இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே பார்ப்பனியம் - அவதாரங்களை அறிவியல் வினாக்களால் துளைத்தெடுத்தவர் பூலே என்று தஞ்சையில் நடந்த சாதி ஒழிப்புக் கருத்தரங்கில் கவிஞர் வெண்ணிலா குறிப்பிட்டார். அவரது உரை:

அமங்கலத்தின் வண்ணமாக மூடநம்பிக்கையின் இருப்பிடமாக ஒதுக்கப்பட்ட வண்ணமாக இருந்த கருப்பு நிறத்தை பகுத்தறிவாளர்களின் நிறமாக, சிந்தனையாளர்களின் நிறமாக மாற்றிய தந்தை பெரியாருக்கு என் முதல் வணக்கம்.

பொதுவாகவே சாதி இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமானால், முன்பெல்லாம் சாதி பெருமையாக வெளிப்படையாகப் பேசப்பட்டது; கருதப்பட்டது; கவுரவத்துக்கு தோளில் போடும் துண்டைப் போல் இருந்தது. இப்போது, சட்டைக்குள் போடும் பனியனைப்போல் மறைமுகமாக சாதி பேணப்படுகிறது. நம்மைப் போன்ற இயக்கங்களில் உள்ளவர்களைத் தவிர, சாதியை எதிர்ப்பவர்கள் மிகவும் குறைவு தான்.

50, 100 ஆண்டுகளுக்கு முன்பு சாதியை மறுத்தவர்களைவிட இன்றைக்கு சாதியை இறுக்கமாகக் கட்டிக் கொண்டிருக்கின்ற மக்கள் தொகை அதிகமாயிருக்கு. இன்னும் சொல்லப்போனா தன்னுடைய சுயநல வளர்ச்சிக்கு வலிமையான ஆயுதமாகவும், வன்முறைக்கான ஆயுதமாகவும் தமிழகத்தில் இன்று பயன்படுத்தும் போக்கு அதிகமாயிருக்கு.

எந்த அரசியல் கட்சிப் பின்னால் போனாலும் அதற்குள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கின்ற சாதி அரசியல் நம்முடைய முகத்தில் வந்து பளார், பளார் என அறையுது.

ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுப்பதிலிருந்து ஒவ்வொரு மாவட்டத்தின் வாக்கு வங்கியை கணிப்பதிலிருந்து அனைத்திற்கும் அடிப்படையாக எந்த விசயம் இருக்குமென பார்த்தால் சாதி தான் இருந்துகிட்டிருக்கு. இதையெல்லாம் பார்க்கிறபோது கவுதம புத்தர் காலத்திற்கு திரும்பிப் போய் விடுவோமோ என்ற பயம் வந்துகிட்டே இருக்கு. யோசித்துப் பாருங்க நகரங்களில்கூட மிக நுட்பமாக சாதியை கையிலே வெச்சிக்கிட்டுருக்காங்க. முதல்லே போன உடனே ஒரு ஒத்தை பார்வையிலே கண்டுபிடிச்சிடறாங்க, நம்ம என்ன சாதி, அப்புறம் சாதிக்குரிய அடையாளங்களை எல்லாம் கண்டுப்பிடிச்சி வெச்சிருக்காங்க. எப்படி தான் கண்டுபிடிக்கிறாங்க என தெரியல.

நம்முடைய நடத்தைகளுக்கு ஒரு சாதி முலாம் பூசுவது, இது எல்லா இடத்திலேயும் மறுக்க முடியாத அளவுக்கு மிகத் தீவிரமாக நடந்துகிட்டேயிருக்கு. அப்ப நமக்கு மிகப் பெரிய கேள்வி வருது. சாதி எப்படி வந்தது? ஏற்கனவே சாதி இருந்தாலும், குழுக்களாக இருந்தாலும், ஆரியர்களால் மட்டும் தான் இந்தியாவில் ‘வர்ணாஸ்ரமம்’ என்ற நான்கு அடுக்குமுறை மிகத் தீவிரமாக வேரூன்றியது. இன்றைக்கு மொத்தம் இருக்குற மக்கள் தொகையில் மூன்று சதவீதம் மட்டும்தான் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். மீதி 97 சதவீதம் நம்மைப் போன்றவர்கள் பார்ப்பனரல்லாதவர்கள்; ஆனால் இவர்களும் சாதி ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அப்படியானால் நாம் எல்லோருமே பார்ப்பனர்களாகி விட்டோமா என்கிற கேள்வி இயல்பாக எழுகிறது.

