கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

சாக்கடைக் குழிக்குள் மனிதர்களை இறக்குவதை சட்டம் தடை செய்தாலும் நடைமுறையில் அரசு நிறுவனங்களே மீறிக் கொண்டிருக்கின்றன. சென்னை மாநகராட்சி, சாக்கடையில் மனிதர்கள் இறங்குவதைக் கண்டு கொள்வதே இல்லை. ஒப்பந்தக்காரர்களிடம் இந்தப் பணியை ஒப்படைத்து விட்டதாகக் கூறி தப்பி விடுகிறது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி சாக்கடைக் குழியில் தொழிலாளர்கள் இறங்கியதை கழகத் தோழர்கள் தடுத்து நிறுத்தி ஒப்பந்தக்காரர் மீது காவல் துறையிலும் புகார் கொடுத்து வழக்கு பதிய செய்துள்ளனர். இது குறித்த செய்தி:

சென்னை மாவட்டம் 123 ஆவது வட்டத்தில் சில துப்புரவு தொழிலாளர்கள் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தனர். அந்த பக்கமாக சென்ற திராவிடர் விடுதலைக் கழகம் மயிலை பகுதி தோழர்கள் அதை கண்டவுடன் அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களை வேலை வாங்கிய ஒப்பந்தக்காரர் பிரகாசு மற்றும் மாநகராட்சி அதிகாரி சுந்தர்ராஜன் இருவரிடமும் தோழர்கள் கேள்விகளை முன் வைத்து வாதத்தில் ஈடுபட்டனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கழிவுகளை அகற்ற பாதாளச்சாக்கடையில் மனிதர்களை பயன்படுத்தாமல் இயந்திரங்களையே பயன்படுத்த வேண்டும் என்று எடுத்துக் கூறினர். அவர்கள் இருவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

தோழர்கள் தொழிலாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கி விட்டு, ஓடிய இருவர் மீதும் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் தரவே காவல் துறை சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது. தப்பி ஓடிய ஒப்பந்தக்காரர் காவல் நிலையம் வரவழைக்கப்பட்டார்.

காவல்துறையினரும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி புகாரைப் பதிவு செய்தனர். முழக்கம் உமாபதி புகார் மனுவை தந்தார். தோழர்கள் மாரி, நாத்திகன் உடனிருந்தனர்.

மயிலைப் பகுதி மக்கள் தோழர்களின் செயலை பாராட்டியதோடு, இந்த பிரச்சனையில் நம் தோழர்களுக்கு உறுதுணையாகவும் களத்தில் நின்றனர்.