இந்தியாவின் அரசியலை இப்போது யார் தீர்மானிக்கிறார்கள்? இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளையும், பொருளாதாரத்தையும் தீர்மானிப்பது யார்? இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்கள் உலகம் முழுதும் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கி வரும் பன்னாட்டு நிறுவனங்கள் - இவர்களுக்கு ‘மூளையாக’ செயல்பட்டு அவர்களினூடாக தங்களது அதிகாரத்தை வலிமைப்படுத்தி வரும் பார்ப்பன ஆளும் வர்க்கங்கள்! இவர்களே தீர்மானிக்கும் சக்கிதள்.

மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்புகள் வந்த பிறகும், மத்தியில் இந்திய ஆட்சி பார்ப்பன பனியா ஆதிக்கத்தில்தான் இருந்தது. வி.பி.சிங் முதன்முதலாக இந்திய அதிகார அமைப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு கதவு திறந்து விட்டதைத் தொடர்ந்து இந்திய ஆட்சியமைப்பில் பெரும் மாற்றங்கள் வரத் தொடங்கின. ‘மண்டலாக்கம்’ எனும் புயல் வட மாநிலங்களில் பார்ப்பனர்களை ஆட்சி அதிகாரத் தலைமையிலிருந்து விரட்டி அடித்தது.

மத்திய அதிகார மண்டலத்திலும் - பிற்படுத்தப்பட்டோர் வந்து விடுவார்களோ என்று பதறிப் போன பார்ப்பன ஆதிக்க சக்திகள் அப்போது தாராளமயமாக்கல், உலக மயமாக்கல் எனும் கொள்கையை வலிமையாகப் பிடித்துக் கொண்டார்கள். பார்ப்பனப் பிரதமர் நரசிம்மராவ் காலத்தில் இந்தக் கொள்கை தீவிரமடையத் தொடங்கியது. பா.ஜ.க. ஆட்சியானாலும், காங்கிரஸ் ஆட்சியானாலும் இந்தக் கொள்கைதான் தொடருகிறது. பயனடைகிற பெரும் தொழில் நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்கள் வேண்டுமானால் மாறுபடலாம். ஆனால், பயனடைகிற சுரண்டுகிற ஆதிக்கம் செலுத்துகிற சக்திகள் அவர்கள் தான்.

மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சர்களாக இடம் பிடிக்கவும் விரும்புகிற துறைகளைப் பெறவும் டாட்டா - அம்பானி நிர்வாகத் தரகர்களிடம் தான் பேரம் பேச வேண்டியிருக்கிறது என்பதை ‘தொலைபேசி உரையாடல்’ செய்திகள் அம்பலப்படுத்தி வருகின்றன.

இப்போது 2-ஜி, 3-ஜி, ‘சி.ஏ.ஜி’, ‘ஸ்பெக்ட்ரம்’, யுனிடெக் ஷிப்பிங் ஸ்டாப் டாட்காம், அலியான்ஸ் இன்ஃபிராடெக், சுவாம் டெலிகாம், டேட்டா காம் சொல்யூஷன்ஸ், நீராராடியா, பி.ஜே.தாமஸ் என்றெல்லாம் வெகு மக்களுக்கு புரியாத கேள்விப்படாத பெயர்கள் எல்லாம் பத்திரிகைகளில் அடிபடுகின்றன. இதில் மத்திய அமைச்சர் அ. ராசா பெயரும் இணைந்தே வருகிறது. இதில் நமக்குத் தெரிந்த ஒரே பெயர் அ. இராசா மட்டுமே! அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளினால் அவர் பதவி விலகி விட்டார்.

இப்போது நாட்டில் என்ன நடக்கிறது? நாட்டின் அரசியல் பொருளாதாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ள தொழில் நிறுவனங்கள் தங்களுக்குள் வர்த்தகப் போட்டியில் அணி பிரிந்து மோதிக் கொள்கின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வாழும் தனித்தனி இனங்களான மக்கள் இந்த வர்த்தக சூதாடிகளால் சந்தைப் பொருள்களாக்கப்பட்டுவிட்டனர்.

