சட்டத்தைக் காக்க - கழகம் களமிறங்குகிறது
சுடுகாடுகளை - சாதிவாரியாகப் பிரிக்கும் இரட்டைச் சுவர்கள் இடிக்கப்படும்

கோவையில் கூடிய கழக மாநில செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானம்:

மனித குல சமத்துவத்துக்கும், மாண்புக்கும், முரணாகவும், உழைக்கும் அடித்தட்டு மக்களின் சுயமரியாதைக்கு எதிராகவும், ஜனநாயக நாட்டின் அரசியல் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டங்களுக்கு எதிராகவும் பெரியாரின் வாரிசுகளாக தங்களை சொல்லிக் கொள்ளுகிற அரசுகளின் ஆட்சியிலும் சுடுகாடுகளிலும், இடுகாடுகளிலும் சாதிக்கு, தனித் தனியாக இருப்பது கேவலமான ஒன்றாகும்.

அதுவும் தமிழ்நாடு அரசு, அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் போன்ற தனது திட்ட நிதியிலிருந்து கட்டப்படும் இடுகாடு, சுடுகாடுகளிலும்கூட தாழ்த்தப்பட் டோருக்கு என தனியாகவும், பிற மக்களுக்கு என தனியாகவும் உள்ள நிலை மிகமிகக் கேவலமானதும், அரசியல் அமைப்புக்கே எதிரானதும் ஆகும்.

அரசின் இந்த தவறான நடவடிக்கைகளுக்கு எதிராகவும், மக்கள் சமத்துவத்தை நெஞ்சில் ஏந்தியும் அரசியல் சட்டத்தையும், பிற சட்டங்களையும் மதித்துப் பேணும் நோக்கத்தோடும், சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்ற சட்ட உணர்வோடும், புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் நாளுக்குள் வாய்ப்பான நாளில் அரசு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள சுடுகாடுகளைப் பிரிக்கும் இடைச் சுவரை உடைத்தும், தனித் தனி இடங்களில் இருந்தால் அறிவிப்புப் பலகையிலுள்ள தாழ்த்தப்பட்டோர் சுடுகாடு என்ற எழுத்துக்களை தார் கொண்டு அழித்தும், அரசின் தவறான போக்கை அம்பலப்படுத்துவது என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

Pin It