ஏனென்றால் நம்மை போன்றவர்களும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மக்களும் மனத்தளவில் “பிராமணர்”களாக மாறி இருக்கிறோம் என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டி உள்ளது. அதனால் தான் இன்றைக்கும் அசைக்க முடியாமல் சாதி இருந்துக்கிட்டே இருக்கு. அதனுடைய தொடர்ச்சியாக சாதிய கட்சிகளின் வளர்ச்சியும் இருக்கு. சமத்துவபுரங்கள் வந்தும், அங்கே சாதி ஒழிந்துள்ளதா? ஒரு கவிஞன் அழகாக சொல்லியிருக்கான், “சமத்துவபுரம்; கழிவு நீர் குழாய் சுத்தம்செய்ய அதே கருப்பன்.”

உடல் சார்ந்த அரசியல்

தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து ஒருவர் குடியரசுத் தலைவர் ஆகிவிட்டார் என்று பெருமைப் பேசிக் கொள்ளலாம். ஆனால் உயர்ந்த சாதியைச் சார்ந்த ஒருவனோ, பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த ஒருவனோ கழிப்பறையை சுத்தம் செய்ய முன் வரவில்லை. இன்றைக்கும் அதே வேலையை செய்பவர்களாக தாழ்த்தப்பட்டவர்கள் தான் இருந்துக்கிட்டுருக்காங்க. அதிலே நமக்கு என்ன பெருமை இருக்கு? திருமாவளவன் சிதம்பரத்திற்கு வந்தவுடன் அவருக்கு பெருமை செய்யுறாங்கன்னு எல்லோரும் பெருமைப்படுறாங்க. ஆனா திருமாவளவனுக்கு மட்டுந்தான் அது நடக்கும்.

அதே சிதம்பரத்தில் தாழ்த்தப்பட்ட ஒரு ஆள் உள்ளேப் போக முடியுமா? என யோசித்துப் பாருங்க. அதுக்கான சாத்தியமே கிடையாது. அப்ப என்ன சாதியை நாம் ஒழிச்சிருக்கோம். சாதிய கட்சிகள் தான் என்ன சாதியை ஒழிச்சிருக்கு. நாம எல்லோரும் தெரிந்தோ தெரியாமலோ மிக ஆழமாக சாதிக்கப் பின்னால் சென்று கொண்டிருக்கிறோம்.

அதற்கு அடிப்படை விசஷயமாக நான் எதைப் பார்க்குறன்னா நம்முடைய பாரம்பரியமான உடல் பற்றிய அரசியல் தான் சாதியாக நம்மகிட்ட இயங்குது என நான் உறுதியாக நம்புகிறேன். இந்திய தத்துவ மரபு என்ன சொல்லுதுன்னா, ஆன்மீக வாழ்க்கைதான் உயர்வான வாழ்க்கை. உடல் சார்ந்து வாழ்கின்ற வாழ்க்கை கீழானது. உடல் கீழானது அதற்குள் இயங்குகிற மனது, ஆன்மா என்று சொல்லுகிறோமே அந்த மனது மேலானது, என்கிறது ஆன்மீகம்.

