1984 ஆம் ஆண்டு எனது மூத்த சகோதரியின் திருமணம் நடைபெற்றது. அவரது கணவர், உத்தரப்பிரதேச மாநிலம் ரூர்கி என்ற ஊரில் இராணுவ மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டு இருந்தார். புதுமணத் தம்பதியரோடு, நானும், எனது பெரியம்மாவும், தில்லி வழியாக ரூர்கி சென்றோம். அப்போதுதான், முதன்முறையாக சென்னையைத் தாண்டி, தமிழ்நாட்டு எல்லைக்கு வெளியே சென்றேன். சென்னை-தில்லி பயணக் கட்டணம், 105 ரூபாய்தான். (Delhi அல்ல; தில்லி (Dhilli) என்பதுதான் சரி.
நடுக்கத்தோடு...
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபால் நகரத்தைக் கடக்கையில் எனக்கு உள்ளுக்குள் உதறல். காரணம், டிசம்பர் 2 ஆம் நாள்தான், போபால் விஷவாயு தாக்கி, பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்தனர். நாங்கள் 6 ஆம் தேதி இரவு, அந்த இடத்தைக் கடக்கின்றோம். விபத்துக்குக் காரணமான யூனியன் கார்பைடு ஆலை, தொடர்வண்டித் தடத்துக்கு அருகிலேயேதான் அமைந்து இருக்கின்றது. செய்தித்தாள்களில் பார்த்த பிணக்குவியல்கள், அழுகை ஓலங்கள் எல்லாம் கண்முன்னே காட்சிகளாக வந்து சென்றது. வண்டிக்குள் எல்லோரும் அதைப்பற்றியே பேசிக்கொண்டு இருந்தார்கள். எஞ்சிய நச்சுக் காற்று இன்னும் அந்தப் பகுதியில் கலந்து இருக்குமோ? என்ற நடுக்கத்துடனேயே சென்றேன். அந்தப் பயணத்தை, இன்றைக்கு நினைக்கையிலும் அச்சமாகத்தான் இருக்கின்றது.
தில்லி, மீரட் வழியாக ரூர்கி சென்று, அங்கே பத்து நாள்கள் இருந்துவிட்டு, நானும் பெரியம்மாவும் திரும்பி வருகின்ற வழியில், மீண்டும் தில்லிக்கு வந்தோம். நான்கு நாள்கள் தங்கி, தில்லி மற்றும் ஆக்ரா தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்த்து விட்டு, பூடான் நாட்டுக்குச் சென்றோம். அங்கிருந்து, நேபால் தலைநகர் காத்மண்டு போய்விட்டு மீண்டும் பூடான் சென்று, இரண்டு மாதங்கள் கழித்து, கொல்கத்தா வழியாக சென்னைக்குத் திரும்பி வந்தோம்.
87 முதல் 89 வரையிலும், தில்லியில் பணிபுரிகையில் இரண்டு ஆண்டுகள் அங்கே வசித்தேன். அதற்குப்பின்னர், கடந்த 25 ஆண்டுகளில், 30க்கும் மேற்பட்ட முறை தில்லிக்குச் சென்று வந்துவிட்டேன். சென்னை-தில்லி தொடர்வண்டிப் பயணம் குறித்த சில செய்திகளை, பயணத்தின்போது கிடைத்த படிப்பினைகளை, உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
தொடர்வண்டிகள்
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து தொடர்வண்டி வழித்தடத்தில் 2195 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்து உள்ளது தில்லிப் பெருநகரம். தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் (ஜி.டி.எக்ஸ்பிரஸ்) ஆகிய இரண்டு தொடர்வண்டிகள், நாள்தோறும் சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தில் இருந்து தில்லிக்கு சுமார் நான்கு ஆயிரம் பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்கின்றன. மறுமுனையில், அதே எண்ணிக்கையிலான பயணிகள், தில்லியில் இருந்து நாள்தோறும் சென்னைக்கு வருகின்றார்கள்.
இந்த இரண்டு தொடர்வண்டிகளைத் தவிர, முழுமையும் குளிர்பதனப் பெட்டிகளுடன் இராஜ்தானி(தலைநகர்) எக்ஸ்பிரஸ் வாரத்தில் நான்கு நாள் ஓடுகிறது. திருக்குறள் எக்ஸ்பிரஸ், ஜம்மு-தாவி எக்ஸ்பிரஸ், சதாப்தி, கரீப் ரத் (ஏழைகளின் தேர்) உள்ளிட்ட வேறு பல தொடர்வண்டிகளும் சென்னை வழியாக தில்லிக்குச் செல்லுகின்றன.
