17.6.2022 அன்று திருப்பூரில் கழகப் பொருளாளர் துரைசாமி இல்ல வளாகத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் பகல் 11.30 மணியளவில் தொடங்கியது. 17 உறுப்பினர் களில் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் உட்பட 14 பேர் பங்கேற்றனர்.

இயக்க செயல்பாடுகள், ‘நமக்கான அடையாளம் திராவிட மாடல்’ என்ற தலைப்பில் நடந்த வீதிக் கூட்டங்கள், மண்டல மாநாடுகள், எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து உறுப்பினர்கள் பலரும் கருத்துகளைத் தெரிவித்தனர். மாலை 7 மணி வரை கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன.

kolathoor mani viduthalai rajendran anbu dhanasekarகழகத்தின் தொடக்க நாளான ஆகஸ்டு 12ஆம் தேதி ஆண்டுதோறும் பரப்புரைப் பயண நிறைவு மாநாடாக இதுவரை நடத்தப் பட்டது.

கொரானா காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக பயணங்கள் நடத்த முடியவில்லை. 2022, ஆகஸ்டு 12 - கழகம் தொடங்கி 10ஆம் ஆண்டு நிறைவு பெறுவதால், 10 ஆண்டு நிறைவு விழாவோடு ‘திராவிட மாடல்’ முழக்கத்தை முன் வைத்து சென்னையில் ஒரு நாள் மாநாடாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

கழகத் தலைவர் பொதுச் செயலாளர், தமிழக முதல்வரைச் சந்தித்து மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

ஈரோட்டில் கூடிய செயலவையில் (ஏப்.3, 2022) செயலவை உறுப்பினர்களிடமிருந்து ஆண்டு சந்தாவாக ரூ.1000/- வசூலிப்பது என முடிவு செய்யப்பட்டது. இது தவிர இயக்கப் பணிக்கு முழு நேரப் பணியாளர்களையும் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. முழு நேரப் பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கும் தொகையைப் பகிர்ந்து கொள்ள பல தோழர்கள் ஆர்வத்துடன் முன் வந்தனர். அதற்கான தொகையையும் அறிவித்தனர்.

ஆண்டு சந்தா, இயக்கத்துக்கான நன்கொடைகளை ஜூலை மாதத்திலிருந்து வசூலிப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த வசூல் பொறுப்பை தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் பொறுப்பேற்று செயல்படுவார். இதற்காக தனி வங்கிக் கணக்கு தொடங்கவும் முடிவு செய்யப் பட்டது.

தமிழ்நாடு மாணவர் கழக அமைப்புகளை அமைப்பதில் தீவிர கவனம் செலுத்தி, அதற்காக மாணவர்களைக் கொண்ட குழுக்கள் அமைப்பது குறித்தும் விவாதிக்கப் பட்டது.

மாணவர் இளைஞர்களிடையே சமூக நீதி மற்றும் ஜாதி வெறி எதிர்ப்பு பெண்ணுரிமை தொடர்பான பிரச்சினைகளை எளிமையாக விளக்கும். சிறு பிரச்சாரங்களை மிக மிகக் குறைந்த செலவில் (ரூ.5 அல்லது ரூ.10) வெளியிட்டு, மாணவர்களிடையேயும் இளைஞர்கள் இடையேயும் அவற்றைக் கொண்டு போய் விற்பனை செய்யும் இயக்கம் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மாணவர் கழக அமைப்புகள் திருப்பூர், மேட்டூர், கள்ளக்குறிச்சி, சென்னையில் செயல்படும் நிலையில் முதற்கட்டமாக இவற்றுக்கு மாவட்ட அமைப்பாளர்களை நியமித்து, பிறகு அவர்களைக் கொண்டு தலைமைக் கழக ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி, மாணவர் கழகங்களை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

சமூக வலைதளங்கள் சக்தி மிக்க ஊடகங்களாக மாறியுள்ள நிலையில் இயக்கத்தில் சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கும் தோழர்களுக்கு பயிற்சி ஒன்று ஏற்பாடு செய்யும் யோசனையை முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன் முன் வைத்தார்.