பார்ப்பனர்கள் மனதோடு ஏற்றி படிப்பறிவோடு வேதங்களோடும், உபநிடதங்களோடும் வாழ்கின்ற வாழ்க்கை உயர்வானது. நாம் படிப்பறிவு இல்லாம வயித்துக்கு சாப்பிட்டுக்கிட்டு வாழ்ந்துக்கிட்டிருக்கிற உடல் சார்ந்த, உழைப்புச் சார்ந்த வியர்வை சார்ந்த வாழ்க்கை கீழானது என்ற கருத்து ஆழமாக வந்திருக்கு. உடல் சார்ந்த வாழ்க்கை கீழானது என்கிறபோது அதை ஒட்டித்தான் சுத்தம், அசுத்தம், மேல்சாதி, கீழ் சாதி என்ற கருத்துகள் தொடர்ச்சியாக நம் மனதில் படிந்து கொண்டேயிருக்கு.

இதே அடிப்படையில் தான் பெண்ணடிமைiயும் வருகிறது. சுத்தம், அசுத்தம் என்ற கண்ணோட்டத்தில்தான் பெண் அசுத்தமானவள். அவளுக்குள் நிகழ்கின்ற மாதவிடாய் பிரச்சினைகள் எல்லாம் அசுத்தத்தின் வெளிப்பாடு என்று கூறி, பெண்ணையும் தீட்டுப்பட்டவளாக, தீண்டத்தகாதவளாக ஒவ்வொரு குடும்பத்திலேயும் ஒதுக்கி வைப்பதை நாம் பார்த்துக்கிட்டு இருக்கோம். இந்த உடல் சார்ந்த அரசியல் என்பதும் சாதியத்தினுடைய மிக இறுக்கமான பிடிக்கு ஒரு காரணமாக இருந்திருக்க முடியும்.
இதனுடைய தொடர்ச்சியாக நாம் மராட்டியத்தில் தலித் எழுச்சிக்கு வித்திட்ட புலே-வை நிறுத்திப் பார்க்க வேணடும்.

பெரியார் காலத்தின் முன்பே வாழ்ந்தவர் புலே. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே, அறிவியல் பூர்வமாக மதத்தை அவர் விமர்சித்திருப்பது வியப்பாக இருக்கிறது. இன்னும் சொல்லப்பானால், அவரது அனைத்து நூல்களிலேயும் ‘இந்து’ என்ற வார்த்தையையே பயன்படுத்தவில்லை என்பது மிகவும் ஆச்சரியமானது.

“பிராமணியம்” என்ற பெயரைத்தான் சொல்லியிருக்கிறார். பிரம்மாவின் முகம், தோள், தொடை, காலிலிருந்துதான், பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரர்கள் பிறந்தார்கள் என்று கூறப்படுவதை ஒரு கல்லூரி மாணவன் கலகக் குரலை எப்படி எழுப்புவானோ, அப்படி அவர் கேள்விகளைக் கேட்கிறார்.

தலையில் ஒரு குழந்தை பிறப்பதற்கு தலையில் ஒரு கருப்பை இருக்கணும், தோளில் ஒரு குழந்தை பிறக்க அங்கே ஒரு கருப்பை இருக்கணும். இப்படி நான்கு இடத்திலேயும் நான்கு கருப்பை இருக்கணும். அப்படின்னா அதற்கு சமமாக எல்லா உறுப்புகளையும் கற்பனை செய்து பாருங்கள்.

பால் கொடுக்க எட்டு மார்பகங்கள், ஒவ்வொரு கருப்பைக்கும் நாலு நாள் என்றால் 16 நாள் மாத விடாய் வந்திருக்கும். அப்போது மாதத்தில் 16 நாள் அவர் தனியா உட்கார்ந்திருக்கனும். அப்போ ‘பிரம்மா’வுக்கு தேவையான வேலையை அந்த வீட்ல யார் செய்தார்கள்? அதைவிட அடிப்படையான ஒரு கேள்வியைக் கேட்கிறார். அவருக்கு அன்பான மனைவி ஒருவர் வீட்டில் இருந்தாலே அவளிடம் ஒரு கருப்பை இருக்கும்போது ‘பிரம்மா’ ஏன் விவஸ்தை இல்லாம வந்து நாலு இடத்திலே குழந்தையை சுமந்துக்கிட்டு அந்தப் பெண்ணையே கேவலப்படுத்தும்படி ஏன் நடந்துக்கிட்டான்? என்று கேட்கிறார், புலே.