ராஜ்தானி வண்டி, 27 மணி நேரப் பயணம். தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஏழு நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்வதால், 33 மணி நேரத்தில் தில்லிக்குப் போய்ச் சேருகிறது. 21 நிறுத்தங்களில் நின்று செல்கின்ற கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ், 36 மணி நேரத்தில் தில்லிக்குப் போகின்றது. அதனால், இந்த வண்டியில், வழியில் உள்ள நகரங்களுக்குச் செல்கின்ற பயணிகள், பகலில் நமது பெட்டியிலும் ஏறி உட்கார்ந்துகொண்டு நெருக்கடி தந்துகொண்டே இருப்பர். இவர்களை நாம் அனுமதிக்கக் கூடாது; இறங்கிச் செல்லும்போது, செல்போன் உள்ளிட்ட பொருள்கள் காணாமல் போகக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. மயக்க பிஸ்கெட் கொடுத்து நகைகள் கொள்ளை என்பது போன்ற இடையூறுகளும் உண்டு. எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறைந்த நிறுத்தங்களில் மட்டுமே நிற்பதால், தமிழ்நாடு எக்ஸ்பிரசில் இந்தத் தொல்லை குறைவு.
உணவு
சென்னை - தில்லிக்கு இரண்டு இரவு, ஒரு பகல் பயணம்.சென்னையில் வண்டியில் ஏறி அமர்ந்தவுடன், பணியாளர் வந்து கேட்பார். அவரிடம், மறுநாள் பகலில் மூன்று வேளை உணவுக்கும் சேர்த்து ஆர்டர் கொடுத்து விடலாம். வண்டிக்குள் கிடைக்கின்ற உணவு பரவாயில்லை. சிலர் அதை விரும்புவது இல்லை. வண்டி நிற்கின்ற நிலையங்களில் எல்லாம் இறங்கி, உணவுக்காக அங்கும் இங்கும் ஓடி அலைவார்கள். அந்த உணவு தரமாகவும் இருக்காது. எனவே, தொடர்வண்டியில் உணவை முடித்துக்கொள்வதே நலம். காஃபி, டீ நொறுக்குத்தீனிகள் விற்பனையாளர்கள் அடிக்கடி வந்து கொண்டே இருப்பர்.
செல்கின்ற வழியில்..
சென்னையில் இருந்து புறப்படுகின்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தொடர்வண்டி, சுமார் 50 கி.மீ. தொலைவு தமிழக எல்லைக்கு உள்ளே பயணித்து, ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முழுப்பகுதி (சுமார் 850 கி.மீ.) மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அரியாணா ஆகிய மாநிலங்களின் பகுதிகளைக் கடந்து, தில்லிக்குப் போய்ச் சேருகின்றது. வழியில், கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, வாரங்கல், சந்திரபூர், நாக்பூர், பினா, விதிஷா, ஹோஸங்காபாத், இடார்சி, போபால், குவாலியர், ஜான்சி, ஆக்ரா, ஃபரீதாபாத் ஆகிய நகரங்களைக் கடந்து செல்கின்றது.
ஆந்திர மாநிலத்தின் வடக்கு எல்லையில், பிரமாண்டமான இராமகுண்டம் அனல் மின்நிலையம், சிர்புர் காகஸ்நகர் - காகிதத்தொழிற்சாலை, மத்தியப்பிரதேச மாநிலத்தில் அசோகர் காலத்தில் நிறுவப்பட்ட ‘சாஞ்சி ஸ்தூபி’ ஆகியவற்றைப் பயண வழியில் காணலாம். மராட்டிய மாநிலத்தில் காந்தி அடிகள் நீண்ட காலம் தங்கி இருந்த ‘சேவா கிராம்’, வழியில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
கிருஷ்ணா (விஜயவாடா), கோதாவரி, நர்மதா, தப்தி போன்ற பெரிய ஆறுகளின் மீது அமைக்கப்பட்டு உள்ள நீண்ட பாலங்களின் வழியே செல்லும்போது, பெருக்கெடுத்து ஓடுகின்ற வெள்ளத்தைப் பார்க்கலாம். தமிழக ஆறுகளில் அத்தகைய வெள்ளத்தைப் பார்க்க முடியாது.
