சமுதாய விழிப்புணர்வின் மூலமே சட்டத்தைச் செயல்படுத்த முடியும்

பெண்களின் திருமண வயதை ஆண்களுக்குச் சமமாக உயர்த்திட ஒன்றிய அமைச்சரவை எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. அதற்கான உள்நோக்கம் எது என்று ஆராய்வதைவிட சட்டத்தின் நோக்கங்கள் உருவாக்கிடும் தாக்கங்கள் குறித்தே நாம் சிந்திக்க வேண்டும் என்பதே நமது கருத்து. குறிப்பாக, மதச் சிறுபான்மையினராகிய இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் மதம் விதிக்கும் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று வாதாடுகிறார்கள். பெண்களுக்கான சமத்துவத்தை சம உரிமைகளை மறுப்பதில் அனைத்து மதங்களுமே ஒன்றுபட்டு நிற்கின்றன. காரணம், மதங்களை உருவாக்கியதும் அதற்கான விதிகளை நிர்ணயித்தவர் களும் ஆண்களாகவே இருப்பது தான். எப்படி, இலக்கியங்கள் எழுதிய ஆண்கள் பெண்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளையும் அடங்கிப் போவதையும் ‘சமூக ஒழுங்காக’ நிர்ணயித்தார்களோ, அதுபோலவே தான் மதங்களும். நாம் வலியுறுத்த விரும்புவதெல்லாம் சட்டங்கள் இயற்றுவது மட்டுமே முழுமையான சட்டத்தின் நோக்கத்தை வெற்றி பெற வைத்து விடாது. சமூகத்தில் அதற்கான விழிப்புணர்வை உருவாக்கி, மக்களிடையே கருத்துருவாக்கத்தை விதைப்பதன் வழியாகவே சட்டங்களின் நோக்கம் இலக்கை அடையும்.

தீண்டாமையை ஒழிக்க கடுமையான தண்டனைகளை உள்ளடக்கிய வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் அமுலில் இருந்தாலும், ‘தீண்டாமை’க் கொடுமைகள் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. ‘ஜாதிக்கு ஒரு சுடுகாடு’ இப்போதும் இருப்பதை கடந்த வாரம் உயர்நீதிமன்றம் சுட்டிக் காட்டி, பொது சுடுகாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்று ஒரு வழக்கில் தீர்ப்பளித்திருக்கிறது. தீண்டாமைக்கு வேராக இருப்பது ஜாதி. ஜாதிக்கு அடித்தளமாகி நிற்கும் மதம், மனுதர்மம், புராணங்கள், வேதங்கள் உள்ளிட்ட ‘புனிதமாக்கப்பட்ட’ பார்ப்பனிய கருத்தியல்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி விளக்கும்போதுதான் மக்களிடம் ஜாதி எதிர்ப்பு குறித்த புதிய சிந்தனைகளை உருவாக்க முடியும்.

பெரியாரும் பெரியார் இயக்கமும் காலங்காலமாக மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே இந்தப் பரப்புரையைத் தொடர்ந்து நடத்தியதன் விளைவாகவே ஏனைய மாநிலங்களைவிட ஒப்பீட்டளவில் தமிழ்நாடு ஓரளவு முன்னேற்றப் பாதையில் பயணித்து வருகிறது. ஆனால் பெண்களின் குழந்தைத் திருமணங்களை நியாயப்படுத்தும் ‘மனுசாஸ்திரத்தை’ எதிர்த்தாலோ, ஜாதிக்கு ஆதாரமான ‘வர்ணக் கட்டமைப்பு’களை நியாயப்படுத்தும் கீதை, இராமாயணம் போன்றவற்றை விமர்சித்தாலோ, மதத்தைப் புண்படுத்துவதாகவும், ‘இந்து’க்கள் எதிர்ப்பதாகவும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற அமைப்புகள் கொந்தளிக்கின்றன.

சமூகத்தில் ‘தீண்டாமை’ ஒரு குற்றம் என்று அறிவிக்கப்பட்டாலும் ‘மதத்தின்’ பெயரால் ‘தீண்டாமை’, ‘பழக்க வழக்கங்கள்’ என்ற பெயரில் தடையின்றி பின்பற்றப்பட்டு வருகின்றன. கோயில் கருவறைக்குள் இப்போதும் ‘பிராமணர்’ மட்டுமே அர்ச்சகராகும் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் வரை புரோகிதர்கள் செல்வதற்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருப்பது ‘பழக்க வழக்கம்’ என்ற அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட சொற்றொடருக்குள் அடங்கி நிற்கும் ‘தீண்டாமை’, ‘பெண் சமத்துவ மறுப்பு’ கருத்துகள் தான்.

