ஈரோடு மாவட்டம் பெருந்துறை திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் 28 -07- 2010 புதன் காலை பெருந்துறையில் நடைபெற்றது.
 
இந்த கருத்து கேட்பு சம்பந்தமான திட்ட அறிக்கை 3 நாட்களுக்கு முன்புதான் சுற்றியுள்ள ஊராட்சி, பேரூராட்சிகளுக்கு வழங்கப்பட்டது. இதிலிருந்தே ஒன்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும், பெருந்துறை அருகே உள்ள சிப்காட்டில் 50ஏக்கர் நிலத்தை எடுத்துக்க்கொண்டு ஒரு தனியார் நிறுவனம் ஆரம்பிக்க உள்ள திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் என்ற சுற்றுச்சூழல் கேட்டை விளைவிக்கும் செயலுக்கு அரசு மறைமுகமாக துணைபோக ஆரம்பித்துவிட்டது என்பதை.
 
அது என்ன "திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்”?

"13 வகையான நச்சுகள் கொண்ட திடக் கழிவுகளை ஈரோடு மாவட்டத்தை சுற்றுயுள்ள 8 மாவட்ட 575 பெரிய ஆலைகளில் இருந்து வெளியாகும் 28900 மெட்ரிக் டன் கழிவுகளை எடுத்துவந்து அதை 50 ஏக்கர் நிலத்தில் கொட்டி மூடிவிடுவது. இப்ப சொல்றாங்க மூடிவிடுவது என்று.. நாளை என்ன செய்வார்கள்.. திடக்கழிவு அழித்தல் என்ற பெயரில் எரிக்கலாம்.. அரைக்கலாம்.., ஏற்கனவே வேலைவாய்ப்பு என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட‌ சிப்காட்டில் இப்போது சாயப்பட்டறைகள், தோல் தொழிற்சாலைகள், மற்றும் பல ஆலைகளின் சுத்தகரிக்கப்படாத மாசு நீரால் பெருந்துறை சென்னிமலை மற்றும் ஈரோட்டின் தென்பகுதிகளின் விவசாயம், நிலத்தடி நீர்நிலை நாசமானதுடன், ஆழ்குழாய் நீரையும் நாசப்படுத்தி எங்களை நீர் தேவைக்காக அலையவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். இப்ப மாவட்ட ஆட்சியாளர் சொல்லுவார் இதனால் நீர்நிலை கெடாது, வாழ்வாதாரம் கெடாது என்று. இப்படித்தான் சிப்காட் வரும் முன்னும் சொன்னார்கள். சிப்காட்டால் பாதிக்கப்பட்ட நிலங்களின் ஆழ்குழாய் நீரைக் குடிக்க ஆட்சியாளர்கள் தயாரா?" என்று கொந்தளித்தார் ஒரு விவசாயி.
 
"இந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் எந்தவித பாதிப்பையும் தராது என்றால் அந்தந்த ஆலைகளின் அருகிலேயே இன்னொரு அய்ந்து ஏக்கர் இடத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை அந்தந்த ஆலைகள் செய்துகொள்ளலாமே. அப்புறம் ஏன் இங்க கொண்டுவந்து கொட்டனும்? நிலத்தை, நீரை, நாசமாக்கிவிட்டு சம்பாரிக்கும் ஆலை முதலாளிகளுக்கு அரசு ஏன் தன் பொறுப்பில் எங்களைப்போன்ற விவசாயிகளின் வாழ்க்கையை நாசமாக்கிட வேண்டும்" என்று கொந்தளித்தார் இன்னொரு விவசாயி.
 
