15.8.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 7 மணிக்கு திண்டுக்கல் சகாய மாதா மக்கள் மன்றம் மண்டபத்தில் திண்டுக்கல் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பாக ‘குடிஅரசு’ தொகுப்பு நூல் அறிமுக விழா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட தலைவர் துரை. சம்பத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னதாக பெரியார் பெருந்தொண்டர் ஆசிட் தியாகராசன் உரையாற்றினார். தனது கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு, திராவிடர் கழகத்தைவிட பெரியார் திராவிடர் கழகம் எந்த வகையில் தன் பார்வையில் சிறப்பாக செயல்படுகிறது என்பதை விளக்கினார். சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிட, அதைப் பெற்றுக் கொண்ட சக்தி மகளிர் கலைக் குழுவின் தலைவர் சந்திரா, தமிழ்ப் பண்ணை சகோதரி பவுலின், குழந்தை ஆகியோர் உரையாற்றினர்.
சட்டமன்ற உறுப்பினர் பால பாரதி இந்த நூல் வெளியிடும் வாய்ப்பிற்கு மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துக் கொள்வதாகவும், பெண்ணாக பிறந்தவர்கள் அனைவரும் எந்த இயக்கத்தில் இருந்தாலும் பெரியாரின் கருத்துகளை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்றும் இன்றைக்கும் இருக்கக் கூடிய பெண்ணடிமைப் பிரச்சினைகளை நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் பேசினார். பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், தனது உரையில்:
பெரியார் தன் வாழ்நாளில் எத்தனையோ வழக்குகளை சந்தித்தார். தண்டனைகள் பெற்றார். இந்த சமுதாய விடுதலைக்காக பாடுபட்ட தலைவரை பெரியார் திடலில் வைத்து வெளிவராமல் தடுத்தனர். அங்கிருந்து பெரியாருக்கு, பெரியார் திராவிடர் கழகத்தால் விடுதலை கிடைத்துள்ளது. பார்ப்பான் புத்தி பின்புத்தி என பெரியார் கூறியதாக வீரமணி எங்களுக்கு பலமுறை வகுப்பு எடுத்துள்ளார். இன்றைக்கு வீரமணி புத்தியே பின்புத்தி ஆகிவிட்டது. பல தலைவர்களின் புத்தகங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டும், திரித்து விடுவார்கள் என்ற கூறி பெரியார் நூலை நாட்டுடமை ஆக்காமல் வீரமணி தடுத்தார். ஆனால், இன்று நீதிமன்றம் பெரியார் கருத்தை மக்கள் சொத்தாகவே அறிவித்துவிட்டது. பல்வேறு சட்டங்களில் நானும் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும் கைது செய்யப்பட்டோம். புதிதாக எங்கள் மீது வீரமணி திருட்டு வழக்கு ஒன்றை போட்டார்.
திருட்டு பட்டம் கிடைத்தாலும்கூட, நாம் பரப்பிக் கொண்டிருக்கும் பெரியார் கருத்தை திருடியதாக சொல்வதால் பெருமைப்படுகிறோம். ஒருக் கூட்டம் சிறப்பான கூட்டமா? சாதாரண கூட்டமா? என்பதை பார்வையாளரின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்காமல், விற்பனையான புத்தகத்தின் அளவை வைத்துத்தான் பெரியார் தீர்மானிப்பார். எனவேதான் யாரும் வெளியிட முன் வராத ‘குடிஅரசு’ தொகுப்புகளை பல்nறு சிரமங்களுக்கு இடையில் பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுகிறது. நாம் வெளியிட்ட பிறகு தான், நம்மை விமர்சிப்பதற்காகவாவது பல ஊர்களில் திராவிடர் கழகம் கூட்டம் நடைபெறுகிறது. பெரியார் இயக்கங்கள் பல இருக்கின்றன என்பதாவது மக்களுக்கு தெரிய வரும் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம் என்று பேசினார்.
இறுதியாக சிறப்புரையாற்றிய கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், “நாங்கள் பெரியார் திராவிடர் கழகத்தை துவங்கியபோது பெரியார் காலத்தின் எழுச்சியை உருவாக்குவோம் என்றுதான் சொன்னோம். அதேபோல தி.க.வையோ, அதன் தலைவர் வீரமணியையோ நமது மேடைகளில் விமர்சிப்பது தேவையற்றது என்ற முடிவையும் எடுத்தோம். ஆனால், இந்த பெரியார் கருத்துகளை பரப்புவதற்கே தடையாக அவர்கள் வந்ததால், நாம் அந்த துரோகத்தை அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் வந்திருக்கிறது என்று கூறி ‘குடி அரசு’ வழக்குகள் பற்றி விரிவாக பேசினார்.
1933 இல் ‘மெயில்’ பத்திரிகை ஒரு தலையங்கம் எழுதியது. சுயமரியாதை இயக்கம் இங்கு இருப்பதால், பொது இடங்களில் மதப் பிரச்சாரம் செய்ய முடியவில்லை. கோவிலுக்குள்ளும், சர்ச்சுக்குள்ளும், மசூதிக்குள்ளும் மட்டும் தான் பிரச்சாரம் செய்ய முடிகிறது என்றும், காந்தி அவர்களே தலையிட்டு சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று எழுதியது. இது எட்டே ஆண்டுகளில் ‘குடிஅரசு’ இதழ் செய்த புரட்சி ஆகும்.
மாறுபட்ட கருத்துகளைகூட ‘குடிஅரசி’ல் வெளியிட்டு, கருத்துச் சுதந்திரத்தை வழங்கியவர் பெரியார் என்பதற்கான வரலாற்றுச் செய்திகளை முன் வைத்து, பெரியாருக்கு நேர் எதிராக வீரமணி செய்த கொள்கை திரிபுகள் பற்றி விரிவாக பேசினார். இறுதியாக திண்டுக்கல் நகர தலைவர் துரை. சுப்ரமணி நன்றி கூறினார்.
திண்டுக்கல் மாவட்ட செயலாளர் இரவணா முன்னிலை வகித்தார். பழனி பகுதியிலிருந்து தோழர்கள் நல்லதம்பி, மருதமூர்த்தி, முருகன் உட்பட பல தோழர்கள் கலந்து கொண்டனர்.