இந்து திருமணச் சட்டம், 1955இல் உருவாக்கப் பட்டது. அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்தபோது இந்துக்களிடையே சமத்துவத்தைக் கொண்டு வரும் நோக்கத்தோடு “இந்து சட்டத் திருத்த மசோதா”வைக் கொண்டு வந்தார். வைதீர்களும் ஜனசங்கம்-ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருந்த பார்ப்பன சக்திகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அம்பேத்கர் தனது அமைச்சர் பதவியையே தூக்கி எறிந்து வெளியேறினார். தொடர்ந்து பிரதமர் நேரு, படிப்படியாக இந்து சட்டத் திருத்தங்களை அமுலாக்கும் முயற்சிகளில் இறங்கினார். அப்போது உருவானதுதான் 1955 ‘இந்து’ திருமணச் சட்டம். அதில் தமிழக முதல்வர் அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் கொண்டு வந்த திருத்தம் தான் புரோகிதத்தை விலக்கி வைக்கும் சுயமரியாதை திருமணச் சட்டம்.

1872ஆம் ஆண்டு உருவான கிறிஸ்துவ திருமணச் சட்டம் பெண்களுக்கு 18; ஆண்களுக்கு 21 என்று திருமண வயதை நிர்ணயித்தது. முஸ்லீம்களுக்கான தனிச் சட்டம் ஷரியத் அடிப்படையில் 1937இல் உருவாக்கப்பட்டது. ஆண், பெண் வயதுக்கு வந்து விட்டாலே திருமணம் செய்யலாம் என்று அந்தச் சட்டம் கூறுகிறது. வயது வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. இருவேறு மதப் பிரிவினருக்கிடையே திருமணம் செய்யும் உரிமையை வழங்கும் சிறப்பு திருமணச் சட்டம் 1954இல் உருவானது. அது பெண்களுக்கு 18 ஆகவும் ஆண்களுக்கு 21 ஆகவும் வயது வரம்பை நிர்ணயித்தது. 2006இல் உருவாக்கப்பட்ட குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் பெண்களுக்கு 18 வயதுக்குக் கீழேயும் ஆண்களுக்கு 21 வயதுக்குக் கீழேயும் திருமணம் செய்வதற்கு தடை விதித்தது.

குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்துவிட்டால் வர்ணக் கலப்பைத் தடுத்து விடலாம் என்ற நோக்கத்துடன் பார்ப்பனர்கள் பால்ய விவாகத்தைத் தீவிரமாகப் பின்பற்றினர். 1924இல் இந்திய பீனல் கோடு 375ஆவது சட்டப்படி திருமண வயது சட்டம் கொண்டு வரப்பட்டது. 14 வயதுக்குக் கீழே உள்ள பெண்களைத் திருமணம் செய்வதும் உடலுறவு கொள்வதும் “பாலுறவு வன்முறை” என்று சட்டம் கூறியது. நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது இந்த சட்டம். சென்னை மாகாணத்தில் கருத்துகளைக் கேட்டபோது பார்ப்பன பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதன் பிறகு பெண்கள் திருமண வயதை 13 என்று நிர்ணயித்து சட்டம் இயற்றப் பட்டது. இச்சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் என்று சட்டம் கூறியது. மீண்டும் மாகாண அரசுகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.

