தலையங்கம்

இலங்கை அதிபருக்கான தேர்தலில் - சிறீலங்கா சுதந்திர கட்சியைச் சார்ந்த  மகிந்தா ராஜபக்சே, 50.29 சதவீத ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ‘அய்க்கிய தேசியக் கட்சி’ வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கேயைவிட இவர் கூடுதலாக பெற்றிருப்பது, இரண்டு சதவிகிதம் வாக்குகள் மட்டும் தான். ராஜபக்சே ஜனதா விருத்தி பெரமுனா (ஜெ.வி.பி.); ஜாதிகா ஹெலா உருமயா (ஜெ.எச்.யூ) எனும் இரண்டு சிங்கள தீவிரவாத அமைப்புகளின் ஆதரவோடு களமிறங்கினார். அதிபராகிவிட்ட ராஜபக்சே, தான் ஏற்கனவே வகித்த பிரதமர் பதவிக்கு நியமித்துள்ள விக்கிரமநாயகே என்பவரும் சிங்கள தீவிரவாதி தான். இவர்கள் இருவருமே, சிறீலங்காவின் ‘ஒற்றை ஆட்சிக்குள்ளேயே’ தமிழர்கள் வாழ வேண்டும் என்று வலியுறுத்து கிறவர்கள்.

தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம், இந்தத் தேர்தலில், வாக்களிக்கும் உரிமையை தமிழர்களின் முடிவுக்கே விட்டு விடுவதாக அறிவித்து விட்டது. எனவே வாக்குறுதிகளை நிறைவேற்றாத சிங்களத் தலைவர்களின் தேர்தல் போட்டியில் தமிழர்கள் வாக்களிப்பதைத் தவிர்த்து விட்டு, தமிழர்கள் பார்வையாளர்களாகவே இருந்து விட்டனர். கடந்த முறை தமிழர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற ரணில், இம்முறை தமிழர்கள் வாக்காளிக்காததால் தோல்வியைத் தழுவியிருக்கிறார்.

சிங்கள தீவிரவாதிகளிடம் இப்போது அதிகாரம் வந்துள்ளது. ரணில் மேற்கொண்ட சமரச முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைப் போட்டுக் கொண்டிருந்தவர்கள் - இப்போது, ஈழத் தமிழர் பிரச்சினையில் என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் மிகப் பெரும் கேள்வி! பேச்சு வார்த்தையைக் குலைத்தவர்கள் விடுதலைப்புலிகள் தான் என்று, நடுநிலையில் பிரச்சினைகளைப் பார்க்காமல், அவதூறுகளைப் பரப்பிவந்த ஏகாதிபத்திய பார்ப்பனிய ஊதுகுழல்கள், இப்போது ஒரு வகையில் திகைத்துப் போய் நிற்கின்றன என்றே சொல்ல வேண்டும். ராஜபக்சேயை வெற்றிபெறச் செய்திருப்பதன் மூலம் தமிழர்களுடன் அதிகாரங்களை பகிர்வதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்ற செய்தியை சிங்களர்கள் சர்வதேச சமூகத்திற்கு அறிவித்துள்ளார்கள் என்றே கருதுகிறோம்.

தேர்தல் புறக்கணிப்பு என்ற வலிமையான ஆயுதத்தைப் பயன்படுத்தியுள்ள ஈழத் தமிழர்கள் - சிங்கள ‘தீவிரவாத அரசியல் களத்தை’ நோக்கி ‘பந்தை’ உருட்டிவிட்டிருக்கிறார்கள். சர்வதேச சமூகம் - இனியாவது நடக்கப் போகும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து, நியாயங்களைப் புரிந்துணர வேண்டும் என்பதே, நமது வேண்டுகோளும் விருப்பமும்! இதை எழுதும் போது, இஸ்ரேலிலிருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது. பாலஸ்தீனர்களுக்கு சொந்தமான ‘காசா’ எனும் ஆக்கிரமிப்புப் பகுதியிலிருந்து யூதர்கள் வெளியேற வேண்டும் என்று முடிவெடுத்த இஸ்ரேல் பிரதமர் ஏரியல்ஷெரான், தனது முடிவுக்கு தனது இனவெறிக் கட்சிக்குள் ஆதரவு இல்லை என்பதால், அக்கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சித் தொடங்கி, புதிய தேர்தல் நடத்தவும் பரிந்துரைத்துள்ளார். தீவிர இனவெறியராக செயல்பட்ட ஷெரான்களே, இப்போது தங்களது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருப்பதை ராஜபக்சேக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Pin It