இந்த பிரம்மா, சொந்த மகள் சரஸ்வதியையே உடல் உறவு கொண்டவன். எனவே, பிரம்மாவைப் போய் வேசி மகன் என சாதாரண வார்த்தையாலே திட்ட முடியாது. அதைவிட மோசமானவன் ‘பிரம்மா’ என்கிறார் புலே!

இந்து மதத்தின் கருத்தாக்கங்கள் எல்லாமே ஒட்டு மொத்தமாக தகர்க்கப்பட வேண்டும் என்பதுதான் அவருடைய தீவிரமான கருத்தாகும். இதே போல் எல்லா அவதாரங்களையும் அவர் உடைத்து நொறுக்குகிறார். மச்ச அவதாரம் என சொல்கிறோம் இல்லையா, அவர் கேள்விக் கேட்கிறார்.

‘ஏண்டா அறிவிருக்கா, மச்ச அவதாரம் என ஒரு மனுசனைச் சொல்றே. மச்சம்னா மீன். மீன் எங்கே வாழும்? தண்ணியில். மனிதன் எங்கே வாழ்வான்? நிலத்திலே வாழ்வான். மனிதனைத் தூக்கி தண்ணீரில் போட்டா அடுத்த நிமிடம் செத்துடுவான். மீனை தூக்கி நிலத்திலே போட்டா அடுத்த நிமிடம் செத்துப் போயிடும். இவை இரண்டும் எப்படி பொருந்திச்சி?’ எனக் கேட்கிறார் புலே.

இப்படி எல்லா அவதாரங்களையும் கேள்வி கேட்டு அடித்து நொறுக்குகிறார். ஆனால், அதற்கு அடிப்படையான அறிவியல் காரணத்தையும் முன் வைக்கிறார். என்ன சொல்றார்னா, மச்சம் என்பதே வேகமாக செல்லக் கூடிய ஒரு படகு. முதன்முதலில் ஈரான் நாட்டிலிருந்து ஆரியர்கள் நுழையும்போது மச்சம் என்ற படகில் வந்து இறங்கியிருப்பாங்க. அதை ஓட்டிக்கிட்டு வந்த தலைவன் மச்ச அவதாரம் என மக்களால் வணங்கப்பட்டிருப்பான் என அவர் அறிவியல் சார்ந்த பதிலையும் முன் வைக்கிறார்.

ஆமை அவதாரம். ஆமைன்னா மெதுவாக வரக்கூடிய ஒரு படகாம். சின்னப் படகு வேகமாக வந்துச்சு. பிறகு மக்களை ஏற்றிக் கொண்டு வரும் பெரிய படகு மெதுவா வந்துச்சு. இந்த மாதிரி அறிவியல் பூர்வமான பதில்களை சொல்வதின் மூலமாக இந்துமதம் நம்பிக் கொண்டிருந்த அத்தனை அவதாரங்களையும், புரட்டுக்களையும் புலே - மிகவும் தெளிவாக மறுத்தார்.

இரண்டாவது அவர் செய்த முக்கியமான பணியாக நாம் எதைப் பார்க்கவேண்டும் என்றால், கல்வியில் அவர் செய்த புரட்சி. என்ன தான் சாதி இல்லையின்னு பேசிக் கொண்டிருந்தாலும், இந்த நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது. அடிப்படையாக தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்குமான கல்வி கொடுப்பதே சாதியை ஒழிக்க ஒரேவழி.

