மானுட உலகின் தீரமிக்கதும் முற்றிலும் இயல்பான மனித வேட்கை வாய்ந்ததுமான பவுத்தத்தைப் புதுப்பித்து, கோலார் தங்கவயல் வரலாற்றுப் பெருமை அடைந்தது. இந்நிலையில், ஒரு சில சமூக ஆளுமைகளுக்கு பவுத்த அறிதலில் உள்ள ஓர் இடைவெளி - தன் ரசனையை அளவாகக் கொண்டு மதிப்பிடும் இந்து ஆன்மீகத்திலேயே முடிந்தது. நம் மாபெரும் பவுத்த மரபுடன் இணைவதற்கு, முழுத்தகுதி கொண்ட இவர்கள், தங்களின் ஆன்மீகத் தினவிற்கு கரைகட்டும் முயற்சியில், இவர்களுக்கேயுரிய திசை மறந்து, தெறித்து வைணவர்கள் ஆனார்கள்.

தங்களுக்குள் உறைந்து கிடக்க வேண்டிய தொல்குடி மரபின் எல்லைவரை தொட வேண்டிய சாக்கியத் தொன்மத்தின் அபூர்வ மனக் கிளர்ச்சி, இவர்களுக்கு ஏற்படவில்லை. மானுட வாழ்வின் பொலிவை அள்ளத்தக்க தங்கள் மூலாம்பர பவுத்தத்தை மறந்து, தங்கள் சாராம்சமான எரிபொருள் தீர்ந்த, அணைந்த மனிதர்களாய் ஆனதில், இவர்களின் ஆன்மீகத் தொடு வானத்தின் எல்லை - பவுத்தத்தை வீழ்த்திய வைணவமானது. தற்குடிகளின் சாக்கிய இனக்குழு வரலாற்றையும், சாக்கியம் - பவுத்தம் ஆகியவற்றையும் உள்ளிழுத்த படியும், தங்கள் இயல்பான மனக்கிடங்குகளின் ஆழங்களுக்குச் செல்ல சக்தியற்றவர்களே வைணவர்கள் ஆனார்கள். இவர்களது நுண்ணுணர்வும், பொதுப் புத்தியும் ‘நாம் இந்துக்கள் அல்லர்' என்று தட்டி எழுப்பாததால், இந்து மதத்தின் கோணல்களையும், திருகல்களையும் திரும்பிப் பார்க்க இயலவில்லை. இந்து மத மன அலைக்கழிவுகளுக்கு ஊடாகவே வைணவத்தில் மயக்கம் கொண்டு - மிதமாகவும், இதமாகவும் நகர்ந்த வாழ்வு இவர்களுடையது. இவர்கள் அனைவரும் செல்வந்தர்கள்.

இவர்கள், தங்கள் ஆன்மீக முடுக்கத்தின் திவலையாக, தந்தையாகிய இறைவன் முன்பு மனிதர் யாவரும் சோதரரே என்று பஞ்சமர்களுக்கு இறைவழிபாட்டில் (மட்டும்) சமத்துவத்தையளித்த சிறீராமாநுஜனுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காகவே, அடியேன் சிறீராமாநுஜதாசன் என்று கூறிக் கொண்டார்கள். ஜீயர்கள் மற்றும் வைணவ ஏகாங்கிகள் மூலம் சமாஸ்ரயணப் பஞ்ச சம்ஸ்காரம் செய்விக்கப்பட்டு, தோளில் சங்கு சக்கரப் பொறி ஒற்றி, நெற்றி முதல் பிடரி வரைப் பன்னிருத் திருநாமங்கள் இட்டு, மந்திரம் உபதேசம் செய்வித்து, தொண்டர் குலத்தில் அனுமதித்து, ஆராதனை முறைகளைக் கற்பித்து சிறீ வைணவர்களாக்கப்பட்டனர்.