பிப்ரவரி 1, 1927இல் ராஜ்சாஹிப் எம்.ஹர்பிலாஸ் சாரதா என்பவரால் இந்து பால்ய விவாக மசோதா மத்திய சட்டசபையில் (அன்றைய நாடாளுமன்றம்) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்து பால்ய விவாகத்தைக் கட்டுப்படுத்தவும், 11 வயதுக்கு முன் திருமணம் செய்து வைப்பது தவறு என்றும் உணர்த்துவதே இந்த மசோதாவின் குறிக்கோளாகும். இந்த மசோதா இந்துக்கள், பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், புத்த மதத்தினர், சமண மதத்தினர் மற்றும் சீக்கியர்கள் என்று அனைவருக்கும் பொருந்தும். இந்து மதத்தைச் சேர்ந்த ஆணுக்கு 15 வயதும், பெண்ணுக்கு 12 வயதுமே திருமணத்திற்கு உகந்த வயது என்றும் இதற்கும் இளையவர்களாக இருப்பின் அத்தகைய திருமணம் செல்லுபடியாகாது என்றும் இந்த மசோதாவில் முடிவெடுக்கப்பட்டது. பதினொரு வயது நிரம்பிய பெண்ணுக்கும் திருமணம் செய்ய வேண்டுமென்றால், நீதிபதியின் சிறப்பு அனுமதி பெற்று திருமணம் செய்து வைக்கலாம் என்று சிறப்புச் சலுகையும் அளிக்கப்பட்டது. ஆனால் அப்பொழுதும் பெண்ணுக்கு 11 வயது கட்டாயம் நிரம்பி இருக்க வேண்டும். 1927 செப்டம்பர் 15இல் சட்டசபையில் இந்த மசோதா ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மசோதாவின் காரணகர்த்தாவாகிய சாரதா, ‘பால்ய விவாக’ முறையை ஒழிப்பதே இதனுடைய முதன்மைக் கொள்கை என்று தெரிவித்தார்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் மார்ச் 27, 1928இல் மதராஸ் சட்ட ஆலோசனை சபையில், அச்சபையினரின் முழு ஆதரவோடு திருமண வயது அதிகரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டசபை உறுப்பினர்களுக்கும் கவர்னர் ஜெனரல் அவர்களுக்கும் ஒரு சுருக்கமான குறிப்புக் கடிதம் இவரால் அனுப்பப் பட்டது. அக்கடிதத்தில் சாரதா அவர்களால் ஏற்படுத்தப்பட்ட மசோதாவிற்குச் சென்னை மாகாணத்தில் உள்ள அனைத்துப் பெண்கள் சங்கங்களும் முழு மனதோடு ஒத்துழைக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 31, 1929இல் திருவல்லிக்கேணியில் உள்ள இந்து பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நிகழ்த்தப் பெற்ற ஒரு பெண்கள் பொதுக் கூட்டத்தில் இந்தக் குறிப்பானது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

ஏப்ரல் 1, 1930இல் ‘பால்ய விவாகத் தடை’ அரசின் நீதியாக மாற்றப்பட்டது. 1929இல் இந்தியா முழுவதும் சட்டம் அமுலானது. ஆணுக்கு 18 என்றும் பெண்ணுக்கு 14 என்றும் திருமண வயது நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சட்டத்தை மீறுவோருக்கு 1000 ரூபாய் அபராதம், ஒரு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தச் சட்டம் இந்து கிறித்துவர் மற்றும் முஸ்லிம் என்று அனைவருக்கும் பொருந்துவதாக இருந்தது.

இப்படி மதவாதிகள், பார்ப்பனிய சக்திகளின் தடைகள் எதிர்ப்புகளைத் தாண்டி சட்டங்கள் வந்தாலும் இப்போதும் ‘பால்ய விவாகங்கள்’ தொடரவே செய்கின்றன.

21 வயது என்பது ஒரு பெண்ணின் கல்வி ஓரளவு முழுமையடைவதற்கும் அவர்களின் மனநிலையில் முதிர்ச்சி ஏற்படுவதற்குமான ஒரு பருவம் என்ற கண்ணோட்டத்தில் இந்தச் சட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். ‘நாடகக் காதல்’ என்று கூறி ஜாதி அடையாளத்தைக் காப்பாற்றும் ஆணவக் கொலைகள் நடந்து வருகின்றன. தேசிய குடும்ப ஆரோக்கியக் கணக்கெடுப்பு (2019-2021) தரும் புள்ளி விவரங்கள் குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் அமுலில் இருந்தும் 23.3 சதவீதப் பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள் என்று கூறுகின்றன.

எனவே சட்டங்கள் நல்ல நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டாலும் சட்டத்தின் நியாயங்களை மக்களிடம் பரப்பி, மக்களை ஏற்கச் செய்யும் சமூக விழிப்புணர்வை உருவாக்காவிட்டால் சட்டம் காகிதத்தில் மட்டும் தான் இருக்கும். பரப்புரைக்கான கருத்துச் சுதந்திரத்தை மறுக்காமல் மாற்றங்களை நோக்கி சமூகத்தை முன் நகர்த்துவதற்கு அரசியல் கட்சிகள் தயாராக இல்லை. இந்த நிலையில் பெரியாரிய இயக்கம், முற்போக்கு சிந்தனை இயக்கங்கள் மனித உரிமை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், பெண்கள் உரிமை இயக்கங்களின் பரப்புரைக்கு வழியமைத்துத் தர சட்டத்தை உருவாக்கியவர்கள் முன் வர வேண்டும்.

மதவாதப் பிற்போக்குச் சிந்தனைகளைப் புறந்தள்ளித் தான் பெண்களுக்கான உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என்ற அடிப்படைப் புரிதல் இல்லாமல் சட்டத்தை மட்டும் இயற்றி விட்டால் அதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. புதிய சட்டத்தை நாம் வரவேற்கிறோம். அதே நேரத்தில் சட்டத்தின் நியாயங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது முக்கியம் என்பதையும் வலியுறுத்துகிறோம்.      

- விடுதலை இராசேந்திரன்

Pin It