நாக்பூர்
தில்லிக்கும்-சென்னைக்கும் நடுவில் நாக்பூர் அமைந்து உள்ளது. மும்பை-கொல்கத்தா பயண வழித்தடத்திலும், மையமான நகரம் இதுதான். மராட்டிய மாநிலத்தின், விதர்பா பகுதியின் தலைநகர் இது. தமிழகத்தில் மதுரை போல, மராட்டியத்தில், மும்பைக்கு அடுத்த பெரிய நகரம் இது. ஆண்டுக்கு ஒருமுறை மராட்டிய மாநிலச் சட்டமன்றக் கூட்டத் தொடர் இந்த நகரத்தில் நடக்கின்றது. விதர்பா பகுதியைப் பிரித்து, நாக்பூரைத் தலைநகராகக் கொண்டு, புதிய மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
முதல் நாள் இரவு தில்லியில் இருந்து புறப்படுகின்ற தொடர்வண்டியும், சென்னையில் இருந்து போகும் தொடர்வண்டியும், மறுநாள் பிற்பகல் 2.00 மணி அளவில் நாக்பூரில் சந்தித்துக் கொள்ளும். விதர்பா பகுதியில் விளைகின்ற கமலா ஆரஞ்ச் பழங்கள், உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றது. நாக்பூர் தொடர்வண்டி நிலையத்தில், பெட்டி பெட்டியாக ஆரஞ்சு பழங்கள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதைப் பார்க்கலாம். ஆரஞ்சுப் பருவ காலங்களில், நாக்பூரை நெருங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே, இருபுறமும் பயிரிடப்பட்டு இருக்கின்ற ஆரஞ்சுச் செடிகளில் இருந்து ஆரஞ்சு வாசனை மூக்கைத் துளைக்கும். பருவ காலங்களில் குறைந்த விலைக்குக் கிடைக்கும். வாங்கிப் போட்டுக் கொண்டால், வழிநெடுகச் சுவைத்து மகிழலாம். விதர்பா கிரிக்கெட் சங்கத்தின் பழைய விளையாட்டு அரங்கம் இடதுபுறத்திலும், புதிய அரங்கம் வலதுபுறத்திலும் அமைந்து இருப்பதைக் காணலாம்.
மத்தியப்பிரதேச மலைகளில்..
பிற்பகல் மூன்று மணிக்கு மேல், மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு உள்ளே வண்டி நுழையும். மிக உயர்ந்த மலைப்பகுதியில், அடர்ந்த காடுகளுக்குள் வண்டி செல்லும்போது, இருபுறமும் இயற்கையின் எழிலைக் கண்டு இரசிக்கலாம். தேக்கு மரங்கள் பல்லாயிரக்கணக்கில் வளர்ந்து ஓங்கி நிற்கின்றன. வளைந்து நெளிந்து செல்லும் ஆறுகள், சிற்றோடைகள், குன்றுகளைப் பார்த்து ரசித்துக்கொண்டே போகலாம். சுமார் 15 க்கும் மேற்பட்ட சிறிய-பெரிய மலைக் குகைகளைக் கடந்து செல்லும். அவற்றுள் ஒருசில குகை வழிகள், இரண்டு கிலோமீட்டர்கள் நீளம் உள்ளது. சில இடங்களில், கடல் மட்டத்தில் இருந்து 2500 அடிகள் முதல் 3500 அடிகள் உயரமான மலைப்பகுதிகளைக் கடக்கின்றது. ஒவ்வொரு தொடர்வண்டி நிலையத்தின் பெயர்ப்பலகையிலும், அந்த நிலையம் கடல்மட்டத்தில் இருந்து எத்தனை மீட்டர் உயரமான பகுதியில் அமைந்து இருக்கின்றது என்ற குறிப்பைப் பார்க்கலாம். (MSL-Mean Sea Level).
பகுதியில்இரவு 7 மணிக்கு இடார்சி; 9 மணிக்கு போபால்; நள்ளிரவில் குவாலியர், ஜான்சி, ஆக்ரா கடந்து, அதிகாலையில் தில்லி போய்ச் சேரலாம்.
தலைநகர் விரைவு வண்டி
2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு அலுவலாக திடீரெனப் புறப்பட்டதால், தமிழ்நாடு, கிராண்ட் டிரங்க் ஆகிய விரைவு வண்டிகளில் இடம் கிடைக்கவில்லை. தலைநகர் விரைவு (ராஜ்தானி எக்ஸ்பிரஸ்) வண்டியில் பயணித்தேன். காலை 6.10 மணிக்கு, சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தில் புறப்படுகின்றது. முழுமையும் குளிர்பதனப் பெட்டிகளை மட்டுமே கொண்ட வண்டி இது. மூன்று வகுப்புகள் உள்ளன. இன்ஜின் தனியாகவும், அதை ஒட்டி ஜெனரேட்டர் பெட்டி ஒன்று தனியாகவும் உள்ளது. எனவே, இன்ஜினின் பளு குறைகின்றது, வேகமாக இழுத்துக் கொண்டு ஓடுகிறது.