வைணவ ஒழுங்கு என்னும் கற்பிதத்தில் பிதுங்குகிற ஆன்மீக மோகிகளாக ஆன இவர்கள், தங்களின் பொன்னான காலம் சிதறியதில் - வளரும் வைணவத் தலமாக கோலார் தங்கவயலை ஆக்கத் துடித்தனர். கடவுளை நட்டு வைத்து தம்மினத்தைப் பாதுகாத்து, பவுத்தத்தை விரட்டியடித்த ராமாநுஜன், அடிப்படையில் பாசாங்குத்தனமான வைதீகர்தான். கடவுள் இல்லை என்பது பவுத்தர்களைவிட, அவருக்கு நன்கு தெரிந்ததுதான். ஆனால், தங்கவயலில் ராமாநுஜதாசர்கள் ஆனவர்கள் வைணவத்தை உரைத்துப் பார்க்கக் கிடைத்த சாணைக்கல் ஆனார்கள். வைதீகப் பாவனையில் அசலாகவே கரைந்தார்கள்.

பவுத்தத்தைப் பார்ப்பனியம் வெற்றி கொண்ட காலத்திலிருந்து, மனிதர்கள் பார்ப்பனியச் சமூக அமைப்பைத்தான் பிரதிபலிக்கிறார்கள். சமூகக் குற்றவாளிகளான பார்ப்பனர்களாலும் பார்ப்பனியர்களாலும்தான் வழிநடத்தப்படுகிறார்கள். அவ்வகையில், தங்கவயல் வைணவர்கள் (தாழ்த்தப்பட்டத் தமிழர்கள்), வைணவத்தைப் பெருக்கிக் கொள்ள எல்லா உத்திகளையும் கற்றறிந்த, வைணவத்தின் எல்லா வழிமுறைகளையும் கையாளத் தெரிந்த கில்லாடித்தனமான அப்பாவிகள்தாம். தங்கவயலில் வைணவம் செழிக்க, ஆச்சாரியர்கள் வந்த வண்ணமிருந்தனர்.

சிறீரங்கம் பெரிய கோவிலில் ராமாநுஜன் ஏற்படுத்திய விதிமுறைகளின்படி, ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழக வைணவத் தலங்களில் வழிபாட்டு ஒழுங்குகள் பின்பற்றப்பட்டு வந்தது போன்று, தங்கவயல் சன்னதிகளிலும் திவ்யப் பிரபந்த சேவை ஒரே வித ஒழுங்குடன் பின்பற்றப்பட்டது. இது, தொல் தமிழர்களுக்கு மூல முழக்கமாக புத்தர் கொடுத்த "கடவுள் என்பது ஒரு நீண்ட கால வதந்தி; வதந்திகளை நம்பாதீர்! வதந்திகளைப் பரப்பாதீர்!'' என்பதற்கு எதிராகவே இருந்தது. தங்கவயலில் வைணவத்தினால் ஏற்பட்ட தத்துவச் சவுக்கு, எம்.சி. மதுரைப் பிள்ளையே அதிகப் பொறுப்பானவர் என்பதை வி.எம். வடுக நம்பியான் நூல் சான்றாக விளங்குகிறது :

"சிறீ எம்.சி. மதுரைப்பிள்ளையவர்கள், சிறீரங்கத்தில் ஸ்வாமிகளின் காலட்சேபங்களையும் ஆசார அனுஷ்டானங்களையும் நாள்தோறும் கேட்டு வருவதைக் கவனித்த கோஷ்டியினர் சிலர், பிள்ளையவர்கள் யார் என்பதை விசாரிக்க, தாம் இன்னவரெனக் கூற, ஸ்வாமிகளை குருவாய் அடையப் பெற்று, அவரிடம் பஞ்ச சம்ஸ்கார உபதேசம் பெற விரும்புவதைத் தெரிவித்தபோது கோஷ்டியினர், பஞ்சமர்களுக்கு சிறீவைஷ்ணவ லட்சணம் கிடைக்காது என்றும்; ஸ்வாமிகளும் இதற்கு உடன்பட மாட்டார் என்றும் சொன்னார்கள். பிள்ளையவர்கள் காவிரியில் குளித்து, இறைவனைத் தொழுது, சிறீமத் அருள் மாரி ஸ்வாமிகளை அணுகி, தமக்குப் பஞ்ச சம்ஸ்கார திவ்ய லச்சிணை சம்பந்தம் செய்யும்வரை உண்ணாவிரதமிருக்க முற்பட்டபோது, ஸ்வாமிகள், மதுரைப்பிள்ளையின் விரத வைராக்கியத்தை அறிந்து, அவரின் வரலாற்றைத் தெரிந்து "உம்மை எம்பெருமானார் திருவடிக்குச் சொத்தாக்கியப் பின்னர் நீர் ஊர் திரும்ப வேண்டும்'' என்று கூற, பிள்ளையவர்கள் எம்மையாட் கொண்டால் மட்டும் போதாது; தேவரீர் எமது ஊராகிய தங்கவயலுக்கு எழுந்தருளி, அங்குள்ள எம் இனத்தைச் சார்ந்த பக்தர்களுக்கெல்லாம் அருள் கூற வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.

