குடிஅரசு தொகுப்புகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடக் கூடாது என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் மீது சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவர் கி. வீரமணி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த "குற்றத்துக்காக" ரூ.15 லட்சம் கழகத்திடம் இழப்பீடும் கேட்டு இருந்தார். இந்த வழக்கில் தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த இரத்தினகிரி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணனுக்கு எதிராக தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு உயர்நீதிமன்றத்தில் வழக்கு மனு தாக்கல் செய்திருந்தார். இரத்தினகிரி தாக்கல் செய்திருந்த மனு மீது முதலில் விசாரணை நடத்திய பிறகே முக்கிய வழக்கை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த கி.வீரமணி சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இரத்தினகிரி தனது மனுவில் - கி.வீரமணி கேட்டுக் கொண்டதற்காக - அவருக்காகவே 'குடிஅரசு' பத்திரிகைகளில் வெளிவந்த பெரியார் கருத்துகளை தாம் சேகரித்து - கி.வீரமணியிடம் தந்ததாகவும், அதைத் தான் கொளத்தூர் மணி வெளியிட்டுள்ளதாகவும் - எனவே இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதை எதிர்த்து வாதிட்ட வழக்கறிஞர் துரைசாமி குறிப்பிட்டதாவது:

"பெரியார் எழுத்துக்களைத் தொகுக்கும் பணி தம்மிடம் ஒப்படைக்கப்பட்டது என்கிறார் இரத்தினகிரி. அப்படி ஒப்படைக்கப்பட்டதற்கான சான்று ஆவணங்கள் ஏதுமில்லை. கொளத்தூர் மணி - பெரியார் கருத்துகளைத் தொகுத்து நூலாக்கும் பணியை மேற்கொண்ட நிலையில், இரத்தினகிரி தாமாகவே முன் வந்து தம்மிடம் உள்ள பெரியாரின் 'குடிஅரசு'களைத் தருவதாக கூறி, அதற்கு ரூ.5 லட்சம் பணம் கேட்டுள்ளார். இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள கி. வீரமணி, பெரியார் நூல்களைப் பதிப்பிக்கும் உரிமை தமது நிறுவனத்திடமே உள்ளது என்றும் - எனவே பெரியார் திராவிடர் கழகம் பதிப்பிப்பது, தமது பதிப்புரிமையில் குறுக்கிடுவதாகும் என்று கூறியுள்ளார். மனுதாரர் இரத்தினகிரி, கி.வீரமணியின் கீழ் அவரது உத்தரவுப்படி செயல்பட்டிருப்பவர் என்று கூறுவதால், அவரது வாதப்படியே பதிப்புரிமை தொடர்பான வழக்கில் அவர் தன்னை இணைத்துக் கொள்ள முடியாது. வழக்கில் அவசியமானவராகவும், தலையீடு இன்றி தீர்ப்பை வழங்க இயலாத நிலையிலும் உள்ள ஒருவர் தான் வழக்கில் தலையிட முடியும் என்று சிவில் சட்ட நடைமுறைகள் தெளிவாகக் கூறுகின்றன.

இந்த வழக்கில் இரத்தினகிரி நேரடியாக தொடர்புடையவர் அல்ல. கொளத்தூர் மணி தொகுத்திருந்த பெரியாரின் 'குடிஅரசு' எழுத்துக்களை பாராட்டி, கொளத்தூர் மணிக்கு கடிதம் எழுதியதோடு, அத்தொகுப்பை தமக்கு அனுப்பி வைக்குமாறு காசோலையும் இரத்தினகிரி அனுப்பியுள்ளார். உண்மையில் இரத்தினகிரியிடமிருந்த தொகுப்புகளைத்தான் கொளத்தூர் மணி வெளியிட்டிருந்தார் என்றால், இரத்தினகிரி, கொளத்தூர் மணியின் தொகுப்பு முயற்சிகளைப் பாராட்டி, அதைப் பெறுவதற்கு காசோலையும் ஏன் அனுப்ப வேண்டும்?" என்று துரைசாமி வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ஜெயபால், 29.1.2009 அன்று வழங்கிய தீர்ப்பில், இரத்தினகிரியிடமிருந்த தொகுப்புதான் கொளத்தூர் மணி வெளியிட்டது என்ற கருத்தில் நீதிமன்றம் சந்தேகம் கொள்கிறது என்று கூறி இரத்தினகிரியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். வழக்கறிஞர் துரைசாமியுடன் வழக்கறிஞர் இளங்கோ ஆஜரானார்.

Pin It