பொது மக்கள் தவறு செய்தால் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வழக்கு தொடர்வார்கள். நீதிபதிகள் விசாரித்து தண்டனை வழங்குவார்கள். தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டிய நீதிபதிகளே ஊழியர்கள் பணத்தை கையாடல் செய்திருப்பது நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உத்திரப் பிரதேசம் காசியாபாத்தில் மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றியவர்கள் ஏ.கே. சிங், ஆர்.பி. யாதவ், ஆர்.என். மிஸ்ரா ஆகியோர். இவர்கள் தங்கள் பணிக் காலத்தில் தங்கள் கீழ் பணியாற்றிய ஊழியர்களின் பி.எப். பணத்தை முறைகேடாக செலவழித்துள்ளனர். தங்களுடைய வீடுகளுக்கு மளிகைப் பொருட்கள் வாங்குவது முதல் விலையுயர்ந்த பர்னிச்சர் பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு பி.எப். பணத்தை செலவழித்துள்ளனர். இவர்கள் மட்டுமல்லாது பி. மிஸ்ரா, ஆர்.எஸ். சவுபே அருண்குமார் ஆகிய நீதிபதிகளும் பி.எப். பணத்தை கையாடல் செய்த வழக்கில் சிக்கியுள்ளனர்.

மகள் பிறந்த நாள் விழாவுக்கு மட்டும் பல லட்சம் ரூபாய் பி.எப் பணத்தை எடுத்து சவுபே செலவழித்துள்ளார். 34 நாட்கள் மட்டுமே மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய அருண் குமார் மகள் திருமண விழா மற்றும் பல்வேறு காரியங்களுக்கு ரூபாய் 5 - 9 லட்சம் வரை கையாடல் செய்துள்ளார். இவர்களில் ஏ.கே. சிங், ஆர்.பி. யாதவ், ஆர்.என். மிஸ்ரா ஆகிய மூவரும் பதவி உயர்வு பெற்று அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பணியாற்றியுள்ளனர் என்பது வேதனைக்குரியது. பி.எப் பண கையாடல் குறித்து விரிவான விசாரணை நடத்திய சிபிஐ நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளது.

அமைச்சர்கள், அதிகாரிகள் மீது அடிக்கடி ஊழல் புகார்கள் வந்த நிலையில் மக்கள் நீதித்துறையின் மேல் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் வைத்திருந்தனர். இந்த நிலையில் பயணம் கையாடல் விவகாரத்தில் நீதிபதிகள் கைது செய்யப்பட்டிருப்பது நீதித்துறைக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

- சாலியா மைந்தன்

Pin It