சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு குறித்து எஸ்.பொ. அவர்கள் எழுதிய கட்டுரை தொடர்பாக அம்மாநாட்டின் அமைப்பாளர் முருகபூபதி, கீற்று ஆசிரியர் குழுவிற்கு அனுப்பிய மின்னஞ்சல்:

13-08-2010

ஆசிரியர்

கீற்று இணைய இதழ்

தமிழ்நாடு 

அன்புடையீர் வணக்கம்.

 தங்களின் கீற்று இணையத்தளத்தில் (07-ஆகஸ்ட்2010) நாம் இலங்கையில் அடுத்த ஆண்டு (2011 ஜனவரி 6,7,8,9 ஆம் திகதிகளில்) நடத்தவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு தொடர்பாக அவதூறான செய்தி பரப்பப்பட்டிருக்கிறது.

  இந்த மகாநாடு சிலவருடங்களுக்கு முன்னரே ஆலோசிக்கப்பட்ட கலை, இலக்கிய செயற்திட்டமாகும். அவுஸ்திரேலியாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திவரும் முருகபூபதியாகிய நான்,  இந்த நிகழ்வை நடத்தும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபகர்.

murugaboopathyஇலங்கையிலும் பல வெளிநாடுகளிலும் வதியும் தமிழ்  எழுத்தாளர்களினது வேண்டுகோளுக்கிணங்கவே இந்த சர்வதேச ஒன்றுகூடல் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு பலரதும் ஆலோசனைகளைப் பெற்று கடந்த 03-01-2010 ஆம் திகதி இலங்கையில் கொழும்பில் தமிழ்ச்சங்க மண்டபத்தில் சுமார் 120 பேரளவில் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டத்தை நடத்தினேன். இக்கூட்டத்தில் படைப்பாளிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் இலங்கையில் கொழும்பில் வெளியாகும் வீரகேசரி, தினக்குரல், தினகரன் ஆகிய தமிழ்த்தேசிய நாளிதழ்களின் ஆசிரியர்கள் மற்றும் மல்லிகை, ஞானம், கொழுந்து, செங்கதிர் முதலான சிற்றிதழ்களின் ஆசிரியர்கள் பயிற்சிப் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். இதுபற்றிய விரிவான செய்திகள் பல ஊடகங்களில் கடந்த ஜனவரி மாதமும் அதன் பின்னரும் வெளியாகியிருக்கிறது.

 தமிழ்நாட்டில் இனிய நந்தவனம் மற்றும் யுகமாயினி இதழ்களிலும் விரிவான செய்திகள் பிரசுரமாகியுள்ளன.

  இம்மகாநாடு தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா ஆகிய நகரங்களிலும் விரிவான ஆலோசனைக் கூட்டங்கள் நடந்திருக்கின்றன. இவற்றில் நான் கலந்துகொண்டது சம்பந்தமான செய்திகளும் ஊடகங்களில் வெளிவந்தன. சமீபத்திலும் மகாநாட்டு இணைப்பாளர் தலைமையில் இப்பகுதிகளில் கூட்டங்கள் நடந்துள்ளன. விரைவில் மலையகத்தில் ஹட்டன் நகரத்தில் மற்றுமொரு கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்திய வம்சாவளி மலையக எழுத்தாளர்கள், கலைஞர்களும் இம்மகாநாட்டில் பங்கேற்று கருத்தரங்குகளில் தமது கட்டுரைகளை சமரப்பிக்கவிருக்கின்றனர்.

  இம்மகாநாடு முடிந்த பின்னர் இலங்கை மலையகத்தில் பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழக வளாகம், கிழக்கு பல்கலைக்கழகம், தென் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியனவற்றில் கலை, இலக்கிய கருத்தரங்குகள் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டு குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், வளாக முதல்வர், கலைப்பீட பேராசிரியர்கள் ஆகியோரது சம்மதமும் பெறப்பட்டுள்ளது. இந்த மகாநாட்டினால் தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமன்றி பல்கலைக்கழக மாணவர்களும் பயனடையத்தக்க விதமாகத்தான் நிகழ்ச்சி நிரல்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

 இந்த மகாநாடு அரசியல் சார்ந்தோ இலங்கை அரசாங்கம் சார்ந்தோ நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்படவில்லை என்பது இக்கூட்டங்களில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்கு தெரியும். ஊடகங்களுக்கும் தெரியும்.

