ராஜபக்சே குடும்பம் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்று ‘மக்கள் புரட்சி’ கொழும்பில் வெடித்து வரும் நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ‘புண்ணுக்கு புணுகு’ பூசுவதுபோல் அமைச்சரவை மாற்றம் என்று நாடகமாடுகிறார். மக்களுக்கு அடிப்படைத் தேவையான பொருள்களை வழங்க அடுத்த 6 மாதத்துக்கு அவசரமாக 3 மில்லியன் டாலர் தேவை என்ற நிலையில் சர்வதேச நிதி நிறுவனத்திடம் ‘பிச்சைப் பாத்திரம்’ ஏந்தி நிற்கிறது, இலங்கை அரசு. கடந்த ஏப்ரல் 12ஆம் தேதியில் இலங்கையின் மத்திய வங்கி, 1948ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமான நெருக்கடிக்கு பொருளாதாரம் உள்ளாகியுள்ளதை எச்சரித்துவிட்டது. சிக்கலிலிருந்து மீண்டு எழும் வழி தெரியாது, இலங்கையின் பொருளாதார ஆலோ சகர்கள் விழிபிதுங்கி நிற்பதாக செய்திகள் வருகின்றன. ஒரு நாடே ‘திவாலாகி’க் கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடி எதை உணர்த்தி நிற்கிறது?

நாட்டின் மக்கள் வாழ்வதாரம் - பொருளாதாரம் - வளர்ச்சிக் கட்டமைப்புகளைப் புறந்தள்ளிவிட்டு மத வெறி மற்றும் இன வெறியைத் தூண்டி விடுவதில் மட்டும் கவனம் செலுத்தும் அரசுகள் இந்தப் படுகுழிக்குள் தான் மூழ்கிப் போகும் என்பதுதான் இலங்கை நெருக்கடி உணர்த்தும் முக்கியப் பாடம்.

சமையல் எரிவாயு, கெரசின், பால் பவுடர், டீசல், பெட்ரோல் என்ற அடிப்படைத் தேவைகளுக்காக கொழும்பு நகரில் நீண்ட வரிசையில் இப்போது சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் நட்பு உணர்வோடு கைகோர்த்து நின்பதை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஏப். 17, 2022) சுட்டிக்காட்டி விரிவான கட்டுரை எழுதியுள்ளது. ‘ராஜபக்சே குடும்பம் பதவி விலக வேண்டும்’ என்பதே இனங்களைக் கடந்த ஒரே முழக்கமாகிவிட்டது. இதே கொழும்பில் 1958, 1983இல் கொழும்பில் தமிழர்களுக்கு எதிராக பெரும் கலவரத்தில் சிங்களர் இறங்கியபோது தமிழர்களின் வடக்கு மாகாணத்தில் மைனாரிட்டிகளான சிங்களர்களைக் காப்பாற்றியவர்கள் தமிழர்கள் என்று இலங்கை இராணுவ தளபதியாக இருந்து, இப்போது, தொழில்துறை அமைச்சர்களின் செயலாளர் பொறுப்பு வகிக்கும் ஆர்.எம். ரத்னாயக்கே கூறியுள்ளார். தமிழர்கள் மீதான இன அழிப்புக்கு வருத்தம் தெரிவித்து சிங்களர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். தமிழ் ஊடகவியலாளர் நிலாந்தன், தமிழர் பகுதி சிங்களர் பகுதியைவிட அமைதியாகவே இருக்கிறது என்கிறார். தமிழர்கள் மத நம்பிக்கையாளர்கள். மாறாக சிங்களர்கள் மத வெறியூட்டப்பட்டவர்களாக (அனைவரும் இல்லை என்றாலும்) தூண்டப்பட்டவர்கள்.

இந்திய ஒன்றியத்திலும் மக்கள் பிரச்சினைகளி லிருந்து அரசின் பொருளாதாரக் கொள்கைத் தோல்விகளை திசைதிருப்ப, மதவெறியை பா.ஜ.க.வும் சங்பரிவாரங்களும் திட்டமிட்டு தூண்டி விடுன்றன. ராமநவமி, அனுமன் ஜெயந்தி ஊர்வலங்கள் பல மாநிலங்களில் பெரும் கலவரங்களாக வெடித்துள்ளன. தலைநகரம் டெல்லி பதட்டத்தில் மூழ்கிக் கிடக்கிறது. கொரானா தொற்று காலத்தில் இந்திய ஒன்றிய அரசின் அலட்சியத்தால் 40 இலட்சம் பேர் மரணித்துள்ளனர் என்றும் உண்மையை மக்களுக்குத் தெரியாமல் அரசு மறைத்துள்ளது என்றும் உலகின் புகழ்மிக்க அமெரிக்காவின் ‘நியுயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட் டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் நடந்த மரணம் குறித்து கணக்கீடு செய்த முறை தவறானது என்று சமாளிக்கிறது. ஒன்றிய ஆட்சி, உண்மைகளை வெளியிட்ட உலக சுகாதார நிறுவனத்தைக் கண்டிக்கிறது. ஆனால் நாட்டின் பொருளாதாரம் மிகச் சிறப்பாக முன்னேறி வருவதுபோல உண்மைக்கு மாறான பரப்புரைகளை பா.ஜ.க.வினர் செய்து வருகிறார்கள்.

நாட்டின் வலிமை என்பது மக்களின் வாழ்வுரிமை யில் தங்கியிருக்கிறதே தவிர, மதங்களின் அடையாளங் களுக்குள்ளோ அல்லது மதவெறிக்குள்ளோ இல்லை என்பதை ஒன்றிய ஆட்சி உணரும் காலம் நெருங்கி வருகிறது. சோனியா, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 13 கட்சித் தலைவர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையில் ஒன்றிய ஆட்சியின் நச்சு சித்தாந்தங்களின் ஆபத்தை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்; இலங்கை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் மதவெறி கொள்கையால் அங்கே நெருக்கடிகளையும் குழப்பங்களையும் சந்தித்து வருவதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It