தமிழ்ப் புத்தாண்டை ஜெயலலிதா மாற்றியது கண்டனத்துக்குரியது

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ‘சித்திரை’ தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்திருப்பது, அவரது பார்ப்பனிய இந்துத்துவ ஈடுபாட்டைத்தான் வெளிப்படுத்துகிறது. பெரியார் திராவிடர் கழகம் இந்த மாற்றத்தை வன்மையாக எதிர்க்கிறது. சித்திரை தான் தமிழ்ப் புத்தாண்டு என்பது அறிவியலுக்கு எதிரானது.

தமிழர் கொண்டாடிய தை புத்தாண்டு, சித்திரைக்கு மாறியது எப்படி? குப்தர் வம்சத்தில் வந்த இரண்டாம் சந்திர குப்தன் தனது பெயரை விக்கிரமாதித்தன் என்று மாற்றிக் கொண்டு - தனது பெயரால் ‘விக்கிரம சகம்’ என்ற ஆண்டு முறையை உருவாக்கிக் கொண்டான். வானவியலை அறிவியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்த ஆரியபட்டருக்கு எதிராக வானவியலில் - சாதகம், சோதிடத்தைப் புகுத்தும் முயற்சிகள் அவனது காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. எனவே வானியல் சிந்தனையாளர் ஆரியபட்டர் புறக்கணிக்கப்பட்டு, பழமையில் ஊறியவரான மிகிரர் உயர்த்திப் பிடிக்கப்பட்டார். அப்படி விக்கிரமாதித்தன் உருவாக்கிய ‘விக்கிரம சகம்’ எனும் ஆண்டு முறையில் சித்திரை முதல் நாளே ஆண்டின் முதல் நாளாக்கப்பட்டது. ‘விக்கிரம சகம்’ 60 ஆண்டுகளை வரையறுத்தது. ‘பிரபவ’ ஆண்டில் தொடங்கி ‘அட்சய’ ஆண்டில் முடியும். இவைகளில் ஒரு பெயர்கூட தமிழ் இல்லை. 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர்கள்தான். ஆனால், தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை - வேதனை.

இந்த 60 ஆண்டுகளையும் கடவுளோடு தொடர்புபடுத்தி, ஆபாசம் வழியும் கதைகளையும் உருவாக்கி விட்டார்கள். நாரதரும், கிருஷ்ணனும் உறவு கொண்டு (இருவரும் ஆண்கள்) பெற்ற குழந்தைகளே ‘பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்’ என்று தமிழ்க் கலை களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ கூறுகிறது. இதற்கு புராண ஆதாரங்கள் வேறு உள்ளன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61வது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும் ‘பிரபவத்திலிருந்து தான் தொடங்க வேண்டும்’ நடைமுறைக்கும் அறிவுக்கும் ஒவ்வாத குழப்பங்களும், மூடநம்பிக்கைகளும் இதில் அடங்கிக் கிடக்கின்றன.

இந்த நிலையில் தான் - தமிழ் அறிஞர்கள் 1921-ம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆராய்ந்தார்கள். மூன்று முக்கிய முடிவுகளை அவர்கள் அப்போது எடுத்தார்கள்.

1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டாகப் பின்பற்றுவது.
2. அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது.
3. திருவள்ளுவர் காலம் கி.மு. 31 (வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு) திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை என்று முடிவெடுத்தார்கள். இப்படி முடிவெடுத்தவர்கள் தமிழகத்தின் மூத்த தமிழ் அறிஞர்கள் மறைமலை அடிகள், திரு.வி.க., சுப்பிரமணியப் பிள்ளை, சச்சிதானந்தப் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம.சுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவர்.

அதன் பிறகு 1939 ஆம் ஆண்டு திருச்சியில் ‘அகில இந்திய தமிழர் மாநாடு’ சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில் தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச்சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் கா. சுப்பிரமணியம், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க., மறைமலையடிகளார், பி.டி. இராஜன், ஆற்காடு இராமசாமி முதலியார், புரட்சி கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி உட்படப் பலரும் பங்கேற்றனர். அந்த மாநாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் பறைசாற்றியது.

1971-ல் அன்றைய கலைஞர் ஆட்சி, திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. இம்முறையையோ 1971 முதல் அரசு நாட்குறிப்பிலும், 1972 முதல் அரசிதழிலும், 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வருகிறது.

1969-ம் ஆண்டு கலைஞர் ஆட்சி பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாளை திருவள்ளுவர் நாள் என்று ஏற்று அரசு விடுமுறை அளித்து ஆணை பிறப்பித்தது. எனவே தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆகும். இடையில் வந்து புகுந்த சித்திரை - தமிழர் மீது புகுத்தப்பட்ட பண்பாட்டுத் திணிப்பாகும்.

Pin It