‘மகாத்மா’ என்றால் ஒரு குழந்தைகூட காந்தியைத்தான் சொல்லும். ஆனால் காந்தியோட அரசியல் வாழ்க்கை ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் போதே ஜோதிபாபுலே வுக்குத்தான் ‘மகாத்மா’ என்ற பட்டமே கொடுக்கப்பட்டு விட்டது. இதற்குப் பின்னால் நம் அரசியல் இரட்டடிப்பு என்பது எவ்வளவு கேவலமா இருந்திருக்கு என்பது ஆச்சரியமா இருக்கு. புலேவுக்கு ‘மகாத்மா’ பட்டம் வழங்கப்பட்டது யாருக்குமே தெரியலே. 1888 செப். 11 இல் - அவருக்கு ‘மகாத்மா’ பட்டம் வழங்கப்பட்டது.

முதன் முதலில் அவர் பள்ளி துவங்குகிறார். சூத்திரவாதி - சூத்திரர் என்று அழைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களான பெண்களுக்கான பள்ளியைத் துவக்குகிறார். தீர்க்க தரிசனமாக ஒரு தலைவர் செயல் திட்டங்களை வடிவமைச்சிருக்கார். பெண்களுக்கான பள்ளிக்கூடம் என்ற உடனே புனேவில் இருந்த மொத்த பார்ப்பனர்களும் பதைக்கிறார்கள்.

ஏற்கெனவே இந்த ஆளு நமக்கு புரியாததையெல்லாம் பண்ணிக்கிட்டிருக்கான், அதுவும் தாழ்த்தப்பட்ட பெண் பிள்ளைகளை படிக்க வெச்சாருன்னா நம்ம நாடு அழிவுக்கான இடத்தை நோக்கி போயிக்கிட்டிருக்கு என்றுச் சொல்லி, அந்தப் பள்ளிக்கு யார் யாரெல்லாம் பாடம் நடத்தப் போறாங்களோ அவர்கள் எல்லோரையும் மிரட்டி, பள்ளிக்கு பாடம் நடத்தப் போகாமல் தடுத்தார்கள்.

புலே என்ன செய்கிறார்? தன்னுடைய மனைவி சாவித்திரி பாயை 7 வயதில் திருமணம் செய்து கொண்டவர். படிப்பறிவே இல்லாத பொண்ணு. அவருக்கு எழுத்தறிவு கற்றுக் கொடுத்து, இந்தியாவில் முதல் பெண் ஆசிரியராக அந்தப் பள்ளிக்கு அவரை அனுப்புகிறார். சாவித்திரிபாயின் உணர்வுகளைப் படித்துப் பார்த்தால் ரொம்ப ஆச்சரியமாக இருக்கு. அவர்கள் எழுதுகிறார்கள் - 7, 8 வயதில் திருமணமாகி வீட்டுக்குள் நுழைந்த பிறகு நான் வெளியே போனதில்லை.

ஆனா, முதல் முதலாக இன்றைக்கு நான் ஒரு பள்ளி ஆசிரியராக காலடி எடுத்து வைக்கும்போது என்னுடைய மன உணர்வுகளை சொல்லவே முடியல ஒரு பக்கம் பெருமிதத்திலேயும், மகிழ்ச்சியிலும் இருந்தாலும், இன்னொரு பக்கம் என்னை மீறி ஒரு திகில் வந்து சூழ்ந்துக்கிட்டே இருந்திச்சி என்றார். ஏன்னா ரோட்டில் இரண்டு பக்கமும் மக்கள் வந்து நின்று பாக்குறாங்க. ‘ஒரு பொம்பளப் பொண்ணு திருமணமான பொண்ணு வீட்டை விட்டு வெளியில் வருவதா?’ அப்படின்னு மக்கள் வழி நெடுக பார்க்குறாங்க.

இவள் எங்கே தான் போகிறாள் என்று ஆச்சரியமா பார்த்து அவங்க பள்ளிக்கூடத்துக்குள்ளே நுழையறாங்க என தெரிந்தவுடனே, அந்த சின்ன கிராமமே தீப்பிடிச்சி எரியறா மாதிரி எரிகிறதாம். ஒரு பொண்ணு பள்ளிக்கூடத்துக்கு வாத்தியாரா போறதா, இது என்ன காரியம், அப்படின்னு சொல்லி அவரது அப்பாவுக்கு பெரிய மிரட்டல் விடுகிறார்கள்.

