லெனின்

லெனின் பற்றிய புத்தகங்களில் உள்ள படங்களை மட்டும் வைத்துக் காண்டே மிக நேர்த்தியாக ஒரு குறும்பட பாணியில் தயாரித்திருக்கிறார்கள் இந்த டாக்குமெண்டரியை.

லெனின் வாழ்க்கை வரலாற்றை ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சியாக காட்டியிருக்கிறார்கள். வாழ்க்கை வரலாறு கச்சிதமாக தொகுக்கப்பட்டிருக்கிறது.

பகலவனின் மிக நேர்த்தியான எடிட்டிங், பிரமிக்க வைக்கிறது. கலைவண்ணணின் தெளிவான, உணர்வுப்பூர்வமான குரல், கம்பீரமாய் இருக்கிறது.

குருசாமி மயில்வாகனனின் சிந்தனையின் செயல் வடிவம் இந்த லெனின் டாக்குமெண்ட்ரி.

குருசாமி மயில்வாகனன், 17பி, காளிமுத்தன் தெரு , சிவகங்கை 600 561.
தொலைபேசி எண்: 04575 240967


முதுகுளத்தூர் கலவரம்

தென் மாவட்டங்களில் நிகழ்ந்த முதுகுளத்தூர் கலவரம் தொடர்பான முழுமையான வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது.

பக்கங்கள்: 120, விலை ரூ.70.

வெளியீடு: யாழ் மை

134, மூன்றாம் தறம், தம்பு செட்டி தெரு,பாரிமுனை, சென்னை 600 001.


கரும்பலகையில் எழுதாதவை

பள்ளிக்கூடத்து கரும்பலகையில் எழுதாத இந்த கவிதைகளின் வழி, நம்முடன் பேசுகின்ற குழந்தைகளின் மௌனங்களும், சிரிப்புகளும், கொஞ்சம் கேள்விகளும்...

குழந்தைகளிடம் கற்றுக் கொள்வோம் என அழைக்கும் ஒரு ஆசிரியரின் உள்ளத்திலிருந்து பெருகும் பள்ளி அனுபவங்களே இந்நூலில் நம்மை வாசிக்க அழைக்கும் கவிதைகளாக...

ஆசிரியர் பழ.புகழேந்தி பக்கங்கள் 64, விலை ரூ.25.


எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க?

இந்த நூல் இத்தாலியில் உள்ள பார்பியானா பள்ளியின் எட்டு மாணவர்கள் தங்களைப் பெயிலாக்கிய பள்ளி ஆசிரியருக்கு எங்களை ஏன் பெயிலாக்கினீங்க? என்று கேட்டு எழுதிய கடிதம். உலகம் முழுவதும் உள்ள ஏழை பள்ளிக் குழந்தைகளின் ஏக்கப் பெருமூச்சு.ஏழைகளுக்கு எதிராக உள்ள கல்வி அமைப்பு குறித்த கோபமான விமர்சனம்.

தமிழில்: ஜே. ஷாஜகான்பக்கங்கள் 64, விலை ரூ.25.


ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

இந்நூலைப் பொறுத்தளவில் விமர்சனம் என்று எழுத ஏதுமில்லை. அறிமுகம்தான் செய்ய முடியும். உலகமயம், தாராளமயம், அந்நிய மூலதனம் போன்ற சொற்கள் இன்று நமது வாழ்வில் கலக்கப்பட்டு விட்ட சூழலில் ‘பொருளாதார அடியாள்' என்று சொல்லும் தவிர்க்க இயலாததாக ஆகிறது. அந்நிய மூலதனம் என்றாலே பொருளாதார அடியாட்கள்தான் நினைவுக்கு வருகின்றனர்.

புரட்சியை தள்ளிப் போடுவதற்காக அல்லது மக்களை மழுங்கடிப்பதற்காகவே ‘அந்நிய உதவி'யுடன் தொண்டமைப்புகள் செயல்படுகின்றன. வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதே பெரும்பாலான முற்போக்காளர்களினதும் எண்ணமாக உள்ளது. நாட்டின் வளத்தையும் கடைசி சொட்டுவரை உறிஞ்சுவதே ஏகாதிபத்திய நாடுகளின் எண்ணம் என்பதை முகத்தில் அறைந்து சொல்கிறது இந்நூல்.

சரி அதென்ன பொருளாதார அடியாள்?

