1957 - சட்ட எரிப்புப் போராட்டத்தில் சிறைச் சென்ற மாவீரர்களுக்கு திருப்பூர் தமிழர் எழுச்சி விழாவில் கழக சார்பில் மரியாதை செய்யப்பட்டது. சிறைச் சென்ற மாவீரர்கள் சார்பில் கோவை சிறையில் 9 மாத சிறைத் தண்டனை பெற்ற சுயமரியாதை வீரர், திரு மூர்த்தி பாராட்டுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய உரை, அரங்கை உணர்ச்சி வயமாக்கியது. அவரது உரை :
சாதி ஒழிப்பு கிளர்ச்சிகள் எல்லாவற்றிலும் நான் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளேன். கபாலீசுவரன் கோயில் தமிழில் வழிபாடு நடத்துமாறு பக்தர்களிடம், காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்த கிளர்ச்சியில் கலந்து கொண்டேன். திருவல்லிக்கேணி முரளி கபே ஓட்டல் முன் “பிராமணாள்” பெயர் அழிப்புக் கிளர்ச்சியில் பங்கேற்றேன். பெரியார் வீட்டிலேயே தங்கியிருந்து கிளர்ச்சி செய்தோம். ராமன் பட எரிப்பு, தமிழ்நாடு நீங்கலாக, இந்திய தேசப்பட எரிப்பு, பிள்ளையார் உடைப்பு என நான் கலந்து கொள்ளாத போராட்டமே இல்லை. எங்களை எல்லாம் வழி நடத்தியவர், திராவிடர் கழகத்தில் துணைத் தலைவராக இருந்த ஆனைமலை நரசிம்மன்.
சாதி ஒழிப்புக்காக போராடி வருகிற நாம் நமது ஆனைமலை பஞ்சாயத்துக்கு ஏன், ஒரு தாழ்த்தப்பட்டவரை தலைவராக்கக் கூடாது? என்று எங்களுடன் கலந்து பேசினார். அப்போது “சக்கிலி” என்று அழைக்கப்பட்ட அருந்ததி சமூகத்தைச் சார்ந்த ஒருவரை, எங்கள் ஆனைமலை பஞ்சாயத்துக்கு தலைவராக்கினோம்! (கைதட்டல்) அப்போதே, பெரியார் இதைப் பாராட்டி வரவேற்று, ‘விடுதலை’யில் எழுதினார்.
ஆனைமலை நரசிம்மன் அவர்களுக்கு சிறையிலே ‘பி’ வகுப்பு தரப்பட்து. அவர் ஏற்க மறுத்து எங்களுடனேயே இருந்தார். சிறைக்குள் ஆயுள் தண்டனை பெற்ற ஒரு கைதி ‘பி.ஏ.’ தேர்வு எழுத விரும்பினார். அவருக்கு முழுமையாக பயிற்சி தந்தார் ஆனைமலை நரசிம்மன்! அந்தக் கைதி தேர்ச்சியும் பெற்றார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வெ.கி.சம்பத், சிறையில் பேட்டி காண வந்தபோது, ஆனைமலை நரசிம்மன், சிறை அதிகாரி முன் உட்கார்ந்துகூட பேச மறுத்து விட்டார். ‘விடுதலை பெற்றால் உட்காருகிறேன்; இப்போது நான் ஒரு கைதி’ என்று கூறினார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கைதிகளை அழைத்து, சுயமரியாதைக் கொள்கைகளை சிறைக்குள்ளேயே பிரச்சாரம் செய்து வந்தார். எங்கள் ஆனைமலையில், மாதத்துக்கு ஒரு வெளியீடு கொண்டு வருவோம். 1000 துண்டறிக்கைகளை அச்சடித்து வீடுவீடாகத் தருவோம் (கைதட்டல்). ‘ஊற்றம்’ என்ற சிற்றிதழை நடத்தினோம். அதிலே அவரவர் விரும்புகிற கருத்துகளை எழுத அனுமதித்தோம். எங்கள் ஊர் மக்கள் அதை மிகவும் விரும்பி படித்தார்கள். சட்ட எரிப்புப் போராட்டத்தில் எனக்கு 9 மாதம் சிறைத் தண்டனை. இவைகளையெல்லாம் அங்கீகரித்து எங்களுக்கு சிறப்பு செய்தமைக்கு நன்றி தெரிவித்து முடித்துக் கொள்கிறேன்.