இந்த வண்டி முழுவதும் விளம்பரங்கள் காணப்பட்டன. அதனால் வண்டியின் நிறமே மாறி இருந்தது. தொடர்வண்டிகளில் தனியார் விளம்பரங்களை அனுமதிப்பது என்ற முடிவால், கடந்த சில ஆண்டுகளாக, தொடர்வண்டித்துறைக்கு, எதிர்பாராத வகையில் புதிய வருவாய் வழிகள் கிட்டின. அதனால்தான், பயணிகள் கட்டணத்தைப் பல ஆண்டுகளாக உயர்த்தாமல் வைத்து இருக்கின்றார்கள்.
தமிழுக்கு இடம் இல்லை
இந்த வண்டியில், ஒவ்வொரு நிலையம் வருவதற்கு முன்பும், அந்த ஊரைப் பற்றிய சில வரிக் குறிப்புகளை, ஒலிபெருக்கியில் சொல்கின்றார்கள். ஆனால், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து, தில்லிக்கு ஓடிக்கொண்டு இருக்கின்ற இந்த வண்டியில், பெரும்பாலும் தமிழர்களே பயணிக்கின்ற இந்த வண்டியில், அறிவிப்புகள் முழுமையும், இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே சொல்கின்றார்கள். சென்னையில் இருந்து புறப்படுகின்ற லுப் தான்ஸா மற்றும் சிங்கப்பூருக்குச் செல்லுகின்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போன்ற உலகின் முன்னோடி விமான நிறுவனங்களின் விமானங்களில் கூடத் தமிழில் அறிவிப்புகளைச் சொல்லுகின்ற இந்தக் காலத்தில், இந்தியத் தொடர்வண்டித் துறையில் தமிழுக்கு இடம் இல்லை.
அது மட்டும் அல்ல, ஒவ்வொரு பெட்டியிலும் வண்டியின் பெயர்ப் பலகையில், மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டு இருக்கும் அல்லவா? ஆனால், ராஜ்தானி வண்டியின் அனைத்துப் பெட்டிகளிலும், தமிழ்ப் பெயர்ப்பலகையைக் கழற்றி வைத்து விட்டார்கள் என்பதைப் பார்க்கும்போது, ஏழு கோடி மக்கள் பேசுகின்ற தமிழ் மொழிக்கே இந்த நிலைமைதான் என்றால், இந்திய ஒருமைப்பாடு என்பது எங்கே இருக்கின்றது என்ற கேள்விதான் எழுகின்றது.
சேவையில் குறை இல்லை
நினைவு தெரிந்த நாள்முதல் இதுவரையிலும், இலட்சக்கணக்கான கிலோமீட்டர்கள் தொடர்வண்டிகளில் பயணித்து விட்டேன். ஆனால், ராஜ்தானி பயணம் எனக்கு முற்றிலும் புதுமையாக இருந்தது. பெட்டிகள் சற்றுப் பழமையாக இருந்தன. ஆயினும், பயணிகளுக்கான சேவையில், இதுவரை எனக்கு கிடைக்காத அனுபவங்கள் கிடைத்தன. தண்ணீர் பாட்டில் வாங்காமல் ஏறி விட்டோமே என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். ஆனால்,வண்டி புறப்பட்ட உடனேயே ஒரு தண்ணீர் பாட்டில் கொண்டு வந்து வைத்தார்கள். இந்த வண்டிக்கான கட்டணத்துடன் உணவும் சேர்ந்து விடுகின்றது. அதற்காகத் தனியாகப் பணம் செலுத்தத் தேவை இல்லை.
புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் இரண்டு பிஸ்கெட், காபியுடன் உபசரிப்பு தொடங்கியது. ஒவ்வொருவருக்கும் ஒரு ஆங்கில நாளிதழ் கொடுத்தார்கள். காலை உணவு, பின்னர் காபி. பின்னர், ஒரு மணி நேர இடைவெளியில் ஏதாவது கொண்டு வந்து தந்து கொண்டே இருந்தார்கள். பசி என்பதே தெரியாத அளவுக்கு, நிரம்பிய வயிறுடன் பயணம். உணவும் குறை சொல்ல முடியாது. ஓரளவுக்குத் தரமாகவே இருக்கின்றது. பகல்நேரப் பயணம் என்றாலும், களைப்பு இல்லை. நிறையப் படிப்பதற்கு நேரம் கிடைக்கின்றது. களைப்பு ஏற்பட்டால், இடையிடையே சற்றுக் கண்ணயர்ந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். கணினி இருந்தால், அலுவலகப் பணிகளையும் முடித்து விடலாம். வண்டி சீரான வேகத்தில் ஓடிக்கொண்டே இருக்கின்றது.
