மக்களின் அறியாமையையும் மூடநம்பிக்கையையும் பயன்படுத்தி வெளி வந்த இதழ்களுள், ‘பாரத தேவி’ என்ற சோதிட இதழும் ஒன்றாகும். இந்நூலின் 16.8.1947-ந் தேதி இதழில் காந்தியைப் பற்றி, ‘புகழ் பெற்ற’ சோதிடரான வி.கே. கிருஷ்ணமாச்சாரி என்பவரால் ஒரு சோதிடக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

“காந்தியடிகள் பிறந்தது சிம்ம லக்கனம், மக நட்சத்திரம். விடியற்காலம் மக நட்சத்திரத்தில் ஜனித்தவர்களுக்கு தீர்க்காயுள் யோகம் உண்டு. இதேபோல் சிம்ம லக்கனமும் நீண்ட ஆயுள் தரக் கூடியது.” “மேலும் ஜன்ம லக்கனம், சிம்மமாகவும், அதில் சந்திரன் ஆயுள் ஸ்தானாதிபதியான குரு தசம கேந்திரத்தில் நின்று லக்னாதிபதியான சூரியனையும், ஆயுள்காரனாகிய சனியையும் பார்ப்பதனாலும் பரமாயுள் என்ற கணக்கான 120 வருஷங்கள் மகாத்மாவுக்கு ஆயுள் உண்டு. “தவிர, முன் காலத்தில் தப சிரேஷ்டர்களான ரிஷீஸ்வர்கள் தமது தபோ மகிமையால் ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஜீவித்ததுபோல் காந்தியடிகள் தமது தெய்வ பிரார்த்தனையால் ஆயுள் விருத்து செய்து கொண்ட ஜாதக ரீதியாக ஏற்படும் பரமாயுள் 120 வருஷங்களுக்கு அதிகமாகவே ஜீவித்திருப்பாரென்பது எனது திடமான அபிப்பிராயம்.”

ஒரு பார்ப்பனன் கணித்த இந்த சோதிடத்தை இன்னொரு பார்ப்பனனே அழித்து விட்டான் என்பதை நாம் வரலாறு மூலம் அறியலாம். காந்தி 2.10.1869இல் பிறந்தார். கோட்சே என்னும் மதவெறிப் பார்ப்பனன் அவரை சுட்டது 30.1.1948இல். காந்தி 781/2 ஆண்டுகள்தான் உயிருடன் இருந்தார்.

வி.கே. கிருஷ்ணமாச்சாரியார் என்ற ‘புகழ் பெற்ற’ சோதிடரின் கணிப்புப்படி மேலும் 40 ஆண்டுகள் உயிருடன் இருந்திருக்க வேண்டிய காந்தியாரை மத வெறியன் சுட்டுக் கொன்றுவிட்டான். காந்தியின் சோதிடத்தைக் கணித்த சோதிடன் முதற்கொண்டு எந்த சோதிடனும் இந்த நாளில் இப்படி ஒரு ஆபத்து ஏற்படும் என்று முன்கூட்டியே கூறவில்லை. தெய்வ பிரார்த்தனையால் 120 வருடங்களுக்கு மேலாகவே வாழ வேண்டியவரை, தெய்வம் ஏமாற்றி விட்டு, அவரை தம் ‘திருவடி’ நிழலுக்கு அழைத்துக் கொண்டுவிட்டதே! பொய்யான காந்தியின் சோதிடத்தைப்போல் பல சோதிடங்களை உதாரணமாகக் காட்ட முடியும்.

Pin It