அதை ஏற்று, மதுரைப் பிள்ளையவர்களுக்குத் "தீயிற் பொலிகின்றச் செஞ்சுடராழித் திகழ் திருச்சக்கரப் பொறிகளால் திருவிலச்சனை பஞ்ச சம்ஸ்காரங்களைச் செய்து "மதுரகவி ராமாநுஜதாசர்' என நாமம் சூட்டி, உண்ணாவிரதத்தை விடும்படிச் செய்தார்'' (கோலார் தங்கவயல் வரலாறு, கே.எஸ். சீதாராமன், பக்கம் : 313 - 314).

வைணவமும் சைவமும் பார்ப்பனியத்தின் மீள் வடிவங்கள்; சாக்கியர்களான களப்பிரர்களின் பவுத்த மார்க்க ஆட்சியை முடிவுகட்ட எழுந்த பக்தி இயக்கங்கள். வைணவர்களும் சைவர்களும்தான் பவுத்தத்தின் வரலாற்றை முறியடித்து, இன்றைய தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னோர்களின், களப்பிரர்கள் காலத்தை இருண்ட காலமாக்கினார்கள். தங்கவயலுக்கு வைணவ வரவு என்பது, தாழ்த்தப்பட்டோருக்கு பிறவி பவுத்தர்களுக்கு முழுமையான எதிர்முரண் என்றாலும், அந்த எதிர்முரணுக்குள் சமூக முன்னேற்றம் அடங்கியிருந்தது.

வைணவத்தினுள் தொல்தமிழர்களின் ஞானமும் இலக்கியமும் கலைகளும் இல்லையென்றாலும், வைணவப் பெருந்தலைகளின் உயரம் - சமூக வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே அளக்கப்பட்டது. அவ்வகையில், சமூகத் தளத்தில் எம்.சி. மதுரைப்பிள்ளை சமூக ஆளுமையாக, ஆதி திராவிடர் மக்களின் தலைவராக, ஆதி திராவிடர் மகாஜன சபையின் நிறுவனத் தலைவராக மிளிர்ந்தார். பவுத்த ஆளுமைகளான ஒய்.எம். முருகேசம், ஜி. அப்பாதுரையார், இ.நா. அய்யாக்கண்ணு புலவர் ஆகியோர் அங்கீகரிக்கும் அளவிற்கு எம்.சி. மதுரைப்பிள்ளையின் சமூகத் தொண்டு விரிவடைந்தது. எம்.சி. மதுரைப்பிள்ளையின் இணைச் சேர்க்கைகளாக வைணவர்களான க. பூசாமி, ஆர்.ஏ. தாஸ் போன்றோரும் சமூக ஆளுமைகளாக, சமூகத் தலைவர்களாக, ஆதி திராவிடர் மகாஜன சபையின் தலைவர்களாக இருந்தனர்.

ஆதிதிராவிடர் மகாஜன சபைக்கு செயலாளராக வைணவரான வி.எம். வடுக நம்பிதாசர் இருந்தார். சபை சார்பில் ‘திராவிடன்' என்ற இதழும் வெளிவந்தது. இவ்விதழ், தங்கவயல் மற்றும் சென்னை மாகாண தாழ்த்தப்பட்டோர் பிரச்சனைகளையொட்டிய செய்திகளைத் தாங்கி சாதனைகள் புரிந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தவரான பவுத்தர், வைணவர், கிறிஸ்துவர், ஆத்திகர், நாத்திகர் உட்பட்ட அன்றைய அரசியல், சமூக அமைப்புகள் மற்றும் மொழி வேறுபாடற்று ஆதி கர்நாடகத்தவர், ஆதி ஆந்திரர் பிரச்சனைகளையும் ஏற்று கல்வி, தொழில், விவசாயச் சலுகைகளைப் பெற ஆதி திராவிடர் மகாஜன சபை செயலாற்றியது. வேறுபாடுகளின்றித் தாழ்த்தப்பட்டோர் நலத்தின் பொருட்டு, தங்கவயலில் தொண்டாற்றிய மகாசபை, சென்னை மாகாணத்தில், குறிப்பாக வடதமிழ் நாட்டில் சிறப்புற்றது.