இவர்கள் நடந்து வரும்போது கல் எடுத்து வீசுகிறார்கள். முகத்துக்கு நேரா காரி உமிழ்கிறார்கள். இவையெல்லாம் நாம் படிக்கும்போது நமக்கு செய்தியாக இருக்கலாம். ஆனால், அந்த நிலையில், அந்த கணத்தில், அந்த உணர்வில் அனுபவிப்பதின் வேதனையும் நாம் உணர்ந்து கொண்டோமானால், நம்மிடம் நிச்சயம் சாதி என்ற உணர்வே இல்லாமல் போய்விடும்.

பெண்களுடைய முன்னேற்றத்தால் மட்டுமே மிகப் பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று ஜோதிபாபுலே அவர்கள் முதலில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒரு பள்ளியைத் துவங்கினாலும், பின்னர் பொதுப்பிரிவினருக்கான பெண்களுக்கான ஒரு பள்ளியை துவக்குகிறார். புலே பார்ப்பன ஆளுமையையே எதிர்த்தார்.

அதனாலேதான் முதன் முதலில் விதவைகள் மறுவாழ்வு இல்லம் மற்றும் சிசுக் கொலைத் தடுப்பு மையத்தை அவர் தொடங்கினார். விதவைகளுக்கான கொடுமை அப்போது பார்ப்பன பெண்களுக்குத் தான் அதிகமாக இருந்தது. 7 வயது, 3 வயது, ஏன் 1 வயது குழந்தைகளும், அறியாப் பருவத்திலேயே விதவையானார்கள். அதுக்கு மொட்டை அடிச்சி, வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்பது ஒரு சடங்கு.

ஆங்கில அரசாங்கம் ஒரு கணக்கு எடுத்து அறிவித்தார்கள். மருத்துவமனைகளில் சிசிக்சைக்காக வந்த ‘விதவை’ப் பெண்களில் பெரும்பாலோர் எப்படி வந்தார்கள் என்றால், நாற்பது, அம்பது வயதுள்ள ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, நடக்கக்கூட முடியாத நிலையிலேயே தவழ்ந்து கொண்டு, இடுப்பு எலும்பு உடைந்து போய் உயிர்ப் பிழைப்பதே அரிது என்ற நிலையிலே தான் அந்தக் குழந்தைகள் மருத்துவமனைக்கு வந்தார்கள். அவர்கள் மீது செலுத்தப்பட்ட பாலியல் வன்முறை வரம்பு இல்லாதது என்று 1938 இல் ஆங்கிலேய அரசுப் பதிவேடுகளில் எழுதப்பட்டுள்ளன.

ஆனால், 1800 களில் இந்த நிலைமை எவ்வளவு மோசமாக இருந்திருக்கும்? வீட்டில் இருக்கும் ஆண்களின் பாலியல் தொந்தரவாலே ஒவ்வொரு குழந்தையும் வயிற்றில் கரு சுமந்த பிறகு அவர்கள் தவித்த தவிப்புகளை எல்லாம் சாவித்திரிபாயும், ஜோதி பாபுலேவும் பார்த்து, இந்த பார்ப்பன விதவைப் பெண்களுக்காக நாம் ஏதாவது நிச்சயம் செய்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்த பிறகு தான், விதவைப் பெண்களுக்கான பிரசவம் பார்ப்பதை தன் வீட்டில் வைத்தே பார்த்தார்கள்.

விதவைப் பெண்கள் எல்லாம் இந்த விசயம் வெளியே தெரிந்து விடும் என பயந்துக் கொண்டு பிரசவம் பார்க்க வரவேயில்லை. இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து பெரிய சுவரொட்டி அடித்தார்கள். இங்கு யாருக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது, யாருக்கு எந்தக் குழந்தை பிறந்தது என்பது யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்படும் என்று புனே நகரம் முழுதும் ஒட்டினார்கள்.

