உடைந்த உறக்கத்தில் உசுப்பேற்றிய
உன் நினைவுகளில் தவிக்கிறேன் ஏகாந்தமாய்.
உன்மத்த கிறக்கத்தில்
சிவந்த விழிகளில் காமம் வழிய கொஞ்சும்
குரலில் தாபம் குழைய.

பனிக்காலக் குளிரில் தனித்த உன் அவஸ்தையை
அறிவேனெனினும் தடுக்கிறது ஸ்தூல தூரம்;
உரையாடல்களின் வைர ஜொலிப்பில் மடியில்
கிடக்கும் உணர்வு உறவுகளைப் பிரிக்க ஏலுமோ தூரம்?

குயில்முட்டைகளை அடைகாக்கும் காகமாய்
என் முத்தங்களை அடைகாக்குமுனக்கு
தரப்போவதில்லை இனித் தொலைபேசி முத்தங்கள்
இதழ்களை ஈரமாக்கி காத்திருக்கிறேனுன் வருகைக்காக.

காத்திருக்கின்றன என்னோடு தோட்டத்துப் பூக்கள்;
அடுக்களை மேடை, குளிர்தரை, நமக்கு ராசியான
முத்தமூலை, மெல்லிய சப்தமிடும் கட்டில்... வா!

இரகசியங்களின் சூக்குமத்தோடு காத்திருக்கிறதென்
அந்தப்புரம், உன் தேர்வரும் திசை பார்த்து தவமிருக்கின்றன
நீ முதலில் முத்தமிடும் நயனங்கள் பசியோடு காத்திருக்கிறேன்
பரிமாறுவதற்கு, தலைப்பில்லாக் கவிதைகளோடு
வெண்ணெயாய்க் குழைந்தவளை வெப்பத்தால் நெய்யாக்கு.

நீண்ட நாளாய் நீ விரும்பிய வாசனைத் திரவியத்தை
வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால் வரும்போதுன்
சொந்த சுகந்தத்தோடு வா! வா!

- அன்பாதவன்

Pin It