K. Poosamy
சாதியும், சனாதனமும் வலியோரை வாழ்த்தி, எளியோரைத் தாழ்த்தும் உலகியல்களுக்கிடையில் 1880 ஆம் ஆண்டு எம்.சி. மதுரைப்பிள்ளை பிறந்தார். விடலைப் பருவத்திலேயே ஆதிக்கச் சமூகத்தோடு, தனது போட்டியிடும் தகுதியை நிலைநாட்டியவராய் வளர்ந்தார். முதல் இருபதாண்டுகளின் காலகட்டத்திலேயே (1880 - 1900) முழு வளர்ச்சியடைந்த தங்கச் சுரங்கத் தொழிலினூடே ஒப்பந்தக்காரராக உயர்ந்து பெரும் செல்வந்தர் ஆனார். இவரது இருப்பு தங்கவயலிலும், சென்னையிலுமாக இருந்தது. அக்காலத்தில் தொல் தமிழர்களில் தங்கவயலிலும் சென்னையிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். தேவைக்கதிகமான செல்வத்தை, மற்றவர்களைச் சுரண்டிச் சேர்ப்பது, சமத்துவத்திற்கு எதிரானது. அளவுக்கு மீறிய செல்வத்தைச் சேர்த்துத் தான் மட்டும் அனுபவிப்பவர் சமூக விரோதி. தானும் அனுபவிக்காமல் மறைத்து வைப்பவர், பிணத்தில் எரியும் தீயிற்கு நிகரானவர். தங்கவயலிலும், சென்னையிலும், இத்தகையோர் தனவந்தர்களாகக் காலம்போக்கி முகவரியற்று இருந்தனர். இந்நிலையில், மதுரைப்பிள்ளை தாம் திரட்டிய செல்வத்தில் பெரும் பகுதியை, மனித சமூக நலனுக்கு கொடுத்து மகிழ்ந்தவர். குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும், பொதுவாக ஏழை எளிய மக்கள் மீதும் அர்ப்பணிப்பை நல்கிய அவர், மனிதாபிமான படைப்பின் ஓர் அடையாள முத்திரைச் சின்னம்.

கல்வியைப் பேருண்மையாகப் பாவித்த மதுரைப்பிள்ளை, 1919 ஆம் ஆண்டு தங்கவயலில் சிறீநம்பெருமாள் பள்ளியை நிறுவி, ஆதி திராவிட இனமக்கள் இலவசமாகக் கல்வியறிவு பெற வகை செய்தார். 1921இல் பக்கிங்ஹாம் கர்நாடிக் தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் ஏற்பட்டது. முதலாளி, தொழிலாளி என்ற வகையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை, சாதிச் சண்டையாக உருவெடுத்தது. இதனை ‘புளியந்தோப்பு கலவரம்' என்று குறிப்பிடுவார்கள். இந்தக் கலவரத்தினால் துயர வாழ்க்கைக்குப் பலியான ஆதி திராவிடர், திராவிடர் ஆகிய இருதரப்பினர்களையும் தலைவர் மதுரைப் பிள்ளை சமமாகவே பாவித்து உணவும், உடையும், அடைக்கலமும், பணமும் கொடுத்து ஆதரவு தந்தார். மனிதாபிமான முறையில் செய்யப்பட்ட இச்செயலைப் பெரும்பாலானோர் பாராட்டினார்கள்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்மையாகவும் அந்தரங்க சுத்தியோடும் உழைத்த மதுரைப்பிள்ளை, சென்னை நகராட்சியாக இருந்த காலத்திலேயே அதன் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சைதாப்பேட்டை தாலுகா போர்டு அங்கத்தினரான மதுரைப்பிள்ளை, நாளடைவில் செங்கல்பட்டு ஜில்லா போர்டு உறுப்பினராகவும், கல்வித் துறை உறுப்பினராகவும் ஆனார். சென்னை நகர கவுரவ மாஜிஸ்டிரேட் பதவியை அலங்கரித்த மதுரைப்பிள்ளையை, ஆங்கிலேய அரசு ‘ராவ்சாகேப்' என அழைத்துப் பெருமைப்படுத்தியது. கல்வி, சமூக நிலை, பொருளாதார மேம்பாடு, தொழில் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்டோர் முன்னேற ஆதி திராவிடர் மகாஜன சபை மூலம் தொண்டாற்றிய இப்பெருமகனார், 1925இல் சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினர் ஆனார். தமிழகத்திலும், மைசூர் சமஸ்தானத்திலும் இரு அரசாங்கங்களையும் தாழ்த்தப்பட்டோர் பிரச்சனையில் தூங்கவிடாமல், அதிகாரிகள் மத்தியில் சிம்ம சொப்பனமாகவே விளங்கினார். தமிழகத்தில் தாத்தா ரெட்டமலை சீனிவாசனாரின் உரிய அரவணைப்போடும், தங்கவயலில் க. பூசாமி, ஆர்.ஏ.தாஸ் போன்ற தலைவர்களின் தோழமையோடும் தம் சமூக வாழ்வை நீட்டித்து வந்தார்.

