மணல் திட்டுகளை ராமனின் பாலம் என்று சுப்ரமணியசாமிகள் வாதாடுவதும் அதற்கு உச்சநீதிமன்றங்கள் தலையாட்டும் போக்கும் நிலவும் நேரத்தில் - ராமன் பாலம் என்ற புரட்டை பல்வேறு ஆதாரங்களுடன் விளக்குகிறார், ஆய்வாளரும் தமிழ்நாடு உயர்கல்வி மாமன்றத்தின் துணைத் தலைவருமான பேராசிரியர் ராமசாமி.

பாலம் என்று குறிப்பிடும் இந்த மணல் திட்டு அங்கங்கே இடைவெளி விட்டுவிட்டு 32200 மீட்டர் நீளத்துக்கு உள்ளது. இது நிரந்தரமான மணல் திட்டு அல்ல. அவ்வப்போது மாறும் தன்மையுடைய மணல் திட்டு ஆகும். இதில் 300 மீட்டர் தொலைவுக்கு சேதுக் கால்வாய் அமைப்பதால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்துக்கும் இலங்கைக்கும் சேதுப் பாலம் இருந்ததாக 8 ஆம் நூற்றாண்டிலேயே இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. ராஜராஜ சோழனின் கல்வெட்டு, செப்பேடுகளிலும் அத்தகைய பாலம் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், 17 லட்ச ஆண்டுகளுக்கு முன் அயோத்தியைத் தலைநகராகக் கொண்டு ராமர் ஆட்சி செய்தார் என்றும், அவர் தென் பகுதிக்கு வந்து பாலம் அமைத்து இலங்கை சென்றார் என்றும், புராணங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் வரலாற்று மேதை கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார் கி.மு. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரலாற்றுக்கு முந்தைய காலமான கற்காலம் இருந்தது என்று குறிப்பிடுகிறார். இத்தகைய கருத்தை நிலவியல் அறிஞர் டி.என். வாடியா, வரலாற்றுப் பேராசிரியர்கள் வின்சென்ட் ஸ்மித், வாஷ்பர்ன் ஹாப் கின்ஸ், எச்.சி.ராய் சவுத்ரி ஆகியோரும் தெரிவித்துள்ளனர். இப்போதுள்ள உருவ அமைப்புகளில் மனிதன் தோன்றியதே பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு தான்.

‘எ ஹிஸ்டரி ஆஃப் ஸ்ரீலங்கா’ என்ற நூலில் வரலாற்றாளர் கே.எம்.டி. சில்வா, ‘9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்திய துணைக் கண்டத்திலிருந்து இலங்கை தனியாகப் பிரிந்தது’ என்கிறார்.

இந்தியாவிலிருந்து இலங்கை பிரிந்த பிறகு இடையில் உள்ள மிச்ச சொச்ச நிலத்தொடர்புதான் தனுஷ்கோடிக்கும், தலை மன்னாருக்கும் இடையில் உள்ள மணல், கற்கள் நிறைந்த மணல் திட்டு ஆகும். இது ஒரே நேர்க்கோடாக இருந்ததில்லை. கடல் நீரோட்டத்துக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கிறது. இதை ‘மேனுவல் ஆஃப் தி அட்மினிஸ்ட்ரேஷன் ஆஃப் தி மெட்ராஸ் ப்ரெசிடென்சி (வால்யூம் 21)’ நூல் குறிப்பிடுகிறது.

கி.பி.1765-ல் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் ராபர்ட் பாக் என்பவர், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கடல் பகுதியை அளவை செய்யும்படி உத்தரவிட்டார். அப்போது, நிலவியல் அளவையாள ராக ஜார்ஜ் ஆடம் என்பவர் பணியாற்றினார். அங்குள்ள மணல் திட்டு, அவரது பெயரில்தான் ஆடம்பிரிட்ஜ் என அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்பகுதி இயற்கையானதா, செயற்கையாகக் கட்டப்பட்ட பாலமா என்ற கேள்வி இன்று நேற்றல்ல, 200 ஆண்டுகளுக்கு முன்பே எழுப்பப்பட்டதுதான்.

ஜெர்மனி ஜீனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜோன்ஸ் வால்டர் என்ற பேராசிரியர்தான் கள ஆய்வு செய்தார். அவர் வெளியிட்ட கட்டுரையில், மணல், மணல் கற்களால் அடித்து வரப்பட்டதையும் பல அடுக்குகளாகத் தங்கித் தங்கி திட்டுகள் உருவானதையும் கடலுக்கு வெயில் தெரிந்தும் தெரியாமல் இருந்ததையும் இடையிடையே கடல் நீரோட்டத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றையெல்லாம்விட பண்டைய தமிழ் மன்னர்கள் இலங்கைக்குத் தரை வழியாக (சேது பாலம்) சென்றதாகத் தகவல் இல்லை. மாறாக, கப்பலில்தான் அவர்கள் சென்றிருக்கிறார்கள். தமிழ் மன்னர்களுடன் போரிட்ட சிங்களப் படையினரும் அவ்வாறே கப்பலில்தான் வந்திருக்கிறார்கள்.

இவை ஒருபுறம் இருக்க, அப்பகுதியில் கப்பல் போக்குவரத்து செல்வதால் ஏற்படும் நன்மையை வரலாற்று மேதை கே.கே. பிள்ளை தனது ‘சௌத் இந்தியா அண்ட் ஸ்ரீலங்கா’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். எனவே, சேதுக் கால்வாய்த் திட்டம் யாருக்கும் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாது என்று பேராசிரியர் ராமசாமி கூறினார்.

Pin It