காற்றினும் கடுகிச் செல்லும் வேகத்தில்..
இந்தியாவில், தேசிய நெடுஞ்சாலையின் சில இடங்களில், 130 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் பயணித்து இருக்கின்றேன். ஆனால், தொடர்வண்டிகள் 90 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்வது இல்லை. இந்தியாவிலே அதிக வேகத்தில் செல்லும் வண்டி; காற்றினும் கடுகிச் செல்லும் ராஜ்தானி என்று சுமார் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே செய்தித்தாள்களில் வெளியான விளம்பரங்களைப் படித்து இருக்கின்றேன். அப்போது, இதன் வேகம், மணிக்கு 100 கிலோ மீட்டர் என்று சொன்னார்கள். இப்போது , இந்த வண்டி ஓடுகின்ற வேகத்தைப் பார்த்தபோது, 120 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் என்று கணித்தேன்.
தொடர்வண்டிகளில் பயணிக்கும்போது கதவு அருகில் நின்றுகொண்டும், சில வேளைகளில் அங்கேயே உட்கார்ந்து கொண்டும் இயற்கையை ரசித்தபடி செல்வது எனது வழக்கம். ஆனால், ராஜ்தானி வண்டியில், கதவைத் திறக்கவே அனுமதிக்கவில்லை. அப்படி இரண்டு முறை கதவைத் திறந்துகொண்டு நான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தபோது, பெட்டி உதவியாளர் வந்து கதவை மூடும்படிச் சொன்னார். முதலில் சற்று எரிச்சலாக இருந்தாலும், அதுவும் சரிதான் என்பதை உணர்ந்தேன். வண்டி ஓடுகின்ற வேகத்தில், தேவை இல்லாமல் கதவைத் திறந்துகொண்டு நிற்பதும் சரி அல்ல. திடீரென பிரேக் அடித்தால், சடாரென வெளியே விழுந்து விடுவோம். எனவே,பெட்டிக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டியதாயிற்று.
ஜப்பான் தலைநகர் டோக்யோவில் இருந்து, மணிக்கு, அடுத்த பெரிய நகரங்களுக்கு, 300 கிலோ மீட்டர் வேகத்தில், பத்து நிமிடங்களுக்கு ஒரு வண்டி ஓடுகின்றது என்பதையும், ஜப்பானிலும், பிரான்சிலும் 500 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுகின்ற தொடர்வண்டிகள் உள்ளன என்ற செய்திகளெல்லாம் நினைவுக்கு வந்தன. இந்தியாவில் இன்றுவரையிலும் ராஜ்தானிதான் வேகமாக ஓடுகின்ற வண்டி. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்ற சதாப்தி விரைவு வண்டிகளும், இந்த வேகத்தில் ஓடுகின்றன. அப்படி ஒரு வண்டி வந்தால், சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு, ஒன்றேகால் மணி நேரத்தில் போய்ச் சேர்ந்து விடலாம். ஆசைதான்! ஆனால், பெருமூச்சுதான் விட முடியும்.
ஜப்பான் அளவுக்கு வேகத்தில் ஓடுகின்ற வண்டிகள், இந்தியாவுக்கு வர இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது தெரியவில்லை. மக்கள் தொகையில் 120 கோடியைத் தாண்டி விட்ட இந்தியாவுக்குத்தான் அத்தகைய வேகமான வண்டிகள் ஏராளமாகத் தேவைப்படுகின்றன. இந்தியா இன்னும் வேகமாக இயங்க வேண்டுமானால், வேகமாக ஓடும் ரயில்களையும் உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும்.
எதிர்காலத்தில்..
அண்மையில், டிஸ்கவரி தொலைக்காட்சியில் பார்த்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. விண்வெளி இயலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் சொல்கின்ற கருத்துகள் ஒளிபரப்பாகின. பூமியை ஒருமுறை சுற்றிவர 40,000 கிலோ மீட்டர்கள் ஆகும். ஒரு வினாடியில் மூன்று முறை பூமியைச் சுற்றி வருகின்ற வேகத்தில், அதாவது வினாடிக்கு ஒரு லட்சத்து இருபது ஆயிரம் கிலோமீட்டர்கள் வேகத்தில் ஓடுகின்ற ஒரு தொடர்வண்டியில் ஏறி, ஏழு நாள்கள் பூமியைச் சுற்றி விட்டுக் கீழே இறங்கினால், அப்போது பூமியில் 100 ஆண்டுகள் கடந்து இருக்கும்; ஏராளமான புதிய கட்டுமானங்களுடன் பூமியின் தோற்றமே மாறி இருக்கும்; பயணியின் வயதில் ஒரு வாரம்தான் வடி இருக்கும். ஆனால், பூமியில் அந்தப் பயணியின் உறவினர்கள் எல்லோரும் இறந்து, அவர்களுடைய பேரன் பேத்திகளைத்தான் பார்க்க முடியும். கால இயந்திரத்தில் ஏறிச் செல்லுகையில், கடந்து போன நிகழ்வுகளைத் திரும்பப் பார்க்க முடியும் என்றெல்லாம் அவர் சொல்லிக்கொண்டே போனார். அதைக் காட்சிகளாகவும் ஆக்கிக் காண்பித்தார்கள்.
