போரை நிறுத்தி ஈழத்தமிழினம் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த முன் வருமாறு விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் எழுப்பியுள்ள அர்த்தமுள்ள - நியாயமான கருத்துகளை சர்வதேச சமூகம் செவிமடுக்க வேண்டும். அக்கடிதம் முன்வைத்துள்ள முக்கிய கருத்துகளை இவ்வாறு பட்டியலிடலாம்:
1) வடக்கு-கிழக்கு மாநிலங்களை தங்களது பாரம்பரியத் தாயகமாகக் கொண்ட தமிழர்கள் அவர்களுக்கான தாயகத்தை தேசிய சுயநிர்ணய உரிமையின் கீழ் அமைத்துக் கொள்ள உள்ள உரிமையை 50 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அரசு ராணுவத்தால் அடக்கி, மைனாரிட்டி மக்களான தமிழர்களை இனப்படுகொலை செய்து வருகிறது. இது அரசு பயங்கரவாதம்.
2) அமைதி வழியில் உரிமைக்குப் போராடிய தமிழர்களுக்கு எதிராக சிங்களக் குடியேற்றங்களைத் திணித்து, தமிழர்களின் கல்வி, வேலை வாய்ப்புகளைப் பறித்து, ராணுவத்தைக் கொண்டு ஒடுக்கியபோதுதான் விடுதலைப் புலிகள் இயக்கம் வரலாற்று ரீதியாக பிறப்பெடுத்தது.
3) வடக்கு கிழக்கு மாநிலங்களில் தமிழர்கள் தாயகத்தை நிறுவும் அரசியல் ரீதியான முடிவுக்கு 1977 இல் தமிழ் மக்கள் தங்களின் அரசியல் கட்சி வழியாக ஏற்பு வழங்கினர். அந்த ஜனநாயக உரிமையை நிறைவேற்றும் தேசியக் கடமையையாற்றவே விடுதலைப்புலிகள் முன் வந்தனர்.
4) அதனடிப்படையில் கடந்த 30 ஆண்டுகாலமாக விடுதலைப்புலிகளின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் மகத்தான தியாகத்தால் தங்களது ராணுவ நடவடிக்கையால் உலகத்தின் பாராட்டுகளைப் பெற்று கவனத்தை ஈர்த்தனர்.
5) எப்போதெல்லாம் விடுதலைப்புலிகள் ராணுவ ரீதியாக பலமாக விளங்கினார்களோ, அப்போதெல்லாம் அரசியல் தீர்வுக்கு முன் வருவதாகக் கூறி, இலங்கை நாடகமாடி, தனது படை பலத்தை வலிமையாக்கி வந்துள்ளது. 1985 திம்புவில் தொடங்கி, 2002 இல் நார்வே நாட்டின் தலையீட்டால் போர் நிறுத்த ஒப்பந்தம் உருவாகும் வரை இந்த தந்திரத்தையே பின்பற்றினார்கள்.
6) நார்வே மற்றும் நிதி உதவி செய்யும் நாடுகளின் ஆதரவோடு விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே மூன்று ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டன. 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம், சுனாமியால் பாதிப்புற்ற மக்களுக்கு உதவும் கட்டமைப்பு, போரில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு உடனடி புனர் வாழ்வுத் திட்டங்களை நிறைவேற்றும் செயலகங்கள் அமைப்பு என்ற இந்த மூன்று ஒப்பந்தங்களையும் செயல்பட முடியாமல், சீர்குலையச் செய்ததே இலங்கை அரசுதான்.
7) போரை கைவிட்டு, அமைதி பேச்சுவார்த்தை வழியாக தீர்வு காண முன்வருமாறு சர்வதேச நாடுகள் விடுத்த கோரிக்கைகளை முழுமையாக நிராகரித்தது - சிறீலங்கா தான். இது சர்வதேச நாடுகளுக்கே தெரியும். ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும்தான் இலங்கை அரசு - ராணுவ தீர்வை மட்டுமே நம்பியிருப்பதை தொடர்ந்து மிகவும் சரியாக அம்பலப்படுத்தி வந்தது.
8) பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் சிறிலங்கா அரசியல் தீர்வு முயற்சிகளை கைவிட்டு, ராணுவத் தீர்வையே முன்னிறுத்தியது. “பாதுகாப்பு காரணங்களுக்காக” என்று கூறிக் கொண்டு, மக்களுக்கு சேவை செய்த தொண்டு நிறுவனங்களையும், பத்திரிகையாளர்களையும் வெளியேற்றிய சிறீலங்கா அரசு, ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை துணிவோடு கண்டித்த தொண்டு நிறுவனத்தினரையும் பத்திரிகையாளர்களையும் ‘வெள்ளைப் புலிகள்’ என்று பழி போட்டது.
