சனாதனப் பெருமைப் பேசி வந்த தமிழக ஆளுநர் ரவி இப்போது திடீரென்று தமிழ்நாட்டில் தலித் மக்கள் உரிமைகளுக்காக கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கிறார். இது தான் ‘திராவிட மாடல் ஆட்சியா?’ என்று மேடைப் பேச்சாளர் போல் நக்கலடித்தும் இருக்கிறார். ஆளுநர் ரவி புரோகித - வைதீக வட்டாரங்களிலும் ஆகமக் கோயில்கள் சடங்குகளிலும் பங்கேற்கும் சனாதனவாதியாகவே செயல்பட்டு வரும் நிலையில் இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்து நிற்கிறது. ஆளுநர் முதலில் சில அடிப்படையான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.

1.         ஆளுநர் பேசும் சனாதனம் என்ற ‘வர்ணாஸ்ரமம்’ தான் ஜாதிக்கும் தீண்டாமைக்கும் ஆணிவேர் என்பதை ஆளுநர் மறுக்க முடியுமா? சனாதனத்தைப் போற்றிக் கொண்டு தீண்டாமைக்கு எதிராகப் பேசுவது இரட்டை வேடமல்லவா?

2.         இந்து மதம் - இந்து தர்மம் என்பவை இந்தியா தோன்றுவதற்கு முன்பே வந்து விட்டது என்று பேசிய ஆளுநர் அவர்களே! அதே ‘இந்து தர்மம்’ தானே மனிதர்களுக்குள் ஜாதியையும் தீண்டாமையையும் திணித்து வைத்திருக்கிறது. தலித் மீது வன்கொடுமை நடத்துவது யார்? அவர் ஒரு சனாதன இந்து; ஒவ்வொரு நாளும் அடக்குமுறைகளைச் சந்திக்கும் ‘தலித்’துகள் யார்? அவர்களும் உங்கள் பார்வையில் ‘இந்து’; இந்துவே இந்து மீது வன்கொடுமை நடத்துவதை நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை? ஏன், ஓடி பதுங்குகிறீர்கள்?

3.         குடிநீர்த் தொட்டியில் மலத்தைக் கொட்டிய காட்டுமிராண்டி ஜாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளில் தமிழக அரசு சி.பி.சி.அய்.டி. விசாரணை வழியாக தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறது. அதற்காக நீங்கள் குரல் கொடுப்பதும் நியாயம் தான். ஆனால், மலம் எடுப்பதற்காகவே ஒரு ஜாதியை உருவாக்கியது நீங்கள் பேசும் சனாதன இந்து தர்மம் தானே? அது மாறாதது - நிலையானது என்று பெருமை பேசுவதும் நீங்கள் தானே? மலம் எடுப்பவர்கள் தெய்வத்துக்கு ஈடான தொண்டினை செய்கிறவர்கள் என்று அதைப் புனிதப்படுத்திப் பேசியவர் நீங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் மோடி என்பதை மறுக்க முடியுமா?

4.         ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று ஆளுநர் கிண்டலடிக்கும் தமிழ் நாட்டில் தான் வறுமைக்கோட்டின் கீழே வாழும் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களின் எண்ணிக்கை 9 சதவீதம். ஏனைய திராவிட மாடல் அல்லாத ஆட்சி நடக்கும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் தலித் பழங்குடி மக்களின் சராசரி 74 சதவீதம் இதை உங்களால் மறுக்க முடியுமா?

5.         பல்லாயிரம் ஆண்டுகளாக பார்ப்பனிய பாசிசமான வர்ணாஸ்ரமக் கொடுமைகளைச் சுமந்து சீரழிந்த மக்களின் விடுதலைக்கும் உரிமைக்கும் பார்ப்பனரல்லாத திராவிட இயக்கம் முன்னெடுத்த போராட்டங்கள் நிறைவேற்றிய திட்டங்கள் மற்றும் அமுலாக்கிய கல்விப் புரட்சியால் தான் இந்த சாதனை நடந்தது என்பதை ஆளுநரால் மறுக்க முடியுமா?