கருத்துகளை பொறுப்புடனும் ஆழமாகவும் சுருக்கமாகவும் பதிவிடுதல் குறித்தும் பொதுச் செயலாளர் குறுஞ்செய்தி, கழகத் தலைவர் யூடியூப் உரைகளை தோழர்கள் தாங்கள் படிப்பதோடு முடித்துக் கொள்ளாமல் மற்றவர்களுககும் ‘ஷேர்’ செய்வது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

சங்பரிவாரங்கள் பல்வேறு பெயர்களில் உள்ளூர் மட்டத்தில் மதவெறி அமைப்புகளை உருவாக்குவதும் வன்முறை கலவரத்துக்கு பழக்கப்பட்டவர்களை சமூக விரோத செயல்களில் ஈடுபட்டோரை அதில் உறுப்பினராக்கி, உள்ளூர் மட்டத்தில் சிறிய பிரச்சினைகளை ஊதிப் பெரிதாக்கி மதவெறி பரப்பலுக்கான செயல் திட்டமாக மாற்றி வருவதையும் தலைமைக் குழு விவாதித்தது. தமிழ்நாட்டை மதவெறி மண்ணாக்கும் முயற்சிகளை முறியக்கும் பல்வேறு யோசனைகள் விவாதிக்கப்பட்டன.

உள்ளூர் மட்டத்தில் மதவாத எதிர்ப்புக் கொள்கையுள்ள குழுக்கள், இயக்கங்கள், சிந்தனையாளர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் உள்ளூர் மட்டத்திலே திரட்டி ஒருங்கிணைப்பை உருவாக்கவும் அந்த ஒருங்கிணைப்பு ஒரு அமைப்பு வடிவமாக உருவெடுத்து விடாமல் எச்சரிக்கையாக ‘அமைப்பில்லாத ஒன்று கூடல்’ என்ற பண்போடு, அவ்வப்போது சங்கிகளுக்கு எதிர்வினையாற்றும் கருத்துருவாக்கங்களை அறப்போராட்டம், பரப்புரை வழியில் அந்தந்த ஊர்களில் பரப்பி மக்களிடம் நெருக்கமாக்கிக் கொண்டும் - மதவெறி சக்திகளைத் தனிமைப்படுத்தும் திட்டங் களைப் பற்றி விவாதிக்கப்பட்டது.

களப்பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றை ஜூலை 23லிருந்து 27 தேதி வரை திருச்சி அல்லது ஏலகிரியில் நடத்துவது என்றும் ஜூலை 22இல் அதே இடத்தில் சமூக வலைதளங்களில் இயங்கும் தோழர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

பயிற்சியாளர்களின் பட்டியல் தயாரிப்புப் பணியை பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் மேற்கொள்வார் என முடிவு செய்யப்பட்டது.

திராவிடர் விடுதலைக் கழகத் தொடக்க விழா மாநாடு 12.8.2012 அன்று ஈரோட்டில் இரண்டு நாள் எழுச்சியுடன் நடைபெற்றது.

அதேபோன்று கழகத்தின் மாநில மாநாட்டை பேரெழுச்சியோடு செயல் திட்டத்தை முன் வைத்து அதே ஈரோட்டில் இரண்டு நாட்களாக இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இடைவேளையில், தலைமைக் குழுவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி 75ஆம் அகவையில் ஜூன் 20இல் அடி எடுத்து வைப்பதைக் கொண்டாடும் மகிழ்வாக ‘கேக்’ வெட்டும் நிகழ்வுக்கு தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

மிகுந்த மகிழ்ச்சி - உற்சாகத்துடன் தோழர்கள் கேக் வெட்டி மகிழ்ந்து விழாவைக் கொண்டாடினர்.

பிரியாணிபாளையம் பிரியாணிக் கடை நிர்வாகியும் கழகத் தோழருமான பாபு அனைவருக்கும் மதிய உணவாக பிரியாணி வழங்கினார்.

Pin It