நம்புவதற்குக் கடினமாக இருந்தது. ஆனால், நடக்காது என்று சொல்வதற்கு இல்லை. ஏனெனில், இன்று நமது சாலைகளில் இவ்வளவு வேகத்தில் இத்தனை வண்டிகள் ஓடும் என்று, பத்தாவது நூற்றாண்டில் யாராவது எண்ணிப் பார்த்து இருப்பார்களா என்ன? இந்த நிகழ்ச்சியை நான் பார்த்த சில நாள்களுக்கு உள்ளாக, செய்தித்தாள்களில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. எதிர்காலத்தில் தொடர்வண்டிகள் எப்படி இருக்கும் என்பது, அதில் சித்தரிக்கப்பட்டு இருந்தது.
எந்தத் தொடர்வண்டி நிலையத்திலும் நிற்காமல், ஆனால் பயணிகளை இறக்கி விட்டு ஏற்றிச் செல்லக்கூடிய ஒரு வண்டி வடிவமைக்கப்பட்டு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. வேகமாக ஓடுகின்ற அந்தத் தொடர்வண்டியில் இருந்து குறிப்பிட்ட நிலையத்தில் இறங்க வேண்டியவர்கள் இருக்கின்ற பெட்டி, தனியாகக் கழன்று கொள்ளும்; அந்த நிலையத்தில் ஏற வேண்டியவர்கள் ஏற்கனவே ஏறி அமர்ந்து இருக்கின்ற பெட்டி, ஓடிக்கொண்டே இருக்கின்ற தொடர்வண்டியில் இணைந்து கொள்ளும்; வண்டி நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் என்பது பற்றிய காட்சிகள் அந்தக் கட்டுரையில் விளக்கிக் காட்டப்பட்டு இருந்தன.
விபரீதங்கள்
இந்தச் செய்திகளையெல்லாம், ராஜ்தானி ஓடுகின்ற வேகத்தில் மனதுக்குள் அசை போட்டுக்கொண்டே சென்றேன். நான் படித்த இரண்டு செய்திகள் நினைவுக்கு வந்தன. முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என். சேஷன், வேலை கிடைத்து, அறுபதுகளில் முதன்முறையாக தில்லிக்குச் சென்றபோது, அவருக்கு அருகே ஒரு பெரிய மனிதர் அமர்ந்து இருந்தாராம். சென்னையில் வண்டி புறப்படும்போது, இவர்கள் இருந்த முதல் வகுப்புக்கு உள்ளே, பிச்சைக்காரன் ஒருவன் ஓடி வந்து ஏறினானாம்.
சேஷனுக்கு அருகில் இருந்த அந்தப் பெரிய மனிதர் எழுந்து சென்று, இது முதல் வகுப்புப் பெட்டி, கீழே இறங்கு என்று சொல்லி, ஓடுகின்ற வண்டியில் இருந்து அவனை அப்படியே மிதித்து வெளியே தள்ளினாராம். இதைக்கண்ட சேஷன் அதிர்ந்து போனாராம். தில்லி போகின்றவரையிலும், அந்தப் பெரியவரைப் பார்க்கவே பயமாக இருந்தது என்று சேஷன் தமது தன் வரலாற்றுப் புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார். அப்படித் தள்ளியவர் யார் என்பதையும் குறிப்பிட்டு இருக்கின்றார். நான் அதை இங்கே குறிப்பிட விரும்பவில்லை.
கடந்த காலங்களில் இரண்டாம் வகுப்புப் பெட்டிகளில் பயணிக்கின்றபோது, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளின் நடைபாதைகளில், இராணுவ வீரர்கள் இடத்தை அடைத்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பதைப் பார்த்து இருக்கின்றேன். அவர்களுக்கு விடுமுறை கிடைப்பது கடினம். எனவே, அதை எதிர்பார்த்து முன்பதிவு செய்யவும் முடியாது. முன்பதிவு இல்லாத சாதாரணப் பெட்டிக்கு உள்ளே, அவர்கள் வைத்து இருக்கின்ற பெரிய பெட்டிகளுடன் ஏறவும் முடியாது. எனவே, இப்படி இரண்டாம் வகுப்புப் பெட்டியில் அமர்ந்து வருவார்கள். இடையூறாக இருந்தாலும், இரண்டாம் வகுப்புப் பயணிகளால் ஒன்றும் சொல்லவும் முடியாது. ஆனால், முன்பு அவர்களுக்கு எனத் தனியாகவே ஒரு பெட்டி இணைக்கப்பட்டு இருந்தது. அதில் மற்றவர்கள் ஏற முடியாது.
