`ரிவோல்ட்' ஆங்கில ஏட்டின் கட்டுரைத் தொகுப்புகளும் வெளியிடப்பட்டன! கழகத் தலைவர் வெளியிட `குடிஅரசு'க்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கிய இரா. நல்லத்தம்பி பெற்றுக் கொண்டார். 27 குடிஅரசு தொகுதிகளையும் - `ரிவோல்ட்' ஆங்கில வார ஏட்டில் வெளி வந்த முக்கிய கட்டுரைத் தொகுப்புகளையும் - பெரியார் திராவிடர் கழக சார்பில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி மேட்டூர் அணையில் வெளியிடப்பட்டது.

பெரியார் பேச்சு எழுத்துகளை தொகுத்து வெளியிடும் முயற்சிகளில் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் பெரியார் திராவிடர் கழகம் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே 3 தொகுதிகளை வெளியிட்டு முடிந்த நிலையில், இப்போது மேலும் ஏராளமான, விடுபட்டுப் போன பெரியார் எழுத்து சிந்தனைகளைத் தேடிப் பிடித்து அவைகளைத் தொகுத்து 27 தொகுதிகளாக வெளியிட்டுள்ளது.

பெரியாரின் `குடிஅரசு'க்கு அரசு நெருக்கடி வந்த போது, `புரட்சி', `பகுத்தறிவு' ஏடுகளையும் பெரியார் நடத்தினார். அப்படி `பகுத்தறிவு' வார ஏட்டை பெரியார் தொடங்கிய நாள் 26.8.1934 ஆகும். எனவே வரலாற்றுக் குறிப்புள்ள நாளான ஆகஸ்டு 26 ஆம் தேதியிலேயே `குடிஅரசு' - `ரிவோல்ட்' உள்ளிட்ட 28 தொகுதிகளையும் (1925 முதல் 1938 வரை) கழகம் வெளியிட முடிவு செய்தது. வெளியீட்டு விழா, மேட்டூரில் ஆகஸ்டு 26 அன்று பகல் 11 மணியளவில் நடைபெற்றது.

குடிஅரசு, ரிவோல்ட் தொகுப்புகளை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட, மேட்டூர் கழக ஆதரவாளரான தோழர் இரா. நல்லத்தம்பி பெற்றுக் கொண்டார். மேட்டூர் தோழர் இரா. நல்லத்தம்பி குடி அரசு வெளியீட்டுக்காக ஆர்வத்துடன் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியீட்டு விழாவில், கழகத்தின் பொதுச் செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், சேலம் மாவட்டக் கழகத் தலைவர் மார்ட்டின், மாவட்ட செயலாளர் சக்திவேலு, அமைப்பாளர் முல்லைவேந்தன், சென்னை மாவட்டக் கழகத் தலைவர் தபசி. குமரன், திண்டுக்கல் தாமரைக் கண்ணன், திருப்பூர் இராவணன், குடிஅரசு தொகுப்பு பணிகளின் ஒருங்கிணைப்பாளர் ப.தமிழ்க்குரிசில் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர் வெளியிடப்பட்ட குடிஅரசு, ரிவோல்ட் தொகுப்புகள் விற்பனைக்கு - முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது.

(விழாவில் கழகத் தலைவர், பொதுச்செயலாளர்கள் உரை அடுத்த இதழில் வெளிவரும்.)

Pin It