்னிய மக்களையும், சூர்யா அவர்களையும் அவருக்கு ஆதரவாக நிற்கும் முற்போக்கு சக்திகளையும் எதிரெதிரே நிறுத்தி கலவரத்தை உண்டு பண்ணி தமிழ்நாட்டை வன்முறைக்காடாக ஆக்கும் முயற்சியே அன்றி வேறல்ல.

பாஜக கூட்டணியை குளிர்விக்கவும், பாஜக அரசின் கொடுமைகளை மக்கள் கவனத்திலிருந்து திசைமாற்ற செய்யும் வேலையாகத்தான் இதை பார்க்க முடிகிறது. இப்போதைய சூழலில் சூர்யா அவர்களுக்கு நாம் துணை நிற்போம் இதில் நடக்கும் நூலிபான்களின் அரசியலை நாம் முதலில் அறிந்து கொள்வோம். மக்களிடம் இச்செய்திகளை கொண்டு செல்வோம்.

சூர்யாவுக்கு மிரட்டல் : பா.ம.க. பிரமுகர் மீது நடவடிக்கை கோரி சென்னை, மதுரையில் கழக சார்பில் மனு

ஜெய்பீம்’ படத் தயாரிப்பாளர் நடிகர் சூர்யாவுக்கு எதிராக வன்முறை மிரட்டல் விடுத்த பா.ம.க. - மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை, மதுரையில் கழகத் தோழர்கள் காவல்துறையில் மனு அளித்தனர்.

சென்னையில் : ஜாதியை பிரதானமாக வைத்தே இயங்கும் பாமக தரப்பில் அதிக மிரட்டல்கள் ‘ஜெய்பீம்’ படத் தயாரிப்பாளர் நடிகர் சூர்யாவிற்கு வந்து கொண்டே உள்ளன. குறிப்பாக பாமக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி, “நடிகர் சூர்யா அவர்களை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு இலட்சம் தருவதாகவும், சூர்யா தரை வழியாக எங்கும் பயணம் செய்யமுடியாது, வான் வழியாக தான் செல்ல முடியும்” என்றும் மிரட்டியுள்ளார்.

சமூக பதட்டத்தையும், வன்முறையையும், ஜாதிய மோதலையும், இளைஞர்கள் மத்தியில் ஜாதிய வன்மத்தை விதைக்கும் வகையிலும், திட்டமிட்டு உள் நோக்கத்துடன் பேசியுள்ளார். இதற்கான, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, சென்னை, காவல் ஆணையர் அலுவலகத்தில், சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை யில் காலை 11 மணியளவில் மனு அளிக்கப்பட்டது. ஆணையர் தரப்பில் ஊளுசு ம் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், தென் சென்னை மாவட்ட துணை அமைப்பாளர் சுகுமார், மயிலை இராவணன், சிவா ஆகியோருடம் சென்னை கழக தோழர்கள் உடன் சென்றிருந்தனர்.

மதுரையில் : பாமக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பழனிச்சாமி மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி 16.11.2021 காலை தென்மண்டல ஐ.ஜி. அலுவல கத்தில் மதுரை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது..

தோழமை அமைப்புகளான விடுதலை சிறுத்தைகள், தமிழ்தேச மக்கள் முன்னணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் புரட்சிகர இளைஞர் முன்னணி வழக்கறிஞர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Pin It