இடஒதுக்கீடு முறையாக அமுல்படுத்தப்படுகிறதா என்பது கண்காணிக்கப்பட வேண்டும்; அமுல்படுத்தாதவர்களை தண்டிக்கும் சட்டம் வேண்டும் என்று, கழகத் தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தினார். ம.மதிவண்ணன் எழுதிய ‘உள் ஒதுக்கீடு; சில பார்வைகள்’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 12 ஆம் தேதி மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமையேற்று கொளத்தூர் மணி ஆற்றிய உரை:
இதுவரை ‘நெரிந்து...’ என்ற கவிதை நூல் வழியாகவும், ‘வெளிச்சங்களில் புதைத்த புதை குழிகள்’, ‘நமக்கிடையிலான தொலைவு’ போன்ற நூல்கள் வழியாகவும் அறியப்பட்ட தோழர் மதிவண்ணன், “உள் ஒதுக்கீடு - சில பார்வைகள்” என்ற நூலை தற்போது நமக்களித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வாழும் தாழ்த்தப்பட்டோரில் பெரும் பிரிவுகளாக உள்ள மூன்று பிரிவுகளில் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் அரிதாக மட்டுமே பயன்பெறும் நிலையில் கிடக்கும் அருந்ததிய மக்களுக்கு தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கோரி ஆந்திர நாட்டில் நடந்த போராட்ட வரலாற்றை தமிழில் தந்துள்ள தோடு, தமிழ்நாட்டுக்கான முன்மொழிதல்களையும் முன் வைக்கும் ஓர் அருமையான படைப்பாகும்.
ஆந்திர நாட்டில் மாதிகா மக்களுக்கான உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக மாலா மக்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று தடுத்ததைப் போலவே, எதிர்க் குரல்களை இங்கும் கேட்கிறோம். இன்று நடைமுறையிலிருக்கும் எல்லா ஒதுக்கீடுகளுமே உள் ஒதுக்கீடுகள்தான் 1885 இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாடு மூன்றாம் தீர்மானமாக ‘அரசுப் பணிகளை இந்திய மயமாக்கு’ என்ற கோரிக்கையை முன் வைத்தது. ஆங்கிலேய அரசு, அக்குரலை செவிமடுத்து அளித்த ஒதுக்கீட்டை, ‘இந்தியர்’களுக்கு என்று வழங்கிய வாய்ப்புகளை பார்ப்பனர்களே முழுவதும் அபகரித்த நிலையில் தான் வடக்கே இசுலாமியரும், தெற்கே பார்ப்பனர் அல்லாதாரும், எதிர்க்குரல் எழுப்பினர்.
1920 களில் பார்ப்பனரல்லாதார் என்ற பிரிவுக்கு நீதிக்கட்சி அரசு வழங்கிய ஒதுக்கீடு நான்கைந்து முன்னேறிய சாதிகளே கைப்பற்றிய நிலையில் தான் பெரியார் போன்ற தலைவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு உள் ஒதுக்கீடு கேட்டதன் விளைவாக பிற்படுத்தப்பட்டோருக்கென தனி ஒதுக்கீடு வந்தது. அதிலும் உரிய வாய்ப்புகளைப் பெற முடியாத மக்களின் குரல் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு என உள் ஒதுக்கீட்டை வழங்க வைத்தது. மதச் சிறுபான்மையர்கள் தொடர்ந்து உரிய பயனை அடைய முடியாத நிலையைக் களைய இப்போது அவர்களுக்கும் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கன்னட நாட்டில்கூட பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், சாதிகள், சமுதாயங்கள், குலங்கள் என நான்கு வகையாக உள் ஒதுக்கீடு செய்யப் பட்டே வழங்கப்பட்டு வருகிறது. அரசியல் சட்டத்தின் 16(4) என்ற பிரிவு அரசுப் பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் பெறாத பின் தங்கிய மக்கள் என அரசு கருதும் வகுப்புகளுக்கு தனி ஏற்பாடுகள் செய்யலாம் என்றுதான் கூறுகிறது.
அரசியல் சட்டப் பிரிவுகள் 330, 332 ஆகியவை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களில் பட்டியல் வகுப்பினருக்கும், பழங்குடிகளுக்கும் இயன்றவரை அவர்களுடைய மக்கள் தொகைக்கேற்ப இடங்களை ஒதுக்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் வேலைகளில் இதுவரை போதிய பிரதிநிதித்துவம் பெறாத அருந்ததியர்களுக்கு அவர்களுடைய மக்கள் தொகைக்கேற்ப பிரதிநிதித்துவம் பெறுவதை அரசியல் சட்டத்தின் ஒட்டுமொத்த சாரத்தையும் கணக்கில் எடுக்காமல் 341 என்ற ஒரு பிரிவை மட்டும் தனியாக பிரித்தெடுத்து உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
கருத்தளவில் உள்ஒதுக்கீட்டின் நியாயங்களை நாம் ஏற்றுக் கொண்டாலும், செயல் வடிவில் வர, அரசியல் சட்டத் திருத்தம் போன்ற எளிதில் நிகழ வாய்ப் பில்லாத ஒன்றைச் செய்தாக வேண்டியுள்ளது. இதை குறித்தெல்லாம் தொடர்ந்து பேச உள்ள அறிஞர்கள் விளக்க உள்ளார்கள்.