பொருளாதாரம் குறித்த அறிவோ அதிர்கால வளர்ச்சியை மதிப்பிடும் திறனோ இருக்கிறதோ இல்லையோ, ‘இந்த பெரும் அந்நிய முதலீட்டை ஏற்றுக் கொண்டால் இன்னும் 5 ஆண்டுகளில் உங்கள் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று ஒரு நாட்டின் தலைவரை ஏற்றுக் கொள்ளச் செய்து பெரும் அந்நிய முதலீட்டிலான திட்டத்தை மேற்கொள்ளும் ஒப்பந்தத்தை நாம் சேர்ந்துள்ள (குறிப்பாக அமெரிக்க) நிறுவனத்திற்கும் பெறுவதற்காக சில வாய்ச்சவடால் பேர்வழிகளை அமெரிக்க நிறுவனங்கள் பணியில் அமர்த்தியுள்ளன. அந்த நபர்களுக்கே பொருளாதார அடியாட்கள் என்று பெயர்.

இப்படி ‘உதவி' பெரும் நாடுகள் அமெரிக்காவுக்கு பொருளாதார அடிமைகளாக ஆகிவிடும்.

இந்தியாவில் அந்நிய முதலீடு வந்து குவிகிறது என்றால், நம்நாடு இன்று ஏகாதிபத்தியங்கள் சொன்ன சொல்லைத் தட்ட முடியாத நிலைக்கு வந்து விட்டது என்று பொருள். அமெரிக்காவின் திட்டம் என்னவென்றால் ஒவ்வொரு நாட்டையும் சுரண்டுவது, அதாவது தனக்குப் பொருளாதார அடிமையாக்கி, கந்துவட்டிக்காரனைப் போலக் கொள்ளையடிப்பது, தனது சொல்லுக்கு ‘ஆமாம் சாமி' போட வைப்பது, இதற்காகவே பொருளாதார அடியாட்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.

இதில் பணியாத நாடுகளை மிரட்டுவது, போர் மூலம் கைப்பற்றுவதும் நடக்கும். அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒரே காரணம் அங்குள்ள வளங்களே என்பதை ஜான்பெர்கின்ஸ் அப்பட்டமாக வாக்குமூலமாகத் தருகிறார்.

எதற்கும் உதவாத ஒரு வெற்றுசவடால் பேர்வழியை பொருளாதார அடியாளாக்கும் படலம் தொடங்கி...

ஆசிய வளர்ச்சி வங்கி, அமெரிக்காவிற்காக இந்தோனேசியாவில் நடத்திய புள்ளிவிபர மோசடி, சவுதியில் பெண்ணாசை பிடித்த இளவரசருக்கு பெண்ணை கூட்டிக் கொடுத்து பல ஒப்பந்தங்களை பெற்றது, பின்லேடனுக்கு உதவிய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், சூயஸ் கால்வாயை அமெரிக்காவிடமிருந்து திரும்பப் பெற்று, கிறிஸ்தவ மத உளவு நிறுவனத்தை வெளியேற்றி, எண்ணெய் நிறுவன ஆதிக்கத்தை எதிர்த்த பனாமா அதிபர் ஓமர் டோரிஜோஸ் விமான விபத்தில் சி.ஐ.ஏ.வால் கொல்லப்பட்டது. அவருடனான ஜான், ஈரான் மன்னர் ஷாவை தூக்கி எறிந்து கொமேனி வருவதை உணர முடியால் நட்டப்பட்டது. ஈராக் அதிபர் சதாம் உசேன் பொருளாதார அடியாட்களின் ஆசை காட்டலுக்கு பணியாத நிலை. இதனால் போர் தொடுக்கப்பட்டது என விரிவாக ஆதாரங்களுடன் பேசுகிறது இந்நூல்.

இப்போது ஜான் பெர்கின்ஸ் ஈக்வடாலில் அமேசான் காட்டுப்பகுதி பழங்குடி மக்களுடன் சேர்ந்து அக்காட்டை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து காப்பாற்ற போராடி வருகிறார்.

ஆசிரியர் ஜான் பெர்கின்ஸ்
தமிழில்: இரா. முருகவேள்
வெளியீடு: விடியல் பதிப்பகம், பெரியார் நகர்,
மசுக்காளிபாளையம் (வடக்கு)
கோயம்புத்தூர் 641 015. விலை ரூ.150