9) சிறீலங்கா அரசின் எல்லை மீறிய இந்த வன்முறைகளை பொறுமையுடன், சர்வதேச நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்குக் காரணம், சிறீலங்காவுக்கு ‘அரசு’ என்ற அங்கீகாரம் இருப்பதால்தான். விடுதலைப் புலிகளின் நேர்மையான - நீதியான போராட்டத்தை சர்வதேசம் நிராகரிப்பதற்குக் காரணம் - ‘அரசு’ என்ற அங்கீகாரம் இல்லாமையே. ஹிட்லர் அரசு முதல் குவாண்டா அரசிலிருந்து சூடான் அரசு வரை, ஆட்சிகள்தான் இனப்படுகொலைகளை நடத்தின. 1956 இல் தொடங்கிய இந்த இனப் படுகொலை வரலாறு - இப்போது மேலும் விரிவடைந்து நிற்கிறது. 200,000-த்துக்கும் அதிகமான மக்கள் 1956 முதல் இனப்படுகொலைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
10) தமிழர்களின் நியாயமான, தனித் தாயக உணர்வை ஆதரிக்கத் தயங்கும் சர்வதேச சமூகம், தனது நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; தமிழ் - சிங்கள மோதலுக்கு ஒரே நிலையான தீர்வு, தமிழர்களின் தாயகம் உருவாவதுதான். சிங்களப் படை மற்றும் சிங்கள அரசால் நீண்டகாலமாக படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழர்கள், விரக்தியின் விளிம்புக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். தங்கள் உடைமைகளை இழந்து சொல்ல முடியாத துயர நினைவுகளையும் சுமந்து நிற்கும் தமிழர்கள், அந்த நினைவுகளிலிருந்து விடுபடவே முடியாது. இத்துயரம் தோய்ந்த நினைவுகளோடு, தமிழர்கள் சிங்களர்களோடு ஒன்றுபட்ட இலங்கையில் சமமாக வாழவே முடியாது. இதுவே இன அரசியல் ரீதியான உண்மை.
11) பல்குழல் பீரங்கி, ஏவுகணைகள் போன்ற அழிவு ஆயுதங்களால் நாள்தோறும் அப்பாவித் தமிழர்கள் -அவர்கள் இடம் பெயர்ந்த முகாம்களிலேயே, நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே 2000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். 5000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 21-ம் நூற்றாண்டின் மிக மோசமான இனப்படுகொலையை தமிழ் ஈழம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
12) இந்த நிலையில் சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை ஏற்று, போர் நிறுத்தத்துக்கு உண்மையான நோக்கத்தோடு தயாராகவே உள்ளது. மனித அவலங்களை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறது இந்த போர் நிறுத்தம் - சமரசப் பேச்சு வார்த்தையை நோக்கி முன்னேறவே விரும்புகிறோம்.
13) விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்ற கோரிக்கை - பிரச்சினையின் தீர்வுக்கு உதவாது என்பதை உலகம் கவனத்தில் கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் ஆயுதம் தான் தமிழர்களின் பாதுகாப்பு கவசம். அதுவே தமிழர்கள் அரசியல் விடுதலைக்கான கருவி என்பதே அரசியல் எதார்த்தம். தமிழ் மக்களின் பாதுகாப்பு - விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைச் சார்ந்தே உள்ளது. சர்வதேச கமூகத்தின் ஆதரவுடன் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று உருவாகும்போது, விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்துவதற்கான அவசியமே நேராது. தமிழ் மக்கள் கொடூரமான இனப் படுகொலைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அரசியல் தீர்வு எதுவும் இல்லாத நிலையில் ஆயுதங்களைக் கீழே போடுவது சாத்தியமில்லாதது. அதே நேரத்தில் அரசு நடத்தி வரும் இனப் படுகொலை யுத்தத்தை பாராட்டும் செயலாகவும் அது அமைந்து விடும்.
14) எனவே சர்வதேச சமூகம் இனப்படுகொலையை தடுத்திட போர்நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசை வற்புறுத்த வேண்டுகிறோம். இதற்கான அழுத்தத்தை சர்வதேச நாடுகள் உருவாக்கி, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உணவு, மருந்து போன்ற அத்யாவசியப் பொருட்களை கிடைத்திடச் செய்ய வேண்டுகிறோம்.
உடனடி போர் நிறுத்தம் கொண்டு வரும் சர்வதேச சமூகத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைத்து, இணைந்து பணியாற்றிடவும், அந்த போர் நிறுத்தம் அரசியல் தீர்வை நோக்கி முன்னேறவும் ஒத்துழைக்க தயாராக உள்ளோம் - என்று விடுதலைப்புலிகள் இயக்கம் சர்வதேச சமூகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியாவின் காதுகளில் இந்த நியாயங்களின் குரல் கேட்கமா?