எதிர்த்த ஊர் மக்களே மேளதாளத்துடன் வரவேற்பு

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள வடுகபாளையத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ஊர்ப் பொதுமக்கள் சுடுகாடு கேட்டு போராடி, இறந்த உள்ளூர்க்காரரின் உடலை நடுரோட்டில் வைத்து சாலை மறியல் செய்த காரணத்தால், 43 பேர் கைது செய்யப்பட்டு சிறைப் படுத்தப்பட்டனர். இதில் திராவிடர் விடுதலைக் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, விடுதலை வேங்கைகள், தற்சார்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட இயக்கங்கள் களப்பணி ஆற்றி, மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் மூலமாக, கடந்த 6 ஆண்டுகளாக பெருந்துறை நீதிமன்றத்தில் வழக்கு நடை பெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 43 பேரும் கடந்த 27.12.2019 அன்று பெருந் துறை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில், எவ்வித கட்டணமும் வாங்காமல் வாதாடி விடுதலை பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் ப.பா மோகன் மற்றும் இந்தப் பிரச்சனையில் உதவிக்கரம் நீட்டிய அமைப்புகளுக்கும், அமைப்பின் பொறுப்பாளர்களுக்கும் பாராட்டு விழா 25.01.2020 சனிக்கிழமை மாலை வடுகபாளையத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த வழக்கறிஞர் ப.பா. மோகன் மற்றும் .கொளத்தூர் மணி ஆகியோரை ஊர் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு நின்று, ஊர் எல்லையில் வானவேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். ஊர் எல்லையில் இருந்து விழா நடக்கும் இடம் வரை, வாழ்த்துகள், பாராட்டுகள், நன்றிகள் கோசங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர் .

விழா நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ஊர்மக்கள் சார்பாக காவல் துறையிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை வாங்காமல் இறுதிவரை தட்டிக் கழித்த காவல்துறையினர் நிகழ்விற்கு முந்தைய நாள் விழாவிற்கு என மேடை அமைக்கக் கூடாது; ஒலிபெருக்கி வைக்கக் கூடாது; மீறி நடந்தால் மீண்டும் வழக்கு போட்டு கைது செய்வோம் என்று மிரட்டினர்.

இந்நிலையில் விழா நடந்த அன்று மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் காவல்துறை ஆய்வாளரிடமும், காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, அவர்களும் அனுமதி அளிக்க மறுத்தனர். பிறகு, மேடை இன்றி, ஒலிபெருக்கி இன்றி விழா நடத்தப்பட்டது. முன்னாள் வார்டு உறுப்பினர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். சிறை சென்ற பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார் .

 இந்த ஊரை சார்ந்த ஆசிரியர் சிவக்குமார் வரவேற்றுப் பேசினார். தனது உரையில், மக்கள் பெரியாரை கடவுள் மறுப்பாளராக மட்டும் பார்க்க கூடாது என்றும், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தந்தை பெரியார் ஆற்றிய பணிகள் குறித்தும், கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கு கடந்து வந்த பாதை குறித்தும், இந்த வழக்கின் வெற்றியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பங்கு குறித்தும் விவரித்து பேசினார். அமைப்பு செயலாளர் இரத்தினசாமி இந்த வழக்கு பற்றி உரையாற்றினார்.. புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த செல்வராஜ், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தை சார்ந்த கி.வே.பொன்னையன், விடுதலை வேங்கைகள் கட்சியைச் சார்ந்த தமிழின்பன் ஆகியோர் உரையாற்றினர்.

விழாவில் ப.பா. மோகன் மற்றும் அவரது ஜூனியர் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் ஆகி யோருக்கு பயனாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

 வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு ஊர்மக்கள் சார்பில், முக்கால் பவுன் தங்க மோதிரமும், பாலகிருஷ்ணனுக்கு வெள்ளியிலான பிரேஸ்லெட்டும் ஊர்மக்கள் சார்பாக வழங்கப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் வழக்கில் உதவிய அமைப்புகளை சார்ந்த தோழர்களுக்கும் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் படம் பொறித்த நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

வழக்கறிஞர் ப.பா. மோகன் தனது ஏற்புரையில், “இந்த வழக்கு தன்னிடம் வந்த விதம் குறித்தும், இந்த வழக்கில் திராவிடர் விடுதலை கழக தோழர்களின் பங்கு குறித்தும் , வழக்கு விசாரணைகள் பற்றிய விபரங்களையும்” எடுத்துரைத்தார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசும்போது, “இன்றைக்கு பார்ப்பனியம் என்பது ஆதிக்க பார்ப்பனர்களிடம் மட்டும் இல்லை.அது அனைவரிடத்திலும் விரவிக் கிடக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக அருந்ததியர் சமூகத்தை சார்ந்த பெண்ணை ஆதிதிராவிடர் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் காதலித்ததால் ஏற்பட்ட கொலையை சுட்டிக்காட்டிப்” பேசினார். இன்றைய சூழ்நிலையில் தந்தை பெரியாரின் தேவைகள் பற்றி மிக விரிவாக எடுத்துரைத்தார். இறுதியாக வழக்கில் சிறைப்பட் டிருந்த தோழர்.சதீஷ் நன்றி கூறினார்..

 நிகழ்வில் சுற்று வட்டாரங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டிருந்தனர். அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, பெரியார் திராவிடர் கழகமாக நாம் செயல்பட்ட போது, இந்தப் பகுதியில் கூட்டம் நடத்த முனைந்தபோது, ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை வரை சென்றனர்.இருப்பினும் நாம் தோழர்.

கொளத்தூர்மணி சிறப்புரையோடு விழாவினை நடத்தினோம். அன்று எதிர்ப்பு தெரிவித்த அதே ஊர் மக்கள் இன்றைக்கு மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கைகளோடு நமது தோழர்களை வரவேற்று அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், இவ்வூரில் பெரியாரின் கருத்துக்களை பேசக்கூடிய, ஏற்றுக் கொள்ளக்கூடிய இளைஞர்கள் உருவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தனக்கு பரிசாக வழங்கிய மோதிரத்தை கழகத்துக்கு அளித்தார் ப.பா. மோகன்

இந்த விழாவில் ஒரு சிறப்பு நிகழ்வாக வழக்கறிஞர் ப.பா. மோகன், தனக்கு ஊர் மக்கள் சார்பாக அளிக்கப்பட்ட தங்க மோதிரத்தை, இந்த வழக்கில் நான் கருஞ்சட்டைத் தோழர்களின் வேண்டு கோளுக்காக வாதாடினேன். எனவே, இதுவரை களப்பணியாற்றி பாடுபட்ட திராவிடர் விடுதலை கழகத்திற்கே இந்த மோதிரத்தை வழங்குகிறேன்” என்று கூறி மக்களுடைய கரவொலிக்கிடையில் கழக வளர்ச்சி நிதிக்காக கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் அளித்தார்.

Pin It