ஆனால் இதுவரை சட்டங்கள் வழங்கியுள்ள உரிமைகளைப் பின் தங்கிய பிரிவுகள் முழுமையாக பெறுகின்றனவா? இல்லை எனில் அதற்கு நாம் நிகழ்த்தியுள்ள எதிர் வினைகள் என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியது அவசியம். 1921 ஆகஸ்ட்டில் சென்னை சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது நீதிக்கட்சி நிறுவிய தலைவர்களில் ஒருவரான டாக்டர் சி. நடேசனார் பார்ப்பனர் அல்லாதார் அரசு வேலைகளில் உரிய பங்கு பெறும் வரை பார்ப்பனர்களுக்கு பணி நியமனம் வழங்கக் கூடாது என்ற கோரிக்கையை முன் வைக்கிறார்.
அதற்குக் கடும் எதிர்ப்புகள் வந்த நிலையில் ஓ. தணிகாசலம் செட்டியார் என்ற நீதிக்கட்சித் தலைவர் குறைந்தது அய்.சி.எஸ். தவிர்த்த தலைமைச் செயலகப் பதவிகளிலாவது பார்ப்பனரல்லாத மக்கள் போதிய பங்கினை பெறும் வரை பார்ப்பனர்களை நியமிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். எப்படியோ, அடுத்த மாதத்தில் ஐந்து பிரிவு மக்களுக்கு 100 பதவிகளையும் பிரித்துத் தருகிற ஆணை வெளியிடப்பட்டது.
ஆனால், 1925-இல் சட்டமன்றத்தில் வகுப்புரிமை குறித்த விவாதம் நிகழ்ந்த போது டி.ஏ. ராமலிங்க செட்டியார் முன் மொழிய, டாக்டர் சி. நடேசனார் வழி மொழிந்து வெறும் அரசாணை மட்டும் போதிய பலனை அளித்துவிடாது. அந்த அரசாணை நிறைவேற்றத்தைக் கண்காணிக்க காப்பாளர் நியமிக்கப்பட வேண்டும், கண்காணிப்புக்கென நிலைக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். விளைவாக பார்ப்பனரல்லாதார், இஸ்லாமியர், கிறித்துவர், தாழ்த்தப்பட்டோர் அடங்கிய நிலைக்குழு உருவாக்கப்பட்டது.
அதுபோலவே 1902 இல் தனது ஆட்சிப் பரப்பில் 50 விழுக்காடு இடங்களை பார்ப்பனரல்லாதாருக்கு வழங்கிய கோலாப்பூர் சிற்றரசர் சாகு மகாராஜ் கூட மூன்று மாதத்துக்கு ஒரு முறை செய்யப்பட்ட நியமனங்கள் குறித்த அறிக்கையை எல்லா துறைகளும் அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆணையிட்டு கண்காணித்து வந்துள்ளார் என்பதையும் இந்த வேளையில் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
1951 இல் முதல் அரசியல் சட்டத் திருத்தம் பிரிவு 15 இல் 4 என்ற உட்பிரிவு, கல்வி நிலையங்களில் பின் தங்கிய மக்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்வதை ஏற்றுக் கொண்டது. ஆனால் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட் டோர் இடஒதுக்கீடு செய்ய சென்ற ஆண்டு செப்டம்பரில் அரசு புதிதாக 93வது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது. உடனே புது தில்லி அனைத்திந்திய மருத்துவ ஆய்வு கழகத்தின் பயிற்சி மருத்துவர்கள் எதிர்த்துப் போராடினர்.
52 சதவீதம் என ஏற்றுக் கொள்ளப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 56 ஆண்டுகள் கழித்து செய்யப்படும் 27 சதவீதம் என்ற மிகக் குறைந்த ஒதுக்கீட்டைக்கூட எவ்வளவு கடுமையாக எதிர்த்தார்கள்? அரசு கூட சமாதானம் செய்ததே! 100க்கு 77 இடங்களை இதுவரை அனுபவித்து வந்த உயர்சாதியினர் அதில் 27 இடங்கள் பறிபோவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பதறினார்களே? 10 சதவீதமாக உள்ள அவர்களிடம் அரசு கூட சமாதானம் பேசியது.