 12 அம்ச கலை, இலக்கியம் , கல்வி சார்ந்த  யோசனைகளை முன்வைத்தே நாம் இந்த மகாநாட்டை கூட்டுகின்றோம்.

இந்த மகாநாட்டிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. எழுத்தாளர்களினதும் இலக்கிய ஆர்வலர்களினதும் சமூகநலன் விரும்பிகளினதும் நிதிப்பங்களிப்புடன்தான் இம்மகாநாடு நடைபெறவிருக்கிறது.

 அப்படியிருக்க தங்களது கீற்று இணைய இதழில் மகாநாட்டு அமைப்பாளரான என்னையும் என்னோடு இணைந்து பணியாற்றவுள்ள கலை, இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் கேவலப்படுத்தும் விதமாகவும் எமக்கு எதிராக அவதூறு பரப்பும் விதமாகவும் எஸ்.பொ. என்று அழைக்கப்படும் திரு. எஸ்.பொன்னுத்துரை அவர்கள் கருத்துக் கூறியிருக்கிறார்.

அமைப்பாளராகிய நான் இலங்கை அதிபர் திரு. ராஜபக்ஷ அவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு மகாநாடு நடத்துவதாக தங்களது கீற்று இதழில் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

நான் ஒரு இருதய நோயாளி. சில வருடங்களுக்கு முன்னர் பைபாஸ் சத்திர சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டிருக்கின்றேன். கடந்த சில வருடங்களாக மருந்து மாத்திரைகளுடன்தான் எனது வாழ்க்கை நடக்கிறது.

 1972 ஆம் ஆண்டு முதல் நான் எழுத்தாளனாக இலங்கையில் நன்கு அறியப்பட்டவன். வீரகேசரி நாளிதளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியிருக்கின்றேன். அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னரும் எனது இலக்கியப்பணி இதழியல் பணி தொடர்கிறது. நான் ஒரு படைப்பாளி அத்துடன் பத்திரிகையாளன். இதுவரையில் 18 நூல்கள் எழுதியிருக்கின்றேன். இரண்டு நூல்களுக்கு சாகித்திய விருதுகளும் பெற்றுள்ளேன். பல நாடுகளுக்கும் பயணித்து பயண இலக்கியங்கள் எழுதியிருக்கின்றேன். நான் அவுஸ்திரேலியாவிலிருந்துகொண்டு மேற்கோள்ளும் பல சமூகப்பணிகளுக்காக 2002 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய தினத்தின்போது சிறந்த பிரஜைக்கான (Australian Citizen Award 2002) விருதும் பெற்றுள்ளேன். அத்துடன் அவுஸ்திரேலியாவில் சில தமிழ் சமூக அமைப்புகளினதும் விருதுகளையும் பெற்றுள்ளேன். தமிழ்ச்சமூகத்தில் மிகுந்த கவனிப்புக்குள்ளாகியிருக்கும் எனக்கு, கீற்று இணைய இதழ் ஆசிரியரான தாங்களும் திரு. எஸ்.பொன்னுத்துரையும் அபகீர்த்தி ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

  தங்களது கீற்று இதழில் என்னைப்பற்றியும் நான் ஒழுங்குசெய்துள்ள சர்வதேச எழுத்தாளர் மகாநாடு பற்றியும் அவதூறாக எழுதப்பட்டிருப்பதனால் நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றேன்.

தங்களது கீற்று இதழில் என்னைப்பற்றியும் எனது மகாநாட்டுப்பணி பற்றியும் மிகவும் அவதூறாக எழுதியுள்ள திரு. எஸ்.பொ. என்ற எஸ்.பொன்னுத்துரைக்கும் தங்களது கீற்று இணைய இதழுக்கும் எதிராக நான் மானநட்ட வழக்கு தொடருவதற்கு தீர்மானித்துள்ளேன். இதுசம்பந்தமாக நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்பதை இத்தால் அறியத்தருகின்றேன்.

தங்களது குறிப்பிட்ட கீற்று இதழ் அவுஸ்திரேலியா சிட்னியிலிருந்து ஒலிபரப்பாகும் 24 மணிநேர ஒலிபரப்புச்சேவையான இன்பத்தமிழ் ஒலி வானொலியில் கடந்த 10 ஆம் திகதி செவ்வாய்கிழமை இரவு கருத்துக்களம் நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டு, மேலும்  பல நேயர்களினால் நான் அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றேன். இதற்கெல்லாம் காரணம் தாங்களும் தங்கள் இதழும் திரு.எஸ்.பொன்னுத்துரையும்தான் என்பதை மிகுந்த வேதனையுடன் அறியத்தருகின்றேன்.