6.         தலித் பட்டியலினப் பிரிவுகள் தங்கள் மீது ஜாதி ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் பிரிவினரிடமிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு அவர்கள் சுதந்திரமாக செயல்படக் கூடிய உரிமை திராவிட ஆட்சியில்தான் நடக்கிறது என்பதும், அதற்காக இந்த ஆட்சி உருவாக்கிய உணவுப் பாதுகாப்பு உரிமை, இடஒதுக்கீடு சட்டங்கள் பாதுகாப்பு அரணாக இருக்கிறது என்பதையும் உங்களால் மறுக்க முடியுமா?

7.         வன்கொடுமைகளை இயல்பான வாழ்க்கையாக சகித்துக் கொண்டு வாழப் பயிற்றுவிக்கப்பட்ட மக்களாக உங்களின் ‘வடநாட்டு இந்தி இந்துத்துவா புண்ணிய’ப் பகுதிகள் இருக்கும்போது அதை ஏற்க மாட்டோம் என்று ஒவ்வொரு நாளும் போராட்டக் களத்துக்கு வரும் சூழ்நிலை ‘தலித்’ பழங்குடி மக்களுக்கு திராவிட மண்ணில் மட்டுமே இருக்கிறது என்பது எதைக் காட்டுகிறது?

8.         சங்கரமடங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் பிரதமர் அலுவலகத்திலும் வெளிநாட்டு இந்திய தூதரகங்களிலும் நாட்டின் பொருளாதாரக் கொள்கையை நிர்யணிக்கக் கூடிய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களிலும், அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற உயர்கல்வியிலும் அங்கு பணியாற்றும் பேராசிரியர்களிலும் தலித் புறக்கணிப்பும் தீண்டாமையும் நிலவுவது ஆளுநருக்கு தெரியாதா?

9.         கோயில் கர்ப்பகிரகத்தில் நுழைந்து வழிபாடு செய்வதிலும், கும்பாபி ஷேகம் நடத்துவதிலும், ஆளுநருக்கு ஆசி வழங்கும் புரோகிதர்களிலும் ‘தீண்டாமை’ நிலவுவதையும் மறுக்க முடியுமா? தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த இடங்களை எட்டிப் பிடிப்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியுமா? இவற்றை யெல்லாம் ஆளுநர் கண்டிப்பாரா?

இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆளுநர் பா.ஜ.க.வின் மேடைப் பேச்சாளராக மாறுவது அவரது கருத்துரிமை என்று வாதாடும் அவரது வழக்கறிஞர்களுக்கு ஒரு கேள்வி. அரசியல் சட்டத்தின் மாநில தலைமையாகக் கருதப்படும் ஆளுநர், இந்தக் கருத்துகளை யாரிடம் முறையிடுகிறார்? அவர் பேச வேண்டிய அரசிடம் தானே தவிர, பொது நிகழ்ச்சிகளிலா?

“பிராமணர்கள் பிரம்மயக்ஞம் செய்து பாவங்களைப் போக்கிக் கொள்ள முடியும்; நாடார்களாகிய நீங்கள் எந்தப் பாவத்தையும் செய்ய உரிமை உண்டு. பிராமணர்களுக்கு அமாவாசை நாளில் தட்சணைக் கொடுத்தால் போதும்; அந்த உரிமை உங்களுக்கு உண்டு. ஆனால் பிரம்மயக்ஞம் செய்து பாவங்களைப் போக்கிக் கொள்ளும் உரிமை (சூத்திரர்களாகிய) நாடார்களுக்கு இல்லை. எங்களுக்கு மட்டுமே உண்டு” என்று கோவை ‘பிராமண சங்கக் கூட்டத்தில் திருச்சி கல்யாணராமன் பேசிய வீடியோ, வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்தத் தீண்டாமை வெறிக்கு எதிராக ஆளுநர் பொங்கி எழுவாரா?

- விடுதலை இராசேந்திரன்

Pin It