"சிப்காட்டால் கெட்டது போதாதா? பெருந்துறை என்ன குப்பைத்தொட்டியா? கடல் மீன்களையும், வன விலங்குகளையும் பாதுகாக்க நினைக்கும் அரசுகளுக்கு மனித உயிர்கள் மலிவாய்ப் போனதா? சுமார் 5லட்சம் மக்கள் வசிக்கும் பெருந்துறைப் பகுதி மக்கள் கேவலப்பட்டவர்களா? வசிப்பிடத்தையும்,வாழ்நிலத்தையும், வாழ்வையும் பாதுகாக்க அரசியல் பாகுபாடு இன்றி போராடுவோம்" என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் துண்டறிக்கைக்கு ஏற்ப ஆளூம் திமுக முதல் அனைத்து கட்சியினரும், விவசாயிகளும் திரண்டிருந்தனர்.. பெருந்துறை நீர் அமைப்பும் இதே கருத்தை வலியுறுத்திப் பேசியது.
 
திடக்கழிவு மேலாண்மத் திட்டத்தை உடனே கைவிடக் கோரி கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு பெருந்துறையில் ஏற்பாடு செய்துள்ளது அ.தி.மு.க..
 
இத்திட்டம் மக்கள் கருத்துக்கேற்ப கைவிடப்படாமல், செயல்படுத்த அரசு நினைத்தால் மக்களின் தொடர் போராட்டம் கடுமையாக இருக்கும் என்றது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம்.
 
பெருந்துறை பகுதியின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது இளைஞர்கள் பொறுத்துக்கொள்ள முடியாமல் நக்சலைட்டுகளாக மாறும் வாய்ப்பு உள்ளது என்று மதிமுக பிரமுகர் கூறினார்.
 
துத்தநாகம், குரோமியம், ஈயக்கழிவுகள், பூச்சிக்கொல்லிக் கழிவுகள் என நீண்டுகொண்டேபோகும் கழிவுகளின் எடை ஆண்டு ஒன்றிற்கு 965 மெட்ரிக் டன்கள் ஆகும். அன்னிய முதலீடுகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என விவசாய நிலங்களை பாழ்படுத்த அங்கீகரித்து அனுமதிக்கும் மத்திய மாநில அரசுகளின் தொழில் கொள்கை மக்களுக்கானது அல்ல. சில சில முதலாளிகளின் வாழ்க்கைக்காகவும் அவர்கள் ஆளுவோருக்கு வீசி எறியும் ரொட்டித்துண்டுகளுக்காகவும் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
 
இந்த திட்டத்தை செயல்படுத்த துடிக்கும் தனியார் நிறுவன பார்வையில் பெருந்துறை பகுதி மக்கள் நெருக்கம் இல்லாத, விவசாயம் நடைபெறாத வறண்ட பூமி என்று சொல்லப்பட்டுள்ளது. பெருந்துறை சிப்காட் கழிவுகள் எட்டிப்பார்க்காத நிலங்களில் இன்னும் மஞ்சள் வாழை விவசாயம் நடைபெறுகிறது. 5 லட்சத்திற்கும் மேலான மக்கள் சுற்றுப்புறங்களிலும், ஒரு லட்சம் மக்கள் பெருந்துறையிலும் வசிக்கிறார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் பட்டியல் பார்த்தாலே இந்த உண்மையை தெரிந்துகொள்ளலாம்.
 
விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய அரசும் நீதிமன்றங்களும் எதிராக இருப்பது வேதனைக்குறியது.
 
கருத்துக் கேட்புக் கூட்ட பேச்சுகள் பதிவு செய்யப்பட்டன. யார் யார் என்ன பேசினார்கள் என்பதையும், மனுக்களின் தீவிரத்தையும் மீண்டும் போட்டுப்பார்க்கும் ஆளும் வர்க்கம் யார்யாரை விலைக்கு வாங்கலாம், யார் யார் அடங்கமாட்டார்களோ அவர்களை எப்படி ஒடுக்கலாம் என்று கணக்குப் போட்டு செயல்பட்டால் விலை போவது யார் யார்? வீரியமாய் வாழ்வாதாரத்தை காப்பாற்றப் போவது யார் யார் என்பதின் விடையில் இருக்கிறது பெருந்துறை மக்களின் வாழ்வும், வாழ்வாதாரமும், நீர்வளமும் நிலவளமும் என்றும் சில குரல்கள் கேட்டன மண்டபத்திற்கு வெளியே.
 
- அ.இளஞாயிறு, 9443761307 (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It