கோவையில் மே 14 ஆம் தேதி நடைபெற்ற நடிகவேள் எம்ஆர். ராதா நூற்றாண்டு விழாவில் இயக்குனர் சுந்தரராஜன் பங்கேற்று ‘நான் எப்போதும் கடவுள் மறுப்பாளன். அதை செல்லுமிடமெல்லாம் பரப்பி வருகிறேன்’ என்று பெருமையுடன் குறிப்பிட்டார். அவரது உரை:

கடவுள் இல்லை; கடவுள் இல்லைன்னு என் வாழ்க்கையில் நான் இதுவரைக்கும் சொன்னதே கிடையாது. கடவுள் மறுப்புக் கொள்கை உடையவன் தான். கடவுள் இல்லவே இல்லை என்கிறதுதான் எனது கொள்கை. அதிலே எனக்கு இரண்டாவது கருத்து வந்ததே கிடையாது. ஆத்திகனுக்கும் நாத்திகனுக்கும் என்ன வித்தியாசம். முதலில் அதை தெளிவாக சொல்லனும். “நம்புங்கள் நாராயணனை, நம்புங்கள் கடவுளை, நம்புங்கள் நடக்கும்” என்கிறான் ஆத்திகன். நடக்கட்டும் நம்புகிறேன் என்கிறான் நாத்திகன். நம்பியவனுக்கு நடக்கவே இல்லையே. இந்தக் கொள்கைகளை எம்.ஆர்.ராதா சிறப்பாக சினிமாவில் சொல்லி இருக்கிறார். நிறையபேர் நிறைய விதமாக சொல்லி இருக்கிறார்கள்.

எம்.ஆர்.ராதா அவர்கள் என் படத்தில் நடிக்கவில்லை என்பது வருத்தமான செய்தி. அவர் பிறந்து 50, 60 வருஷம் கழித்து நான் பொறந்திட்டேன். அதனால் வேற வழியில்லை. ஆனா அவர் பையன் ராதாரவியை நடிக்க வைச்சதிலே எனக்கு மகிழ்ச்சி. கடவுள் மறுப்புக் கொள்கை எனக்கு வந்ததற்கு காரணமே, என்னுடைய 10வது வயசுலே எங்க தாத்தா கையைப் பிடிச்சுட்டு அவினாசி தேர்த் திருவிழாவுக்கு அழைத்துப் போனார்.

அப்பவெல்லாம் பதினெட்டுப் பட்டி கிராமமும் அந்தத் திருவிழாவிலே திரண்டு இருக்கும். அவினாசி தேரை 18 கிராமமும் சேர்ந்து இழுத்ததாத்தான் வந்து சேரும்னு அந்தத் தேரை இழுத்துக் கோயில்லே கொண்டு வந்து சேர்த்தாங்க. தாழ்த்தப்பட்டவங்க உயர்ந்த சாதிக்காரங்க எல்லாம் இழுத்து வந்து சேர்த்தாங்க. கோயில்கிட்ட தேர் வந்தவுடன், சில பேரை தள்ளி வைத்து கோயிலுக்குள்ளே எல்லோரும் வரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க.

முக்கியமா, நாயக்கரு, கவுண்டரு, செட்டியாரு, பிள்ளைமாரு, அய்யரு, இந்த மாதிரி கோஷ்டி உள்ளேப் போகுது. உள்ள போனதுக்கு அப்புறம் கர்ப்பகக் கிரகத்துக்குள்ள போகும் போது அய்யரு மட்டும் உள்ளே போறாரு. மீதி ஆளுங்களையெல்லாம் வெளியிலேயே நிறுத்திட்டான். அந்த சம்பவம் 10 வயசுலே பார்த்த உடனே என்னை பாதிச்சிடுச்சு.

ஏன் தாத்தா இவங்களையெல்லாம் கேட்கறதுக்கு ஆளே இல்லையா? என்று கேட்டேன். இல்லை இல்லை இவங்களையெல்லாம் கேட்கறதுக்கு ஓர் ஆள் இருக்கிறார். அவர்தாண்டா ‘பெரியார்’ அப்படீன்னு தாத்தா சொன்னார். இன்னிக்கு வரைக்கும் நான் பெரியாரை பின்பற்றி வருகிறேன். நான் எங்கம்மாவுக்காக கோவிலுக்கு போயிருக்கிறேன். எங்கம்மா திருவண்ணாமலை கோவிலை பார்த்ததில்லை. என்னை ஒரு தடவையாவது கூட்டிட்டு போடான்னு சொன்னாங்க. நான் கூப்பிட்டு போனேன். கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவன் தான்.

