ஈழத் தமிழ் அகதிகள் வெளிநாடு செல்ல உதவினார்கள் என்ற குற்றத்தின் கீழ் புதுவை மாநில கழகத் தலைவர் லோகு அய்யப்பன், தி.மு.க. கவுன்சிலரும், மீனவர் சங்கத் தலைவருமான சக்திவேல், காரைக்கால் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் தேவமணி ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புதுவை காங்கிரஸ் ஆட்சி கைது செய்தது. இதே குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் இந்திய தண்டனை சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சுமார் இரண்டு வாரம் சிறைவாசத்துக்குப் பிறகு, நீதிமன்றத்தால் நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

 காலையிலும், மாலையிலும் புலனாய்வு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட் டிருந்தது. 25 நாட்கள் கையெழுத்திட்டு வந்த நிலையில் புதுவை காங்கிரஸ் ஆட்சி பழி வாங்கும் வெறியில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவியது.

 தேசிய பாதுகாப்புச் சட்டத்தை முறைகேடாக பழி வாங்கும் நோக்கத்தோடு பயன்படுத்தியிருப்பது புதுவை வாழ் தமிழின உணர்வாளர்களை கொதிப்படையச் செய்தது. கைதான அடுத்த நாளே - கைதைக் கண்டித்து அனைத்துக் கட்சியினரும் பங்கேற்ற மறியல் போராட்டம் 18.11.2010 அன்று புதுவை சுப்பையா சிலை அருகே மாநில கழக அமைப்பாளர் தந்தைப் பிரியன் தலைமையில்  நடை பெற்றது. மறியலில் பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான கழகத் தோழர்கள்  பங்கேற்றனர். 302 தோழர்கள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, புதுவை முழுதும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும், பெண்கள் பங்கேற்ற பட்டினி போராட்டமும் நடைபெற்றது. பேராசிரியர் சரசுவதி உரையாற்றினார். தொடர் கண்டனக் கூட்டங்கள் என்று பழி வாங்கும் அடக்குமுறையைக் கண்டித்து, தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. உயர்நீதிமன்றத்தில் கழக சார்பில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி கழகத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி, வை. இளங்கோ ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

 தேசிய பாதுகாப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப் பட்டுள்ளதாக லோகு. அய்யப்பன் சார்பாக அவரது தந்தை லோகநாதனும், சக்திவேல் சார்பாக அவரது மனைவி  கயல்விழியும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். இக்கடிதத்தை பரிசீலனை செய்த மத்திய உள்துறை அமைச்சகம் 13.12.2010 அன்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்துச் செய்து, விடுதலை செய்ய ஆணை பிறப்பித்தது. 14.12.2010 அன்று இச் செய்தி புதுவை மாநில மாலை நாளேடுகளிலும், சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் வெளியானது. 15.12.2010 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி உட்பட நூற்றுக் கணக்கான தோழர்கள் சிறை முன் திரண்டனர். மாலை வரை காத்திருந்த தோழர்கள் சிறை அதிகாரிகளிடம் விசாரித்தனர். விடுதலை செய்யக் கோரி, புதுவை அரசிடம் இருந்து உத்தரவு வரவில்லை என்று தெரிவித்தனர். இரண்டு தினங்களுக்கு முன்பே உள்துறையின் உத்தரவு வந்துள்ளதை உறுதி செய்து கொண்ட தோழர்கள், சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டிருக்கும் செய்தியை, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தந்தி வழியாக தெரியப்படுத்தினர். சிறை கண்காணிப்பாளர் ஜெய காந்தன் தான் செய்த அதிகார முறைகேடு உயர் அதிகாரிகளுக்கு தெரிந்துவிட்டதால், இரவு 9 மணிக்கு அவசரமாக லோகு. அய்யப்பனையும், சக்திவேலுவையும் வெளியேற்ற முயற்சி செய்தார். ஆனாலும், தோழர்கள் இரவு நேரத்தில் வெளியேற மறுத்தனர். அவர்களை வலுக் கட்டாயமாக வெளியேற்ற காவல்துறையை வரவழைத்தார். அதிகபடியான காவலர்கள் அங்கு திரண்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பத்திரிகையாளர்களும், ஏராளமான பொது மக்களும் அங்கு விரைந்தனர்.

 இரவு 11.30 மணி அளவில் லோகு அய்யப்பன், சக்தி வேல் விடுதலை செய்யப்பட்டனர். சிறை கண்காணிப் பாளர் ஜெயகாந்தனுக்கு எதிராகவும், புதுவை அரசுக்கு எதிராகவும் பொது மக்களும், கழகத் தோழர்களும் விண்ணதிர ஒலி முழக்கங்களை எழுப்பினர். நள்ளிரவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களின் ஒலி முழக்கங் களாலும், தோழர்கள் வந்த வாகனங்களின் விளக்கு களாலும் புதுவை மாநகரமே அதிர்ந்தது. இரண்டு நாள் சட்ட விரோத காவலில் வைத்திருந்த சிறை கண் காணிப்பாளர் ஜெயகாந்தன் மீது கழக வழக்கறிஞர் மூலம் உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

 மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை: லோகு அய்யப்பன் மீதான தே.பா.ச. ரத்து! 

 ஈழத் தமிழ் அகதிகளுக்கு உதவியதாக புதுவை கழகத் தலைவர் லோகு. அய்யப்பன், தி.மு.க. கவுன்சிலர் சக்திவேல், காரை பா.ம.க. மாவட்ட செயலாளர் தேவமணி ஆகியோரை புதுவை காங்கிரஸ் ஆட்சி பழி வாங்கும் நோக்கத்தோடு தேசிய பாதுகாப்பு  சட்டத்தில் கைது செய்தது. மத்தியில் உள்துறை அமைச்சராக இருப்பவரும், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர் தான். அவரது அமைச்சகமே இருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்துள்ளது. புதுவை காங்கிரஸ் ஆட்சியின் அதிகார முறைகேட்டை அந்தக் கட்சியினரே அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்!

Pin It