எனவே மானநட்ட வழக்கு தொடருவதைத்தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. இந்திய நாணயத்தில் பத்துக்கோடி ரூபா நட்ட ஈடுகோரி தங்களுக்கும் திரு. எஸ்.பொன்னுத்துரைக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யவிருக்கின்றேன்.

இக்கடிதத்தை சுயசிந்தனையுடனும் எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு தங்கள் இருவராலும் நேர்ந்த அபகீர்த்தியினாலும் எழுதுகின்றேன்.

முருகபூபதி

அமைப்பாளர்

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு 2011

முகவரி: 170, Hothlyn Drive, Craigieburn, Victoria 3064, Australia

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

********

மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை: கீற்று நந்தன்

மதிப்பிற்குரிய முருகபூபதி அவர்களுக்கு,

வணக்கம். தாங்கள் கீற்று ஆசிரியர் குழுவுக்கு அனுப்பியுள்ள மேற்கண்ட மின்னஞ்சலைக் கண்டோம். அதில் தாங்கள் கீற்று மீது தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். கீற்று இணையதளம் அனைத்துவிதமான சிந்தனைகளுக்குமான ஒரு வெளியாகத் திகழ்கிறது. கீற்றில் வெளிவரும் கட்டுரைகள் படைப்பாளிகளின் சிந்தனையைச் சார்ந்தே வெளிவரும் கருத்துக்களாகும். இதில் கீற்றிற்கு எவ்வித தனிப்பட்ட நலனும் ஆர்வமும் இல்லை. இதுபோன்ற மின்னஞ்சல்களை எமது கருத்துச் சுதந்திரத்திற்கான மிரட்டலாக நாங்கள் உணர்கிறோம்.

உலக நாடுகளினால் ‘போர்க்குற்றம் நடந்தது’ என அறிவிக்கப்பட்ட நாட்டில் நிகழும் ஒவ்வொரு பொதுநிகழ்வும் அரசியல் தன்மை கொண்டதாகவே கவனிக்கப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. அத்தகைய நிகழ்வுகளின் மீதான விமர்சனத்தை முன்வைப்பதற்கு மனித உரிமைகளில் ஆர்வம் கொண்ட எழுத்தாளர்களுக்கும் அதை வெளியிடுவதற்கு கீற்று மாதிரியான ஊடகங்களுக்கும் உரிமை இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கும், மனித உரிமையாளர்களுக்கும் இன்னமும் இலங்கையில் நுழைய அனுமதி மறுக்கிற சிங்கள அரசின் ஆதரவில்லாமல் இலங்கையின் தலைநகரில் எவ்விதக் கூட்டமும் நடத்திட முடியாது என்பது அனைவராலும் புரிந்துகொள்ள முடிந்ததே. இந்நிலையில் தங்களது அமைப்பின் அறிவிப்பும் மாநாடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் என்பதைத் தாங்கள் ஏற்கனவே அறிந்தே இருப்பீர்கள். அப்படியிருக்கும்போது மதிப்பிற்குரிய எஸ்.பொ. அவர்களின் விமர்சனத்தால் மனவுளைச்சலுக்கு ஆளானேன் என்று கூறுவது பொருத்தமற்றது.

மேலும் அக்கட்டுரையில் எஸ்.பொ. அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு எதிரான எதிர்வினை ஆற்ற வேண்டுமாயின், கீற்று இணையதளத்திற்கு நீங்கள் தாராளமாக அனுப்பலாம். அவற்றையும் நாங்கள் வெளியிடத் தயாராக இருக்கிறோம். மற்றபடி, தங்களையோ, தங்கள் அமைப்பையோ  தனிப்பட்ட முறைமையில் தாக்க வேண்டிய அவசியம் கீற்று இணையதளத்திற்கு இல்லை. பத்து கோடி ரூபாய் மானநட்ட வழக்கு தொடர்வேன் என்பதுபோன்ற மிரட்டல்களால் கீற்று போன்ற பொதுவான சிந்தனைவெளியின் செயல்பாடுகளை முடக்க முடியாது. அப்படி வழக்குத் தொடரப்படுமாயின் அதனை சட்டரீதியில் எதிர்கொள்ள கீற்று தயாராகவே இருக்கிறது. எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சப்போவதில்லை.

- கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

(படம் நன்றி: தினகரன் வாரமஞ்சரி)

Pin It