வட இந்தியாவில் எங்கோ ஒரு இடத்தில், வண்டி புறப்படும்போது ஓடி வந்த ஒரு பயணி, இராணுவ வீரர்களின் பெட்டியில் ஏற முயன்றபோது, உள்ளே இருந்த வீரர்கள் அவரை மிதித்துக் கீழே தள்ளிக் கொன்றதைச் செய்தித்தாள்களில் படித்த நினைவும் வந்தது.
அண்மையில், சங்கரன்கோவில் தொடர்வண்டி நிலையத்தில் நின்று கொண்டு இருந்தேன். தென்காசி செல்ல வேண்டிய வண்டி, ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது. பலத்த காயங்களுடன் ஒருவரை வண்டியில் இருந்து இறக்கி, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். கதவுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு பயணித்து வந்த அவர், இதமான காற்று முகத்தில் படுகையில், சுகமாகத் தூங்கி விட்டார். அப்படியே ஓடுகின்ற வண்டியில் இருந்து சரிந்து விழுந்து விட்டார். மேலே போய்ச் சேர்ந்து இருக்க வேண்டியவர், படுகாயங்களுடன் மருத்துவமனைக்குப் போனார்.
இப்படியான பல நினைவுகள் வந்து சென்றன. இதையெல்லாம் எழுதுவது உங்களை எச்சரிப்பதற்காகத்தான்.
வழக்கம்போலத்தான்..
சென்னையில் இருந்து தில்லி செல்லுகின்ற வழியில், கூடூர், நெல்லூர், ஒங்கோலை அடுத்த பெரிய நகரமான விஜயவாடா, சுமார் 400 கி.மீ. தொலைவில் உள்ளது. தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஏழு மணி நேரத்தில் கடக்கின்ற இந்தத் தொலைவை, ராஜ்தானி ஐந்தரை மணி நேரங்களில் கடந்தது. விஜயவாடா நகரில் ஆங்காங்கு மலைக்குன்றுகள் உள்ளன. முன்பு காலியாக இருந்த இடங்களில், இப்போது வீடுகள் முளைத்து விட்டன. மலையில் வீடு கட்ட, யார் பட்டா போட்டுக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அடுத்து ஐந்து ஆண்டுகள் கழித்துச் சென்றால், மலை முழுவதும் வீடுகளாக மாறிவிடுமோ என்னவோ?
மரங்களை வெட்டுங்கள்
மரம் வளர்ப்போம் என்று அரசாங்கம் வலியுறுத்திக்கொண்டு இருக்கின்ற வேளையில், மரங்களை வெட்டுங்கள் என்ற தலைப்பில், அண்மையில், எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்து இருந்தது. கருவேல மரத்தால் பயன்களை விடக் கேடுகளே அதிகம்; எனவே, அதை முற்றிலும் வெட்டி வீழ்த்துவோம் என்று கூறி இருந்தார்கள். தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் கருவேல மரங்களைப் பார்க்கலாம். ஆந்திராவிலும் அப்படித்தான். ஆனால், மராட்டிய மாநிலத்திலும், அதற்கு வடக்கிலும் அதிகமாகக் காண முடியவில்லை. இந்த மரத்தால் கேடுகள் அதிகம்; அகற்ற வேண்டும் என்றாலும்கூட, சமையல் எரிவாயு, மின் அடுப்புகள் வருவதற்கு முன்பு, இந்த மரம்தான், எரிபொருள் தேவைகளை இந்த மரங்கள்தான் நிறைவு செய்தன என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த மரத்தை, வேறு வழிகளில் பயன்படுத்த முடியுமா? என்பதையும் நாம் ஆராய வேண்டும்.
தில்லியில்..