தங்கவயலில் சுரங்கத் தொழிலாளி, தூசு நிறைந்த சூடான காற்றைச் சுவாசித்துக் கடினமாக உழைப்பதால், ‘சிலிகாசிஸ்' என்னும் நோயால் நுரையீரல் தாக்குண்டு, துவாரங்கள் ஏற்பட்டு அழியத் தொடங்கி, ரத்த வாந்தியெடுத்து உயிர் துறக்கும் நிலை கொடும் துயரமிக்கதாக இருந்தது. இந்நிலையில், மதுரைப்பிள்ளை அந்நோய் பீடித்தவர்களைக் காப்பாற்றுவதில் முழுக் கவனம் செலுத்தினார். மனித உயிர்கள் விலைமதிக்க முடியாதவை என்பது அவரது பார்வை. மதுரைப் பிள்ளைக்கு தாழ்த்தப்பட்டோர் உயர்வே இலக்கு என்றாலும், பிற ஏழை, எளியவர்களின் கல்விக்கும், உடைக்கும், உறைவிடத்திற்கும், தொழிலுக்கும் தாராளமாக உதவி செய்து அவர்களையும் வாழ்க்கையில் மேம்படுத்தினார்.

சைமன் கமிஷனுக்கு சாட்சியமளித்த மதுரைப்பிள்ளை, 1932இல் வட்டமேசை மாநாட்டிற்கு தாத்தா ரெட்டமலை சீனிவாசனார் புறப்பட்டபோது, அவருடைய தேவைகளை ஆயத்தத்தைச் செய்து கொடுத்தார். வட்ட மேசை மாநாடு தாழ்த்தப்பட்டோர் அரசியல் நிலைப்பாட்டில் ஒரு மைல் கல்லாகத் திகழ, புரட்சியாளர் அம்பேத்கருக்கு ஆதரவளித்து தந்தி அனுப்பினார். ஆதி திராவிடர் - திராவிடர் ஒற்றுமையில் நம்பிக்கை கொண்ட மதுரைப்பிள்ளை, வெகுமக்களான இருதரப்பினரையும் கூட்டிப் பல மாநாடுகளை நடத்தினார். மனிதாபிமானத்தின் நீட்சியே குடும்பம், சமூகம், அரசியல் என்று நிரூபித்து வாழ்ந்து காட்டியவர் எம்.சி. மதுரைப்பிள்ளை அவர்கள். 35 ஆண்டு கால பொதுவாழ்வை, தனது மக்கள் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்பதற்காகவே தன் வாழ்வைக் கொண்டாடியவர். 1935 ஆம் ஆண்டில் மதுரைப்பிள்ளையின் 55ஆவது வயதில் இயற்கை அவரைப் பறித்துக் கொண்டது. ஆனால், உண்மையில் பறிபோனது மனிதநேயம்தான்!
Pin It