சுவாசிக்கும் காற்றைப் போல எல்லா நேரமும் மின்சாரத்தின் தேவை இன்றியமையாததாயிருக்கிறது. ஆனால் அண்மைக்காலங்களில் மின்வெட்டு தொடர்கதையாகி மக்களை தவிக்கவிட்டிருக்கிறது. மக்களைப் பாதிக்கும் எந்தப் பிரச்சனை என்றாலும் குரல் கொடுப்பதுபோல் காட்டிக்கொள்ள எந்த ஓட்டுக்கட்சியும் தயங்கியதில்லை. இதிலும் அவ்வாறே, போராட்டத்திலிருந்து அறிக்கைவிடுவது வரை ஒவ்வொரு நாளும் நாளிதழ்களை நிறைக்கின்றன. ஆனால் ஓட்டுக்கட்சிகள் மட்டுமல்லது வர்த்தக அமைப்புகளும், தொழில் நிறுவனங்களும் கூட போராட முன்வந்திருக்கின்றன. அந்த அளவுக்கு மின்வெட்டு அனைத்து தரப்பினரையும் பாதித்திருக்கிறது. குற்றச்சாட்டுகளும், புள்ளிவிபர பதில்களும் இதற்கு தீர்வாகுமா?

தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 9300 மெ.வா. மின்சாரம் தேவைப்படுகிறது மொத்த உற்பத்தித்திறனோ 12000 மெ.வா பின் ஏன் பற்றாக்குறை? ஆயத்தமாய் ஒரு பதிலுண்டு, பருவமழை பொய்த்துவிட்டது. கற்று வீசாததால் காற்றாலை மின்னுற்பத்தி குறைந்துவிட்டது அதனால் பற்றாக்குறை. அனைத்து அணைகளிலும் போதுமான அளவு நீர் இருந்தும் நீர்மின் நிலையங்களில் உற்பத்தி போதுமான அளவில் இல்லை. காரணம், தொடர்ச்சியான பராமரிப்பின்மையால் இயந்திரங்கள் அதன் திறனை இழந்துவிட்டன. அனல் மின்னிலையத்திலோ ஊழியர்கள் வேலை நிறுத்தம். அதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. காற்றாலையோ நிலையானதல்ல. காரணங்கள் மட்டும் போதுமானதல்லவே. அரசின் செயல்பாடுகள் என்ன?

அன்னிய முதலீட்டை மாநிலத்திற்குக் கொண்டுவருகிறோம் என்று தினம் ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்படுகிறது. அந்த ஒப்பந்தங்களில் தடையற்ற மின்சாரம் முக்கிய நிபந்தனையாக இருக்கிறது. ஆனால் சிறு குறுந்தொழில்களுக்கோ வாரத்தில் ஒரு நாள் விடுமுறை விடுங்கள் என்றும் இரவில் பயன்படுத்தவேண்டமென்றும் ஆலோசனைகள் கூறப்படுகின்றன. மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கும் மாணவர்கள் படிப்பதற்கும் மின்தடையால் சிரமப்பட்டுக்கொண்டிருகும்போது விளம்பரப்பலகைகளின் வெளிச்சம் கண்களை கூசச்செய்கிறது. சென்னை போன்ற மாநகராட்சிகளில் ஒரு மணி நேரம் நகராட்சிகளில் மூன்று மணி நேரம் கிராமப்புரங்களிலோ ஐந்து மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு, அறிவிக்கப்படாதவற்றிக்கு கணக்கில்லை. கடந்த 17 ஆண்டுகளில் மின்னுற்பத்திக்காக ஒதுக்கப்படும் நிதி 40 விழுக்காடு வரை வெட்டிக்குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் மின்சாரத்துறை அமைச்சரோ மத்திய தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் கேட்டுப் பெற்றிருக்கிறோம் என்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் மின்சாரத்தேவை கூடிக்கொண்டிருக்கையில் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை புதிய மின் திட்டங்கள் பயன்பாட்டுக்கு வர நீண்ட காலம் ஆகும் என்பதால் அதன் பலன் அடுத்ததாக வரும் கட்சியின் ஆட்சிக்குப் போய்விடும் என்பதால் மட்டும் தானா? அண்மையில் 20000 மெ.வா அளவிற்கு மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்துக்கொள்ள தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் தான் அதற்கான பதில் அடங்கியுள்ளது. அரசு புதிதாக மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கவோ, ஏற்கனவே உள்ளவற்றை பராமரிக்கவோ வேண்டியதில்லை, தனியார் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். மராட்டிய என்ரான் அனுபவத்திற்குப் பிறகும் இப்படி முடிவெடுக்கமுடியும் என்றால் ஆட்சி செய்வது யாருக்காக?

தமிழ்நாடு மின் வாரியத்திடம் மின் நிலையங்களைப் பராமரிப்பதற்கு மட்டுமல்ல மின்மாற்றிகளை (transformer) செப்பனிடக்கூட பணமில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை கடனில்லாமல் இருந்த மின் வாரியத்திற்கு தற்போது மூவாயிரம் கோடி கடன் எப்படி வந்தது? வெறும் 9 விழுக்காடு பங்களிப்பை தந்த தனியார் நிறுவனங்களுக்கு மொத்த வரவில் 45 விழுக்காடு விலையாக வழங்கப்பட்டுள்ளது. நெய்வேலி என் எல் சியிலிருந்து 2.30 க்கு வாங்கப்படும் ஒரு அலகு (unit) மின்சாரம் தனியாரிடம் 5.40க்கு வாங்கப்படுகிறது. என் எல் சி யில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், பணி நேரத்தில் உயிர் பாதுகாப்பு இவைகளுக்காக போராடி வருகிறார்கள். அவர்களை தேசிய நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கை என்று மிரட்டுகிறது நிர்வாகம். உழைப்பனுடன் பகிர மறுக்கப்படும் பணம் யாரிடம் சேர்கிறது? தனியார் மயம் என்பதன் பொருள் இது தான். நாளை மின் உற்பத்தி மொத்தமும் தனியார் கைகளில் செல்லும்போது அவர்கள் விலையை உயர்த்தும் போதெல்லாம் மக்கள் தங்கள் சொந்த உடலுழைப்பின் மூலம் பெறும் பணத்தை இழக்கவேண்டியதிருக்கும், அதாவது மக்களிடமிருந்து பணத்தை பிடுங்கி தனியார் முதலாளிகளுக்கு கொடுக்கும் தரகராக அரசு செயல்படும்.

இது அரசாங்கத்தின் கொள்கை. நமக்கு சம்மந்தம் இல்லாதது, நமக்குப் புரியாதது என்று இருந்துவிட முடியுமா? இதற்கெதிராக போராடாமல் நமக்கான வாழ்வுதான் கிடைக்குமா?

- செங்கொடி

Pin It