விஜயவாடாவுக்குப் பிறகு, வாரங்கல், பல்லார்ஷா, நாக்பூர், போபால், ஜான்சி, குவாலியர், ஆக்ரா ஆகிய நிலையங்களில் மட்டுமே நின்றது. மறுநாள் காலை 10.20 மணிக்கு, தில்லியின் ஹஜ்ரத் நிஜாமுத்தீன் நிலையம் சென்று சேர வேண்டும். ஆனால், தில்லிக்கு மிக அருகில் சென்றபின்னர், நின்று விட்டது. சுமார் ஒன்றரை மணி நேர தாமதத்துக்குப் பின்னர்தான், நிஜாமுத்தீனுக்கு உள்ளே நுழைந்தது. எவ்வளவுதான் வேகத்தில் வந்தாலும், எப்படியும் தாமதம் ஆக்கி விடுவது, இந்தியத் தொடர்வண்டித் துறையின் சாபக்கேடு. இந்த நிலை எப்போது மாறும் என்று தெரியவில்லை.
குளிர்பதனப் பெட்டியில் இருந்து வெளியே வந்தால், தில்லி அதைவிடவும் குளிர்ச்சியாக இருந்தது. குளிர்காலத் தொடக்கம். வியர்வை இல்லை. எனவே, களைப்பு இல்லை. பொதுவாகவே வட இந்தியா முழுமையும், குளிர் தாக்கும் என்பதால், குளிர் மற்றும் கோடை காலங்களில் வாழ்க்கை முறை அப்படியே மாறி விடுகின்றது. மக்களின் உடைகள், உணவு மற்றும் பழக்கவழக்கங்களும் மாறி விடுகின்றன. அதை நான் தில்லியில் இருந்தபோது பார்த்து ரசித்து இருக்கின்றேன். நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலும், மூன்றாம் வகுப்பில் தில்லிக்குப் பயணிப்பவர்கள், சாக்ஸ்,ஸ்வெட்டர் அணிந்து, மூடுவதற்குக் கம்பளிகள் எடுத்துக்கொண்டு செல்வது நலம்.
சோதனைகள்
சென்னைக்கும் தில்லிக்குமான எனது பயணங்களில், எத்தனையோ அனுபவங்கள் கிடைத்தன. ஒருமுறை, ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் புயல் மழை வெள்ளத்தால், தில்லியில் இருந்து வரும்போது, ஹைதராபாத் வழியாகத் திருப்பி விட்டார்கள். மேலும் ஒன்றரை நாள் தாமதத்தில் சென்னை வந்து சேர்ந்தேன்.
மற்றொருமுறை, டெல்லியில் இருந்து வரும்பொழுது, ஏதோ ஒரு கட்சி, தில்லியில் நடத்திய பேரணிக்காக வந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், தமிழ்நாடு விரைவு வண்டியில் எல்லாப் பெட்டிகளிலும் ஏறி, படுக்கைகளிலும் வழியிலும் அமர்ந்து கொண்டார்கள். அவர்களை இறக்காவிட்டால், வண்டியை இங்கிருந்து எடுக்கக் கூடாது என்று நான் போராட்டத்தைத் தொடங்கினேன். முன்பதிவு செய்து இருந்த பயணிகள் எல்லோரும் என்னுடன் சேர்ந்து கொண்டார்கள். இதற்குள் வண்டி புறப்பட முயன்றது. யாரோ ஒருவர் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து விட்டார். வண்டி நின்று விட்டது. ஒரே கூச்சல், குழப்பம். பின்னர், நூற்றுக்கணக்கான காவலர்கள் வந்து, அந்தத் தொண்டர்களை வண்டியில் இருந்து இறக்கி, வேறு வண்டியில் செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். எல்லாவற்றையும், ஒரே கட்டுரையில் எழுதிவிட முடியாது. தில்லி மற்றும் வட இந்திய வாழ்க்கையைப் பற்றித் தனியாக எழுதுகிறேன்.
சென்று வாருங்கள் தில்லிக்கு...
தமிழ்நாட்டுக்கு உள்ளே எந்த இடமாக இருந்தாலும், ஒருநாள் இரவுப் பயணத்தில் கடந்து, பொழுது புலருவதற்கு முன்பாகவே, போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்து விடலாம். ஆனால், சென்னையில் இருந்து முதன் முறையாக தில்லி செல்பவர்களுக்கு, நீண்டதொலைவுப் பயணம் என்பதால், உலகின் எங்கோ ஒரு மூலைக்குப் போவது போலத் தோன்றும்.
மாநிலத்துக்கு மாநிலம் மண்ணின் நிறத்திலும், கற்களின் நிறத்திலும், ஏன் மனித உருவங்களிலும் உடைகளிலும் கூட மாறுதல்கள் இருப்பதை நன்கு பார்த்து உணரலாம். பல புதிய அனுபவங்களைப் பெறலாம். பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகிப் பேசுவதால், நம் பார்வையும் விரிவு அடைவதை உணரலாம். சென்று வாருங்கள் தில்லிக்கு!
- அருணகிரி (