பெரியார் திராவிடர் கழகக் குடும்பத்தைச் சேர்ந்தவரும் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் மருந்தியல் தொழில்நுட்பத் துறையில் உதவிப் பேராசிரி யராகவும், அண்ணா பல்கலைக்கழக கல்விக்குழு இயக்குநராகவும் பணியாற்றி வருபவருமான முனைவர் அ.புரட்சிக்கொடிக்கு தமிழ்நாடு அரசின் ‘இளம் பெண் அறிவியலாளர் விருது’ (Young Women Scientist ) கிடைத்துள்ளது. இவரது பெற்றோர் ஆய் அறிவன் - அறிவொளி இருவரும் பெரியார் தொண்டர்கள். ஜாதி, தாலி மறுப்புத் திருமணம் செய்தவர்கள். பெரியாரால் பெயர் சூட்டப்பட்ட புரட்சிக்கொடியும் ஜாதி, தாலி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர். அவரது துணைவர் கழகச் செயல் வீரர் தோழர் திண்டுக்கல் தாமரைக் கண்ணன்.

நோயின் தன்மையிலிருந்து மீளும் வேகத்தை அதிகப்படுத்தும் ஹைட்ரோ சைக்ளிக் கூட்டுப்பொருட்களை உருவாக்கும் ஆய்வில் இவர் ஈடுபட்டார். அந்த அடிப்படையில் புதிய ஹைட்ரோசைக்ளிக் கூட்டுப் பொருட்களைக் கண்டறியும் முதல்கட்ட ஆய்வில் வெற்றி பெற்று அடுத்தகட்டமாக அந்தக் கூட்டுப்பொருட் களைப் பயன்படுத்தி பலமுக்கிய நோய்களுக்கு மருந்து கண்டறியும் ஆய்விலும் இவர் ஈடுபட்டுள்ளார். சென்னை ஐ.ஐ.டியில் உயிர் தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து ஆய்வுகளை நடத்திவருகிறார். தரை மற்றும் கடல்வாழ் தாவரங்களைப் பகுத்தறிந்து அவற்றில் உள்ள உயிரி செயல்திறனை தனிமைப்படுத்தி அதன் மூலம் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக்கூடிய மூலக்கூறுகளைக் கண்டறியும் ஆய்விலும் ஈடுபட்டுள்ளார்.

2006 - 2007 ஆம் கல்வியாண்டில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை ( DST ) இவரை இளம் விஞ்ஞானியாக அங்கீகரித்து, கடல் வாழ் தாவரங்கள் குறித்த ஆராய்ச்சிக்கு 9,36,000ரூபாய் வழங்கியது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இதே ஆராய்ச்சிக்காக 6 இலட்சம் ரூபாய் வழங்கியது. ஹிமாலயா இயற்கைப் பொருட்கள் நிறுவனம் இவரது ஆய்வைப் பயன்படுத்தி சில மருந்துகளை உருவாக்கியுள்ளது.

30 க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். உலகப் புகழ்பெற்ற அறிவியல் இதழ்களில் இவரது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 4 முறை சர்வதேச அளவிலான ஆராய்ச்சியாளர் மாநாடுகளிலும் 23 தேசிய அளவிலான ஆய்வு மாநாடுகளிலும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். தேசிய அளவிலான ஆய்வாளர் மாநாடுகளை 4 முறை நடத்தியும் உள்ளார். தொடர்ச்சியான இந்த ஆய்வுப் பணிகளுக்காக தமிழ்நாட்டு அரசின் உயர்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் 2008 ஆண்டுக்கான இளம்பெண் விஞ்ஞானி விருது தோழர் புரட்சிக்கொடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கல்வியாளர் முனைவர் மு.அனந்தகிருட்டிணன் தலைமையிலான குழு இந்த விருதுக்கு இவரைத் தேர்ந்தெடுத்தது. பிப்ரவரி 3 அன்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி விருதினை வழங்கினார். விருதுக்கான சான்றிதழும் 20,000 ரூபாய் தொகையையும் அரசு வழங்கியது. அந்த 20,000 ரூபாயை முதுபெரும் பெரியார் தொண்டர்களுக்கான கருந்திணை விடுதிக்கு நன்கொடையாக வழங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர்கள் கோவை இராம கிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரியார் தி.க தோழர்கள் தொலைபேசியிலும் நேரிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். பெரியார் பெருந்தொண்டர் திருச்சி சௌந்திரராசன் அவர்கள் விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது மகிழ்ச்சியையும் வாழ்த்தினையும் தெரிவித்தார்.

 

Pin It