77 இடங்கள் 50 இடங்களாக குறையும் என்று அஞ்சாதீர்கள். 18000 கோடி ரூபாய் செலவழித்து மொத்த இடங்களை 54 சதவீதம் உயர்த்துவோம்; இதன் மூலம் மொத்த இடங்கள் 154 சதவீதமாக அதிகரிக்கும். 27 போய் 50 சதவீதம் என்றாலும் பழையபடியே - 77 சதவீதத்துக்கான உங்களுக்கான இடங்கள் குறைந்து விடாது என்று அரசு உறுதி கூறியதே! அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்? எங்களுக்கு இடம் குறையாமல் இருப்பதைப் பற்றிக் கவலை இல்லை. பிற்படுத்தப்பட்டோர் நுழையக் கூடாது என்றனர். அதற்கு அரசு ஒரேயடியாக 27 சதவீதம் கொடுக்க மாட்டோம். இந்த ஆண்டு 9 சதவீதம் மட்டும்தான் என்றுகூட கூனிக் குறுகி நின்று கெஞ்சியது. ஆனால் நடந்தது என்ன? அந்த 9 சதவீதத்துக்கும் கூட உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கி விட்டார்களே!
1931 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு இப்போது பொருந்துமா என்று கேள்வி எழுப்பினர். 1931க்கு பிறகுதான் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவே இல்லையே! தேசிய மாதிரி கணக்கெடுப்பு 5 ஆண்டுகளுக்கு முன் பிற்படுத்தப்பட்டவர்கள் 36 சதவீதம் தான் என்றது. இப்போது 42 சதவீதம் என்கிறது.
எனவே பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு கூடாது என்று வழக்காடினார்களே! ராம்ஜெத்மலானிகூட 36 ஆனாலும் சரி 42 என்றாலும் சரி அவை 27 சதவீதத்துக்கும் அதிகம் தானே என்று வாதாடியும், இந்த ஆண்டு 9 சதவீதம் மட்டும் தானே ஒதுக்கப்படுகிறது என்ற நிலையிலும், அரசியல் சட்டம் 1951 லேயே கல்வி நிலைய ஒதுக்கீட்டுக்கு சட்ட திருத்தம் செய்திருந்தும் 56 ஆண்டுகள் கடந்தும் அந்த ஏற்பாடு செய்யப்படவில்லையே என்று வலியுறுத்தியும்கூட, உச்ச நீதிமன்ற நீதிபதி அரிஜித் பசாயத் 56 ஆண்டுகள் பொறுத்தவர்கள் இன்னும் ஒரு ஆண்டு பொறுத்திருக்க முடியாதா என்று கேலி பேசி தடை ஆணை வழங்கினாரே! நாம் என்ன எதிர்வினை ஆற்றினோம்?
மண்டல் குழு குறித்த இந்திரா சகானி வழக்கில் 11 நீதிபதிகள் ஆயம் 27 சதவீதம் ஏற்றுக் கொண்ட நிலையிலும், 2 நீதிபதிகள் ஆயம் அதை மறுத்ததே! நாம் என்ன செய்தோம்! ஐ.ஐ.டி. இல் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. 4800 ஐ.ஐ.டி. இடங்களில் 720 இடங்கள் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். 200 இடங்கள் கூட இந்த ஆண்டு வழங்கப்படவில்லையே! நாம் அதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
நாடாளுமன்றம் அமைத்த சுதர்சன நாச்சியப்பன் குழு கூட உரிய விழுக்காட்டு இடங்களை நிரப்பாத அதிகாரிகளை 3 ஆண்டு சிறை, ரூ.50,000 அபராதம் இவற்றில் ஏதாவது ஒன்றை அல்லது இரண்டையும் வழங்க பரிந்துரை செய்ததே! அவ்வாறான தண்டிக்கும் பிரிவுகள் இடஒதுக்கீட்டு சட்டங்களில் இணைக்கப்பட வேண்டாமா?
அப்படியே இணைக்கப்பட்டாலும்கூட - நாம் தொடர்ந்து கண்காணித்து, நிறை வேற்றாத பொழுதெல்லாம் கடுமையான எதிர் போராட்டங்களை நடத்தியாக வேண் டாமா? அரசே அஞ்சத்தக்க வகையில் வீதியில் இறங்கி போராட வேண்டாமா? செய்தோமா? இல்லையே! எனவே, உள் ஒதுக்கீட்டின் நியாயங்கள் ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது; பெற்ற இடஒதுக்கீட்டு உரிமைகளைக்கூட சரிவர நடைமுறைப்படுத்த நமது தொடர் கண்காணிப்பும், தவறும்போது கடுமையாக போராடவும் நம்மை நாமே தயார்படுத்திக் கொள்வோம் எனக் கூறி விடைபெறுகிறேன்.