இந்த பார்ப்பன-பனியா பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் விளையாட்டு மைதானங்களாக ‘இந்தியா’வை மாற்றிவிட்டன. இந்த விளையாட்டு மைதானத்தில் மோதிக் கொள்ளும் இரண்டு அணிகளுமே பார்ப்பன-பனியா பன்னாட்டு நிறுவனங்களின் அணிகள் தான். விளையாட்டுக்கான விதிகளையும் அவர்களே நிர்ணயித்துக் கொண்டு, விளையாட்டுப் போட்டிகளையும் அவர்களே நடத்து கிறார்கள். மன்மோகன் சிங் அணியினாலும், அத்வானி சுஷ்மா அணியானாலும் வெற்றியைப் பறிப்பது எந்த அணியானாலும் இறுதி ‘கோல்’ விழப் போவது பார்ப்பன-பனியா பன்னாட்டு நிறுவனங்களின் பக்கம் தான். களத்தில் விளையாடும் ஆட்டக்காரர்களும் அவர்களுக்கான ஆட்டத்தையே விளையாடுகிறார்கள்.

மைதானத்துக்கு வெளியே வெறும் பார்வையாளர்களாக ஒதுக்கப்பட்டுக் கிடப்பவர்கள் ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள் தான்!

தமிழ்நாட்டில் தி.மு.க.வானாலும் சரி, அ.இ.அ.திமு.க.வானாலும் சரி; இரண்டு கட்சிகளுமே இந்த மைதானத்தில் விளையாடுவதற்கு தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று தங்களுக்குள் போட்டி போடுபவைதான். அ.இ.அ.தி.மு.க. தலைமை வெளிப்படையான பார்ப்பனிய அடையாளத்தைப் போர்த்திக் கொண்டு நிற்கிறது. தி.மு.க.வோ ‘திராவிட’ என்ற அடையாளத்தை பெயரளவில் மட்டும் வைத்துக் கொண்டு மைதானத்துக்குள் இடம் பிடிக்க முந்துகிறது.

மத்திய அமைச்சர் அ. ராசா நமது மதிப்புக்குரியவர். சிறந்த அம்பேத்கரிய - பெரியாரிய சிந்தனையாளர். அவரைப் போன்ற அடக்கப்பட்ட சமூகத்தின் இளைஞர்கள் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். ஆனாலும், அமைச்சர் அ.ராசா தனிப்பட்ட மனிதர் இல்லையே! அவர் பார்ப்பன-பனியா -பன்னாட்டு நிறுவனங்களுக்கான அணிகளில் விளையாட களம் இறக்கப்பட்டவர்; அல்லது விரும்பி களமிறங்கியவர் தானே! விளையாட வந்த அவர் இப்போது பலிகடாவாகி நிற்கிறார்!

இன்று - தி.மு.க.வுக்கு எதிராக களமிறங்கியிருக்கும் சுப்ரமணிய சாமியும், பார்ப்பன ஊடகங்களும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஈழத் தமிழர்கள் மீது இந்தியா வின் துணையோடு சிங்களம் இனப் படுகொலையை நடத்தியபோது, எப்படி செயல்பட்டார்கள்? தி.மு.க. என்ன நிலைப்பாடு எடுத்தது? தந்திரமாக இந்திய பர்ப்பன ஆட்சிக்கு ஆதரவாகத் தானே நின்றது? இதே பார்ப்பன ஊடகங்களும், சுப்ரமணிய சாமிகளும் அன்று ஈழத் தமிழர்களுக்கு எதிராக தி.மு.க. ஆட்சியின் பக்கம் நின்றவர்கள் தானே? அன்று ஆரிய - திராவிட சொல்லாடல்களை தி.மு.க. வெறுத்து ஒதுக்கி விட்டதே!

‘சுப்ரமணியசாமி’ - தில்லை தீட்சதப் பார்ப்பனர்களுக்காக நீதிமன்றம் வந்து நின்றபோது சில வழக்கறிஞர்கள் ஆத்திரமடைந்து அழுகிய முட்டையை வீசியபோது எங்கே ஆட்சியே பறிபோய்விடுமோ என்று பதறிய தி.மு.க., நீதிமன்ற வளாகத்துக்குள் காவல்துறையை ஏவி வழக்கறிஞர்கள் மண்டையை பிளந்ததே! அதே சுப்ரமணியசாமிதான் இப்போது உச்சநீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறி நின்று கொண்டு அதே தி.மு.க.வுக்கு எதிராக கொக்கரிக்கிறார்.

சுயமரியாதை இயக்கத்தின் வெளியீடான ‘ஞான சூரியன்’ இப்போதாவது கலைஞரின் நினைவுக்கு வந்தது நமக்கு மகிழ்ச்சிதான். அதில் பார்ப்பனருக்கு ஒரு நீதி; சூத்திரனுக்கு ஒரு நீதி கூறும் மனு தர்மக் கொடுமைகளை மக்கள் மன்றம் கொண்டு செல்வது வரவேற்க வேண்டியதுதான். ஆனால், ஆட்சி அதிகாரத்துக்கு நெருக்கடி வரும்போது ‘பார்ப்பன - சூத்திர’ மனுதர்ம எதிர்ப்பைக் கையில் எடுப்பதும், சமூகப் பிரச்சினை என்று வரும்போது அதைக் கை கழுவி விடுவதும் நியாயம் தானா என்று கேட்க வேண்டியிருக்கிறதே!

டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்! அதே நாள், டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள். பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்காக அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சிகளுக்கே அனுமதி மறுக்கப்பட்டு, மனுதர்மத்தை எரித்த தலைவரின் கருத்துகளைப் பரப்புவதற்கே அனுமதி மறுப்பதுதான் தி.மு.க. ஆட்சியின் ‘மனுதர்ம’ எதிர்ப்பா? என்று கேட்க வேண்டியிருக்கிறதே!

இப்போதும்கூட தொலைத் தொடர்புத் துறை தனியார் மயமாக்கப்பட்டதன் விளைவு தானே இவ்வளவுப் பிரச்னைகளுக்கும் காரணம்? தொலை தொடர்புத் துறை அரசுத் துறையாக இருந்திருக்குமானால், இவ்வளவு ஊழல் புகார்களுக்கு இடமிருந்திருக்காதே. அரசு பொதுத் துறை என்ற முறையில் அந்த நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்புகளும் கிடைத்திருக்குமே!

திராவிடர் கோட்பாடு, சமூக நீதி, தன்னாட்சி உரிமை, வடவர் எதிர்ப்பு என்ற அடையாளங்களோடு தொடங்கப்பட்ட தி.மு.க., ‘டாட்டா பிர்லா கூட்டாளி பாட்டாளிக்குப் பகையாளி? என்ற முழக்கத்தை ஒரு காலத்தில் முன்வைத்த கட்சி. இன்று டாட்டா, பிர்லா, அம்பானிகளுக்கு நடைபாவாடை விரிப்பது எங்கள் கொள்கை அல்ல என்று மத்திய அரசை எதிர்த்ததா? தட்டிக் கேட்டதா?

மாறாக, ‘சிறப்பு பொருளாதார மண்டலங்கள்’ என்ற வடநாட்டு பன்னாட்டு தொழில் முதலாளிகளுக்கான சுரண்டல் திட்டத்தை முதன்முதலாக அறிமுகப் படுத்தியதே, மத்தியில் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறன் தானே!

பார்ப்பன-பனியா-பன்னாட்டு மேலாதிக்க அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்று, அதன் வழியாக பார்ப்பன அதிகார ஆதிக்கத்துக்கு உரமிட்டுக் கொண்டிருப்பதில் தி.மு.க.வுக்கும் பங்கு உண்டு தானே?

குறைந்தது பெருகி வரும் இந்த தனியார் துறைகளில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்டோருக்கு வேலை வாய்ப்பு உரிமையையாவது, இவர்கள் வலியுறுத்தியது உண்டா? பிரதமருக்கு ஒரு கடிதமாவது எழுதினார்களா?

‘2ஜி’ அலைவரிசையின் முறைகேடான ஒதுக்கீடுகளால் பெரும் நிறுவனங்கள் கொள்ளையடித்த பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்று எந்த அமைப்பாவது வலியுறுத்துகிறதா?

ஆக, இரண்டு அணிகளுமே, அது காங்கிரஸ், பா.ஜ.க.வானாலும், தி.மு.க., அ.இ.அ.தி.மு.க.வானாலும் பார்ப்பன-பனியா-பன்னாட்டு கூட்டுக் கொள்ளையை உறுதிப்படுத்தும் விளையாட்டுக்காக அணி பிரிந்து விளையாடுகின்றன. இந்த விளையாட்டில் உண்மையான பெரியாரியல்வாதிகள் - புறக்கணிக்கப்படும் வெகுமக்கள் பக்கம்தான் நிற்க முடியுமே தவிர, ஆடுகளத்தில் நிற்கும் எந்த அணிக்கும் ஆதரவாக கொடி தூக்கி நிற்க முடியாது. சந்தர்ப்பவாத ஆரிய - திராவிட முழக்கங்களுக்குள் கரைத்துக்கொள்ள முடியாது.

பார்ப்பன - பனியா - பன்னாட்டு நிறுவனங்களால் அடிமையாக்கப்பட்டு, உரிமை மறுக்கப்பட்ட மக்களின் குரலை முன்னெடுப்பதே பெரியாரியல் பார்வையில் பெரியார் திராவிடர் கழகம் முன் நிற்கும் சமூகப் பணி! இதுவே எமது உறுதியான நிலைப்பாடு.

- தலையங்கம் - புரட்சிப் பெரியார் முழக்கம் 09.12.10

Pin It