தொடர்ந்து சாதிக்கு எதிரான திரைப்படங்களை வழங்கிவரும் இயக்குநர் மாரி செல்வராஜ். இப்போது மாமன்னன் திரைப்படத்தை மக்களுக்கு சமர்ப்பித்து இருக்கிறார். சமகால அரசியலில் ஜாதியின் செல்வாக்கை இந்தப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பத்து ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக ரிசர்வ் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வடிவேலு. ஆனால் தன்னுடைய அதிகாரத்தை அவர் செலுத்தாமல் ஊரில் கலவரம் வந்துவிடக்கூடாது என்பதற்காக கட்சியில் மாவட்ட செயலாளர் சாதி வெறியர் ஒருவருக்கு பணிந்து போகிற ஒருவராகத்தான் இருக்கிறார். மகன் உதயநிதி ஸ்டாலின் இதில் கருத்து மாறுபாட்டோடு தந்தையிடம் பேசுவதையே நிறுத்திக்கொள்கிறார். பிறகு சமூகத்தில் நடக்கின்ற சாதிய ஒடுக்குமுறைகள் வடிவேலு கண்களை திறக்கச் செய்கின்றன. மகனின் பக்கம் உள்ள நியாயத்தை உணர்ந்து மகனோடு போர்க்களத்திற்கு வருகிறார்.

படம் முழுதும் அழுத்தமான காட்சிகள் சாதி வெறிக்கு எதிராக படமாக்கப்பட்டு இருக்கின்றன. ஊர்ப் பொதுக்கிணற்றில் பன்றி மேய்க்கும் சிறுவர்கள் குளித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டு ஊரில் உள்ள பல மூத்த தலைமுறையைச் சேர்ந்த சாதி வெறியர்கள் கல்லால் அடித்தே அந்த சிறுவர்களை கொல்லும் காட்சியாக இருந்தாலும் சரி, மாவட்ட செயலாளராக இருக்கிற சாதி வெறியர் தன்னுடைய எம்எல்ஏ தந்தைக்கு இருக்கை அளிக்காமல் நிற்க வைத்து அவர் அவமதிக்கும் போது உட்கார வைப்பதற்கு அவர் போராடுகிற சுயமரியாதை போராட்டமாக இருந்தாலும் சரி பல்வேறு காட்சிகள் உள்ளத்தை நெகிழச் செய்கின்றன.maamannan 438இந்தப் படத்தில் மய்யமான கருத்து மிகவும் சிறப்பானது, தலித், தலித் அல்லாதவர் பகையை அது நிரந்தரமானது என்பதை உறுதியாக்குகின்ற பல படங்கள் வந்து கொண்டிருக்கிற ஒரு சூழலில் அந்த பகை முரண்பாட்டில் நிகழ்கிற மாற்றங்களைப் பேசுகிறது இந்த திரைப்படம். இளைய தலைமுறையை பழைய தலைமுறையிடம் இருந்து மாறுபட்டு முற்போக்கு சிந்தனையுடன் வலம் வருகிறது. சாதி ஆதிக்கவாதிகளை எதிர்த்து அவர்கள் சொல்வதை அப்படியே கேட்க மறுக்கின்ற இளையதலைமுறை ஒன்றும் உருவாகி வருகிறது. அதேபோல் பாதிக்கப்படுகின்ற தலித் சமூகத்தினரிடமிருந்து ஆண்டைகளுக்கு துணைபோகிற துரோகமும் நடந்து கொண்டு இருக்கிறது என்று இரண்டு பக்கங்களிலும் இருக்கின்ற கள எதார்த்தத்தை மிக நுட்பமாக அவர் வெளிக்கொண்டு வந்திருப்பதோடு சில நேரங்களில் வன்முறைகள் தவிர்க்கப்படாதது என்பதை வலியுறுத்தினாலும் கூட வன்முறையும் தாண்டி சமூக விழிப்புணர்வும், மக்களிடம் கொண்டு செல்கின்ற கருத்துகள் மிக முக்கியமானவை. ஜனநாயக ரீதியான போராட்டங்களும், உரையாடல்களும் இதற்கு ஜாதி எதிர்ப்பு பரப்புரைகளும் அவசியம் என்ற கருத்தை மிக அழுத்தமாக இயக்குனர் பதிவு செய்திருக்கிறார்.

ஒரு இடத்தில் மாவட்டச் செயலாளராக இருக்கின்ற ஜாதி ஆதிக்கவாதி பேசுகிறார்... உன்னுடைய தந்தையை நான் நிற்க வைத்துப் பேசுவது என்னுடைய அடையாளம்... உன்னை உட்காரச் சொல்வது என்னுடைய அரசியல் என்று அவர் கூறுகிறார். இன்னொரு இடத்தில் உனக்கு மேலானவருடன் பணிந்து போவது தவறில்லை, உனக்கு சமமானவருடன் பணிந்து போவது தவறில்லை, ஆனால் உனக்கு கீழானவரிடம் பணிந்து போவதைவிட சாவதே மேல் என்று என் தந்தை கூறியிருக்கிறார் என்ற கூர்மையான வசனம் வருகிறது. வர்ணாசிரம கட்டமைப்பில் மேல், கீழ் அடுக்குகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இந்த வசனம் படம் பிடித்துக் காட்டுகிறது.

ஆக மூத்த தலைமுறை சாதி வெறியோடு இருந்தாலும் இளைய தலைமுறை அதிலிருந்து மாறுபட்டு சிந்திக்கத் தொடங்கி இருக்கிறது என்ற கருத்தை மிகவும் நேர்மையோடு பதிவு செய்திருக்கிற இயக்குநரை பாரட்ட வேண்டும். இசை படத்திற்கு வலுவைச் சேர்க்கிறது. ஏ.ஆர்.ரகுமான் காட்சிக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கிறார். நடிப்பில் வடிவேலாக இருந்தாலும் சரி, பகத் பாசில் ஆக இருந்தாலும் சரி, உதயநிதி ஸ்டாலினாக இருந்தாலும் சரி மிகச் சிறந்த நடிப்பை படத்திற்கு வழங்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தை ஒரு திரைப்பட விமர்சனம் என்று பார்ப்பதை விட சமூகத்திற்கு தேவையான கருத்துளை சுமந்து வருகின்ற சமூகப் பொறுப்போடுதான் அணுக வேண்டும். அந்த வகையிலே இது வரவேற்க வேண்டிய ஒரு படம். பல்வேறு கூட்டங்கள் கருத்தரங்கள் செய்ய வேண்டிய பணியை இந்த ஒரு திரைப்படத்தின் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு உண்டாக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது. மாமன்னன் படக்குழுவினருக்கு நம்முடைய மனமார்ந்த பாரட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இப்படி ஒரு திரைப்படத்தில் துணிவோடு விரும்பி நடிக்க முன்வந்திருப்பதற்கு உதயநிதி ஸ்டாலினை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It