கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி சென்னை அரசு மருத்துவமனையில் எலும்புருக்கி நோய்க்கு தனிப் பிரிவு ஒன்று தொடங்க இருந்ததையொட்டி, அத்துறையின் தலைவராக உள்ள பிரபல மருத்துவர், மருத்துவமனைக்குள் பார்ப்பனர்களை அழைத்து, ‘கணபதி ஹோமம்’ நடத்தத் திட்டமிட்டுள்ளார் என்ற செய்தி முதல்நாள் மாலை கிடைத்தது. சுறுசுறுப்பாக சென்னை மாவட்டக் கழக செயல்வீரர்கள் உமாபதி தலைமையில் களமிறங்கினர். மருத்துவமனையில் ஹோமம் வளர்ப்பதை எதிர்த்து, சுவரொட்டிகள் மருத்துவமனை வளாகம் சுற்றி ஒட்டப்பட்டதோடு, துண்டறிக்கைகள் தயாராயின. ஹோம குண்டம் வளர்க்க திட்டமிட்டிருந்த காலை 7 மணியளவில் மறியலுக்கு திட்டமிட்டு மருத்துவமனை வளாக காவல் நிலையத்துக்கும் அறிவிப்பு தந்தனர். காவல்நிலைய ஆய்வாளர்கள், கழகத் தோழர்களை மருத்துவமனை தலைவரிடம் அழைத்துச் சென்றனர். மருத்துவமனை தலைவர் (டீன்) தொடர்புடைய துறைத் தலைவரான மருத்துவ அதிகாரியிடம் தொடர்பு கொண்டு பேசினார். யாகம் வளர்க்கும் திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சில மணி நேரத்தில் சென்னை மாவட்டக் கழக செயல்வீரர்கள் துடிப்போடு செயல்பட்டு கோரிக்கையை வெற்றிப் பெறச் செய்தனர்.

ஈழம்: வன்மமும் அவதூறுகளும்

‘ஈழம் : வன்மமும் அவதூறுகளும்’ எனும் தோழர் சூரியதீபனின் எழுத்தாக்கம் உரிய நேரத்தில் நூலாக வந்திருப்பதைப் பாராட்டுகிறோம். ஈழத் தமிழர் விடுதலை போராட்டத்துக்கு ஆதரவாக நிற்கும் தமிழக இயக்கங்கள் மீது அவதூறுகளையும், உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளையும் வீசி வரும் சிலருக்கு உரிய பதிலையும், விளக்கத்தையும் தந்து, அவர்களின் சந்தர்ப்பவாத முகத்தை அம்பலப்படுத்துகிறார், சூரிய தீபன்.

வெளியீடு: புதுமலர் பதிப்பகம், 10/176, வைகை வீதி, வீரப்பன் சத்திரம் (அஞ்சல்), ஈரோடு - 638 004. பக்கங்கள்: 49; விலை ரூ.20.

Pin It