மதத்தின் பெயரால் நடத்தப்படும் கும்பல் வன்முறையைத் தடுத்து நிறுத்தக் கோரி திரைத் துறை, கலைத் துறையைச் சார்ந்த 42பேர் மோடிக்கு கடிதம் எழுதியதால் அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஆனால் மோடி ஆட்சியில் ‘தேச பக்தர்கள்’ எப்படி பேச வேண்டும்? இப்படித்தான்!
டிசம்பர் 31, 2021க்குள் இந்தியாவிலிருந்து முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் முற்றாக ஒழிக்கப்படுவார்கள் என்று பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ராஜேஸ்வர் சிங் வெளிப்படையாக அறிவித்துள்ளார். அதேபோல் “இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களையும் ஒழித்து விடுவோம்; இது நாங்கள் எடுத்துள்ள உறுதி” என்றும் அவர் பேசியுள்ளார். மேற்கு உ.பி.யில் வாழும் இவர் தொடர்ந்து இனவெறுப்பு இன அழிப்புக் கருத்துகளைப் பேசி வருபவர். ‘லவ் ஜிகாத்’ அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வரும் இவரைத் தான், மீண்டும் “தாய் மதம் திரும்புதல்” என்ற இயக்கத்துக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவராக நியமித்தது.
‘தர்ம ஜக்ரான் சமிதி’ என்ற அமைப்பின் தலைவராக உள்ள ராஜேஸ்வர்சிங், “2021இல் இந்து இராஷ்டிரத்தை அமைப்பதே எங்கள் இலக்கு. முஸ்லிம்களாக, கிறிஸ்தவர்களாக இந்த நாட்டில் வாழ்வதற்கு உரிமை கிடையாது. அவர்கள் இந்துவாக மாற வேண்டும். அல்லது நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று அவர் பேசியுள்ளார். இந்து மகாசபா “இஸ்லாம் இல்லாத இந்தியா” என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. சத்வி தேவா தாக்கூர் என்ற பா.ஜ.க. பெண் சாமியார், அவசர நிலையை பிரகடனம் செய்து இஸ்லாம், கிறிஸ்தவர்களுக்கு கர்ப்பத்தடை செய்ய வேண்டும் என்று பேசியுள்ளார். சாத்வி சரஸ்வதி என்ற இந்துத்துவ பெண் ‘சாமியார்’ மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட வேண்டும் என்று பேசியுள்ளார்.
150 தீவிர இந்து அமைப்புகள் இந்தியாவை 2023க்குள் இந்து இராஷ்டிரமாக்குவோம் என்ற முழக்கத்தோடு கோவாவில் 4 நாட்கள் மாநாடு நடத்தி தீர்மானித்துள்ளன. மோடி ஆட்சியில் இவர்கள் எல்லாம் தேச பக்தர்கள்!
ஆனால் கும்பல் கொலைகளைத்தடுத்து நிறுத்துங்கள் என்று கடிதம் எழுதியவர்கள் தேசத் துரோகிகள்!
பார்ப்பன அகராதியில் இதுதான் ‘தேச பக்தி’!
மோடி காந்தியைப் புகழ்ந்து பேசுகிறார். ஆனால் ‘டிவிட்டரில்’ அவரைப் பின் தொடருகிறவர்கள் ‘கோட்சே கடவுள்’, ‘கோட்சே வீரன்’, ‘காந்தியை சுட்டது சரி’ என்று பதிவிட்டு வருகிறார்கள். இவர்களின் காந்தி ஆதரவு வேடம் அம்பலப்பட்டு நிற்கிறது. தமிழ்நாட்டுப் பார்ப்பனரான
எச். ராஜா தன்னை ‘தேச பக்தன்’ என்றும் மோடியை விமர்சித்தால் இந்திய விரோதி என்றும் பேசி வருகிறார்.
ஆனால் எச். ராஜாவின் பிறந்த நாளுக்கு அவரது ஆதரவாளர்கள் ‘தென்னாட்டு கோட்சே’ என்று வாழ்த்தி சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். காவல்துறையும் கைகட்டி வாய் பொத்தி ‘நவீன தேச பக்தர்களுக்கு’ சல்யூட் செய்கிறது!