கங்கையிலும், காசியிலும் போய் அங்கங்கே ஒட்டி வைக்கிறாங்க. ஏன்னா இந்த பெண்கள் வேறு வழியில்லாமல் கங்கையிலே போய் தான் சாவார்கள். அதனாலேதான் இதை படித்துவிட்டாவது திரும்பி வரட்டும் என அங்கே சுரொட்டிகளை ஒட்டினார்கள்.

அப்படி வந்த விதவைப் பெண்ணின் குழந்தை தான் ஜோதி பாபுலே தத்தெடுத்துக் கொண்ட யஷ்வந்த் புலே.

மதம் சார்ந்து மட்டும் தன் நடவடிக்கைகளை விரிவுபடுத்திக் கொள்ளாமல் அவருடைய முதன்மை இலக்காக மனிதம் என்பது மட்டுமே மேலோங்கியிருந்தது. அதற்கான அத்தனை களப்பணிகளிலும் தன்னுடைய மனைவியையும், அவர் இணைத்துக் கொண்டார். இன்றைக்கு மராட்டிய உலகத்தில் ஜோதி பாபுலேவை ஒரு எழுத்தாளராக யாரும் பேசுவதில்லை.

ஆனால் அவர் கண்டுபிடித்த ‘அகண்ட்’ என்ற கவிதை பாணி இன்றைக்கும் குறிப்பிடத் தகுந்த விசயமாக இருக்குது. ஏன்னா, ‘அவங்’ என்ற பாடல் சமயக் குறவர்களுடைய பக்தி சுலோகங்களைச் சொல்ற பாடல்களாக இருந்தது. அதற்கு எதிராக ஒரு கவிதை வடிவத்தையே அவர் முன்னிறுத்தினார்.

ஆக, காலந்தோறும் தொடர்வது இடைவெளி விடாதது, அப்படியிங்கிற அர்த்தத்தோட ஒரு கவிதை பாணியையே உருவாக்கினார். அதில் பார்ப்பனர்களுடைய பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தினார். அதேபோல அவர் ‘அடிமை முறை’ எனப் பல நூல்களை எழுதியிருக்கிறார்.

தன்னுடைய அத்தனை பயணத்தையும், களப்பணியாளராக இருந்தாலும் சரி, ஒரு நிறுவனத்தை நடத்துபவராக இருந்தாலும் சரி, பள்ளியின் தலைவராக இருந்தாலும் சரி, அந்தப் பள்ளியைக்கூட எதிர்காலத்தில் அரசாங்கம் நடத்தும் என சொல்லும்போது தாராளமாக விட்டுக் கொடுக்கிறார்.

நான்தான் நடத்த வேண்டும் என்று எந்தக் காலத்திலேயும் அவர் கூறியது கிடையாது. ஆனால், நான் நினைக்கின்ற விசயத்தை யார் செய்தாலும் அவர்களுக்கு ஒத்துழைப்பு தருவேன் என்று தன் வாழ்நாள் முழுக்க தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மட்டும் அல்லாமல் எங்கெல்லாம் மனிதகுலம் துயருற்று கண்ணீர் வடிக்கிறதோ அங்கெல்லாம் ஆதரவுக் கரத்தை நீட்டினார் புலே.

இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னாலும் இன்றும் புலே தொடங்கிய சமூகப் புரட்சி - அவர் தொடங்கிய இடத்திலேயே அங்கே நின்று கொண்டிருக்கிறது என்பதுதான், இந்தத் தலைமுறையின் சோகம். அதை மாற்றுவதற்கு நம்மில் எத்தனைப் பேர் தயாராக உள்ளோம் என்பதே இந்தக் கருத்தரங்கம் எழுப்பும் கேள்வியாக இருக்க வேண்டும் - என்றார் கவிஞர் வெண்ணிலா.

Pin It