ஆனாலும் கூப்பிட்டுப் போனேன். கோயிலுக்குப் போயிட்டு திரும்பி வந்த உடனே நான் எழுதின வாசகமே , நான் எங்கம்மாவுக்காக கோவிலுக்குப் போனேன். எங்கம்மா எனக்காக சாமி கும்பிட்டாங்க. ஏன் இதை சொல்றேன்னா, நான் என் வீட்டிலே வச்சிருக்கிற வாசகமே - “அம்மா என்றால் அன்பு மழை - அவரை ஆண்டவன் என்றால் என்ன பிழை?”

அந்தக் கடவுள் என்பது அம்மா மட்டும் தான். பெரியார் இந்த சமுதாயத்தைப் புரட்டிப் போட்டவரு. பதவிங்கிற ஒரு ஆயுதமே இல்லாம புரட்டிப் போட்டவரு. என்னால் முடிஞ்ச வரைக்கும் சினிமாவிலேயும், நான் சந்திக்கிற மேடையிலேயும் கடவுள் இல்லைங்கிறதை சொல்லிட்டு இருக்கிறேன். எனது மகன் வெள்ளிக்கிழமையன்று முட்டை ஆம்லெட் கேட்கிறான்னு என் மனைவி என்னிடம் கூறுவார். முட்டையை எடு உடை, உடைஞ்சா போட்டுக் கொடு. உடையிலேன்னா போடாதே என்பேன்.

ஆம்லெட்டு வெள்ளிக்கிழமை சாப்பிடக் கூடாதுன்னா முட்டை உடையக் கூடாதில்லையா? தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பாருன்னா, கோயம்புத்தூரிலே பாம் வைக்கும் போது, அவர் எங்கே போயிருந்தார்? (கைதட்டல்) கடவுள் இருப்பது என்பதே ஒரு ஏமாற்று வேலை. சாமியின்னு கூப்பிட வைத்த ஒரு வர்க்கம் இருக்கு இல்லையா? அய்யருக வர்க்கம். அவங்க பண்ணின வேலை தான். கூத்து தான். இதை பெரியார் எந்தெந்த ரூபத்திலே எல்லாம் சொல்லனுமோ சொன்னாரு. அதே மாதிரி எம்.ஆர்.ராதா நகைச்சுவையோடு சொன்னாரு. தெளிவாகவும் சொன்னாரு.

எம்.ஆர்.ராதா அவர்களுடைய நூற்றாண்டு விழா நிகழ்ச்சிங்கறது எனக்கு மகிழ்ச்சியான நிகழ்ச்சி. அதிலே நான் கலந்துகிட்டது, அதுவும் கோவை மாவட்டத்திலே நம்ம நண்பர்களோடு சேர்ந்து கலந்துகிட்டது ஒரு பெரிய பெருமையாக நான் நினைக்கிறேன். இந்த சித்தாபுதூர் பள்ளியில் நாம் படிச்சோம். அதே சித்தாபுதூர் தெருவுலே ஓட்டு கேட்க வந்தோம். இதே பகுதியில் இந்தக் கொள்கையை சொல்லனுங்கறதுக்காகவே நானாக முன் வந்து இதில் கலந்து கொண்டேன் என்றார், இயக்குனர் சுந்தர்ராசன்.

எதுக்கு லைசென்சு?

எம்.ஆர்.ராதா எவ்வளவு துணிவான ஆளுங்கிறதுக்கு ஒரு உதாரணம். எம்.ஜி.ஆரை சுட்டுட்டாரு. எம்.ஆர்.ராதா கோர்ட்டிலே நிக்குறாரு. கோர்ட்டிலே நீதிபதி கேட்கிறாரு. அவரை சுட்ட துப்பாக்கிக்கு லைசென்ஸ் வாங்கலே. ஏன் அந்த துப்பாக்கிக்கு லைசென்ஸ் வாங்கலேன்னு கேட்கிறாரு. எம்.ஜி.ஆரை சுட்டேன். அவரும் சாகலை. எனக்கு நானே சுட்டேன். நானும் சாகலை. அதுக்கப்புறம் அந்தத் துப்பாக்கிக்கு எதுக்கு லைசென்ஸ் எடுக்கணும் என்றார் எம்.ஆர்.ராதா.

இயக்குனர் சுந்தர்ராசன் உரையிலிருந்து

Pin It